Monday, February 5, 2018

"அவர்கள் படகை விட்டு இறங்கியதும், மக்கள் அவரைத் தெரிந்துகொண்டு...." (மாற்கு.6:54)

"அவர்கள் படகை விட்டு இறங்கியதும், மக்கள் அவரைத் தெரிந்துகொண்டு...."
(மாற்கு.6:54)
********************************

இயேசு சென்ற இடமெல்லாம் மக்களின் சுகவீனங்களைக் குணப்படுத்தி, அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்திவந்தமையால் அவரது முகம் மக்கள் மனதில் நன்கு பதிந்துவிட்டது.

அவர் எங்கு சென்றாலும் அவரை அடையாளம் கண்டு, அவரால் குணம் பெறவும், அவரது அருள்தரும் வார்த்தைளைக் கேட்கவும் கூட்டம் கூடிவிடும்.

அன்று தன் ஊனுடலோடும், உயிரோடும் உலகில் வாழ்ந்த அதே இயேசு இன்றும் நம்மிடையே வாழ்கிறார்.

திருப்பலியின்போது அப்ப, ரசக் குணங்களில் நம்மிடையே இறங்கி வந்து திவ்ய நற்கருணைப்
பேழையில் நிரந்தரமாக நமக்காகக் காத்திருக்கும் இயேசுவை அடையாளம் கண்டு கொள்கிறோமா?

உண்மையிலேயே இயேசுவை அடையாளம் கண்டால் அவரை இடது கையால் வாங்கி, ஏதோ தின்பண்டத்தைப் போடுவது போல வாயில்போடுவோமா?

உண்மையிலேயே இயேசுவை அடையாளம் கண்டால் பரிசுத்தரான அவரை நமது பாவத்தினால் அழுக்கான உள்ளத்தைச் சுத்தப்படுத்தாமல் உட்கொள்வோமா?

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."

பசியாய் இருப்போர்,

தாகமாய் இருப்போர்,

அன்னியனாய் இருப்போர்,

ஆடையின்றி இருப்போர்,

நோயுற்றிருப்போர்,

சிறையில் இருப்போர்,

ஆகியோரைப் பார்க்கும்போது
அவர்களில் இயேசுவைக்
காண்கின்றோமா?

இயேசுவின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோமா?

"கோடிக்கணக்காய்ப் பணம் செலவளித்து எனக்கு ஆலயங்கள் கட்டுங்கள்" என்று இயேசு கூறவில்லை.

"உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? "
(1.கொரி.6:19)என்று புனித சின்னப்பர் கேட்கிறார்.

பரிசுத்த ஆவியின் உயிருள்ள ஆலயங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது நமது கடமை.

ஒருவன் தனது பெற்றோரை மிகவும் நேசித்தானாம்.

பல கோடி செலவழித்து அவர்களுக்காகப் பெரிய பங்களா ஒன்றைக் கட்டினானாம்.

அதில் அவர்களைக் குடியேறச் செய்தானாம்.

ஆனால் அவர்களுக்கு உடையோ, உணவோ கொடுக்க மாட்டானாம்.

இயேசுவுக்குக் கோயில் கட்டிவிட்டு,  அவரைப் பட்டினி போட்டால் நாமும் அந்த ஆளுக்கு ஒப்பாகிவிடுவோம்.

நமது அயலானிடம் இயேசுவைக் காண்போம்.

அயலானுக்குச் செய்வதை இயேசுவுக்கே செய்கிறோம்.

லூர்து செல்வம்.






No comments:

Post a Comment