"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"
(மாற்கு.7:27)
**********************************
இறை வார்த்தையை வாசித்து, அதன் மூலம் இறைவன் நமக்கு அறிவிக்கிற செய்தியைச் சரியாக உணர்வதற்கு இறைவனைப் பற்றிய மாறாத உண்மை ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இயேசுவின் அன்பும், மீட்பும்,
நற்செய்தியும் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமல்ல, அவரால் படைக்கப்பட்ட எல்லா மனிதருக்கும் உரியது.
"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்."(மத்.28:19)
இயேசுவின் வார்த்தைகட்கு நாம் கொடுக்கும் பொருள் இந்த உண்மைக்கு மாறுபாடாய் இருக்கக்கூடாது.
இயேசு மனிதனாய்ப் பிறந்தது யூத குலமாய் இருக்கலாம்.
ஆனாலும் அவர் மனித குலம் முழுமையும் படைத்த கடவுள்.
யூத இனத்தைச் சேராத பெண்ணொருத்தி அசுத்த ஆவி பிடித்தத் தன் மகளைக் குணமாக்கும்படி வேண்டினாள்.
இயேசு அவளது விசுவாசத்தைப் பரிசோதிப்பதற்காக, ''முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.
இயேசு, அவள் புற இனத்தவள் என்பதற்காக இவ்வாறு கூறவில்லை.
ஏனெனில் அவளும் அவரால் படைக்கப்பட்டவர்தான்.
எல்லோரும் மீட்புப் பெறவேண்டும் என்பதே அவரது விருப்பம்.
அவளது விசுவாசத்தைப் பரிசோதிப்பதற்காகவே அவ்வாறு கேட்டாள்.
அந்தப் பெண்ணின் பதில் அவளின் விசுவாசத்தை உறுதிப்படுத்தியதோடு, அவளது தாழ்ச்சியையும் வெளிக்கொணர்ந்தது.
அவள் சொன்ன பதில்:
"ஆமாம் ஆண்டவரே, ஆனால் மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே"
இப்பதில் அவளது ஆழ்ந்த விசுவாசத்தையும், தாழ்ச்சியையும் வெளிப்படுத்தியது.
அதற்கு இயேசு கூறிய பதில், "இவ்வார்த்தையின் நிமித்தம் நீ போகலாம்: பேய் உன் மகளை விட்டுவிட்டது."
அப்பெண் கூறிய பதில் வார்த்தைகளில் வெளியான விசுவாசம் அவளது மகளைக் குணமாக்கிற்று.
நாமும் இறைவனிடம் அநேக உதவிகளைக் கேட்கிறோம்.
விசுவாசத்தோடு கேட்கிறோமா?
நமது விசுவாசம் பரிசோதிக்கப்படும்போது அதில் உறுதியாய் இருக்கிறோமா?
தாயின் அருகே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை அம்மா கண்ணில்படாவிட்டால் 'அம்மா' என்று கத்துகிறது.
அம்மா கண்ணில் பட்டுவிட்டால் அழுகையை நிறுத்தி விடுகிறது.
நாமும் நமது ஆன்மீக வாழ்வில் அப்படித்தான்.
சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் நாம் சோதனை நேரத்தில்தான் கடவுளை நினைக்கிறோம்.
சோதனை அதிகமாயிருந்தால் கடவுளை அதிகமாக நினைக்கிறோம்.
ஏனெனில் நம்மால் சுயமாக எதுவும் செய்ய முடியாதென்று நமக்குத் தெரியும்.
ஆகவே நமது விசுவாசம் சோதனைக்கு உட்படுத்தப்படும்போது அதைக் காப்பாற்றிக்கொள்ள இறைவனிடம் வேண்டுவோம்.
சோதனை அதிகமானால் அதிகமாக வேண்டுவோம்.
இறைவனோடு நமக்குள்ள நெருக்கத்தை அதிகமாக்கவே இறைவன் சோதனைகளை அனுமதிக்கிறார்.
சோதனை நேரத்தில்தான் நமது இயலாமை நமக்குப் புரியும்.
நமது தாழ்ச்சியும் அதிகமாகும்.
தாழ்ச்சியே சகல புண்ணியங்களுக்கும் அரசி.
Humility is the queen of all the virtues.
இறைவன் உதவியால்
சோதனைகளை வெல்வோம்.
விசுவாசத்தை அதிகப்படுத்துவோம்.
இறைவனோடு நெருக்கத்தை அதிகமாக்குவோம்.
நித்திய பேரின்பத்தின் முன்சுவையை அனுபவிப்போம்.
Let us have a pretaste of heavenly bliss.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment