இறைவன் நமது உள்ளத்தை நோக்குகிறார்.
*******************************
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவன்
வெளி வேடக்காரன்.
வெளி வேடக்காரன் மனிதரை ஏமாற்றலாம்,
மனிதனுக்கு மற்றவர்ளின் புறம் மட்டும்தான் தெரியும்,
அகம் தெரியாது.
நமது அகத்தையும், புறத்தையும் அறிந்த கடவுளை ஏமாற்ற முடியாது.
நேர்மையானவன் எண்ணியதைப் பேசுவான், எண்ணியதைச் செய்வான்.
எண்ணம், பேச்சு, செயல் மூன்றும் ஒன்றோடொன்று ஒத்துப்போகும்.
நமது வாழ்வு நேர்மையானதாக இருக்க வேண்டும்.
செபம் சொல்லும்போது வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வரவேண்டும்,
உதட்டிலிருந்தல்ல.
சிலர் செபிக்கும்போது அவர்களது எண்ணம் ஒன்றாகவும், வார்த்தைகள் வேறாகவும் இருக்கும்.
திவ்ய பலி பூசையில் அமர்ந்திருக்கும்போது கண் பீடத்திலும், எண்ணம் வீட்டிலும் இருக்கும்.
இது உணவுத் தட்டிலுள்ள உணவை அள்ளி வாய்க்குள் போடுவதற்குப்பதில் முதுகுக்குப் பின் வீசுவதற்குச் சமம்.
இறைவனிடம் பேசும்போது நமது உள்ளத்திலிருந்து பேசுவோம்.
வாழ்வின் செயல்களில்கூட. செயல்கள் ஒரு பக்கமும், உள்ளம் வேறு பக்கமும் இருக்கும்.
நமது செயல்களின் வெற்றி நமது உள்ளத்தில் உள்ள நோக்கத்தைப் (Intention) பொறுத்தது.
கோவில் விழாக்களை எடுத்துக் கொள்வோம்.
கோவில் விழாக்கள் இறைவனது மகிமைக்காக கொண்டாடப்படக்கூடியவை.
ஆனால் விழாக்களில் மும்முறமாக ஈடுபடுவோர் சுய மகிமையையே உள்ளத்தில் கொண்டிருந்தால், அவர்களைப் பொறுத்தமட்டில் அவ்விழாக்களால் எந்த ஆன்மீகப் பயனில்லை.
இறைவன் நமது உள்ளத்தை நோக்குகிறார்.
உள்ளம் ஆன்மாவைச் சேர்ந்தது.
ஆன்மா அழிவு இல்லாதது.
நித்திய காலம் இறைவனோடு வாழ்வதற்காகவே படைக்கப்பட்டது.
இறைவனது புகழை நோக்கமாகக்கொண்டு செயலாற்றினால்தான், இறைவனது சம்பாவனை நமக்குக் கிடைக்கும்.
நமது புகழுக்காகச் செயலாற்றினால் இவ்வுலகில் நிரந்தரமற்ற புகழ் கிடைக்கும்.
நித்திய சன்மானம் கிடைக்காது.
'இறைவனின் புகழுக்காக' என்று கூறும்போது ஒரு அடிப்படை உண்மையை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு சின்ன உபமானம்:
ஒரு தந்தை தன் மகனிடம், ''உனக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தில் ஒரு பகுதியை அப்பாவிடம் தந்துவிட வேண்டும். மீதி உன் செலவிற்கு.'' என்று கூறினார்.
மகனும் ஏன், எதற்கு என்று கேட்காமல் அப்படியே கொடுத்து வந்தான்.
பல ஆண்டுகள் கழித்து அவனது மகள் திருமணத்திற்கு பெரிய தொகை தேவைப்பட்டது.
பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவனது அப்பா அவனை அழைத்து அவன் எதிர்பாராத மிகப் பெரும் தொகையைக் கொடுத்தார்.
''எப்படீப்பா இவ்வளவு பெருந்தொகையைப் புரட்ட முடிந்தது?"
"நான் ஒன்றும் புரட்டவில்லை. நீ அவ்வப்போது தரும் பணத்தோடு நானும் பணம் போட்டு வங்கியில் உன் கணக்கில் டிப்பாசிட் செய்திருந்தேன். அந்தப் பணம்தான் இந்தப் பணம்."
கடவுள் தன் பண்புகளில்
நிறைவானவர்.(Perfect).
புகழிலும் நிறைவானவர்.
God is perfect in His glory. We cannot add to it 'our-given' glory.
கடவுளின் நிறைவான புகழுடன் நாம் புகழ் சேர்க்க முடியாது.
'ஆண்டவரின் புகழுக்காக' நாம் எதைச் செய்தாலும் அது நமக்கான சன்மானமாக மோட்சத்தில் டிப்பாசிட் செய்யப்படும்.
மோட்சம் சென்ற பின் நாம்தான் அதை அனுபவிக்கப் போகிறோம்.
எதைச் செய்தாலும் நமது உள்ளத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்காகச் செய்வோம்.
"எல்லாம் வல்ல இறைவனின் மகிமைக்காக."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment