Friday, February 23, 2018

உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: (மத்.5:44)

உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: (மத்.5:44)
+---------------+-------+------------------+

மனிதனுக்கான இறைவனின் அன்பு நித்தியமானது, அளவு கடந்தது, மாறாதது.

படைக்கப்பட்டபோது மனிதன் பாவம் இல்லாதிருந்தான்,  அன்பு உள்ளவனாயிருந்தான்,  ஆகவே நண்பனாக இருந்தான்.

மனிதன் இறைவனின் கட்டளையை மீறி பாவம் செய்தபோது நட்பு நிலையை இழந்தான்.

ஆனாலும் இறைவன் மாறாதவராகையால் மனிதன்மீது அவர் கொண்டுள்ள அன்பு மாறவில்லை.

தனது பகைவனாக மாறிவிட்ட மனிதனை   இறைவன் தொடர்ந்து நேசிக்கிறார்.

அதாவது மனிதன் பகைவனாகமாறிவிட்டாலும் கடவுள் தொடர்ந்து நண்பனாகவே இருக்கிறார்.

மனிதன் தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்தால்தான் நண்பனாக மாற முடியும்.

மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்காக இறைமகனே மனிதனாகி, பாடுகள் பட்டு, சிலுவை மரத்தில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த்தார்.

தான் நேசித்ததுபோல நாமும் எல்லோரையும் நேசிக்க. வேண்டும் என்று இறைவன்
விரும்புகிறார்.

"உன்னைப்போல் உன் அயலானையும் நேசி" என்ற கட்டளையில் நண்பர்களும், பகைவரும் அடக்கம்.

பின் ஏன் "பகைவரை நேசி" தனியாகச் சொல்ல வேண்டும் ?

நமது பகைவரை நேசிக்கும்போதுதான் நாம் இறைவனின் சாயலை முழுமையாகப் பிரதிபலிக்கிறோம்.

எப்படி?

படைக்கப்பட்ட மனிதன் பாவமே செய்யாது, நண்பனாகவே தொடர்ந்திருந்தால் இறைமகன் மனிதனாய்ப் பிறந்திருப்பாரா?

அதற்கு அவசியமே இருந்திருக்காது.

மனிதன் பாவம் செய்ததினால்
இறைமகன் இயேசு  பாவிகளைத் தேடி உலகிற்கு வந்தார்.

நாமும் நமது பகைவரைத் தேடிச்செல்லும்போதுதான் நாம் இயேசுவைப் பிரதிபலிக்கிறோம்.

இயேசு தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாசையும் 'நண்பா' என்று அழைத்தார்.

உடனே இயேசுவை அணுகி, "ராபி, வாழ்க! " என்று அவரை முத்தமிட்டான்.

இயேசுவோ, "நண்பா! எதற்காக வந்தாய் ?" என்று அவனைக் கேட்டார். அப்பொழுது அவர்கள் நெருங்கி வந்து இயேசுவின்மேல் கைபோட்டுப் பிடித்தனர்."
(மத்.26:49,50)

நாமும் நமது பகைவனையும் நண்பனாக நோக்கும்போதுதான் இயேசுவைப் பிரதிபலிக்கிறோம்.

நல்ல ஆயன் தனது 100 ஆடுகளுள் ஒன்று காணாமற்போய் விட்டால் அந்த ஆட்டைத் தேடி அது கிடைக்கும் வரை அலைகிறான்.

அதுபோல் நாமும் நமது  வட்டத்தை  விட்டுச் சென்றவனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

அவனை நேசித்தால்தான் இது சாத்தியம்.

"நானே நல்ல ஆயன்"  என்று கூறிய இயேசு,

'நீங்களும் நல்ல ஆயர்களாக இருங்கள்'  என்று கூறுகிறார்.

இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, தனது சிலுவை மரணத்திற்குக் காரணமாய் இருந்தவர்களை மன்னிக்கும்படித் தன் தந்தையை வேண்டுகிறார்.

நாம் நமது பகைவர்களை மன்னிக்கும்போதுதான் மறுஇயேசுவாக மாறுகிறோம்.

இயேசு,

  ''உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்:''

என்று கூறும்போது

''நீங்கள் நானாக மாறுங்கள்"

என்று கூறுவதுபோல் இருக்கிறது.

'இனி, வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே.' (கலாத்.2:20)

என்ற புனித சின்னப்பரின்  கூற்று நம்மில் நிறைவேற வேண்டுமென்றால் நாம் கிறிஸ்துவாக மாற வேண்டும்.

நாம் கிறிஸ்துவாக மாறவேண்டுமென்றால், நாம் நமது பகைவர்களை நேசிக்க வேண்டும்.

நமக்குத் தீமை செய்தவர்க்கு நன்மை செய்ய வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment