Sunday, February 25, 2018

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்." (லூக்.6:36)

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்." (லூக்.6:36)
"""'''''''''''''''''''''''''""""'''''''"'''''''''''''''''''''''''''''''''''''''''''''

" தாயைப்போல் பிள்ளை,  நூலைப்போல் சேலை"- அனுபவப்பூர்வமான பழமொழி.

ஒரு பிள்ளையின் முகச் சாயலைப் பார்த்தவுடன் 'இது இன்னாருடைய பிள்ளை' 
என்று கூறிவிடலாம்.

முகச்சாயல்   மட்டுமல்ல தாய் தந்தையரின் குணங்கள்கூட பிள்ளைகட்கு  வந்துவிடுவதுண்டு.

ஆனாலும் தனி மனித சுதந்திரம், வாழ்க்கைச்ஞ சூழ்நிலை காரணமாக குணபாவங்கள் மாறுபடுதுதுண்டு.

ஆனால் தனி மனித சுதந்திரம்  உள்ள நாம் நமது சுதந்திர உரிமையைப் பயன்படுத்தி நல்ல குணபாவங்களை நம்முடையதாக்கிக்கொள்ள வேண்டும்.

இறைமகன் இயேசுவின் ஆசை:

நமது விண்ணகத் தந்தை நிறைவுள்ளவர்.

நாமும் நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணகத் தந்தை அன்புள்ளவர்.

நாமும் அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணகத் தந்தை இரக்கம் உள்ளவர்.

நாமும் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணகத் தந்தை மன்னிக்கிறவர்.

நாமும் மன்னிக்க வேண்டும்.

நமது குண நலன்களை வைத்து

நாம் விண்ணகத் தந்தையின் மக்களென்றும்,

இயேசுவின் சீடர்களென்றும்

மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நமது தந்தையின் இரக்கத்தின் காரணமாகத்தான்,

அவரது ஒரே மகனை நமது இரட்சகராகப் பெற்றோம்.

நாம் பெற்ற இரட்சகரை மற்றவர்கட்கும் தரவேண்டாமா?

நற்செய்திப் பணி இரக்கத்தின் பணியல்லவா?

இயேசுவை அறியாதவர்மீது இரக்கம் காட்டவேண்டாமா?

இயேசு நற்செய்தியை அறிவிக்கவும்,

நமது பாவங்ளுக்குத் தன் மரணத்தின்மூலம் பரிகாரம் செய்யயவும்   வந்தார்.

அப்பணியின்போது சென்றவிடமெல்லாம் தன் இரக்கத்தின் காரணமாக நோயாளிகளைக் குணமாக்கினார், மரித்தோரை உயிர்ப்பித்தார்.

நாம் அன்பு செய்தால் மட்டும் போதாது.

உள்ளத்து அன்பை நமது இரக்கச் செயல்கள் மூலம் செயல்படுத்த வேண்டும்.

லூர்து செல்வம்.

Saturday, February 24, 2018

"இராயப்பர் இயேசுவை நோக்கி, "ராபி, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்" என்றார்" (மாற்கு.9:5)

"இராயப்பர் இயேசுவை நோக்கி, "ராபி, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்" என்றார்"
(மாற்கு.9:5)
"""""""""""""""""""""""""'""""""""""""'""""""""

இயேசு தன் திருச்சபையை அமைப்பு ரீதியாக நிர்வகிக்கவும்,  நற்செய்தியை உலகெங்கும் பரப்பவும் அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார்.

கடுகு மணிபோல் பிறந்து,

ஆலமரம்போல் பரந்து,

விரிந்து

வளரவிருக்கும்

அவரது திருச்சபையின்

ஆரம்ப கால நிர்வாகிகளை,

எதிர்கால வழிகாட்டிகளை

இயேசு எப்படித் தேர்ந்தெடுத்தார்?

படித்து,  பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவழைத்து, 

நேர்காணல் மூலம் பரிசோதித்தா தெரிவு செய்தார்?

இல்லை.

பாமர மக்களிடமிருந்து,

அன்றாட உணவிற்காக தினம் உழைக்கும்

உழைப்பாளிகளிடமிருந்து, 

மற்றவர்களால் பாவிகள் என்று கருதப்படுவோரிடமிருந்து,

திருத்தப்படக்கூடிய     குறைகள் நிறைய உள்ளவர்களிடமிருந்து 

அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

மூன்று ஆண்டுகள் அவர்களோடு இருந்து அவர்கட்குப் பயிற்சி கொடுத்தார்.

அவர்களிடமிருந்த குறைகளை நோக்கும்போது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.

"இவ்வளவு குறைகள் உள்ள இவர்களால் எப்படி  பரிசுத்தமான திருச்சபையை நிர்வகிக்க முடியும்? "

அவர்களின் குறைகளுக்கு ஒரு உதாரணம்:

இயேசுவால் திருச்சபையின் தலைவராக நியமிக்கப் பட்ட இராயப்பர்  அவரை மூன்று முறை மறுதலித்தது.

இந்த அளவிற்கு குறைகள் உள்ள இராயப்பர் எப்படித் திருச்சபையின் தலைவரானார்?

அவரிடமிருந்த ஒரு நிறை:

தன்னலம் அற்ற அன்பு.

தாபோர் மலையில் இயேசு  மறுரூபம் ஆகும்போது அவருடன் மோயீசனும்,  எலியாசும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அம்மூவருடன் அப்போஸ்தலர் மூவரையும் சேர்த்து  ஆறு பேர் இருந்தார்கள்.

இராயப்பர் தன்னை மறந்து இயேசுவிடம், 

"ராபி, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்"

என்றார்.

தன் நலன் மறந்து,

தன் அன்புத்தலைவரின் நலன் மட்டுமே கருத்திற்கொண்டு

செயல்பட்ட நிறைதான்

அவரைத் தலைவராகும்

தகுதி பெறச்செய்தது.

மூன்று கூடாரங்கள் மட்டும் அமைத்தால் தன் நிலை என்னவென்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.

பொதுவாழ்வில்,  குறிப்பாக தலைமைப் பொறுப்பில்,  உள்ளவர்கட்கு இராயப்பரின் மனப்பக்குவம் இருக்க வேண்டும்.

இல்லாவிடில்

பொதுவாழ்வில்

தங்களுக்கொரு வாழ்வு

அமைப்பதிலேயே

குறியாக இருப்பார்கள்.

நமது அரசியல் தலைவர்கள் அதற்கு எடுத்துக்காட்டு.

அப்போஸ்தலர்கட்கு இருந்ததெல்லாம் இயேசுவின்பால் இருந்த அன்பு மட்டுமே.

இந்த அன்புதான் அவருக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தைரியம் கொடுத்தது. 

நாமும் வாழ்வோம்,

இயேசுவுக்காக மட்டும்.

லூர்து செல்வம்.

Friday, February 23, 2018

உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: (மத்.5:44)

உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: (மத்.5:44)
+---------------+-------+------------------+

மனிதனுக்கான இறைவனின் அன்பு நித்தியமானது, அளவு கடந்தது, மாறாதது.

படைக்கப்பட்டபோது மனிதன் பாவம் இல்லாதிருந்தான்,  அன்பு உள்ளவனாயிருந்தான்,  ஆகவே நண்பனாக இருந்தான்.

மனிதன் இறைவனின் கட்டளையை மீறி பாவம் செய்தபோது நட்பு நிலையை இழந்தான்.

ஆனாலும் இறைவன் மாறாதவராகையால் மனிதன்மீது அவர் கொண்டுள்ள அன்பு மாறவில்லை.

தனது பகைவனாக மாறிவிட்ட மனிதனை   இறைவன் தொடர்ந்து நேசிக்கிறார்.

அதாவது மனிதன் பகைவனாகமாறிவிட்டாலும் கடவுள் தொடர்ந்து நண்பனாகவே இருக்கிறார்.

மனிதன் தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்தால்தான் நண்பனாக மாற முடியும்.

மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்காக இறைமகனே மனிதனாகி, பாடுகள் பட்டு, சிலுவை மரத்தில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த்தார்.

தான் நேசித்ததுபோல நாமும் எல்லோரையும் நேசிக்க. வேண்டும் என்று இறைவன்
விரும்புகிறார்.

"உன்னைப்போல் உன் அயலானையும் நேசி" என்ற கட்டளையில் நண்பர்களும், பகைவரும் அடக்கம்.

பின் ஏன் "பகைவரை நேசி" தனியாகச் சொல்ல வேண்டும் ?

நமது பகைவரை நேசிக்கும்போதுதான் நாம் இறைவனின் சாயலை முழுமையாகப் பிரதிபலிக்கிறோம்.

எப்படி?

படைக்கப்பட்ட மனிதன் பாவமே செய்யாது, நண்பனாகவே தொடர்ந்திருந்தால் இறைமகன் மனிதனாய்ப் பிறந்திருப்பாரா?

அதற்கு அவசியமே இருந்திருக்காது.

மனிதன் பாவம் செய்ததினால்
இறைமகன் இயேசு  பாவிகளைத் தேடி உலகிற்கு வந்தார்.

நாமும் நமது பகைவரைத் தேடிச்செல்லும்போதுதான் நாம் இயேசுவைப் பிரதிபலிக்கிறோம்.

இயேசு தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாசையும் 'நண்பா' என்று அழைத்தார்.

உடனே இயேசுவை அணுகி, "ராபி, வாழ்க! " என்று அவரை முத்தமிட்டான்.

இயேசுவோ, "நண்பா! எதற்காக வந்தாய் ?" என்று அவனைக் கேட்டார். அப்பொழுது அவர்கள் நெருங்கி வந்து இயேசுவின்மேல் கைபோட்டுப் பிடித்தனர்."
(மத்.26:49,50)

நாமும் நமது பகைவனையும் நண்பனாக நோக்கும்போதுதான் இயேசுவைப் பிரதிபலிக்கிறோம்.

நல்ல ஆயன் தனது 100 ஆடுகளுள் ஒன்று காணாமற்போய் விட்டால் அந்த ஆட்டைத் தேடி அது கிடைக்கும் வரை அலைகிறான்.

அதுபோல் நாமும் நமது  வட்டத்தை  விட்டுச் சென்றவனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

அவனை நேசித்தால்தான் இது சாத்தியம்.

"நானே நல்ல ஆயன்"  என்று கூறிய இயேசு,

'நீங்களும் நல்ல ஆயர்களாக இருங்கள்'  என்று கூறுகிறார்.

இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, தனது சிலுவை மரணத்திற்குக் காரணமாய் இருந்தவர்களை மன்னிக்கும்படித் தன் தந்தையை வேண்டுகிறார்.

நாம் நமது பகைவர்களை மன்னிக்கும்போதுதான் மறுஇயேசுவாக மாறுகிறோம்.

இயேசு,

  ''உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்:''

என்று கூறும்போது

''நீங்கள் நானாக மாறுங்கள்"

என்று கூறுவதுபோல் இருக்கிறது.

'இனி, வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே.' (கலாத்.2:20)

என்ற புனித சின்னப்பரின்  கூற்று நம்மில் நிறைவேற வேண்டுமென்றால் நாம் கிறிஸ்துவாக மாற வேண்டும்.

நாம் கிறிஸ்துவாக மாறவேண்டுமென்றால், நாம் நமது பகைவர்களை நேசிக்க வேண்டும்.

நமக்குத் தீமை செய்தவர்க்கு நன்மை செய்ய வேண்டும்.

லூர்து செல்வம்.

Thursday, February 22, 2018

"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." (மத்.5:24)


"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." (மத்.5:24)
+++++++++++++++++++++++++

எதற்காக இறைவனுக்குக் காணிக்கை செலுத்துகிறோம்?

அவருக்கு pocket money.   யாகவா? அதாவது,  அவரது செலவுக்காகவா?

இவ்வுலகிலுள்ள எல்லாமே அவருக்கு உரியவை.

நம்மிடம் இருப்பதெல்லாம் அவரால் நமக்குத் தரப்பட்டவை.

அவர் மேல் நாம் கொண்டுள்ள அன்பைத் தெரிவிப்பதற்காகவே காணிக்கை செலுத்துகிறோம்.

அன்பைத் தெரிவிக்க முதலில் நம்மிடம் அன்பு இருக்க வேண்டும்.

அன்பு இருக்கும் இடத்தில் சமாதானம்  இருக்கும்.

நமது அயலானுக்கும் நமக்கும் இடையில் சமாதானம் இல்லையேல் நம் அன்பில் குறைபாடு உள்ளது என்று பொருள்.

அன்பு கலவாத காணிக்கை   காணிக்கையே அல்ல,  வெறும் காசுதான்.

ஆகவே,

நம் சகோதரனுக்கு நம்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நாம் நினைவுற்றால்,

அவனோடு சமாதானம் செய்து நம் அன்பைச் சரி செய்த பின்புதான் நமதுகாணிக்கையைச் செலுத்த வேண்டும்.

அந்த காணிக்கைதான்,  அதாவது அன்புதான்,  இறைவனுக்கு ஏற்ற காணிக்கை.

கோவிலில் போடும் காணிக்கை மட்டுமல்ல,

நமது அயலானுக்கு நாம் அன்புடன் செய்யும்

பண உதவியும்,

செயல் உதவியும்கூட

நாம் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கைதான்.

ஆகவே கோவிலில் மட்டுமல்ல,

தெருவில்கூட இறைவனுக்கு காணிக்கை செலுத்தலாம்.

எங்கே  அன்பு இருக்கிறதோ,  அங்கு இறைவன் இருக்கிறார்.

இறைவன் மாறாதவர். அவர் எப்போதும் நம்மோடு சமாதானமாகவே உள்ளார்.

நாம் பாவம் செய்யும்போது சமாதானப்பாதையை விட்டு விலகுகிறோம். இறைவன் விலகுவதில்லை.

பாவங்களுக்காக மனம் வருந்தும்போது, மன்னிப்புப்பெற்று சமாதானப் பாதைக்குத் திரும்புகிறோம்.

மக்களும் ஒருவரை ஒருவர் மன்னித்து,  சமாதானத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

மன்னிப்போம்.

மன்னிப்புப் பெறுவோம்.

சமாதானத்தோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, February 21, 2018

"நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்?" (ஆதி. 4:6)

"நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்?" (ஆதி. 4:6)
+---------------+--------+-----------+


"ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார்.
காயினையோ அவன் காணிக்கைகளையோ அவர் கண்ணோக்கவில்லை.

அதனால் காயின் மிக்க சினம் கொண்டான்."

மனித இனத்தின் முதற்கொலைக்குக் காரணமாய் இருந்தது 'கோபம்'.

ஆபேலுக்கும், காயீனுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் தகறாறு எதுவும் இல்லை.

ஆபேலின் பலியை இறைவன் ஏற்றுக் கொண்டார்.

காயீனின் பலியை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவே காயீனுக்கு ஆபேல் மீது பொறாமை, 

அதன் விளைவாக கோபம்,

அதன் விளைவாக கொலை.

பரிசேயரும், சதுசேயரும் இறைமகன் இயேசுவைக்
கொலை செய்தார்கள்.

ஏன்?

தனிப்பட்ட முறையிலான விரோதம் காரணமாகவா?

இல்லை.

இயேசு  நல்லவர்.

எல்லோருக்கும் நல்லது செய்தார்.

மக்கள் அவர்பின் கூட்டம் கூட்டமாய்ச் சென்றார்கள்.

இதனால் பரிசேயருக்கும், சதுசேயருக்கும் இயேசு மீது பொறாமை,

அதன் விளைவாகக் கோபம்,

அதன் விளைவாகக் கொலை.

ஆக,

பொறாமை,  கோபம் ஆகியவைதான் இயேசுவின் பாடுகட்கு உடனடிக் காரணங்கள்.

யூதர்களின் பொறாமை,  கோபம் மட்டுமா இயேசுவின் பாடுகட்குக் காரணம்?

யூதர்களுக்காக மட்டுமா
பாடுபட்டு, மரித்தார்?

நமக்காகவும்தானே?

நமது குடும்ப வாழ்விலும்,

பங்கு வாழ்விலும்,

சமூக வாழ்விலும்

பொறாமையும்,

கோபமும்தானே

அநேக வேண்டாத நிகழ்வுகளுக்குக்

காரணமாய் அமைந்துள்ளன.

நாமும் வருடக்கணக்காய் தவசு காலத்திலும்,

புனித வாரத்திலும்

தவம் செய்வதோடு,

இயேசுவின் பாடுகளைப் பற்றித் தியானித்திருக்கிறோம்.

பாடுகளின்போது

யூதாஸ் இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தான்.

அவருக்குக் கோபம் வரவில்லை.
.
இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்தார்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

யூதர்கள் அவரைக் கசையினால் அடித்தார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

முள்முடி  சூட்டி ,  அடித்து,  காரி  அவர்மேல் துப்பினார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

பாரமான சிலுவையை அவர்மேல் சுமத்தினார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

சிலுவையின் பாரத்தைத் தாங்க முடியாமல் அவர் கீழே விழுந்தபோதெல்லாம் சாட்டையால் அடித்து எழுப்பினார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

சிலுவையில் அறையுமுன் அவர் ஆடைகளை உறிந்தார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்

அவருக்குக் கோபம் வரவில்லை.

சிலுவையில்  தொங்கியபோது அவரை அவமானமாய்ப் பேசினார்கள்.

அவருக்குக் கோபம் வரவில்லை.

இதையெல்லாம் தியானித்துக்
கொண்டிருக்கும்போது யாராவது  தொந்தரவு செய்து  விட்டால்

நமக்குக் கோபம்  பொத்துக்கொண்டு வந்து விடுகிறது.

தவக்காலத்தில்  நமது உள்ளம் மாறாவிட்டால் நமது வெளித் தவ முயற்சிகளால் எந்தப் பயனுமில்லை.

"உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்."
விவியோவேல்.2:13)

இந்த ஆண்டு உயிர்த்த திருவிழாவிற்கு எழும்பொது நமது  உள்ளத்தில் பொறாமையும், கோபமும் நீங்கி எழுவோம்.

லூர்து செல்வம்.





Tuesday, February 20, 2018

ஹலோ! நான் என்ன வியாபாரியா?

ஹலோ!  நான் என்ன வியாபாரியா?
+-----+------+-------+------+------+-----+

ஒரு     கற்பனை  உரையாடல்.
               ******

"இயேசுவே,  என் ஆண்டவரே,
ஒரு சின்ன வேண்டுகோள்.."

"சரி, கேள்."

"ஆண்டவரே, நான் படித்து முடித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்."

"அந்த வேலை கிடைக்க வேண்டுமென்று என்னிடம் விண்ணப்பித்திருக்கிறாய்."

''ஆம்  ஆண்டவரே."

"என்னிடம் எதைக் கேட்டாலும் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கேட்கவேண்டும்."

"ஆம் ஆண்டவரே."

"உன்னிடம் நம்பிக்கை இருக்கிறது,  ஆனால் போதுமான அளவு இல்லையே."

"ஆண்டவரே..."

"முதலில் நம்பிக்கைக்காக விண்ணப்பித்திருக்க வேண்டும். வேண்டிய அளவிற்கு நம்பிக்கைக்கையைத் தந்திருப்பேன்."

"மன்னிக்க வேண்டும் ,  ஆண்டவரே. எனக்கு மிகுதியான அளவு நம்பிக்கையைத் தாரும், சுவாமி."

"சரி. வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அதோடு ஒரு இணைப்பு சேர்த்திருந்தாயே."

"வேலை கிடைத்தால் ஒரு பெருந்தொகையை கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதாக நேர்ந்திருந்தேன்."

"நான் என்ன வியாபாரியா? "

"இல்லை, ஆண்டவரே."

"நீ கடைக்குப் பொருள் வாங்கப் போனால் 'அந்தப் பொருளைக் கொடு, அதற்கான விலையைத் தருகிறேன்'  என்று கூறலாம்.

நான் வேலைக் கடையா வைத்திருக்கிறேன்?

அல்லது நான் அரசியல்வாதியா,  லஞ்சம் வாங்கிக்கொண்டு உதவி செய்ய?"

"எப்படியோ எங்களிடம் இந்தப் பழக்கம் வந்துவிட்டது. நாங்கள்  அதை 'நேர்ச்சை' என்கிறோம்."

"நான் இப்போ கேட்பதற்குப் பதில் சொல்.

நீ ஒரு கடைக்குச் சென்று வேண்டிய பொருள் வாங்கிவிட்டு, அதற்குரிய தொகையை கடையிலுள்ள கல்லாப் பெட்டியிலிருந்து எடுத்து கடைக்காரனிடம் கொடுத்தால் அவன் என்ன சொல்லுவான்? "

"சொல்லமாட்டான். அடிப்பான்."

"கவலைப்படாதே, நான் அடிக்கமாடட்டேன்.

ஆனால் நீ என்ன செய்கிறாய்?

என்னிடம் உதவி பெற்றுக்கொண்டு, எனக்கு உரியதையே எடுத்து  என்னிடம் தருவேன் என்கிறாய்."

"வேறு எதைத் தரமுடியும்?

இந்த பிரபஞ்சமே உம்மால் படைக்கப்பட்டது.

நானே முழுவதும் உங்களுக்குச் சொந்தம்

உங்களுக்குச் சொந்தமில்லாததைத்தான் தரவேண்டுமென்றால் எதையும் தரமுடியாதே!"

"நான் பதிலுக்குப் பதில் கேட்டேனா?      

உனக்கு வேண்டியதைக் கேட்பதற்கு உனக்கு முழு உரிமை இருக்கிறது.

கேட்கப்படும் பொருளின் தன்மைக்கு ஏற்ப அதை எப்படி, எப்போது தருவது என்று முடிவு எடுக்க வேண்டியது நான்.

நீ கேட்பது உனக்கு நன்மை பயன்படுவதாயிருந்தால் அப்படியே தருவேன்.

அல்லது பயன்படும் வேறு ஏதாவது  தருவேன்.    

உதவிக்குப் பதிலாக விலை எதிர்பார்க்க மாட்டேன்.

நான் மனிதனைப் படைத்தது அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும்தான்.

எனது அன்பு நிபந்தனையற்றது.

நான் எதிர்பார்ப்பதும் நிபந்தனையற்ற அன்பைத்தான் ."

"அப்படியானால் கோவிலுக்குக் காணிக்கை செலுத்துவது பற்றி? "

"திருச்சபை  உனது தாய்.  தாயைப் பேணுவது பிள்ளையின் கடமை.

அவ்வாறே உன் அயலானுக்கு உதவுவதும் உன் கடமை.

இரண்டு கடமைகளும் நிபந்தனையற்றவை.

அந்தக் கடமைகளுக்கும், நம்மிடையே நிலவ வேண்டிய அன்புக்கும் முடிச்சி போடாதே."

"இப்போது புரிகிறது, ஆண்டவரே. உமக்குச் சித்தம் இருந்தால் நான் விண்ணப்பித்திருக்கும்  வேலை கிடைக்கச் செய்யும்.

வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நான் உம்மை அன்பு செய்கிறேன்."

லூர்து செல்வம்.







சின்னச் சின்ன ஆசைகள்.

சின்னச் சின்ன ஆசைகள்.
+-----------+-----------+-----------------+

வெகு நேரம் க்யூவில் காத்திருந்து, ஒரு குடம் தாமிரவருணி தண்ணீர் எடுத்து வந்து மண்பானையில் ஊற்றி வைத்தாள் பெண் ஒருவள்.

''இன்றைக்குப் போதும்'' என்று கூறிவிட்டு வேலைக்குப் போனாள்.

மாலையில் தாகத்தோடு வீடு  திரும்பியவள், தண்ணீர் குடிப்பதற்காகப் பானையைத் திறந்தாள்.

உள்ளே ஒரு சொட்டுத் தண்ணீர் கூட  இல்லை! 

அதிர்ச்சியில் பானையை எடுத்து ஆராய்ந்தாள்.

பானையின் அடியில் மிகச் சிறிய, ஊசி மட்டும் நுழையும்
அளவிற்கு  ஓட்டை ஒன்று இருந்தது. 

ஊசி அளவு இருந்த ஓட்டை ஒரு பானைத் தண்ணீரைக் காலி பண்ணிவிட்டது!

சின்ன ஓட்டை பெரிய பானைத் தண்ணீரைக் காலிபண்ணிவிட்டது.

சரியாக பத்து மணிக்கு interview.

எட்டு மணிக்கு பஸ் பிடிக்கணும்.

7.55 க்கு ரோட்டிற்கு  வந்துவிட்டான்.

பஸ்ஸுக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள்தான்.

திடீரென்று காபி மேல் ஆசை வர,   ரோட்டோர கேண்டீனுக்குள் நுழைந்து காபி குடித்தான்.

காபிக்கான காசு கொடுத்துக் கொண்டிருந்தபோது அவன் ஏற வேண்டிய பஸ் போய்க்கொண்டிருந்தது.

அடுத்த பஸ் ஒரு மணி நேரம் கழித்துதான்!

ஒரு கப் காபியில் ஒரு interview out!

தேர்வுக்காக விடியவிடிய கண் விழித்து படித்துவிட்டு,  10 மணித் தேர்வுக்கு 9.30 க்கே பள்ளிக்கு வந்து  விட்டான்.

'பாடமெல்லாம் படித்தாயிற்று. தேர்வுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கு. ஒரு கால் மணி நேரம் ஓய்வு எடுப்போமே' என்று எண்ணி,  தேர்வு இல்லாத ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து,  ஒரு பெஞ்சில் உட்கார்ந்து,  டெஸ்கில் தலை சாய்த்தான்.

எழும்போது மணி 11!

கால் மணி ஓய்வு ஆசையில் விடியவிடிய படித்தது வேஸ்ட்!

சின்னச் சின்ன ஆசைகள் பெரிய பெரிய நோக்கங்களைச் சாகடித்துவிடும்.

30 வெள்ளிக்காசு சின்ன  தொகைதான்

அதன் மேல் வந்த ஆசையின் விளைவை உலகே அறியும்!

தன்னனிலே குற்றமற்றதாய்த் தோன்றும் சின்ன ஆசைகள் கூட நமது ஆன்மீக வாழ்வின் குறுக்கே பாய்ந்து அதைப் பாதிக்கும்.

எட்டு மணிக்கு ஞாயிறு பூசை.

ஏழரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது  'முக்கிய செய்திகளை மட்டும்  கேட்டு விட்டுப் போவோமே' என்ற ஒரு சின்ன ஆசை வரும்.

T. V யை on செய்து முக்கிய செய்திகளையும், ஒன்றிரெண்டு விளக்கச் செய்திகளையும் கேட்டு விட்டுக் கோவிலுக்குப் போனால், அங்கு இரண்டாவது வாசகம் நடந்து கொண்டிருக்கும்.

இங்கு முக்கிய செய்திகளால் முழுப்பூசை போய்விட்டது!

சிலரால் காபி குடித்தால்தான் பூசைக்குள் நுழைய முடியும்!

நன்மை எடுக்குமுன் ஒரு மணி நேரம் உபவாசம் இருக்க வேண்டும் என்ற விதியைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை!

இவர்கள் குளிக்கப்போய் சேற்றை அள்ளிப் பூசுகின்றவர்களை ஞாபகப்படுத்துகிறவர்கள்!

Serial பார்க்க ஆசிப்பது சின்ன ஆசைதான்.

அதுவே நமது ஆன்மீக முயற்சிகளின் குறுக்கே வந்தால்?  

அம்மா இராச்செபத்திற்குக் கூப்பிடும்போது,  ''கொஞ்சம் பொறுங்கள். இந்த சீரியல் முடியட்டும்" என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?

இயேசு வாசலருகில் நின்று கொண்டு, 

"உள்ளே வரலாமா? "

என்று சொல்லும்போது,

"கொஞ்சம் பொறுங்கள்,  ஆண்டவரே. சீரியல்  முடியட்டும்."

என்று கூறுவதுபோல்தானே அர்த்தம்!

நமது இறுதி நாளில்,  நாம் எதிர்பாராத நேரத்தில் இயேசு  நம்மை அழைக்க வந்தால்,

"கொஞ்சம் பொறுங்கள்,  ஆண்டவரே. சீரியல்  முடியட்டும்."

என்று கூற முடியாது!

நமது ஆன்மீக வாழ்வை என்னென்ன ஆசைகள்
கெடுக்கின்றன என்று நமக்கு மட்டுமே தெரியும்.

இறைவன் சந்நிதானத்தில் அமர்ந்து  இவற்றைப் பற்றித் தியானித்து,  நமது ஆன்மீக வாழ்வில் குறுக்கிடும் சின்னச்சின்ன ஆசைளை அப்புறப்படுத்த வேணடும்.

ஆன்மீக வாழ்வு இறைவனோடு இணைந்து வாழப்படுவது.

நமது மனமும் இயேசுவின் மனமும் ஒன்றாக வேண்டும்.  

அதாவது இயேசு நினைப்பதை நாம் நினைக்க வேண்டும்.

இயேசு ஆசிப்பதை நாம் ஆசிக்க வேண்டும்.

நமது சின்னச் சின்ன ஆசைகள் இயேசுவின் பெரிய ஆசைக்கு குறுக்கே வரக்கூடாது.


இறைவன் அன்பின் அடிப்படையில்தான் நமமைப் படைத்தார்.

நாம் இறைவனை நேசிக்க வேண்டும்.

நமது அயலானை இறைவனுக்காக நேசிக்க வேண்டும்.

அதாவது நாம் மற்றவர்களை நமது சுய நலனுக்காக அல்ல,  இறைவனுக்காகவே நேசிக்க வேண்டும்.

நாம் நம்மைக்கூட இறைவனுக்காகவே நேசிக்க வேண்டும்.

ஏனெனில் நாமும்  இயேசுவுக்குதான் உரிமையானவர்கள்.

நாம் நம்மை நேசிப்பதைவிட,

நமது அயலானை நேசிப்பதைவிட

இயேசுவை அதிகம் நேசிக்கவேண்டும்.

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்."
((மத்.10:37)

அதாவது,

இயேசுவை நேசிக்க வேண்டும், இயேசுவுக்காக.

நம்மை நேசிக்க வேண்டும், இயேசுவுக்காக.

நமது அயலானை நேசிக்க வேண்டும், இயேசுவுக்காக.

''எல்லாம் உமக்காக,

இயேசுவின் திவ்ய இருதயமே,

எல்லாம் உமக்காக."

ஆகவே நமது சொந்த ஆசைகளை  நிறைவேற்றுவதைவிட

இயேசுவின் ஆசைகளை நிறைவேற்றுவதுதான்

நமது வாழ்வின் இலட்சியமாக இருக்க வேண்டும்.

நமது சின்னச் சின்ன ஆசைகள்

நமக்கும், இயேசுவுக்கும்

குறுக்கே வரக்கூடாது.

லூர்து செல்வம்.