Tuesday, May 7, 2024

"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்."(அரு.16:20)

''உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்."
(அரு.16:20)


மனித வாழ்க்கை ஒரு பயணம்.

புறப்படும் இடம் இவ்வுலகம், போக வேண்டிய இடம் விண்ணகம்.

உல்லாசப் பயணம் அல்ல, போராட்டங்கள் நிறைந்த பயணம்.

மனுக்குல வாழ்க்கையே போராட்டத்தோடுதான் ஆரம்பித்தது.

ஒரு பக்கம் மனிதனைப் படைத்த கடவுள், மறு பக்கம் சாத்தான்.

படைக்கப்பட்ட போது மனிதன் கடவுள் பக்கம் தான் இருந்தான்.

ஆனால் சாத்தான் பாவ ஆசைகாட்டி மனிதனைத் தன் பக்கம் இழுத்து விட்டான்.

அன்று முதல் மனித வாழ்க்கையே போராட்ட வாழ்க்கையாக மாறி விட்டது.

பாவ ஆசையில் வீழ்ந்த மனிதனை அதிலிருந்து மீட்டு தன் பக்கம் ஈர்க்க கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

பாவத்தில் வீழ்ந்தது சாதாரண மனிதன்.

ஆனால் அவனைத் தூக்கிவிட சாதாரண மனிதனாகப் பிறந்தது சர்வ வல்லபக் கடவுள்.

கடவுள் மனிதனாகப் பிறக்கக் காரணம் மனிதன் மட்டில் அவர் கொண்டிருந்த அளவு கடந்த அன்பு.

நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகத் தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

தன் அன்பின் வல்லமையால் நம்மைத் தன்னை நோக்கி ஈர்க்கிறார்.

அதே சமயம் ஈடன் தோட்டத்தில் நமது முதல் பெற்றோரைப் பாவத்திற்குள் இழுத்த சாத்தான் அதன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

ஆதித் திருச்சபை காலத்தில் அது அரசியல் தலைவர்களைத் தனது ஏஜெண்ட்டுகளாகப பயன்படுத்தி வந்தது.

ரோமை மன்னர்கள் இயேசுவுக்குச் செய்ததை அவர்களுடைய சீடர்களுக்குச் செய்தார்கள்.

"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்."

ஏன்று இயேசு சீடர்களிடம் சொல்கிறார்.


அவர்கள் சீடர்களைத் துன்புறுத்தும் போது அவர்கள் அழவும், புலம்பவும் நேரிடும்.

அப்போது அவர்கள் துயருவதைப் பார்த்து உலகம் மகிழும்.

 ஆனால் விண்ணகத்தில் அவர்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

மகிழ்ச்சியாக மட்டுமல்ல பேரின்பமாகவும் மாறும்.

அன்று இயேசு சீடர்களுக்குச் சொன்னது நமக்கும் பொருந்தும்.

நமது அரசியல் தலைமை எப்படி மாறும் என்று நமக்குத் தெரியாது.

அது ரோமை அரசியலைப்போல மாறினால் அன்று சீடர்கள் அனுபவித்ததை நாமும் அனுபவிக்க நேரிடும்.

அப்படி நேர்ந்தால் சாத்தான் வசமுள்ள உலகம் மகிழலாம்.

ஆனால் இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் எல்லா துன்பங்களும் மறுவுலகில் மகிழ்ச்சியாகவும்   பேரின்பமாகவும் மாறும்.

ஈடன் தோட்டத்தில் ஆரம்பித்த போராட்டம் தான் இந்தியாவிலும் தொடர்கிறது.

ஆனால் நாம் பயப்படத் தேவையில்லை.

சர்வ வல்லப கடவுள் நம் பக்கம் இருக்கிறார்.

எதிரிகள் கையில் நாம் படும் துன்பங்களை எல்லாம் பேரின்பமாக மாற்ற வல்ல கடவுள் நம் பக்கம் இருக்கிறார்.

இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் பேறுகால வேதனைக்கு நிகரானவை.

"பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். 

ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். 

இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். 

ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். 

உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது."

என்று ஆண்டவரே சொல்கிறார்.

ஆகவே இவ்வுலகில் நாம் படவிருக்கும், அல்லது படும் துன்பங்களை தவிர்க்க முடியாத பேறுகால வேதனையாக நினைத்து மகிழ்வோம்.

யாராவது பேறுகால வேதனைக்குப் பயந்து பிள்ளை வேண்டாம் என்பார்களா?

விண்ணுலகில் நாம் பெறப்போகும் பேரின்பம் நமது பிள்ளை என்றால்

இவ்வுலகில் நாம் அனுபவிப்பது பேறுகால வேதனை.

மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்.

லூர்து செல்வம் 


Monday, May 6, 2024

"தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். "(அரு.15:26)

"தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். "
(அரு.15:26)

இயேசுவைப் பற்றியும், அவரது நற்செய்தியையும் வாசிக்கும் போது ஒரு அடிப்படை உண்மையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் ஒரே கடவுள்.

மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மனிதனாகப் பிறந்தது இரண்டாம் ஆளாகிய இறைமகன் தான்.

ஆனால் இது நமது பரிசுத்த தம திரித்துவத்தின் திட்டம்.

தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரின் ஒரே சித்தத்தினால்தான் நாம் மீட்புப் பெறுகிறோம்.

இயேசுவால் தேர்வு செய்யப்பட்ட 12 சீடர்களும் மூன்று ஆண்டுகள் அவருடன் தான் வாழ்ந்தார்கள்.

அவர் சென்றவிடமெல்லாம் அவருடன் சென்றார்கள்.

அவர் செய்த புதுமைகளை எல்லாம் பார்த்தார்கள்.

அவருடைய போதனைகளை எல்லாம் கேட்டார்கள்.

அவற்றுக்கான விளக்கங்களையும் கேட்டார்கள்.

அவர் இறைமகன் என்பதையும், மெசியா என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனாலும் அவர்களுடைய விசுவாசம் முழுமையாக இல்லை.

முழுமையாக இருந்திருந்தால் அவர் பாடுகள் பட்டு, மரித்து மூன்றாம் நாள் உயிர்க்கப் போவதாகச் சொன்னது அவர்களுக்குப் புரிந்திருக்கும்.

இயேசு கைது செய்யப்பட்ட போது அவரை விட்டு ஓடிப் போயிருக்க மாட்டார்கள்.

இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்திருக்க மாட்டார்.

 மகதலா மரியா சீடர்களிடம் இயேசு உயிர்த்தெழுந்ததை அறிவித்தபோது நம்பியிருப்பார்கள்.

 ஆனால் அவர்கள் நம்பவில்லை.

"அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.''
(மாற்கு நற்செய்தி 16:11)

ஆக, இயேசுவோடு வாழ்ந்த போதும், உயிர்த்த போதும் அவர்களுடைய விசுவாசம் முழுமையாக இல்லை.

ஆனால் பெந்தகோஸ்தே திருநாள் அன்று தூய ஆவி அவர்கள் மீது இறங்கி வந்த போது அவர்களுடைய விசுவாசம் முழுமை அடைந்தது.

இறைமகனுடன் வாழ்ந்தபோது முழுமை அடையாத விசுவாசம் தூய ஆவி இறங்கி வந்தவுடன் முழுமை அடைந்தது.

இறைமகனும், தூய ஆவியும் அதே கடவுள் தான்.

இயேசு நினைத்திருந்தால் சீடர்கள் அவரோடு வாழ்ந்த போதே அவர்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் இயேசு அவர்களிடம்,

"தந்தையிடமி;ருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். 

அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். 

அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். 

நீங்களும் சான்று பகர்வீர்கள்."
என்கிறார்.

ஏன் இயேசு தூய ஆவி வருமட்டும் அவர்களுடைய விசுவாசம் உறுதிப் படாதிருக்க அனுமதித்தார்?

ஏனெனில் அது அவருடைய சித்தம்.

தந்தையின் சித்தமும், தூய ஆவியின் சித்தமும் அதுதான்.

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

மனித அனுபவத்துக்கும், இறை அனுபவத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உற்று நோக்க வேண்டும்.

பிறப்பில் ஆரம்பித்து இறப்பில் முடிவடைவது மனித அனுபவம்.

ஆனால் இறைமகன் இயேசுவைப் பொறுத்த மட்டில் அவர் உலகிற்கு வந்ததன் நோக்கம் அவரது இறப்பில் தான் நிறைவேற ஆரம்பிக்கிறது.

மனித குல மீட்பு புனித வெள்ளி மாலை மூன்று மணிக்கு ஆரம்பித்தது. அப்போது தான் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக மரித்தார்.

அவர் உலகிற்கு வந்ததன் நோக்கம் அவரது இறப்பில் தான் நிறைவேற ஆரம்பித்ததன் முதல் நிரூபணம் நல்ல கள்ளன்.


சிலுவையில் தொங்கிய இயேசுவைப் பார்த்து அவன்,

 "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். 

அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். 

அவன் இயேசுவோடு சிலுவையில் தொங்கினான்.

அவரோடு மரித்தான்.

அவரோடு விண்ணகம் சென்று விட்டான்.

இயேசு உலகுக்கு வந்ததன் நிறைவேற ஆரம்பித்து விட்டது.

தொடர்ந்து நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

இயேசு அன்று பேசிய ஓவ்வொரு வார்த்தையும் நமக்கும் பொருந்தும்.

இயேசு மரித்த வினாடியே விண்ணக வாசல் திறந்து விட்டது, நமக்கும் சேர்த்து தான்.

நம்மைப் பார்த்தும் சீடர்களுக்குக் கூறிய அதே வார்த்தைகளைக் கூறுகிறார்.

"தந்தையிடமி;ருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார்.

 அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். 

அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.''

இயேசு கூறியபடியே நாம் தேவத் திரவிய அனுமானங்களைப் பெறும்போதெல்லாம் தூய ஆவி நம்மீது இறங்கி வருகிறார், அதாவது நம்மில் செயல்புரிகிறார்.

நாம் ஞானஸ்நானம் பெற்ற போது தூய ஆவி நமது சென்மப் பாவத்தை மன்னித்து

நம்மைக் கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டார்.

அதாவது நம்மை இயேசுவின் சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.

பெந்தகோஸ்தே திருநாளன்று சீடர்கள் மீது இறங்கி வந்த அதே தூய ஆவி.

தூய ஆவி.இறங்கியவுடன் சீடர்கள் என்ன செய்ய ஆரம்பித்தார்கள்?

அதுவரை பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த சீடர்கள் பயம் நீங்கி துணிவுடன் நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் தூய ஆவி செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.

நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்து விட்டோமா?

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நற்செய்தியைப் போதிக்க வேண்டும்.

விருந்துக்குச் செல்லும் போது இலையில் பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிடாவிட்டால் அது அழைத்தவரை அவமானப் படுத்துவதற்குச் சமம்.

தூய ஆவி நம்முடன் இருக்கும் போது நாம் நற்செய்தியை அறிவிக்கா விட்டால்?

ஒவ்வொரு கிறிஸ்தவனும் பயப்படாமல் நற்செய்தியை அறிவிப்போம்.

நற்செய்தியை அறிவிப்பது குருக்களுக்கு மட்டுமே உள்ள கடமை அல்ல.

தூய ஆவியைப் பெற்ற நம் ஒவ்வொருவரின் கடமை.

சொல்லால் மட்டுமல்ல நமது முன்மாதிரிகையான வாழ்க்கையிலும் நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

செய்கிறோமா?

சுயபரிசோதனை செய்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, May 4, 2024

உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்."(அரு.15:18)

" "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்."
(அரு.15:18)

இனம் இனத்தோடு சேரும் என்பார்கள்.

சோம்பேறிகள் சோம்பேறிகளுடன் தான் இருக்க விரும்புவார்கள்.

குடிகாரர்கள் குடிகாரர் கூட்டத்தையே விரும்புவார்கள்.

ஒருவன் இருக்க விரும்பும் கூட்டத்தின் தன்மையை வைத்தே அவன் தன்மையைக் கணித்து விடலாம்.

கெட்டவனுக்கு நல்லவனைக் கண்டால் பிடிக்காது.

சாத்தானைச் சார்ந்தனுக்கு இறைவனைச் சார்ந்தனைக் கண்டால் பிடிக்காது.

உலகத்துக்கு ஆன்மீகத்தைப் பிடிக்காது.

 உலகத்துக்கு இயேசுவைப் பிடிக்காது.

உலகைச் சார்ந்தவர்களுக்கு இயேசுவைச் சார்ந்தவர்களைப் பிடிக்காது.

ஆகவே தான் இயேசு தன் சீடர்களிடம் சொல்கிறார்,

"உலகு உங்களை வெறுக்கிறதென்றால் 

அது உங்களை வெறுக்கு முன்னே

 என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்."

உலகைச் சார்ந்த பரிசேயர்களால் இயேசுவுக்கு என்ன நேர்ந்தது என்று நமக்குத் தெரியும்.

அதுவே அவருடைய சீடர்களுக்கும் நேரும்.


"நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். 

நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். 

நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. 

எனவே உலகு உங்களை வெறுக்கிறது."
(15:19)

"எனக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும்.

என்னைத் துன்பப் படுத்திக் கொன்றது போல உங்களையும்
துன்பப் படுத்திக் கொல்வார்கள்."

சீடர்கள் நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது இயேசுவை விரும்பாதவர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.

அருளப்பரும் வியாகப்பரும் இயேசுவை நோக்கி, 

"நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர். 

 நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?" என்று கேட்டார். 

அவர்கள் இயலும் என்றார்கள்.

வியாகப்பர் சீடர்களில் முதலில் வேதசாட்சியாக மரித்தார் .

அவரது ஆசை நிறைவேறியது.

இயேசுவுக்கும் உலகத்துக்குமான யுத்தம் இன்றும் தொடர்கிறது.

நாம் இயேசுவைச் சார்ந்தவர்கள்.

இயேசுவுக்கு நேர்ந்தது அவருடைய சீடர்களுக்கு நேர்ந்தது போல நமக்கும் நேர வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே மணிப்பூரில் ஆரம்பித்து விட்டது.

இன்று இந்தியாவில் நடப்பது இயேசுவுக்கும் உலகத்துக்குமான போர்.

நாம் இயேசுவின் பக்கம்.

போரின் முடிவு எப்படி இருக்கும் என்று இம்மாத இறுதியில் தெரியும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

லூர்து செல்வம்

Friday, May 3, 2024

இறை இரக்கம்.

இறை இரக்கம்.


கடவுள் அளவில்லாத அன்பும் இரக்கமும் உள்ளவர்.

நித்திய காலம் முயன்றாலும் அதன் ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

மனுக்குலம் முழுவதும் இறை இரக்கத்தின் விளைவுதான்.

அளவுகடந்த அன்பினால் படைக்கப்பட்ட மனுக்குலத்தை எல்லையற்ற இரக்கத்தோடு இறைவன் பராமரித்து வருகின்றார்.

இறைவனோடு நல்லுறவில் இருப்பவர்கள் அவரது இரக்கத்தின் இனிமையை விண்ணகத்தில் நித்திய காலமும் அனுபவிப்பார்கள்.

இறைவனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நம் கண் முன் நிற்க வேண்டியது அவருடைய இரக்கம்தான்.

அன்பே கடவுள் என்று கூறுவது போல இரக்கமே கடவுள் என்றும் கூறலாம்.

அன்பின் குழந்தை தான் இரக்கம்.

தாயையும் குழந்தையையும் பிரிக்க முடியாது.

நமது அன்புக்கு உரியவர் தவறு செய்தால் நமக்கு அவர் மேல் கோபமே வராது.

ஏனெனில் அன்பு இருக்கும் இடத்தில் இரக்கம் இருக்கும்.

கோபம் இரக்கத்தின் எதிர்க்குணம்.

இரண்டு எதிர்க்குணங்கள் சேர்ந்து இருக்க முடியாது.

இன்று மனிதர்களிடையே சமாதானமின்மை நிலவுகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்களிடையே அன்பும் இரக்கமும் இல்லாமைதான்.

கடவுள் மாறாதவர்.

அவருடைய பண்புகள் யாவும் நித்தியமானவை.

அளவிலும் தன்மையிலும் மாறாதவை, மாற முடியாதவை.

கடவுள் நித்திய காலமும் மாற முடியாத இரமுள்ளவராக இருந்ததால்தான்

தனது நித்திய திட்டத்தின்படி படைத்த மனிதன் பாவம் செய்தபோது

அவன்மீது இரங்கி அவனைப் பாவத்திலிருந்து மீட்க மீட்பரை அனுப்ப வாக்களித்தார்.

இறைமகன் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்து பாவப் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதும் அவரது நித்திய திட்டம் தான்.

கடவுள் மாறாதவர். மனிதனைத் தன் சாயலில் படைக்க வேண்டும் என்பது அவரது நித்தியத் திட்டம்.

அந்த திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை.

தனது சாயலில் படைத்ததால் அவனைப் பரிபூரண சுதந்திரத்தோடு படைத்தார்.

மனித சுதந்திரத்தில் அவர் குறுக்கிடுவதில்லை.

மனிதன் பாவம் செய்தது அவனது சுதந்திர முடிவு.

இது கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நித்திய காலமாகத் தெரிந்திருந்ததால் தான் மீட்புத் திட்டத்தையும் அவர் நித்திய காலமாக வகுத்தார்.

ஒருவன் தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட பெரிய அன்பின் வெளிப்பாடு இருக்க முடியாது.

ஆகவே கடவுள் தான் படைத்த மனிதர்களுக்காக உயிரைக் கொடுத்து அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்யத் திட்டமிட்டார்..

ஆனால் கடவுள் சுபாவத்தில் அவரால் மரிக்க முடியாது.

மனிதனால்  பிறக்கவும் இறக்கவும் முடியும்.

ஆகவே மனிதனுக்காக இறப்பதற்காக மனிதனாகப் பிறக்கத் திட்டமிட்டார்.

அவரால் தேவ சுபாவத்தைத் துறக்க முடியாது.

ஆகவே தேவசுபாவத்தை வைத்துக் கொண்டே மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

ஆக மனிதனாகப் பிறந்த இறைமகனுக்கு இரண்டு சுபாவங்கள், தேவ சுபாவம், மனித சுபாவம்.

தேவசுபாவத்துக்கு உரிய அதே இறைமகன் தான் மனித சுபாவத்துக்கும் உரியவர்.

ஆகவே மனிதனாகப் பிறந்தவர் இறைமகன் தான், அதாவது கடவுள் தான்.

மரியாளின் மைந்தனும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வாழ்ந்தவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

3 ஆண்டுகள் புதுமைகள் செய்து நற்செய்தியை அறிவித்தவரும் 
கடவுள் தான், மனித சுபாவத்தில்.

புனித வியாழக்கிழமை திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

கெத்சமனி தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்தவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

பிலாத்துவின் அரண்மனையில் கல் தூணில் கட்டப்பட்டு அடிபட்டவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

முள்முடி சூட்டப்பட்டு, முகத்தில் துப்பப்பட்டவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

பாரமான சிலுவையைச் சுமந்து சென்றவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

சிலுவையில் அறையப்பட்டு மரித்தவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

மரித்த மூன்றாவது நாள் உயிர்த்தவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

சுருக்கமாக,

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்தவர் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

ஆக கடவுள் தான் படைத்த மனிதர்களின் பாவங்களுக்கு அவரே பரிகாரம் செய்தார்.

இதற்கெல்லாம் காரணமாக இருந்தது எது?

அவருடைய இரக்கம்.

பெற்ற பிள்ளைக்குப் பால் கொடுப்பது தாய்தான்.

ஆனாலும் பிள்ளை பசிக்கும்போது அழும்.

கடவுள் நம்மைப் பெற்ற கடவுள்.

அவர் இயல்பிலேயே (By nature)
நம் மீது இரக்கம் உள்ளவர்.

ஆனாலும் நமது பாவங்களின் காரணமாக கடவுளின் இரக்கம் நமக்குத் தேவைப்படுகிறது.

குழந்தை பசிக்கும்போது பாலுக்காக அழுவது போல

நாம் கடவுளின் இரக்கத்தைக் கேட்டு அவரை நோக்கி மன்றாட வேண்டும்.

இரண்டு கரங்கள் தட்டினால் தான் ஓசை வரும்.

தண்ணீரை ஊற்றும் போது பானையின் வாய் திறந்திருந்தால்தான் பானைக்குள் தண்ணீர் விழும்.

கண்களைத் திறந்தால் தான் நாம் பார்க்க ஆசைப்படுமவர்களைப் பார்க்க முடியும்.

கடவுளின் இரக்கம் எப்போதும் ரெடி.

நாமும் எப்போதும் ரெடியாக இருக்க வேண்டும்.

உறவினர் இருவர் இருந்தால் இருவரும் ஒருவரோடொருவர் மனம் விட்டுப் பேச வேண்டும்.

 இரக்கத்தின் கடவுள் மனம் விட்டுப் பேசி விட்டார்.

நாம் எப்படி மனம் விட்டுப் பேச?

செபிப்பதன் மூலம்.

இரக்கத்தை வேண்டி எப்படிச் செபிப்பது?

இறை இரக்கத்தின் செபமாலை செபிப்பதன் மூலம்.

இறை இரக்கத்தின் செபமாலை 
செபிப்போம்.

இறைவனின் நித்திய இரக்கத்தின் பயனை முழுமையாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, May 2, 2024

"நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."(அரு.15:10)

"நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."
(அரு.15:10)

பரிசுத்த தம திரித்துவத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் உறவைப் போல 

நமக்கும் இயேசுவுக்கும் உறவு இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இயேசு தந்தையின் சித்தத்தை நிறைவேற்றி அவரது அன்பில் நிலைத்திருப்பது போல

நாம் இயேசுவின் சித்தத்தை நிறைவேற்றி அவரது அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.

இறைவன் நித்திய காலமும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

நாம் இயேசுவின் சித்தத்தை, அதாவது தந்தையின் சித்தத்தை நிறைவேற்றி வாழ்ந்தால் நாமும் 
நிறைவான மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

"என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்."(15:11)

நாம் இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும்.

அவரது கட்டளைகள் இனிமையானவை.

"எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி.

நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானை நேசி."

அன்பு செய்வதை விட இனிமையான செயல் வேறெதுவும் இல்லை.

Nothing is sweeter than love.

கரும்பு தின்னக் கூலியா என்பார்கள்.

ஆனால் இயேசு கரும்பு தின்னக் கூலி தருகிறார்.

நாம் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றும் போது நமது வாழ்வில் மகிழ்ச்சி பொங்குகிறது.

மகிழ்ச்சி தரும் செயல்களைச் செய்ய விரும்புவது மனித இயல்பு.

மகிழ்ச்சி தரும் செயல்களைத் தேடி அலைய வேண்டாம்.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பு நமது உள்ளத்தில் தானே இருக்கிறது.

அதைப் பயன்படுத்தினால் போதுமே!

மகிழ்ச்சி மட்டுமல்ல, இறைவனின் அன்பில் நிலைத்திருக்கும் பாக்கியமே நாம் அன்பு செய்வதின் விளைவு தானே.

நாம் நமது பிறனை இறைவனுக்காக அன்பு செய்யும் போதும் நாம் இறையனாபில் நிலைத்திருக்கிறோம்.

அன்பு செய்வது எப்படி?

Obedience = Love.

Obedience to the Commandments of God is equal to loving God.

இறைவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதும், இறைவனை அன்பு செய்வதும் ஒன்று தான்.

ஏனெனில் "அன்பு செய்" என்பது தான் கடவுளின் கட்டளை.

நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கடவுளின் கட்டளை இருக்கிறது.

தூங்குவதில், மூச்சு விடுவதில், உடுப்பதில், உண்பதில் எல்லாம் கட்டளை இருக்கிறதா?

பத்துக் கட்டளைகளில் இவற்றைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே!

"உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானையும் நேசி." என்பது இறைவனின் கட்டளை.

"உன்னை நேசி, அதேபோல் உன் அயலானையும் நேசி" என்பது இக்கட்டளையின் விளக்கம்.

கடவுள் தன்னைத் தானே நேசிக்கிறார்.

அந்த நேசம்தான் பரிசுத்த ஆவி,
அன்பின் கடவுள்.

தாய்த் திருச்சபையை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வழி நடத்துபவர் பரிசுத்த ஆவிதான்.

கடவுள் நம்மை அவரது சாயலில் படைத்திருக்கிறார்.

ஆகவே கடவுள் தன்னைத் தானே நேசிப்பது போல நாம் நம்மை நேசிக்கிறோம்.

நம்மை நாம் நேசிப்பதால்தான் உயிர் வாழ்வதற்காக மூச்சு விடுகிறோம், உண்கிறோம், குடிக்கிறோம்.

நம்மை நாம் நேசிப்பதால்தான் நமக்கு நாமே உடை வாங்கிக் கொடுக்கிறோம்.

நமது உடலுக்கு கேடு தரக்கூடிய உண்டால் நமது உடலுக்கு விரோதமாக குற்றம் செய்கிறோம்.

அதனால் ஏற்படும் உடல் நலக்குறைவு அதற்கான தண்டனை.

மானத்தைக் காக்க உடுக்க வேண்டிய உடையை மானங்கெட்ட விதமாய் உடுத்தால் நமது உடலுக்கு விரோதமாக குற்றம் செய்கிறோம்.

மது அருந்துதல் உடலுக்கு கேடு விளைவிப்பதால் மது அருந்துபவர்கள் உடலுக்கு விரோதமாக குற்றம் செய்கிறார்கள்.

ஆகவே நமது நடை, உடை, பாவனை அனைத்திலும் கடவுள் விருப்பப்படி நடப்போம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் இறைவன் கட்டளைப் படி நடப்போம்.

அவருடைய அன்பில் நிலைத்திருப்போம்.

லூர்து செல்வம்

ஆண்டவரே உமக்காக.

. ஆண்டவரே உமக்காக.

என்னுடைய அம்மாவுக்கு ஒரு குணம் உண்டு, எல்லாருடைய அம்மாக்களுக்கும் உள்ள குணம் தான்.

என்ன குணம்?

நாங்கள் வெளியூரில் இருக்கும் போது அவர்கள் செய்கிற சமையலுக்கும், வீட்டில் இருக்கும் போது செய்கிற சமையலுக்கும்‌ பாரதூர வித்தியாசம் இருக்கும்.

நாங்கள் வெளியூரில் இருக்கும் போது அம்மா தினமும் சமைக்க மாட்டார்கள்.

ஒரு நாள் சமைத்து சுடு சோறாகச் சாப்பிட்டு விட்டு மூன்று நாட்களுக்குப் பழையது சாப்பிடுவார்கள்.

சுடு சோற்றுக்குச் சாம்பார் அல்லது ரசம்.

பழையதுகு ஊறுகாய், துவையல் அல்லது ஈருள்ளி.

பிள்ளைகள் வீட்டில் இருக்கும் போது தினமும் சமையல், வித விதமான சாம்பார், கூட்டு வகைகள்.

வாரம் ஒரு முறை Mutton.

ஏன் இப்படி?

பெற்றோர் தங்களுக்காக வாழ்வதில்லை, பிள்ளைகளுக்காகவே வாழ்கிறார்கள்.

இது அவர்களுடைய இயல்பு.

இளைஞர்கள் காதல் வயப்படுவதற்கு முன்னும் பின்னும் அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் உள்ள வித்தியாசங்களைக் கவனித்திருக்கிறீர்களா?

காதலுக்கு முன்னால் தங்கள் இஷ்டம்போல் நடப்பார்கள், உடுப்பார்கள், தோன்றுவார்கள்.

ஆனால் காதலிக்க ஆரம்பித்த பின் தாங்கள் காதலிப்பவர்கள் விரும்பும் வகையில் உடுக்கவும் நடக்கவும் ஆரம்பித்து விடுவார்கள்.

தங்களுக்குப் பிடிக்காத கலர் ஆடைகள் காதலருக்கு அல்லது காதலிக்குப் பிடித்திருந்தால் அக்கலர் ஆடைகளையே அணிவார்கள்.

என் நண்பன் ஒருவனுக்கு ரஜினி நடித்த படங்களே பிடிக்காது.

திடீரென்று ஒரு நாள் ரஜினி நடிப்பைப் பாராட்ட ஆரம்பித்தான்.

விசாரிக்கும் போது தெரிந்தது அவன் காதலிக்க ஆரம்பித்து விட்டான் என்று.

காதலிக்கு என்ன பிடித்திருந்தாலும் அவனுக்கும் பிடிக்கும்.

என் நண்பன் ஒருவன் Pure non-vegetarian.

திருமண நாளிலிருந்து Pure 
vegetarian ஆக மாறிவிட்டான், மனைவிக்காக.

ஒன்று புரிகிறது, நாம் நமக்காக வாழ்வதை விட நாம் நேசிப்பவர் களுக்காக வாழ்வதையே அதிகம் விரும்புகிறோம்.

கடவுள் துவக்கமும் முடிவும் இல்லாதவர், சர்வ வல்லவர், துன்பப்பட முடியாதவர்.

அவரால் படைக்கப்பட்ட நாம் இறப்பும் பிறப்பும் உள்ளவர்கள், சக்தியில்லாதவர்கள், துன்பப் படுபவர்கள்.

ஒரு நாள் அவர் கடவுளாக இருந்து கொண்டே

பிறப்பும் இறப்பும் உள்ள, சக்தியற்ற, துன்பப் படக்கூடிய மனிதனாகப் பிறந்தார்.

சொல்லாமலே புரியும் அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்று.    

கடவுள் மாற முடியாதவர்.

இயல்பிலேயே தன்னால் படைக்கப்பட்ட, தன்னால் அளவு கடந்த விதமாய் நேசிக்கப் படுகின்ற‌ நமக்காகச் செயல் புரிந்து கொண்டிருப்பவர்.

பிறப்பும் இறப்பும் இல்லாதவர் இரண்டுமே உள்ள மனிதனாகப் பிறந்தது அவரது வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் அல்ல.

அவரது நித்திய காலத் திட்டம்.

மனிதனைப் படைத்தது, அவனுக்காக மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தது, உயிர்த்தது எல்லாம் அவரது நித்திய காலத் திட்டத்தின் செயல்பாடுகள் தான்.

அவர் நமக்காக வாழ்வது போல நாமும் அவருக்காக வாழ வேண்டும் என்பது அவரது நித்திய கால ஆசை.

அவரது ஆசைப்படி நடக்க வேண்டியது நமது கடமை.

ஆனாலும் அவர் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

அவர் எப்படி சுதந்திரமாக நமக்காக வாழ்கிறாரோ அதுபோல நாமும் சுதந்திரமாக அவருக்காக வாழ வேண்டும்.

திவ்ய நற்கருணையில் நமக்காக வாழ வேண்டும் என்றோ, நமக்குத் தன்னையே உணவாகத் தர வேண்டும் என்றோ அவரை யாரும் கட்டாயப் படுத்த முடியாது.

அது அவரது இயல்பான அன்பின் இயல்பான முடிவு.

நாமும் நமது இயல்பான அன்பினால் அவரை நேசிக்க ஆரம்பித்தால் நாமும் அவருக்காக வாழ ஆரம்பித்து விடுவோம்.

நாம் யாரை நேசிக்கிறோமோ அவருக்காக நமது உடல் பொருள் ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து விடுவோம்.

இப்போது நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது சிந்தனையால் அவரை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

நமது சிந்தனையை முற்றிலும் அவருக்குக் கொடுத்து விட்டால்

நமது சொல்லிலும் செயலிலும் அவரே நிறைந்து விடுவார்.

நம்மில் முற்றிலும் அவரே இயங்குவார்.

அன்னை மரியாள் அதைத் தான் செய்தாள்.

"இதோ ஆண்டவருடைய அடிமை."

அடிமை வாழ்வது எஜமானுக்காக மட்டுமே.

நாமும் நம்மை ஆண்டவருக்கு அடிமைகளாக அர்ப்பணிப்போம்.

அவருக்காகவே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

.

Wednesday, May 1, 2024

இயேசுவுக்கு நமது அன்பை எப்படிக் காட்டப் போகிறோம்?

இயேசுவுக்கு நமது அன்பை எப்படிக் காட்டப் போகிறோம்?

அன்பு செய்வதும், அன்பு செய்யப்பட ஆசைப்படுவதும் அன்பின் இயல்பு.

By nature Love loves and wants to be loved.

இயேசு அன்பு மயமான கடவுள். ஆகவே அவர் நம்மை நேசிக்கிறார், நம்மால் நேசிக்கப்பட ஆசைப்படவும் செய்கிறார்.

 ஒன்றும் இல்லாமையிலிருந்து 
நம்மைப் படைத்ததன் மூலமும்,

நாம் பாவம் செய்தபோது

 மனிதனாகப் பிறந்து,

 வேதனைகள் நிறைந்த பாடுகள் பட்டு, 

சிலுவையில் அறையப்பட்டு மரித்து  

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ததன் மூலமும் 

அவர் நம்மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தினார்

நாம் அவரை அன்பு செய்வதாகச் சொல்கிறோம்.

அவர் மீது நாம் கொண்டுள்ள அன்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம்?

கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்தார், தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டதன் மூலம்.

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட முக்கியமான பண்பு கொண்டது அன்பு.

நம்மாலும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

பிறந்த நாம் வாழ ஆசைப்படுவதே நம்மீது நாம் கொண்டுள்ள அன்பினால் தான்

ஒரு தாய் தன் குழந்தை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதே அதன் மீது அவள் கொண்டுள்ள அன்பினால் தான். 

பசித்தவுடன் குழந்தை அழுவதே தன்மீது கொண்டுள்ள அன்பினால் தான்.

இரண்டு நண்பர்கள் காலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

நடைக் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.

இறைவன் நமக்குத் தந்த இரண்டு கட்டளைகளைப் பற்றி தான் பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.

நண்பகல் 12 மணி. நல்ல வெயில்.

இருவரும் ஒரு மரத்து நிழலில் அமர்ந்தார்கள்.

ஒருவன் தன் பையிலிருந்த பொட்டலத்தை வெளியே எடுத்தான்.

பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

அடுத்தவனிடம் பையும் இல்லை, பொட்டலமும் இல்லை.

சாப்பிட்டவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டவனின் சிந்தனையில் இயேசுவின் போதனையைப் பற்றிய செய்தி இருந்தது,

ஆனால் போதனை இல்லை.  இருந்திருந்தால் அது செயலில் வெளிப்பட்டிருக்கும்.

பைபிள் இறைவனின் சிந்தனை, சொல், செயலின் வெளிப்பாடு.

இறைவனின் சிந்தனையில் அன்பு இருக்கிறது,

சொல்லில் அன்பு இருக்கிறது,

செயலில் அன்பு இருக்கிறது,

நற்செய்தி வெறும் செய்தி அல்ல, நற்செய்தி.

"இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது." - செய்தி.

"இறைமகன் இயேசு நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்துக் கொண்டு வருகிறார்." - நற்செய்தி

வித்தியாசம்?

தேர்தலைப் பற்றிய செய்தியால் நமது ஆன்மீக மீட்புக்கு எந்த பயனும் இல்லை.

அது அறிதலை (Knowledge) வளர்க்கிறது, அவ்வளவு தான்.

ஆனால் இயேசுவின் பராமரிப்பை உணர்ந்து,

அந்த உணர்வு நமது விசுவாசம் உறுதி பெறவும்,

நாம் இயேசுவுக்காக மட்டும் வாழ உதவிகரமாக இருக்குமானால் அது நற்செய்தி.

ஆனால் நமது விசுவாச வாழ்வுக்கு அது உதவிகரமாக இருக்கா விட்டால் அதுவும் வெறும் செய்தியே.

இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ சமயத்தை நிறுவினார் என்று நாத்திகனுக்கும் தெரியும்.

அவனுக்கு அது ஒரு செய்தி.

நமக்கு அது நற்செய்தி.


உலகமெங்கும் சென்று அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்கும்படி இயேசு தனது சீடர்களுக்கு கட்டளை கொடுத்தார்.

நற்செய்தியை அறிந்த அனைவரும் அதன்படி வாழ்ந்து மீட்புப் பெற வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை.

சீடர்கள் இயேசு சொன்ன படியே செய்தார்கள்.

அவர்களுடைய வாரிசுகளும் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் நற்செய்தியைக் கேட்கிறோம்.

 நாமும் பள்ளிக்கூடத்தில் பாடம் கேட்பது போல கோவிலில் குருவானவருடைய பிரசங்கத்தைக் கேட்கிறோம்.

பள்ளிக்கூடத்தில் பாடம் கேட்பது பரிட்சை எழுதுவதற்கு.

கோவிலில் பிரசங்கம் கேட்பது வாழ்வதற்கு.

நற்செய்தியை ஏற்றுக் கொள்கிறோம்.

வாழ்கிறோமா?

வாழ்ந்தால்,

உலகில் ஏற்ற தாழ்வு இருக்காது.
இருப்போர் இல்லாதாரோடு பகிர்ந்து கொள்வர்.

உலகில் யாருக்கும் பகைவர்களே இருக்க மாட்டார்கள்.

எல்லோருடைய பாவங்களும் மன்னிக்கப் பட்டு அனைவரும் பரிசுத்தர்களாய் வாழ்வர்.

எல்லோருள்ளும் இறைவன் வாழ்வது போல எல்லோரும் இறைவனுள் வாழ்வோம்.

மண்ணகமே விண்ணகமாய் மாறி விடும்.

இயேசுவின் நற்செய்தியை வாழ்ந்து

இயேசுவுக்கு நமது அன்பை  காட்டுவோம்.

லூர்து செல்வம்.