"இராயப்பர் இயேசுவை நோக்கி, "ராபி, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்" என்றார்"
(மாற்கு.9:5)
"""""""""""""""""""""""""'""""""""""""'""""""""
இயேசு தன் திருச்சபையை அமைப்பு ரீதியாக நிர்வகிக்கவும், நற்செய்தியை உலகெங்கும் பரப்பவும் அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார்.
கடுகு மணிபோல் பிறந்து,
ஆலமரம்போல் பரந்து,
விரிந்து
வளரவிருக்கும்
அவரது திருச்சபையின்
ஆரம்ப கால நிர்வாகிகளை,
எதிர்கால வழிகாட்டிகளை
இயேசு எப்படித் தேர்ந்தெடுத்தார்?
படித்து, பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவழைத்து,
நேர்காணல் மூலம் பரிசோதித்தா தெரிவு செய்தார்?
இல்லை.
பாமர மக்களிடமிருந்து,
அன்றாட உணவிற்காக தினம் உழைக்கும்
உழைப்பாளிகளிடமிருந்து,
மற்றவர்களால் பாவிகள் என்று கருதப்படுவோரிடமிருந்து,
திருத்தப்படக்கூடிய குறைகள் நிறைய உள்ளவர்களிடமிருந்து
அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
மூன்று ஆண்டுகள் அவர்களோடு இருந்து அவர்கட்குப் பயிற்சி கொடுத்தார்.
அவர்களிடமிருந்த குறைகளை நோக்கும்போது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.
"இவ்வளவு குறைகள் உள்ள இவர்களால் எப்படி பரிசுத்தமான திருச்சபையை நிர்வகிக்க முடியும்? "
அவர்களின் குறைகளுக்கு ஒரு உதாரணம்:
இயேசுவால் திருச்சபையின் தலைவராக நியமிக்கப் பட்ட இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்தது.
இந்த அளவிற்கு குறைகள் உள்ள இராயப்பர் எப்படித் திருச்சபையின் தலைவரானார்?
அவரிடமிருந்த ஒரு நிறை:
தன்னலம் அற்ற அன்பு.
தாபோர் மலையில் இயேசு மறுரூபம் ஆகும்போது அவருடன் மோயீசனும், எலியாசும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அம்மூவருடன் அப்போஸ்தலர் மூவரையும் சேர்த்து ஆறு பேர் இருந்தார்கள்.
இராயப்பர் தன்னை மறந்து இயேசுவிடம்,
"ராபி, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்"
என்றார்.
தன் நலன் மறந்து,
தன் அன்புத்தலைவரின் நலன் மட்டுமே கருத்திற்கொண்டு
செயல்பட்ட நிறைதான்
அவரைத் தலைவராகும்
தகுதி பெறச்செய்தது.
மூன்று கூடாரங்கள் மட்டும் அமைத்தால் தன் நிலை என்னவென்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
பொதுவாழ்வில், குறிப்பாக தலைமைப் பொறுப்பில், உள்ளவர்கட்கு இராயப்பரின் மனப்பக்குவம் இருக்க வேண்டும்.
இல்லாவிடில்
பொதுவாழ்வில்
தங்களுக்கொரு வாழ்வு
அமைப்பதிலேயே
குறியாக இருப்பார்கள்.
நமது அரசியல் தலைவர்கள் அதற்கு எடுத்துக்காட்டு.
அப்போஸ்தலர்கட்கு இருந்ததெல்லாம் இயேசுவின்பால் இருந்த அன்பு மட்டுமே.
இந்த அன்புதான் அவருக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தைரியம் கொடுத்தது.
நாமும் வாழ்வோம்,
இயேசுவுக்காக மட்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment