Tuesday, February 20, 2018

ஹலோ! நான் என்ன வியாபாரியா?

ஹலோ!  நான் என்ன வியாபாரியா?
+-----+------+-------+------+------+-----+

ஒரு     கற்பனை  உரையாடல்.
               ******

"இயேசுவே,  என் ஆண்டவரே,
ஒரு சின்ன வேண்டுகோள்.."

"சரி, கேள்."

"ஆண்டவரே, நான் படித்து முடித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்."

"அந்த வேலை கிடைக்க வேண்டுமென்று என்னிடம் விண்ணப்பித்திருக்கிறாய்."

''ஆம்  ஆண்டவரே."

"என்னிடம் எதைக் கேட்டாலும் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கேட்கவேண்டும்."

"ஆம் ஆண்டவரே."

"உன்னிடம் நம்பிக்கை இருக்கிறது,  ஆனால் போதுமான அளவு இல்லையே."

"ஆண்டவரே..."

"முதலில் நம்பிக்கைக்காக விண்ணப்பித்திருக்க வேண்டும். வேண்டிய அளவிற்கு நம்பிக்கைக்கையைத் தந்திருப்பேன்."

"மன்னிக்க வேண்டும் ,  ஆண்டவரே. எனக்கு மிகுதியான அளவு நம்பிக்கையைத் தாரும், சுவாமி."

"சரி. வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அதோடு ஒரு இணைப்பு சேர்த்திருந்தாயே."

"வேலை கிடைத்தால் ஒரு பெருந்தொகையை கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதாக நேர்ந்திருந்தேன்."

"நான் என்ன வியாபாரியா? "

"இல்லை, ஆண்டவரே."

"நீ கடைக்குப் பொருள் வாங்கப் போனால் 'அந்தப் பொருளைக் கொடு, அதற்கான விலையைத் தருகிறேன்'  என்று கூறலாம்.

நான் வேலைக் கடையா வைத்திருக்கிறேன்?

அல்லது நான் அரசியல்வாதியா,  லஞ்சம் வாங்கிக்கொண்டு உதவி செய்ய?"

"எப்படியோ எங்களிடம் இந்தப் பழக்கம் வந்துவிட்டது. நாங்கள்  அதை 'நேர்ச்சை' என்கிறோம்."

"நான் இப்போ கேட்பதற்குப் பதில் சொல்.

நீ ஒரு கடைக்குச் சென்று வேண்டிய பொருள் வாங்கிவிட்டு, அதற்குரிய தொகையை கடையிலுள்ள கல்லாப் பெட்டியிலிருந்து எடுத்து கடைக்காரனிடம் கொடுத்தால் அவன் என்ன சொல்லுவான்? "

"சொல்லமாட்டான். அடிப்பான்."

"கவலைப்படாதே, நான் அடிக்கமாடட்டேன்.

ஆனால் நீ என்ன செய்கிறாய்?

என்னிடம் உதவி பெற்றுக்கொண்டு, எனக்கு உரியதையே எடுத்து  என்னிடம் தருவேன் என்கிறாய்."

"வேறு எதைத் தரமுடியும்?

இந்த பிரபஞ்சமே உம்மால் படைக்கப்பட்டது.

நானே முழுவதும் உங்களுக்குச் சொந்தம்

உங்களுக்குச் சொந்தமில்லாததைத்தான் தரவேண்டுமென்றால் எதையும் தரமுடியாதே!"

"நான் பதிலுக்குப் பதில் கேட்டேனா?      

உனக்கு வேண்டியதைக் கேட்பதற்கு உனக்கு முழு உரிமை இருக்கிறது.

கேட்கப்படும் பொருளின் தன்மைக்கு ஏற்ப அதை எப்படி, எப்போது தருவது என்று முடிவு எடுக்க வேண்டியது நான்.

நீ கேட்பது உனக்கு நன்மை பயன்படுவதாயிருந்தால் அப்படியே தருவேன்.

அல்லது பயன்படும் வேறு ஏதாவது  தருவேன்.    

உதவிக்குப் பதிலாக விலை எதிர்பார்க்க மாட்டேன்.

நான் மனிதனைப் படைத்தது அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும்தான்.

எனது அன்பு நிபந்தனையற்றது.

நான் எதிர்பார்ப்பதும் நிபந்தனையற்ற அன்பைத்தான் ."

"அப்படியானால் கோவிலுக்குக் காணிக்கை செலுத்துவது பற்றி? "

"திருச்சபை  உனது தாய்.  தாயைப் பேணுவது பிள்ளையின் கடமை.

அவ்வாறே உன் அயலானுக்கு உதவுவதும் உன் கடமை.

இரண்டு கடமைகளும் நிபந்தனையற்றவை.

அந்தக் கடமைகளுக்கும், நம்மிடையே நிலவ வேண்டிய அன்புக்கும் முடிச்சி போடாதே."

"இப்போது புரிகிறது, ஆண்டவரே. உமக்குச் சித்தம் இருந்தால் நான் விண்ணப்பித்திருக்கும்  வேலை கிடைக்கச் செய்யும்.

வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நான் உம்மை அன்பு செய்கிறேன்."

லூர்து செல்வம்.







No comments:

Post a Comment