செபமாலை - வல்லமை வாய்ந்த செபம்.
செபமாலைக்கும், மற்ற செபங்களுக்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது.
மற்ற செபங்களில் யாரை நோக்கி செபிக்கிறோமோ அவர்களும் நாமும் மட்டும் பங்கு பெறுகிறோம்.
ஆனால் செபமாலையில் விண்ணுலகில் வாழ்பவர்களும் நம்மோடு சேர்ந்து செபிக்கிறார்கள்.
நமது செபம் அன்னை மரியாள் வழியாக பரிசுத்த தம திரித்துவத்துக்குதான்.
முதலில் நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு விட்டு, பரலோத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையை அழைக்கிறோம்.
தந்தை நமது மனக் கண் முன்பு வருகிறார். தந்தை இருக்கும் இடத்தில் மகனும் இருப்பார், தூய ஆவியும் இருப்பார். நமது செபம் போய்ச் சேர வேண்டிய இடம் பரிசுத்த தம திரித்துவம்தான்.
அதற்காக ஒரு ஐம்பத்து மூன்று மணி செபமாலையில் ஆறு முறை தந்தையை அழைக்கிறோம்.
தந்தை வந்தவுடன் அவரை ஆராதித்துக் கொண்டே கோடிக்கணக்கான சம்மனசுக்களும் வந்து விடுவார்கள்.
கோடிக்கணக்கான விண்ணவர்கள் முன்னிலையில் தான் நாம் செபிக்கிறோம்.
முதலில் அன்னை மரியாளை நோக்கி நமக்காக செபத்தை ஆரம்பிப்பவர் கபிரியேல் சம்மனசு.
"அருள் நிறைந்த மரியே வாழ்க.
கர்த்தர் (இயேசு) உம்மோடு இருக்கிறார்."
அடுத்து புனித எலிசபெத்தம்மாள் செபத்தைத் தொடர்கிறாள்.
'' பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவள் நீர். உமது திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவர்."
அடுத்து நாம் தொடர்கிறோம்.
"புனித மரியாயே, இறைவனின் தாயே, பாவிகளாகிய எங்களுக்காக இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்."
இந்த செபத்தை 53 முறை சொல்கிறோம்.
ஒன்றைக் கவனிக்க வேண்டும்.
கோடிக்கணக்கான சம்பனசுக்கள் முன்னிலையில், பரிசுத்த தம திரித்துவக் கடவுளை நோக்கி,
கடவுளின் தாய் வழியாக,
கபிரியேல் தூதரோடும், எலிசபெத்தம்மாளோடும் சேர்ந்து செபிக்கிறோம்.
உலக மக்கள் அனைவருக்காகவும் செபிக்கிறோம்.
"'எங்கள்' மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்."
ஒரு மங்கள வார்த்தை செபத்தில் மூன்று முறை அன்னை மரியாளை நினைவு கூறுகிறோம், மூன்று முறை இயேசுவை நினைவு கூறுகிறோம்.
நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டு, மரண நேரத்தில் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுகிறோம்.
இப்படி 53 முறை வேண்டுகிறோம்.
நமது செபத்தை அனைத்து சம்மனசுக்கள், குறிப்பாக கபிரியேல் தூதர், எலிசபெத்தம்மாள் ஆகிய அனைவரும் அன்னை மரியாள் வழியாக கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள்.
செபமாலை சொல்வது ஒருவராக இருந்தாலும் அதை இறைவனிடம் எடுத்துச் செல்வோர் கோடிக்கணக்கானோர்.
கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நாம் வாழ்வது எதற்காக?
விண்ணக வாழ்வுக்காக.
விண்ணக வீட்டுக்கு வாசல் எது?
நமது மரணம்.
விண்ணக வீட்டுக்கு வாசல் வழியாக விண்ணகத்துக்குள் அழைத்துச் செல்ல வேண்டுமென்று கோடிக்கணக்கான பேர் அன்னை மரியாள் வழியாக நமக்காக சிபாரிசு செய்கிறார்கள்.
நாம் தினமும் 203 மணி செபமாலை செபித்தால் தினமும் கோடிக்கணக்கான சிபாரிசுகள் விண்ணகம் தந்தையை நோக்கி பறந்து கொண்டிருக்கும்.
இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும்.
நாம் 203 மணி செபமாலை செபிக்கும் போது
அன்னைக்கு கபிரியேல் தூதர் மக்கள் வார்த்தை சொன்ன வினாடியிலிருந்து
அவள் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்படும் வினாடி வரை அவளுடனே பயணித்துக் கொண்டே செபிக்கிறோம்.
விண்ணக வாழ்வுக்குள் நமது பயணம் தொடரும்.
பக்தியுடன் செபமாலை செபிக்கும் நாம் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவது நூற்றுக்கு நூறு உறுதி.
தினமும் செபமாலை சொல்வோம்.
நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.
நம்மோடு சேர்ந்து செபமாலை செபித்த விண்ணவர்கள் நம்மை வரவேற்க விண்ணக வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment