Tuesday, February 20, 2018

சின்னச் சின்ன ஆசைகள்.

சின்னச் சின்ன ஆசைகள்.
+-----------+-----------+-----------------+

வெகு நேரம் க்யூவில் காத்திருந்து, ஒரு குடம் தாமிரவருணி தண்ணீர் எடுத்து வந்து மண்பானையில் ஊற்றி வைத்தாள் பெண் ஒருவள்.

''இன்றைக்குப் போதும்'' என்று கூறிவிட்டு வேலைக்குப் போனாள்.

மாலையில் தாகத்தோடு வீடு  திரும்பியவள், தண்ணீர் குடிப்பதற்காகப் பானையைத் திறந்தாள்.

உள்ளே ஒரு சொட்டுத் தண்ணீர் கூட  இல்லை! 

அதிர்ச்சியில் பானையை எடுத்து ஆராய்ந்தாள்.

பானையின் அடியில் மிகச் சிறிய, ஊசி மட்டும் நுழையும்
அளவிற்கு  ஓட்டை ஒன்று இருந்தது. 

ஊசி அளவு இருந்த ஓட்டை ஒரு பானைத் தண்ணீரைக் காலி பண்ணிவிட்டது!

சின்ன ஓட்டை பெரிய பானைத் தண்ணீரைக் காலிபண்ணிவிட்டது.

சரியாக பத்து மணிக்கு interview.

எட்டு மணிக்கு பஸ் பிடிக்கணும்.

7.55 க்கு ரோட்டிற்கு  வந்துவிட்டான்.

பஸ்ஸுக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள்தான்.

திடீரென்று காபி மேல் ஆசை வர,   ரோட்டோர கேண்டீனுக்குள் நுழைந்து காபி குடித்தான்.

காபிக்கான காசு கொடுத்துக் கொண்டிருந்தபோது அவன் ஏற வேண்டிய பஸ் போய்க்கொண்டிருந்தது.

அடுத்த பஸ் ஒரு மணி நேரம் கழித்துதான்!

ஒரு கப் காபியில் ஒரு interview out!

தேர்வுக்காக விடியவிடிய கண் விழித்து படித்துவிட்டு,  10 மணித் தேர்வுக்கு 9.30 க்கே பள்ளிக்கு வந்து  விட்டான்.

'பாடமெல்லாம் படித்தாயிற்று. தேர்வுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கு. ஒரு கால் மணி நேரம் ஓய்வு எடுப்போமே' என்று எண்ணி,  தேர்வு இல்லாத ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து,  ஒரு பெஞ்சில் உட்கார்ந்து,  டெஸ்கில் தலை சாய்த்தான்.

எழும்போது மணி 11!

கால் மணி ஓய்வு ஆசையில் விடியவிடிய படித்தது வேஸ்ட்!

சின்னச் சின்ன ஆசைகள் பெரிய பெரிய நோக்கங்களைச் சாகடித்துவிடும்.

30 வெள்ளிக்காசு சின்ன  தொகைதான்

அதன் மேல் வந்த ஆசையின் விளைவை உலகே அறியும்!

தன்னனிலே குற்றமற்றதாய்த் தோன்றும் சின்ன ஆசைகள் கூட நமது ஆன்மீக வாழ்வின் குறுக்கே பாய்ந்து அதைப் பாதிக்கும்.

எட்டு மணிக்கு ஞாயிறு பூசை.

ஏழரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது  'முக்கிய செய்திகளை மட்டும்  கேட்டு விட்டுப் போவோமே' என்ற ஒரு சின்ன ஆசை வரும்.

T. V யை on செய்து முக்கிய செய்திகளையும், ஒன்றிரெண்டு விளக்கச் செய்திகளையும் கேட்டு விட்டுக் கோவிலுக்குப் போனால், அங்கு இரண்டாவது வாசகம் நடந்து கொண்டிருக்கும்.

இங்கு முக்கிய செய்திகளால் முழுப்பூசை போய்விட்டது!

சிலரால் காபி குடித்தால்தான் பூசைக்குள் நுழைய முடியும்!

நன்மை எடுக்குமுன் ஒரு மணி நேரம் உபவாசம் இருக்க வேண்டும் என்ற விதியைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை!

இவர்கள் குளிக்கப்போய் சேற்றை அள்ளிப் பூசுகின்றவர்களை ஞாபகப்படுத்துகிறவர்கள்!

Serial பார்க்க ஆசிப்பது சின்ன ஆசைதான்.

அதுவே நமது ஆன்மீக முயற்சிகளின் குறுக்கே வந்தால்?  

அம்மா இராச்செபத்திற்குக் கூப்பிடும்போது,  ''கொஞ்சம் பொறுங்கள். இந்த சீரியல் முடியட்டும்" என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?

இயேசு வாசலருகில் நின்று கொண்டு, 

"உள்ளே வரலாமா? "

என்று சொல்லும்போது,

"கொஞ்சம் பொறுங்கள்,  ஆண்டவரே. சீரியல்  முடியட்டும்."

என்று கூறுவதுபோல்தானே அர்த்தம்!

நமது இறுதி நாளில்,  நாம் எதிர்பாராத நேரத்தில் இயேசு  நம்மை அழைக்க வந்தால்,

"கொஞ்சம் பொறுங்கள்,  ஆண்டவரே. சீரியல்  முடியட்டும்."

என்று கூற முடியாது!

நமது ஆன்மீக வாழ்வை என்னென்ன ஆசைகள்
கெடுக்கின்றன என்று நமக்கு மட்டுமே தெரியும்.

இறைவன் சந்நிதானத்தில் அமர்ந்து  இவற்றைப் பற்றித் தியானித்து,  நமது ஆன்மீக வாழ்வில் குறுக்கிடும் சின்னச்சின்ன ஆசைளை அப்புறப்படுத்த வேணடும்.

ஆன்மீக வாழ்வு இறைவனோடு இணைந்து வாழப்படுவது.

நமது மனமும் இயேசுவின் மனமும் ஒன்றாக வேண்டும்.  

அதாவது இயேசு நினைப்பதை நாம் நினைக்க வேண்டும்.

இயேசு ஆசிப்பதை நாம் ஆசிக்க வேண்டும்.

நமது சின்னச் சின்ன ஆசைகள் இயேசுவின் பெரிய ஆசைக்கு குறுக்கே வரக்கூடாது.


இறைவன் அன்பின் அடிப்படையில்தான் நமமைப் படைத்தார்.

நாம் இறைவனை நேசிக்க வேண்டும்.

நமது அயலானை இறைவனுக்காக நேசிக்க வேண்டும்.

அதாவது நாம் மற்றவர்களை நமது சுய நலனுக்காக அல்ல,  இறைவனுக்காகவே நேசிக்க வேண்டும்.

நாம் நம்மைக்கூட இறைவனுக்காகவே நேசிக்க வேண்டும்.

ஏனெனில் நாமும்  இயேசுவுக்குதான் உரிமையானவர்கள்.

நாம் நம்மை நேசிப்பதைவிட,

நமது அயலானை நேசிப்பதைவிட

இயேசுவை அதிகம் நேசிக்கவேண்டும்.

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்."
((மத்.10:37)

அதாவது,

இயேசுவை நேசிக்க வேண்டும், இயேசுவுக்காக.

நம்மை நேசிக்க வேண்டும், இயேசுவுக்காக.

நமது அயலானை நேசிக்க வேண்டும், இயேசுவுக்காக.

''எல்லாம் உமக்காக,

இயேசுவின் திவ்ய இருதயமே,

எல்லாம் உமக்காக."

ஆகவே நமது சொந்த ஆசைகளை  நிறைவேற்றுவதைவிட

இயேசுவின் ஆசைகளை நிறைவேற்றுவதுதான்

நமது வாழ்வின் இலட்சியமாக இருக்க வேண்டும்.

நமது சின்னச் சின்ன ஆசைகள்

நமக்கும், இயேசுவுக்கும்

குறுக்கே வரக்கூடாது.

லூர்து செல்வம்.



No comments:

Post a Comment