Wednesday, February 21, 2018

"நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்?" (ஆதி. 4:6)

"நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்?" (ஆதி. 4:6)
+---------------+--------+-----------+


"ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார்.
காயினையோ அவன் காணிக்கைகளையோ அவர் கண்ணோக்கவில்லை.

அதனால் காயின் மிக்க சினம் கொண்டான்."

மனித இனத்தின் முதற்கொலைக்குக் காரணமாய் இருந்தது 'கோபம்'.

ஆபேலுக்கும், காயீனுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் தகறாறு எதுவும் இல்லை.

ஆபேலின் பலியை இறைவன் ஏற்றுக் கொண்டார்.

காயீனின் பலியை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவே காயீனுக்கு ஆபேல் மீது பொறாமை, 

அதன் விளைவாக கோபம்,

அதன் விளைவாக கொலை.

பரிசேயரும், சதுசேயரும் இறைமகன் இயேசுவைக்
கொலை செய்தார்கள்.

ஏன்?

தனிப்பட்ட முறையிலான விரோதம் காரணமாகவா?

இல்லை.

இயேசு  நல்லவர்.

எல்லோருக்கும் நல்லது செய்தார்.

மக்கள் அவர்பின் கூட்டம் கூட்டமாய்ச் சென்றார்கள்.

இதனால் பரிசேயருக்கும், சதுசேயருக்கும் இயேசு மீது பொறாமை,

அதன் விளைவாகக் கோபம்,

அதன் விளைவாகக் கொலை.

ஆக,

பொறாமை,  கோபம் ஆகியவைதான் இயேசுவின் பாடுகட்கு உடனடிக் காரணங்கள்.

யூதர்களின் பொறாமை,  கோபம் மட்டுமா இயேசுவின் பாடுகட்குக் காரணம்?

யூதர்களுக்காக மட்டுமா
பாடுபட்டு, மரித்தார்?

நமக்காகவும்தானே?

நமது குடும்ப வாழ்விலும்,

பங்கு வாழ்விலும்,

சமூக வாழ்விலும்

பொறாமையும்,

கோபமும்தானே

அநேக வேண்டாத நிகழ்வுகளுக்குக்

காரணமாய் அமைந்துள்ளன.

நாமும் வருடக்கணக்காய் தவசு காலத்திலும்,

புனித வாரத்திலும்

தவம் செய்வதோடு,

இயேசுவின் பாடுகளைப் பற்றித் தியானித்திருக்கிறோம்.

பாடுகளின்போது

யூதாஸ் இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தான்.

அவருக்குக் கோபம் வரவில்லை.
.
இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்தார்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

யூதர்கள் அவரைக் கசையினால் அடித்தார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

முள்முடி  சூட்டி ,  அடித்து,  காரி  அவர்மேல் துப்பினார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

பாரமான சிலுவையை அவர்மேல் சுமத்தினார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

சிலுவையின் பாரத்தைத் தாங்க முடியாமல் அவர் கீழே விழுந்தபோதெல்லாம் சாட்டையால் அடித்து எழுப்பினார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

சிலுவையில் அறையுமுன் அவர் ஆடைகளை உறிந்தார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்

அவருக்குக் கோபம் வரவில்லை.

சிலுவையில்  தொங்கியபோது அவரை அவமானமாய்ப் பேசினார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

இதையெல்லாம் தியானித்துக்
கொண்டிருக்கும்போது யாராவது  தொந்தரவு செய்து  விட்டால்

நமக்குக் கோபம்  பொத்துக்கொண்டு வந்து விடுகிறது.

தவக்காலத்தில்  நமது உள்ளம் மாறாவிட்டால் நமது வெளித் தவ முயற்சிகளால் எந்தப் பயனுமில்லை.

"உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்."
விவியோவேல்.2:13)

இந்த ஆண்டு உயிர்த்த திருவிழாவிற்கு எழும்பொது நமது  உள்ளத்தில் பொறாமையும், கோபமும் நீங்கி எழுவோம்.

லூர்து செல்வம்.





No comments:

Post a Comment