Monday, July 15, 2024

"மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."(மத்தேயு.11:28)

"மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."
(மத்தேயு.11:28)

ஒரு நாள் ஒரு தாத்தா LKG‌ படிக்கும் தன் பேரனைப் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்.
 
புத்தகங்கள் அடங்கிய பை பேரனின்  தோளில்.

பேரன் தாத்தாவின் தோளில்.

பேரனுக்கு பள்ளிக்கூடம் போவதில் ஆனந்தம்.

பள்ளிக்கூடத்தைவிட அங்கு போவதில் பேரானந்தம்.

பள்ளிக்கூடத்தில் பெஞ்சில் உட்கார வேண்டும்.

போகும் போது தாத்தாவின் தோளில் பயணம்.

நமது விண்ணகப் பயணத்தில் இயேசு மாணவனின் தாத்தா போல செயலாற்ற ஆசைப்படுகிறார்.

சிலுவையைச் சுமந்து கொண்டு என் பின்னால் வாருங்கள் என்று அழைத்த இயேசு,

அதைச் சுமக்க நமக்கு உதவி செய்ய ஆசிக்கிறார்.

"சிலுவையாகிய சுமை கனமாக இருக்கிறதா?

சுமந்து சோர்ந்து போயிருக்கிறீர்களா?

நானும் உங்களோடு வருகிறேன்.

நான் உங்களுக்கு உதவுகிறேன்."

இயேசு இரக்கமும்,  மனத்தாழ்மையும் உள்ளவர்.

நாம் பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு செல்வதால் நம்மீது இரக்கப்படுகிறார்.

மனதில் தாழ்ச்சி உள்ளவர்.

தலையான புண்ணியங்களுள் தாழ்ச்சி முதன்மையானது.

தாழ் நிலையில் உள்ளவர்களுக்கு தாழ்ச்சி எளிது.

இயேசு சர்வ வல்லவ கடவுள்.

ஒன்றும் இல்லாமையிலிருந்து தன்னால் படைக்கப்பட்ட சாதாரண மனிதன் அளவுக்குத்

 தன்னையே தாழ்த்தும் அளவுக்குத் 

தாழ்ச்சியாக இருக்க அவரால் தான் முடியும்.

ஆண்டி இன்னொரு ஆண்டிக்குக் குனிந்து உதவுவது பெரிய காரியமல்ல.

ஆனால் அரசன் ஆண்டி அளவுக்குக் குனிந்து உதவுவது பெரிய காரியம்.

சர்வ வல்லவ கடவுள் ஒன்றுமில்லாத மனிதன் அளவுக்கு குனிவது மகத்தான காரியம்.

இயேசு நுகக்கால் உள்ள மாட்டு வண்டிக்குத் தன்னை ஒப்பிடுகிறார்.

வண்டியில் பாரத்தை ஏற்றி, நுகக்காலை மாட்டின் கழுத்தில் ஏற்றி விட்டால் மாடு எளிதாக வண்டியை இழுத்துச் செல்லும்.


இதில் சுமை மாட்டின் முதுகில் இருக்காது. அது சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.

சுமை வண்டியில் இருக்கும். வண்டிதான் சுமக்கும்.

மாட்டின் வேலை வண்டியை இழுப்பதுதான்.

வண்டியில் சக்கரங்கள் மாட்டியிருப்பதால் எவ்வளவு பெரிய சுமையாக இருந்தாலும் மாடு வண்டியை இலேசாக இழுத்துச் செல்லும்.


இயேசு தன்னை வண்டிக்கு ஒப்பிட்டிக்கிறார்.

"பாரமான சுமையைச் சுமந்து சோர்ந்திருக்கும் மக்களே எல்லோரும் வண்டியாகிய என்னிடம்‌ வந்து உங்கள் சுமையை என்மேல் இறக்கி வைத்து விடுங்கள்.

உங்கள் சுமையை நான் சுமப்பேன்.

நீங்கள் உங்கள் மீட்பராகிய எனது நுகத்தை உங்கள் கழுத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.

விண்ணகப் பாதையில் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளையும் என்னிடம் ஒப்புக்கொடுத்து விடுங்கள்.

நானும் உங்களோடு பயணிக்கிறேன்.

நீங்களும் என்னைப் போல் இரக்கமும், தாழ்ச்சியும் உள்ளவர்களாக இருங்கள்.

என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

நான் சுமையில் பங்கு ஏற்றுக் கொண்டது போல நீங்களும் உங்கள் அயலானின் சுமையில் பங்கு ஏற்றுக் கொள்ளுங்கள்.

எல்லோருடைய சுமையையும் எல்லோரும் சுமந்தால் உங்கள் விண்ணகப் பயணம் இன்பகரமானதாக இருக்கும்."

இயேசு நமக்காகப் பாரமான சிலுவையைச் சுமந்து அதிலே தன்னைப் பலியாகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

அவருடைய சீடர்களாக இருக்க வேண்டுமென்றால் நாமும் நமது சிலுவையைச் சுமந்து விண்ணக பாதையில் நடக்க வேண்டும் என்று சொன்னார்.

சிலுவையைச் சுமப்பதில் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்கிறார்.

சீடனோடு சேர்ந்து சிலுவையைச் சுமக்கும் குரு நமது இயேசு ஒருவராகத்தான் இருக்க முடியும்.

நமது ஆன்மீகப் பயணத்தில் நமக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளும் சிலுவைகள் தான்.

நமது பிரச்சனைகளை எல்லாம் இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்து விட்டால்  

நமது பயணம் சிலுவைப் பயணமாக இருந்தாலும் இன்பகரமான பயணமாக இருக்கும்.

பிரச்சனைகளைக் கண்டு பயப்பட வேண்டாம்.

அவற்றுக்குத் தீர்வு காண எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு வருகிறார்.

பாவச் சுமையால் சோர்ந்து இருப்பவர்கள் கலங்க வேண்டாம்.

பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் இயேசு இருக்கிறார்.

அவரது காலடியில் நமது பாவச் சுமையை இறக்கி வைத்துவிட்டு 

பரிசுத்தத்தனத்தோடு பயணிப்போம்.

பரிசுத்தருடைய விண்ணக இல்லத்துக்குள் பரிசுத்தர்களாய் நுழைவோம்.

லூர்து செல்வம்.

Sunday, July 14, 2024

"நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்."(மத்தேயு.10:34)

"நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்."
(மத்தேயு.10:34)

ஒருவருடைய வார்த்தைகளுக்குப் பொருள் காணும் முன் அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

"வீட்டுப் பாடம் படிச்சிட்டு வரல, கொன்னுப்புடுவேன்."

வாக்கியத்தை வாசித்த உடனே சொல்லிவிடலாம் இவை ஒரு ஆசிரியர் கூறியவை என்று.

"கொன்னுப்புடுவேன்". என்று கூறியிருக்கிறார்.

அவர் மேல் கொலை மிரட்டல் வழக்குப் போட்டு விடலாமா?

வார்த்தையைத் தனியே எடுத்து பார்த்தால் அப்படித்தான் தோன்றும்.

 சந்தர்ப்பம் (context).

சொல்லப்பட்ட இடம் வகுப்பறை, 

சொன்னவர் ஆசிரியர்.

மாணவரின் நலன் மீது உண்மையான அக்கறை உள்ள ஆசிரியர்.

வீட்டுப் பாடம் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த ஆசிரியர் கூறிய வார்த்தைகள் அவை.

"நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்."

கூறியவர் இயேசு. சமாதானத்தின் கடவுள்.

பூலோக மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே மனுவுரு எடுத்த இறைமகன்.

சமாதானத்தின் தேவன் ஏன் 

"சமாதானத்தை அல்ல, வாளையே கொணர வந்தேன்."

என்று சொல்கிறார்?

பள்ளிக்கூடம் இல்லாத ஒரு ஊர். அங்கு வாழ்ந்த அனைவருமே கல்வி கற்காதவர்கள். அறியாமை அவர்களுடைய பொதுச் சொத்து.

அவர்களின் நிலையை அறிந்த அரசு அங்கே ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தது.

முதியோர் கல்விக்கும் வசதி செய்து கொடுத்தது.

ஊரில் பாதிப் பேர் கற்க ஆரம்பித்தார்கள், மீதிப் பேர் பள்ளிக்கூடம் போகவில்லை.

இரண்டு ஆண்டுகளில்

 அறியாமையில் ஒன்றாக இருந்த ஊர் கல்வியின் காரணமாக இரண்டாகப் பிரிந்தது.

கற்றோர், கல்லாதோர்.

இப்பிரிவினைக்குக் காரணம் பள்ளிக்கூடம் தான் என்று சொல்லலாமா?

பள்ளிக்கூடத்துக்குப் போகாதவர்கள் தான் காரணம்.

எல்லோரும் பள்ளிக்கூடம் சென்றால் அறிவுடைமையில் ஊர் ஒன்றாகிவிடும்.

சென்மப் பாவத்தின் காரணமாக நமது முதல் பெற்றோரின் வாரிசுகள் எல்லாம் பாவிகளாக மாறினோம்.

நமக்கு பாவத்திலிருந்து விடுதலை பெற்றுத் தருவதற்காக

 இறைமகன் மனுமகனாக உலகில் பிறந்து

 நற்செய்தியை அறிவித்து பாடுகள் பட்டு, சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று வாழ்கிறார்கள்.

ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாவ நிலையில் வாழ்கிறார்கள்.

பாவ நிலையில் ஒன்றாக இருந்த உலகம் இயேசுவின் வருகையால் இரண்டாகப் பிரிந்தது.

இப்போது உலகில் 
1. பாவ நிலையில் இருந்து விடுதலை பெற்றவர்கள் 

2.பாவ நிலையில் வாழ்பவர்கள் என்று இரு பிரிவினர் இருக்கிறார்கள்.

இந்தப் பிரிவினைக்கு இயேசு காரணமா?

நிச்சயமாக இல்லை.

இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ளாமைதான் காரணம்.

பிரிந்து கிடக்கும் உலகை ஒன்று சேர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?

உலகோர் அனைவரும் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்ளும்படி செய்ய உழைக்க வேண்டும்.

உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்,

 அறிவித்தால் மட்டும் போதாது

 அனைவரையும் அதன் படி வாழச் செய்ய வேண்டும்.

அதற்காகத்தான் நமது ஆண்டவர் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவினார்.

கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியே உள்ள அனைவரையும் ,

பிரிந்து சென்றவர்களையும், பிற மதத்தினரையும் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் கொண்டு வர வேண்டும்.

பிற மதத்தினரைக்
 கத்தோலிக்கத் திருச்சபைக்குள் கொண்டு வர வேண்டும் என்று சொல்வது

மதச்சார்பின்மைக்கு எதிரானதா?

நிச்சயமாக இல்லை.

மனிதர்கள் இஷ்டப்பட்ட சமயத்தை பின்பற்றலாம் என்பதை ஏற்றுக் கொள்வது மதச்சார்பின்மை.

கடவுளே மனிதர்களுக்குத் தேர்வு செய்யும் உரிமையை (Freedom of choice) கொடுத்திருக்கிறார்.

இந்த உரிமையைப் பயன்படுத்தி அனைத்து மனிதர்களும் மீட்பராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இறைவனின் ஆசை.

"சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டும்."

என்பது முக்கியம்.

கடவுளே மனித சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை.

"இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 

நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்."

நற்செய்தியை அறிவிக்க வேண்டியது நமது கடமை.

ஏற்றுக் கொள்பவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்க வேண்டும்.

ஏற்றுக்கொள்ளாதவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

மக்களின் பிரிவினைக்குக் காரணம் நற்செய்தியோ இயேசுவோ அல்ல.

ஏற்றுக் கொள்பவர்கள் மீட்பு பெறுவர்.

ஏற்றுக்கொள்ளாதவர்கள் பெற மாட்டார்கள்.

ஒரு குடும்பத்துக்கு நற்செய்தியை அறிவிக்கிறோம்.


தந்தை ஏற்றுக் கொள்கிறார் மகன் ஏற்றுக் கொள்ளவில்லை.

 தாய் ஏற்றுக் கொள்கிறார் 
மகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மாமியார் ஏற்றுக் கொள்கிறார் 
 மருமகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசு குடும்பத்தைப் பிரிக்கவில்லை.

ஏற்றுக் கொள்ளாமைதான் பிரிக்கிறது.

நாம் முதலில் நற்செய்தியை வாழ்வோம், அப்புறம் அறிவிப்போம்.

மக்கள் நம்மை நற்செய்தியாகப் பார்க்க வேண்டும்.

இயேசுவைப் பார்த்தே திருந்தாத மக்கள் இருந்தார்கள்.

அதற்காக இயேசு போதித்ததை நிறுத்தவில்லை.

கல்யாண விருந்தில் அனைவருக்கும் உணவு பரிமாறப்படுகிறது.

 உண்பவர்களின் பசி நீங்கும்.

 உணவை சாப்பிடாமல் இருந்துவிட்டு பசி நீங்காமைக்கு காரணம் உணவு என்று கூறக்கூடாது.

 இயேசுவின் போதனைகளை வாழ்வோம். 

அனைத்து மக்களும் தனது போதனைகளின் படி வாழ்ந்து மீட்பு பெற வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆசை.

 அவரது ஆசையை நிறைவேற்றுவோம்.

இயேசு வாளைக் கொண்டு வரவில்லை, 

வாழ்வைக் கோண்டு வந்திருக்கிறார்.

வாழ்வோம்.

நிலை வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, July 13, 2024

"நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்." (எபேசியர் 1:4)

"நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்." 
(எபேசியர் 1:4)

கடவுள் நித்தியர். துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

காலங்களுக்கு முன்பே, உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே, நித்திய காலமாகவே

அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அன்பு செய்து கொண்டிருக்கிறார்.

தன்னைத் தானே அன்பு செய்கிறார்.

தன்னால் படைக்கப்படவிருக்கும் மனிதர்களையும் அன்பு செய்கிறார்.

நாம் வாழும் பிரபஞ்சத்தை அவர் படைத்த போது காலம் ஆரம்பமானது.

பிரபஞ்சம் அவருடைய நித்திய கால திட்டத்தின் விளைவு.

காலங்களின்போது அவர் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றி அவர் நித்தியத்திலிருந்தே திட்டம் 
தீட்டிக் கொண்டிருக்கிறார்.

அவர் மாறாதவர்.

திட்டங்களை அவர் மாற்றுவதில்லை.

நாம் பாவம் செய்ய வேண்டும் என்பது அவரது திட்டமல்ல, 

அது நமது சுதந்திரத்தைத்‌ தவறாகப் பயன்படுத்தியதன் விளைவு.

ஆனாலும் நாம் பாவம் செய்வோம் என்று அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அவரது அளவு கடந்த ஞானத்தின் காரணமாக நாம் செய்யும் பாவமாகிய தீமையிலிருந்து எப்படி நன்மையை வரவழைப்பது என்பதையும் நித்திய காலமாகத் திட்டமிட்டு விட்டார்.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றது மிகப் பெரிய பாவம்.

ஆனால் அதிலிருந்து தான் இயேசு நமக்குரிய மீட்பை வரவழைத்தார்.

ஆகவே மனிதனைப் படைக்கும் திட்டமும், மீட்பின் திட்டமும் நித்தியமானவை.

"உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்."

 என்ற புனித சின்னப்பரின் வார்த்தைகள் இயேசுவின் நித்திய மீட்புத் திட்டத்தைக் குறிக்கின்றன.

உலகம் தோன்றுவதற்கு முன்பே = நித்திய காலத்திலிருந்தே 

கிறிஸ்து வழியாக = இயேசுவின் பாடுகளின் மூலமாக.

நம்மைத் தேர்ந்தெடுத்தார் = நம்மை மீட்டார்.

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி =

இயேசுவின் பாடுகள் மூலமாக நாம் பாவ மன்னிப்புப் பெற்று,

அதனால் தூய்மையையும், மாசற்ற தன்மையையும் பெற்றால்தான்

அவர் திருமுன் செல்ல முடியும், அதாவது மீட்புப் பெற முடியும்.

முழு வசனத்தின் பொருள்:

நாம் மீட்பு அடைய வேண்டுமென்றால் நாம் பாவ மன்னிப்புப் பெற்று தூய்மை அடைய வேண்டும்.

அதற்காகத்தான் இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

அவர் வழியாகவே மீட்கப் படுகிறோம்.

இது கடவுளின் நித்திய காலத் திட்டம்.

கடவுளுடைய நித்திய காலத் திட்டப்படிதான் நாம் வாழ்கிறோம் என்று உறுதியாக நம்பினால்

நமது வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கி வடியும்.

அவரது திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் நமது நன்மையையே குறியாகக் கொண்டிருக்கும்.

துன்பங்கள் துன்பங்களாகத் தெரியாது.

குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு பிரசவ வேதனை வேதனையாகவே தெரியாது.

அப்படித் தெரிந்தால் யாருமே குழந்தை பெற மாட்டார்கள்.

அதேபோல் தான் ஆன்மீக வாழ்வில் வரும் துன்பங்களில் சிலுவையையும்,

சிலுவையில் நமது மீட்பையும்,

மீட்பில் நித்திய பேரின்பத்தையும் பார்ப்பவர்கள்

துன்பங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள், வழியனுப்ப மாட்டார்கள்.

எல்லாம் இறைவன் திட்டப்படி தான் நடக்கின்றன என்ற நம்பிக்கை உறுதியாக இருக்கும்போது

"எனக்கு இது வேண்டும், அது வேண்டும்" கேட்க மாட்டோம்.

இறைவனோடு ஒன்றித்து வாழ்வையே செபமாக நம்புவோம்.

எப்போதும் இறைப் பிரசன்னத்தில் வாழ்வோம்.

அவரைப் பற்றி தியானிப்பதில் மகிழ்ச்சி காண்போம்.

தியானத்தில் தான் இறை உள்ளமும், நமது உள்ளமும் ஒன்றிக்கின்றன.

ஒன்றிக்கும்போது இறை உள்ளத்தில் உள்ள விருப்பங்களை நமது உள்ளம் அறியும்.

உள்ளம் அறிந்ததை உடல் நிறைவேற்றும்.

இறை விருப்பங்களை மட்டுமே நிறைவேற்றும்.

உடல் தனது விருப்பங்களைப் பற்றி கவலைப் படாது.

"எல்லாம் உமக்காக, 
இயேசுவின் திவ்ய இருதயமே, 
எல்லாம் உமக்காக.


எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்
எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும்
உந்தன் அதிமிக மகிமைக்கே"

என்ற பாடல் வரிகள் நமது சிந்தனையாக மாறிவிடும்.

நமது ‌உடல், பொருள், ஆவி, சிந்தனை, சொல், செயல் அனைத்தும் இயேசுவின் அதிமிக மகிமைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

செபத்தில் விண்ணப்பம் எதுவும் வைக்கத் தேவையில்லையா?

வைத்தால் தப்பில்லை.

ஆனால் வைக்கத் தேவையில்லை.


 "வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; 

அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை;

 களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. 

உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். 

அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! "
(மத்தேயு.6:26)

என்று ஆண்டவர் சொல்கிறார்.

பெற்ற தாய்க்குப் பிள்ளைக்குப் பால் கொடுக்க வேண்டும் என்று தெரியாதா?

பிள்ளை அழாவிட்டாலும் கூட பசிக்கும் நேரத்தை யூகித்து பால் கொடுப்பாள்.

நாம் இறைவனை மட்டும் தேடினால் போதும்,

நமக்கு வேண்டியதை அவர் பார்த்துக் கொள்வார்.

கடவுளின் முழு பராமரிப்பில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மரணத்துக்கும் பயப்பட மாட்டார்கள்.

கடவுளுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதால்

அவர்களைப் பொறுத்தவரை இவ்வுலகுக்கும் மறுவுலகுக்கும் வித்தியாசம் இல்லை.

தாயின் மடியில் முழுநேரமும் இருக்கும் குழந்தை தான் போகும் ஊரைப்பற்றிக் கவலைப் படாது.

அது உள்ளூரில் இருந்தாலும், வெளியூரில் இருந்தாலும் கவலைப் படாது.

ஏனெனில் அது எங்கிருந்தாலும் இருக்கப்போவது தாயின் மடியில் தான்.

அதேபோல் இந்த உலகில் இருந்தாலும் மறுவுலகில் இருந்தாலும் வாழப்போவது கடவுளின் மடியில் தான் என்றால் ஏன் மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டும்?

மாறாக அநித்தியத்திலிருந்து நித்தியத்துக்குள் செல்ல மகிழ வேண்டும்.

நாம் காலத்தில் பிறந்தாலும்‌

 நித்திய காலமும் கடவுளின் சிந்தனையில் இருப்பதால் 

நம்மை நித்தியத்துக்குள் அழைத்துச் செல்லும் மரணத்தைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்?

எப்போதும் இறைப் பிரசன்னத்தில் வாழ்வோம்.

பேரின்ப வாழ்வின் முன் சுவையைச் சுவைத்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, July 12, 2024

"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்."(மத்தேயு.10:16)(தொடர்ச்சி)

"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்."
(மத்தேயு.10:16)

(தொடர்ச்சி)

 பாம்பின் குணங்கள்.

பாம்பு தான் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப தனது நடைமுறைகளை மாற்றிக் கொள்ளும்.

காடுகளில் வாழ நேர்ந்தால் புதர்களுக்குள் பதுங்கிக் கொள்ளும்.

திறந்த வெளியில் வாழ நேர்ந்தால் கரையான் புற்றில் அல்லது கல்களுக்கு அடியில் பதுங்கிக் கொள்ளும்.

ஒரு முறை ஒரு பாம்பு ஒரு வீட்டில் உரலுக்கு அடியில் ஒளிந்திருந்தது.

நற்செய்திப் பணிக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்தலுக்கும் (Adaptability) என்ன சம்பந்தம்?

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் போதிக்க வேண்டியது சீடரின் கடமை.

எல்லா இடங்களும் ஒரே மாதிரி இருக்காது.

நாம் எந்தப் பகுதியில் நற்செய்தி அறிவிக்கிறோமோ அங்கு வாழும் மக்களின் நடைமுறைகளைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நற்செய்தி அறிவிக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும்.

அருட்திரு பெஸ்கி அடிகளார் மேல் நாட்டிலிருந்து நற்செய்திப் பணி ஆற்ற தமிழ் நாட்டுக்கு வந்தார்.

வந்து முதல் வேலையாகத் தமிழ்க் கற்றார்.

தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார்.

தமிழ் நாட்டுத் துறவிகளைப் போல் காவி உடை அணிந்தார்.

இந்துக்கள் மத்தியில் காவி உடையில், தூய தமிழில் நற்செய்தியை அறிவித்தார்.

அவருடைய பணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ் மொழியில் காவியங்கள் இயற்றி கற்றோர் மத்தியில் நற்செய்தியை அறிவித்தார்.

புனித சூசையப்பரைப் பற்றி அவர் எழுதிய தேம்பாவணி என்னும் இலக்கியம் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஆன்மீகச் செல்வமாக விளங்குகிறது.

வளனார் சூசையப்பரின் தமிழ்ப் பெயர்.

நாம் எந்த இடத்தில் நற்செய்தி‌‌ அறிவிக்கிறோமோ அந்த இடத்தில் வாழும் மக்களின் நடை, உடை, பாவனை, உணவுப் பழக்கங்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் நாம் அறிவிப்பதை விருப்பத்தோடு கேட்பார்கள்.

இயேசு ஒரு யூதர். சீடர்களும் யூதர்கள். யூத இன வழக்கப்படி விருத்த சேதனம் செய்து கொண்டவர்கள்.

ஆனாலும் புற இன மக்களிடையே நற்செய்தியை அறிவித்தபோது அவர்களிடையே விருத்த சேதனம் இல்லாததால் மனம் திரும்பியவர்களை விருத்த சேதனம் செய்யச் சொல்லவில்லை.

ஆக ஆண்டவர் நம்மை பாம்புகளைப் போல் வாழச் சொல்லவில்லை.

அவற்றைப் போல விவேகம் உள்ளவர்களாக வாழச் சொல்கிறார்.

அதோடு புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் வாழச் சொல்கிறார்.

நற்செய்தி அறிவித்தலின் நோக்கமே மக்களை நல்வழிப் படுத்துவது.

மக்களின் ஆன்மீக நலன் கருதி போதிப்பது தான் நற்செய்தி.

கபடு மற்றவர்களைக் கெடுப்பதற்கான சூழ்ச்சி.

சினிமாக்களில் வில்லன் செயல் படுவது போல ஒருவன் வாழ்க்கையில் செயல் பட்டால் அவன் கபடுடன் பழகுகிறான்.

நாம் மற்றவர்களுடன் கள்ளங்கபடு இன்றி திறந்த மனதுடன் பழக வேண்டும்.

மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் நோக்கத்தோடு பழகக்கூடாது.

தீங்கு செய்வது சாத்தானின் வேலை.

சாத்தானின் பிடியிலிருந்து விடுதலை பெற்று இறையன்பில் வளர்வதுதான் நற்செய்தி அறிவித்தலின் நோக்கம்.

ஆகவே நற்செய்தி அறிவிப்பவர்களும், அதன்படி வாழ்பவர்களும் கள்ளங்கபடின்றி மற்றவர்களோடு பழக வேண்டும்.

இறைவசனம்

"எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.''

என்று கூறுகிறது.

எனவே...

எதற்காக?

"ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே...."

"நான் உங்களை ஆடுகளை ஓநாய்களிடையே அனுப்புவது போல அனுப்புவதால்,

விவேகமாகவும் கபடில்லாமலும் இருங்கள்."

இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

ஆடுகள் சாதுவானவை. யாருக்கும் தீங்கு நினைக்காதவை.

ஒநாய்கள் ஆடுகளைக் கடித்துச் சாப்பிடக் கூடியவை.

உண்மையில் ஆண்டவர் நற்செய்தியாளர்களை அனுப்புவதன் நோக்கம் ஓநாய் போன்ற குணம் உடையவர்களை ஆடுகள் போன்ற குணம் உள்ளவர்களாக மாற்றுவதற்காகத்தான்.

ஆதித் திருச்சபையில் சீடர்கள் ரோமை மன்னர்களால் கொல்லப்பட்டனர்.

சீடர்கள் ஆடுகள், மன்னர்கள் ஓநாய்கள். 

ஓநாய்கள் ஆடுகளைக் கொன்று விட்டன.

ஆனாலும் ஆடுகள் அனுப்பப் பட்டது கொல்லப் படுவதற்காக அல்ல.

ஓநாய்களை மனம் திருப்புவதற்காக.

நல்லவர்கள் கெட்டவர்களை மனம் திருப்ப வேண்டுமென்றால் அவர்கள் நல்லவர்களாக முன்மாதிரிகையான வாழ வேண்டும்.

அதையும் மீறி ஓநாய்கள் ஓநாய்களாகவே வாழ்ந்தால் அது அவற்றின் பாடு.

ஆண்டவர் மனித உரு எடுத்து உலகிற்கு வந்தது  கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றுவதற்காக தான்.

இயேசு உலகத்தின் பாவங்களைப் போக்க வந்த ஆட்டுக்குட்டி.

அந்த ஆட்டுக்குட்டியை ஓநாய்களாகிய பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கடித்து குதறிக் கொன்று விட்டார்கள்.

நம்மை சுற்றி உள்ளவர்களை மனம் திருப்பும் நோக்கத்தோடு நாம் ஆடுகளைப் போல நல்லவர்களாக வாழ்வோம்.

நமக்கும் இயேசுவுக்கு ஏற்பட்ட கதி ஏற்படலாம்.

ஏற்பட்டால் ஏற்றுக் கொள்வோம்.

ஆனாலும் நம்மைப் பார்த்து அவர்கள் மனம் திரும்ப உழைப்போம்.

அவர்கள் மனம் திரும்பும்படி வேண்டிக்கொள்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, July 11, 2024

"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்."(மத்தேயு.10:16)

"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்."
(மத்தேயு.10:16)

இயேசு தனது சீடர்களைப் பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருக்கும்படி அறிவுரை கூறுகிறார்.

புறாக்களைப் போல இருக்கச் சொல்வது புரிகிறது,

ஆனால் பாம்புகளைப் போல.....
எப்படி?

தியானிக்க வேண்டிய வார்த்தைகள்.

எனது 36 கால ஆசிரிய அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய உண்மை

கற்றுத் தேறிய மாணவர்களை விட தோல்வி அடைந்த  மாணவர்கள் அதிக புத்திசாலிகள் என்பதுதான்.

பிறகு ஏன் தோல்வி அடைந்தார்கள்?

வெற்றி பெற்றவர்கள் தங்கள் புத்தியைப் படிக்கப் பயன்படுத்தினார்கள்.

தோல்வி அடைந்தவர்கள் தங்கள் புத்தியை ஆசிரியரை ஏமாற்றப் பயன்படுத்தினார்கள்.

இறைவன் நமது முதல் பெற்றோரைத் தனது சாயலில் தான் படைத்தார்.

அவரால் படைக்கப்பட்ட லூசிபர்தான் சாத்தானாக மாறினான்.

லூசிபர் புத்திசாலி தான். ஆனால் அவன் புத்தியைப் பாவம் செய்யப் பயப்படுபடுத்தினான், சாத்தானாக மாறினான்.

அதே புத்தியை நமது முதல் பெற்றோரை ஏமாற்றப் பயன் படுத்தினான்.

சாத்தான் தனது புத்தியைத் தந்திரமாகப் பயன்படுத்தி ஏவாளை ஏமாற்றினான்.

ஏவாள் தனது புத்தியை ஏமாறாதிருக்கப் பயன்படுத்தி யிருக்க வேண்டும்.

ஏமாறாதிருக்கப் பயன் படுத்தியிருந்தால் மனுக்குலம் பிழைத்திருக்கும்.

இப்போது பாம்பு முன்மதி உள்ளது.

அது தன் முன்மதியைத் தன் இரையைப் பிடிக்கப் பிடிக்கப் பயன்படுத்துகிறது.

நாம் நமது முன்மதியை இறையைப் பிடிக்கப் படுத்த வேண்டும்.

பாம்புக்கு இரைப்பற்று இருக்கிறது.

நமக்கு இறைப்பற்று இருக்க வேண்டும்.

பாம்பு இரைக்காகவே வாழ்கிறது. இரை தேடுவது தான் அதன் முக்கிய வேலை.

நாம் இறைவனுக்காகவே வாழ வேண்டும், நமது வாழ்வின் நோக்கம்மே இறைவனைத் தேடுவது தான்.

இரைத் தேடலுக்காக அதனிடம் இருக்கும் முன்மதிப் பண்புகள்:
 
எச்சரிக்கை, திருட்டுத்தனம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்தல், பொறுமை, தன்னைக் காத்துக் கொள்தல்.

இந்தப் பண்புகளை அது எப்படிப் பயன்படுத்துகிறது, நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

எச்சரிக்கை:

பாம்பு இறை தேடப் போகும் போது தனக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது.

 தானே ஆபத்துக்கு இரையாகி விட்டால் தனக்கு இரை தேடிப் பயனில்லை.

நாமும் இறைவனைத் தேடும்போது ஆன்மீக 
சுயபாதுகாப்புக்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இறைவனைத் தேடும்போது மட்டுமல்ல இறைவனை மற்றவர்களுக்கு அறிவிக்கும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? கடவுள் நம்மைக் காப்பாற்ற மாட்டாரா?

கட்டாயம் காப்பாற்றுவார். ஆனால் அவர் கொடுத்துள்ள சுய புத்தியைப் பயன்படுத்த வேண்டுமல்லவா!

அன்று சுய புத்தியைப் பயன்படுத்தாததால்தான் ஏவாள் சாத்தானின் வலையில் விழுந்தாள்.

அன்று ஏவாளை ஏமாற்றிய அதே சாத்தான் இன்றும் நம்மை ஏமாற்றுவதற்காக

 யாரை விழுங்கலாம் என்று கர்ச்சிக்கும் சிங்கம் போல உலகெங்கும் சுற்றித் திரிகிறது.

"உன்னை ஏமாற்றப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு நம்மை ஏமாற்றாது.

அது நம்மை ஏமாற்றுவதற்காகத் தந்திரமாகப் பயன்படுத்தும் ஆயுதம் "தற்பெருமை."

நாம் கடவுளை தேடும் போதும், அவரை அன்பு செய்யும் போதும், அவருடைய கட்டளைப்படி நமது அயலானை நேசிக்கும் போதும், நமது அயலானுக்கு நம்மாலான உதவிகள் செய்யும்போதும் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு தாழ்ச்சி.

இறைவனுக்குரிய காரியங்களை செய்யும்போது இறைவனது மகிமைக்காகச் செய்ய வேண்டும்.

சுய மகிமைக்காகச் செய்தால் அது இறைவன் முன் பலன் அற்றதாகப் போய்விடும்.

அன்னை மரியாள் இறைமகனை மனுமகனாக உலகுக்குக் கொடுத்தது மிகப் பெரிய செயல்.

அதை அடிமைக்குரிய தாழ்ச்சியோடு செய்தாள்.

நாம் இறைப் பணிக்காக நன்கொடை கொடுக்கும் போது அது காணிக்கை.

தற்பெருமையோடு நன்கொடை கொடுத்தால் அது காணிக்கை அல்ல.

பிறருக்கு உதவி செய்யும் போது தற்பெருமை கொள்ளக்கூடாது. 

தற்பெருமை நமக்கும் இறைவனுக்கும் இடையே நின்று இறைப்பயன் நமக்குக் கிடைக்காதவாறு செய்து விடும்.

இறைவனுக்காக வாழ வேண்டிய நாம் தற்பெருமை மூலம் சாத்தானின் வலையில் விழாதவாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


திருட்டுத்தனம்:

திருட்டுத்தனம் என்றால் அசிங்கமாகத் தெரிகிறது.

பிறர் பொருளை அவருக்குத் தெரியாமல் எடுப்பது திருட்டு.

ஹாஸ்டல் மாணவர்களில் சிலர் வார்டனுக்குத் தெரியாமல் சினிமாவுக்குப் போய்விட்டு இரவில் திருட்டுத்தனமாக, அதாவது யாருக்கும் தெரியாமல், ஹாஸ்டலுக்குள் நுழைவார்கள்.

பாம்பு யாருக்கும் தெரியாமல் ஊர்ந்து செல்லும்.

யாரும் பார்த்தால் அடித்துக் கொன்று விடுவார்கள்.

அதற்காக திருட்டுத் தனமாக யாருக்கும் தெரியாமல் படுத்துக் கிடக்கும்.

இரை வந்தால் பிடித்துக் கொள்ளும்.

இறையறிவிக்கும்‌ பணிக்கு பாம்பின் இந்த குணம் எதற்கு?

பாம்பு மொழியில் திருட்டுத்தனம்

நம் மொழியில் இரகசியம்.
இறையறிவிக்கும்‌ பணியில் இரகசியம் எதற்கு?

சுவாமியார் இரகசியமாகப் பிரசங்கம் வைக்க வேண்டுமா?

விவேகத்தோடு செயல்பட வேண்டும்.

எல்லோரும் அறியும்படி செய்ய வேண்டியதை அப்படியே செய்ய வேண்டும்.

இரகசியமாகச் செய்ய வேண்டியதை அப்படியே செய்ய வேண்டும்.

ஒரு இந்து நண்பர் ஞானஸ்நானம் பெற விரும்புகிறார்.

வீட்டில் உள்ளவர்கள் விட மாட்டார்கள்.

அவர் இரகசியமாக ஞானோபதேசம் கற்று, இரகசியமாக ஞானஸ்நானம் பெறுகிறார்.

சுயமாக நிற்க வேண்டிய காலம் வரும்போது பெற்றோருக்குத் தெரிவிக்கிறார்.

எந்தக் காரியமாக இருந்தாலும் இரகசியமாகச் செய்ய வேண்டியதை இரகசியமாகத்தான் செய்ய வேண்டும்.

இரகசியமாக வைத்திருக்க வேண்டியதை இரகசியமாகத்தான் வைத்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு பாவ சங்கீர்த்தனம்.

பாவ சங்கீர்த்தன இரகசியத்தைக் காப்பாற்ற உயிரையே தியாகம் செய்த குருக்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு கேரளாவில் வாழ்ந்த Fr. பெனடிக்ட் ஓனாம்குளம்.

 The Syro-Malabar Catholic priest 
Fr. Benedict Onamkulam 

மரணதண்டனை விதிக்கப்பட்டும் அவர் பாவ சங்கீர்த்தன இரகசியத்தை வெளியிடவில்லை.

https://www.ucanews.com/story-archive/?post_name=/2000/11/28/catholic-priest-found-innocent-of-murder-charges-34-years-later&post_id=17313

(தொடரும்)

லூர்து செல்வம்.

Wednesday, July 10, 2024

"கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்."(மத்தேயு.10:8)

''கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்."
(மத்தேயு.10:8)

குடும்ப விழாக்களுக்குச் செல்வோர் பரிசுப் பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

விழா‌ முடிந்தவுடன் வீட்டில் உள்ளோர் என்னென்ன பொருட்களை யார் யார் கொண்டு வந்துள்ளார்கள் என்ற விபரங்களைக் குறித்து வைப்பது வழக்கம்.

பரிசுப் பொருட்கள் இலவசமாகத் தரப்படுபவை.

பரிசுப் பொருட்களைத் தந்தவர்கள் வீட்டில் விழா‌ நடந்தால் பெற்ற பரிசுப் பொருளுக்கு ஈடாக அவர்களுக்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நாம் தாயின் வயிற்றில் குழந்தையாய் உற்பவிக்கும்போது நமது உடலையோ ஆன்மாவையோ நாம் உண்டாக்கவில்லை.

அவை இறைவனால் படைக்கப்பட்டு நமக்கு இலவசமாய்த் தரப்பட்டவை.

உண்மையில் நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல.

நம்மைப் படைத்தவருக்குச் சொந்தமானவர்கள்.

படைத்தவர் எதற்காகப் படைத்தாரோ அதைச் செய்ய வேண்டியது நமது கடமை.

நாம் சொந்தமாக ஒரு கார் வாங்கியிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அது நாம் விருப்பப் படுகிற இடத்துக்குச் செல்லப் பயன் படுத்துவோம்.

மற்றவர்கள் அதை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்.

கடவுள் விருப்பப்படி செயல்பட வேண்டியது தான் நமது கடமை,

கடவுளை விரும்பாதவர்கள் விருப்பப்படி செயல்பட நமக்கு உரிமை இல்லை.

கடவுள் நம்மைச் சில ஆற்றல்களோடு (talents) படைத்திருக்கிறார்.

அவற்றைப் பயன்படுத்தி இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம்மைக் கடவுள் தனிமையாக வாழப் படைக்கவில்லை, சமூகத்தில் வாழப் படைத்திருக்கிறார்.

மனிதன் ஒரு சமூகப் பிராணி.

நமது உடல் உறுப்புகளின் சமூகம்.
உடல் உறுப்புக்கள் சமூகமாகிய உடலுக்காகவே இயங்குகின்றன.

உறுப்புக்கள் ஒன்றுக்கொன்று உதவி செய்து இயங்குகின்றன.

கால் மட்டும் தனியாக எங்கும் செல்வதில்லை.

தலையில் வலி என்றால் கால்கள் தான் அதை மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றன.

காலில் முள் குத்தினால் கைகள் தான் அதை எடுத்து விடுகின்றன.

கைகள் உதவியின்றி வாயால் சாப்பிட முடியாது.

நாம் சமூகமாகிய உடலின் உறுப்புக்கள்.

ஒரு மனிதன் தான் பிறந்த சமூகமாகிய மனுக் குலத்திற்கு உதவிகரமாக வாழ வேண்டும்.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிகரமாக வாழ வேண்டும்.

நாம் கடவுளிடமிருந்து இலவசமாகப் பெற்ற ஆற்றல்களை இலவசமாக மற்றவர்களுக்காகப் பயன்படுத்த வேண்டும்.

இலவசமாகப் பெற்றதை இலவசமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டியது நமது கடமை.

இதை செய்வதற்காகத்தான் இயேசு,

'' நீ உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசி" என்று கட்டளை கொடுத்திருக்கிறார்.

நமது ஆற்றலைப் பயன்படுத்தி பொருள் ஈட்டுகிறோம்.

நாம் ஈட்டிய பொருளை நமக்காக மட்டுமல்லாமல் நமது அயலானுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.

அன்பு செய்யும் ஆற்றல் நாம் இறைவனிடமிருந்து இலவசமாக பெற்றது.

அன்பு செய்ய காசு பணம் தேவையில்லை.

அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.

இரக்கம், தாராள குணம், பேச்சாற்றல் ஆகியவையும் இலவசமாகப் பெற்றவை தான்.

கஷ்டப்படுகிறவர்களைப் பார்த்து இரக்கப்பட காசு தேவையில்லை.

அவர்களுக்குக் கொடுக்க நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும் 

ஆறுதல் வார்த்தைகளைத் தாராளமாகக் கொடுக்கலாமே.

மற்றவர்கள் மீது நமக்கு இருக்கும் அன்பை வாயினால் சொன்னால் அவர்களும் மகிழ்வார்கள், அதைப் பார்த்து நாமும் மகிழலாமே!

மகிழ்ச்சியை இலவசமாக பகிர்ந்து கொள்ளலாமே!

நாம் பெற்ற அறிவை மற்றவர்களோடு இலவசமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்களின் நோக்கம் அறிவைப் பகிர்ந்து கொள்வதுதான்.

ஆனால் தாங்கள் நாகரீகத்தில் வளர்ந்து விட்டதாகச் சொல்பவர்கள் கல்வியை வியாபாரப் பொருளாக மாற்றிவிட்டார்கள்.

NEET படும் பாட்டைத்தான் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!

மற்றவர்களுக்கு நமது உணர்வுப் பூர்வமான ஆதரவைக் கொடுக்க வேண்டும்.

கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் ஆதரவாக இருந்தால் அவர்களுக்கு உழைப்பு கஷ்டமாகத் தெரியாது.

மெதுவாக நடப்பவனை உற்சாகப் படுத்தினால் வேகமாக நடக்க ஆரம்பிப்பான்.

பணி செய்பவர்களை உற்சாகப் படுத்த வேண்டும்.

குறைகள் சொல்லி யாரையும் திருத்த முடியாது.

நல்லதைச் சுட்டிக் காண்பித்து உற்சாகப் படுத்தினால் குறைகள் தாமாகவே மறைந்து விடும்.

நமது நேரத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது.

ஆனால் நேரத்தை மற்றவர்கள்களோடு செலவழிக்கலாம்.

குறிப்பாக பெற்றோருக்கு இது பொருந்தும்.

அநேக பிள்ளைகள் கெடக் காரணம் பெற்றோர் அவர்களது நேரத்தைப் பிள்ளைகளோடு செலவழிக்காததுதான்.

நேரத்தைப் பிள்ளைகளோடு செலவழிக்காமல் பணம் ஈட்ட மட்டும் செலவழித்தால் ஈட்டிய பணம் யாருக்கும் உதவாது.

நேரத்தை உழைப்பதற்கு மட்டுமல்ல, பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகவும் செலவழிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உழைப்பால் பயனில்லை.

நமது அன்பு உணர்வுகளையும், இரக்க உணர்வுகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதென்ன அன்பு உணர்வு?

சிலர் அன்பாக இருப்பார்கள்.

ஆனால் அன்பு மனதில் ஏற்படும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

தாய் குழந்தையை அன்பு செய்தால் மட்டும் போதாது.

அதை குழந்தைக்குக் காட்ட வேண்டும்.

குழந்தையைப் பார்த்துப் புன்னகை செய்தல், முத்தம் கொடுத்தல், குழந்தையோடு விளையாடுதல் போன்றவை அன்பைக் காட்டும் வழிகள்.

பால் கொடுப்பது கடமையை மட்டும்தான் காட்டும்.

புன்னகையைப் போன்ற சக்தி உலகில் எதுவும் இல்லை.

எதிரியைப் பார்த்து புன்னகை செய்தால் அவன் நண்பனாகி விடுவான்.

நண்பர்களை இணைத்து வைப்பதே புன்னகை தான்.

இலவசமாகப் பெற்றதை இலவசமாகக் கொடுத்தால்

மற்றவர்கள் மகிழ்வார்கள்.

அதைப் பார்த்து நாம் மகிழ்வோம்.

இலவசமாகப் பெற்றதை அனைவரோடும் பகிர்ந்து கொண்டால்

உலகமே நம்மோடு மகிழும்.

மண்ணவர்கள் மகிழ்வதைப் பார்த்து விண்ணவர்களும் மகிழ்வார்கள்.

இறைவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

அவரோடு நாமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவர் திருவுளம்.

"விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவர்
விண்ணரசுக்குள் செல்வர்."
(மத்தேயு.7:21)

கொடையாகப் பெற்றோம்; கொடையாகவே வழங்குவோம்.

லூர்து செல்வம்

Tuesday, July 9, 2024

"அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்."(மத்தேயு.10:7)

" அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்."
(மத்தேயு.10:7)

இயேசுவின் உலக வருகையின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகிய யூதர்கள் அரசியல் ரீதியாக ரோமையர்களின் அடிமைத் தனத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

மெசியா வந்து தங்களை அரசியல் அடிமைத் தனத்திலிருந்து மீட்டு சுதந்திரமான யூத அரசை நிறுவுவார் என்று நம்பினார்கள்.

மெசியா (இயேசு) வந்தார், மக்களை அடிமைத் தனத்திலிருந்து மீட்டக,

ஆனால் அரசியல் அடிமைத் தனத்திலிருந்து அல்ல,

ஆன்மீக அடிமைத் தனத்திலிருந்து.

மனித இனம் நமது முதல் பெற்றோரின் காலத்திலிருந்தே பாவத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது.

பாவ அடிமைத் தனத்திலிருந்து மனுக்குலத்தை மீட்டு ஒரு ஆன்மீக அரசை, விண்ணரசை நிறுவுவதற்காகவே இயேசு பிறந்தார்.

அதென்ன விண்ணரசு?

உலகைச் சார்ந்த அரசு லௌகீக அரசு. அதில் தான் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இறைவன் வாழும் விண்ணகத்தைச் சார்ந்த அரசு விண்ணரசு, அதாவது, இறையரசு.

அதன் அரசர் இறைவன்.

விண்ணரசை ஊனக் கண்களால் பார்க்க முடியாது.

அது ஆன்மீக அரசு, ஆன்மாவைக் கண்களால் பார்க்க முடியாது, அவ்வாறுதான் ஆன்மீக அரசையும்.

இறையரசில் வாழ வேண்டுமென்றால் மனிதன் பாவத்திலிருந்து விடுபட வேண்டும்.

மனிதர்களைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகவே மெசியா பிறந்தார்.

இறைவன் வந்து விட்டார், மக்களைப் பாவத்திலிருந்து மீட்டு இறையரசில் சேர்க்க.

இயேசு பாடுகளின் மூலம் பாவப் பரிகாரம் செய்தவுடன் மக்கள் இறையரசில் சேரத் தகுதி பெறுவர்.

அந்தக் காலம் நெருங்கி விட்டதால் தான்,

பன்னிரு சீடர்களையும் நற்செய்தி அறிவிக்க அனுப்பிய போது,

"விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்"

என்று கூறி அனுப்புகிறார்.

இயேசுவே, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" என்ற வார்த்தைகளோடுதான் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார். 
(மத்தேயு.4:17)

உலக அரசு மனிதர்களால் ஆளப்படுவது.

மக்களிடையே சட்டம் ஒழுங்கு நிலையை நிலைநாட்டுவதும், உலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்வது மட்டுமே அதன் வேலை.

ஆன்மீகத்தைப் பற்றி உலக அரசு கவலைப் படாது.

விண்ணரசின் தன்மை என்ன?

1. அரசர் இறைவன். விண்ணுக்கும், மண்ணுக்கும் அரசர் அவரே.

இறைவன் தங்களோடு இருப்பதை மக்கள் உணர்ந்து, இறைப் பிரசன்னத்தில் வாழ வேண்டும்.

இறைத் திட்டத்தின்படி வாழ்ந்து, மீட்புக்காகத் தங்களைத் தயாரிப்பதே மக்களின் வேலை.

The citizens of the kingdom of heaven must live in the presence of God.

2.பழைய ஏற்பாட்டின்
தீர்க்கத்தரிசிகள் இறையரசின் வருகையை முன்னறிவித்தார்கள்.

அவர்களுடைய முன்னறிவிப்பு இயேசுவில் நிறைவேறிற்று.

இயேசு சொந்த ஊராகிய நாசரேத்தில் தொழுகைக் கூடத்தில் நற்செய்தியை அறிவித்தபோது,

பழைய ஏற்பாட்டில் அவரைப் பற்றிக் கூறப்பட்டிருந்த தீர்க்கத் தரிசனங்களை வாசித்து விட்டு,

 மக்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். 
(லூக்கா.4:21)

3. இறையரசில் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும், மக்கள் அதன்படி வாழ வேண்டும்.

4.இறையரசு யூத இனத்துக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்கும் உரியது.

ஆகவே உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.

"எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்."
(மத்தேயு.28:19)

இறையரசுக்குள் நுழைய வழி இயேசு மட்டுமே.

  "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை."
(அரு.14:6)

விண்ணகம் செல்ல வேண்டுமென்றால் 

நாம் அறிய வேண்டிய உண்மையும், 

வாழ வேண்டிய வாழ்வும்,

நுழைய வேண்டிய வழியும்

இயேசு மட்டுமே.

இறையரசாகிய திருச்சபையை உலகெங்கும் பரப்பும் பொறுப்பை தனது சீடர்களுக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும்
(ஆயர்கள், குருக்கள்) இயேசு கொடுத்திருக்கிறார்.

உலகெங்கும் ஆயிரக்கணக்கான குருக்கள் இயேசுவின் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்,

நற்செய்தியை அறிவிக்கிறார்கள்.

நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.

திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

இறை இயேசுவை நமக்கு உணவாகத் தருகிறார்கள்.

ஆணையும் பெண்ணையும்
திருமண பந்தத்தில் இணைக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் இயேசுவே குருக்கள் மூலமாகச் செய்கிறார்.

புனித சின்னப்பர் சொல்கிறார்,

"வாழ்வது நானல்ல, கிறிஸ்து என்னில் வாழ்கிறார்."

குருவானவர் சொல்கிறார்,

"நற்செய்தியை அறிவிப்பது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம் அறிவிக்கிறார்.

பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் பாவங்களை மன்னிப்பது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம்
மன்னிக்கிறார்.

திருப்பலி நிறைவேற்றுவது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம் பலியாகிறார்.

திருவிருந்தை அளிப்பது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம் தன்னைத் தானே உணவாக அளிக்கிறார்.

உங்களைத் திருமண ஒப்பந்தத்தில் இணைப்பது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம் இணைக்கிறார்."

குருவானவர் சொல்வது நூற்றுக்கு‌ நூறு உண்மை.

"மண்ணுலகில் நீங்கள் கட்டுபவை விண்ணுலகிலும் கட்டப் பட்டிருக்கும்.

மண்ணுலகில் நீங்கள் அவிழ்ப்பவை விண்ணுலகிலும் அவிழ்க்கப் பட்டிருக்கும்."


"Amen I say to you, whatever you will have bound on earth, shall be bound also in heaven, and whatever you will have released on earth, shall be released also in heaven."
(Matthew 18:18)

ஆகவே நாம் நமது குருக்களில் இயேசுவைக் காண வேண்டும்.

நான் சிறுவனாக இருந்த போது குருவானவரைப் பார்த்தால் அவர் முன் முழங்காலில் இருந்து நெற்றியில் சிலுவை வாங்குவோம்.

பங்குக் குருவானவர் பங்கிலுள்ள
 பள்ளிக்கூடங்களை நிர்வகிப்பதற்கோ,

நிலங்களை மேற்பார்வை இடுவதற்கோ குருப் பட்டம் பெறவில்லை.

கிறிஸ்துவாக செயல்புரியவே குருப் பட்டம் பெற்றிருக்கிறார்.

சீடர்களுக்குக் குருப் பட்டம் கொடுக்க இயேசு பயன்படுத்திய வார்த்தைகள்,

"எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" 
(லூக்கா.22:19)

திருப்பலியின்போது அப்பத்தை இயேசுவின் சரீரமாகவும் இரசத்தை அவரது இரத்தமாகவும் மாற்றுவது குருவானவர் உருவில் பீடத்தில் நிற்கும் இயேசுதான்.

குருவானவரைப் பார்க்கும் போது இயேசுவைப் பார்க்கிறோம்.

குருவானவரோடு பேசும் போது இயேசுவோடு பேசுகிறோம்.

குருவானவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது இயேசுவிடம் தான் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோம்,

இயேசுதான் நமது பாவங்களை மன்னிகிறார்.

உலகம் முடியுமட்டும் இயேசு நம்மோடுதான் வாழ்கிறார்.

உடல் ரீதியாக நாம் உலகில் வாழ்ந்தாலும்,

ஆன்மீக ரீதியாக 
 விண்ணரசில்தான் வாழ்கிறோம்.

என்றென்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவே உமக்கு நன்றி.

லூர்து செல்வம்.