Sunday, April 13, 2025

நமது பாவங்களும் இயேசுவின் பாடுகளும்.

நமது பாவங்களும்
இயேசுவின் பாடுகளும்.

கடன் வாங்கியவன் வாங்கிய கடன் முழுவதையுமே பைசா பாக்கி இல்லாமல் திரும்பக் கொடுக்க வேண்டும்.

கொஞ்ச சில்லறையை அள்ளிக் கையில் போட்டு விட்டு,

''கடன் வாங்கினேன், தந்து விட்டேன்" என்று கூற முடியாது.

நமது முதல் பெற்றோர் ஒரு பாவம் செய்தவுடன் மனிதன் செய்கிற பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய இறைமகன் மனுமகனாகப் பிறப்பார் என்று தந்தை இறைவன் வாக்குக் கொடுத்து விட்டார்.

பாவப் பரிகாரம் ஆதாம், ஏவாள் செய்த பாவத்துக்கு மட்டுமல்ல,

அவர்கள் முதல் உலகம் முடியும் வரை வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் கணக்கில் அடங்காத கோடானு மக்களும் செய்த, செய்கின்ற,செய்யப் போகின்ற அத்தனை பாவங்களுக்கும் அவர் பரிகாரம் செய்தார்.

கடவுள் அளவில்லாதவர். ஆகவே அவரது ஒவ்வொரு செயலுக்கும் அளவில்லாத பலன் உண்டு.

ஆகவே அவர் பட்ட அத்தனை பாடுகளையும் பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு சிறிய செயலே அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாக ஆகியிருக்கும்.

ஆனால் இயேசு நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை நாம் உணர வேண்டும் என்பதற்காக நாம் செய்கின்ற ஒவ்வொரு பாவத்துக்கும் அளவில்லாத விதமாய்ப் பரிகாரம் செய்தார்.

பாவங்கள் இருவகை,
ஆன்மாவைச் சார்ந்தவை.
உடலைச் சார்ந்தவை.

பாவமோ, புண்ணியமோ செய்வது ஆன்மா தான்.

சம்பாவனையோ, சம்பாவனை இழப்போ ஆன்மாவுக்குத்தானே.

சிந்தனையால் மட்டும் செய்யப்படும் பாவம் ஆன்மாவைச் சார்ந்தது,

சொல்லாலும் செயலாலும் செய்யப்படும் பாவம் உடலைச் சார்ந்தது.

விசுவாசம்(Faith),
நம்பிக்கை (Hope)
அன்பு(Charity)
ஆகிய புண்ணியங்களும், அவற்றுக்கு எதிரான பாவங்களும் ஆன்மாவைச் சார்ந்தவை.

தலையில் உள்ள வாய், கண், காது, மூக்கு ஆகிய உறுப்புக்களும், உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் செய்யும் பாவங்கள் உடலைச் சார்ந்தவை.

இவற்றின் உதவியுடன் கோடிக்கணக்கானோர் செய்யும் ஒவ்வொரு பாவத்துக்கும் இயேசு தனது பாடுகளால் பரிகாரம் செய்தார்.

இயேசு கடவுள், அவரால் பாவம் செய்ய முடியாது.  அவரது விருப்பத்துக்கு எதிராக அவரால் செயல்பட முடியாது.

மனித பாவங்களுக்குக் காரணம் அவனுடைய பலகீனம்.

பலகீனம் பாவம் அல்ல.

இயேசு மனிதனாகப் பிறக்கும் போது பாவம் தவிர மற்ற அனைத்து மனித பலகீனங்களையும் ஏற்றுக் கொண்டார்.

மனிதனுடைய முக்கிய பலகீனம் பயம்.

நாம் கடவுளை நம்மைப் படைத்தவராக ஏற்றுக் கொண்டு அவரது விருப்பத்துக்குத் நம்மை அர்ப்பணித்து வாழ்வது விசுவாசம்.

இயேசுவுக்கு விசுவாசம் கிடையாது, ஏனெனில் விசுவசிக்கப்பட வேண்டிய கடவுளே அவர்தான்.

நாம் கண்ணால் பார்க்க முடியாத கடவுளை விசுவசிக்கிறோம்.

நாம் மோட்சத்திற்குச் சென்ற பின் நம்மிடம் விசுவாசமும் நம்பிக்கையும் இருக்காது, ஏனெனில் அவரை நேரில் பார்ப்போம்.

இறைமகன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே மனிதனாகப் பிறந்தார்.

மகன் பாடுகள் பட்டு தனது சிலுவை மரணத்தால் உலiகை மீட்க வேண்டும் என்பதே தந்தையின் சித்தம்.

மனிதர்களாகிய நாம் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றாமல் பாவம் செய்து விடுகிறோம்.

மனிதர்களுடைய அந்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை‌ வியர்த்தார்.

பாடுகள் படுவதற்காகவே மனிதனாகப் பிறந்தவர் பாடுகள் நெருங்கி வரும்போது அவற்றை நினைத்தவுடன் பயப்பட ஆரம்பித்தார்.

பயம் அதற்கென்றே அவர் ஏற்றுக் கொண்ட மனித பலகீனம்.

அதனால் ஏற்படும் சோதனையும் பாவம் அல்ல.

பயத்தினால் இயேசு தந்தையைப் பார்த்து,

"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்."

என்று செபித்தார்.

அவரது உடல் எங்கும் இரத்த வியர்வை வியர்த்தது.

இது இறைவன் சித்தத்தை நிறைவேற்ற விரும்பாமல் நாம் செய்கிற பாவங்களுக்கு இயேசு செய்த பரிகாரம்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் செய்ய வேண்டிய செபத்தை அவரே நமக்கு முன் மாதிரியாக செபித்தார்.

 "ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்."  

நமது வாழ்வில் மிக அதிகமான துன்பங்கள் ஏற்படும் போது எங்கே கடவுள் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று பயப்படுகிறோம்.

இது நம்பிக்கை இன்மை என்னும் பாவம். இதற்கும் காரணம் பயம்தான்.

நமது இந்தப் பாவத்துக்குப் பரிகாரம் செய்ய,

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு 
 "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற திருப்பாடல் 22ஐக் கூறி செபித்தார். 

நாம் பயத்தின் காரணமாக செய்கிற பாவத்திற்கு அவர் பரிகாரம் செய்தார்.

இயேசு கடவுள். ஆகவே அவரிடம் நம்பிக்கை இருக்காது.

அவரே அவரை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே அவரால் நம்பிக்கை இன்மை என்னும் பாவத்தைச் செய்ய முடியாது.

ஆனாலும் நமது நம்பிக்கை இன்மை என்னும் நமது பாவத்துக்குப் பரிகாரமாக 

சிலுவையில் தொங்கும் போது அளவில்லாத வேதனையை நம்பிக்கை இன்மை என்னும் நமது பாவத்துக்குப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டு 

திருப்பாடல் 22ஐச் செபித்தார்.

இந்த திருப்பாடலை அவர் சொல்லும் அளவுக்கு அவரது வேதனை அதிகமாக இருந்தது.

ஆக பாடுகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் நாம் செய்யும் ஆன்மாவைச் சார்ந்த இரண்டு முக்கிய பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

உடல் சார்ந்த பாவங்களுக்கு?

கல் தூணில் கட்டப்பட்டு அடிபட்டபோது கழுத்துக்குக் கீழ் எல்லா உறுப்புகளும் அவை செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அடி வாங்கின.

இயேசு முள் முடி சூட்டப்பட்டு அடிபட்ட போது முட்கள் தலையிலுள்ள கண்கள், காதுகள், மூக்கு, வாய் வரைக்கும் இறங்கி, 

அவ்வுறுப்புகளால் நாம் செய்த அத்தனை பாவங்களுக்கும் இயேசு பரிகாரம் செய்தார்.

ஆக கற்றூணில் கட்டப்பட்டு அடிபட்ட போதும், முள் முடி சூட்டப்பட்டு அடிபட்ட‌ போதும் 

உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளும் அடிவாங்கி, 

உள் உறுப்புகளும் அடிவாங்கியதற்குச் சான்றாக இரத்தத்தைக் கக்கியதால் ஏற்பட்ட 

அளவிட முடியாத வேதனையைத் தாங்கிக் கொண்டு 

இயேசு உலகில் தோன்றிய, தோன்றுகிற, தோன்றப் போகின்ற அனைத்து மனிதர்களின் அத்தனை பாவங்களுக்கும் பரிகாரம் செய்தார்.

அவர் பட்ட அடிகளில் உடல் பாதுகாப்புக்காக பிறக்கும் போதே உடன் பிறந்த தோலின் பெரும் பகுதி பிய்ந்து விழுந்து விட்டது.

அதனால் பாதுகாக்கப்பட்ட இரத்தத்தின் பெரும் பகுதி வெளியே கொட்டி விட்டது.

நரம்புகள் ஆங்காங்கே அறுந்து போயிருக்கும்.

இந்நிலையில் பாரமான சிலுவையைத் தூக்கிக் கொண்டு கல்வாரி மலைக்கு இயேசு நடந்தார்.

கலிலேயாவிலிருந்தும், யூதேயாவிலிருந்தும் மட்டுமல்ல உலகில் மற்ற பகுதிகளிலிருந்தும் இஸ்ரயேலர்கள் பாஸ்கா விழா கொண்டாட்டத்திற்காக செருசலேமில் கூடியிருந்த நேரம்.

அவர்கள் மத்தி வழியேதான் இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி மலைக்கு நடக்க முடியாமல் நடந்தார்.

உண்மையான கடவுளை வழிபடாமல் பிற கற்பனைத் தெய்வங்களை வழிபடுபவர்கள் கொண்டாடுகின்ற கொண்டாட்டங்களுக்குப் பரிகாரமாக இயேசு சிலுவையுடன் அடி உதைகளைப் பட்டுக் கொண்டே ஊர்வலமாக நடந்து சென்றார்.

நவ நாகரீக மக்கள் ஒழுக்கமில்லாத உடை அணிந்து பொது இடங்களில் நடமாடும் பாவங்களுக்குப் பரிகாரமாக 

 அவர் அணிந்திருந்த அங்கியையும் பொத்துக் கொண்டு வெளியேறி தெருவில் ஆறு போல் ஓடிய அவரது இரத்த வெள்ளத்தின் ஊடே நடந்து சென்றார் இயேசு.

நாம் அடிக்கடி பாவத்தில் விழுகிறோமே அதற்குப் பரிகாரமாக இயேசு பல முறை விழுந்து எழுந்து நடந்தார்.

அவரது இருபுறமும், முன்னும், பின்னும் அவர்மேல் உள்ள பொறாமை காரணமாகக் கொலைக் களத்திற்கு அழைத்துச் சென்ற யூத சமய‌ப் பெரியவர்கள் மட்டுமல்ல 

அவரால் நோய்கள் குணமான நல்ல சாதாரண மக்களும் நடந்து சென்றார்கள்.

அவர்கள் அனைவரின் பாவங்களுக்கும், நமது பாவங்களுக்கும் பரிகாரமாக தனது பாடுகளை ஒப்புக் கொடுத்துக் கொண்டே இயேசு நடந்தார்.

தன் மகன் மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவே தன்னிடம் பிறந்தார் என்று அன்னை மரியாளுக்குத் தெரியும்.

'உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்று கூறிய சிமியோனின் கூற்றுப்படி 

உள்ளத்தை ஊடுருவியிருந்த வியாகுல வாளுடன்

தனது மகனின் பாடுகளை மனுக் குலத்தின் பாவத்துக்குப் பரிகாரமாக பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டே அன்னை மரியாள் மகனைப் பின் பற்றி நடந்தாள்.
(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment