Tuesday, April 29, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி)10.சிலுவையில் அறையப்பட்டு மரித்தல்.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)

10.சிலுவையில் அறையப்பட்டு மரித்தல்.

இயேசு கல்வாரி மலை மேல் ஏறியதும் தான் ஏற வேண்டிய சிலுவையை இறக்கி வைக்கிறார்.

அவரைச் சிலுவையில் அறைய வேண்டிய ஏற்பாடுகளை வீரர்கள் செய்கிறார்கள்.

முதலில் அவரது ஆடைகளைக் களைகிறார்கள்.

அன்னை மரியாள் தன் மகனுக்கென்று தையல் இல்லாமல் பின்னிய ஆடை.

அவர் வளர வளர அதுவும் வளர்ந்தது என்று கூறுவார்கள்.

எப்படி எதுவும் இல்லாத ஏழையாகப் பிறந்தாரோ அப்படியே எதுவும் இல்லாத ஏழையாக இறக்க வேண்டும் என்பது தந்தையின் நித்திய காலத் திட்டம்.

நமது முதல் பெற்றோர் பாவம் செய்யும்போது உலகிற்குள் நுழைந்த ஆடை இயேசு நம்மைப் பாவத்திலிருந்து மீட்கப் போகிறார் என்பதற்கு அடையாளமாக  அவரிடமிருந்து  விடை பெறுகிறது.

விதவிதமான ஆடையணிந்து நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக முதலில் இயேசு தனது ஆடையைத் தியாகம் செய்கிறார்.

இயேசுவை சிலுவையில் கிடத்துகிறார்கள்.

ஆணிகளை அறையும் போது உடல் சிலுவையை விட்டு கீழே விழாமலிருக்க அதைக் கயிற்றால் சிலுவையோடு கட்டுகிறார்கள்.

முதலில் கைகளில் ஆணிகளை அறைகிறார்கள்.

அடுத்து இரண்டு பாதங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஒரு ஆணியை அறைகிறார்கள்.

அணிகளின் எதிர்ப் பக்கத்தை மடக்குவதற்காக இயேசுவோடு சிலுவையை மாற்றிப் போடுகிறார்கள்.

இயேசு குப்புறப் படுத்திருக்க அவர்மேல் பாரமான சிலுவை.

சிலுவையின் பாரம் அவரது முகம் முதல் பாதங்கள் வரை அனைத்து உறுப்புகளையும் தரையோடு தரையாய் நசுக்குகிறது.


அதோடு ஆணிகளை மடக்க ஓங்கி அறையும் போது உடல் என்ன பாடு பட்டிருக்கும்!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

எல்லாம் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக!

இயேசுவை நினைக்கும் போது நமது பாவங்களையும் மனத்தாபத்தோடு நினைத்துப் பார்ப்போம்.

இயேசுவைச் சிலுவையில் அறைந்த பின், சிலுவையை நேராக நடுகிறார்கள்.

அவரது இரண்டு பக்கங்களிலும் சிலுவையில் அறையப்பட்ட இரண்டு திருடர்கள்.

இவ்வளவு பாடுகளின் மத்தியிலும் தனது பாடுகளுக்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டுகிறார்.

 "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
(லூக்கா நற்செய்தி 23:34)

உண்மையிலேயே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

அவர்கள் இயேசுவை ஒழித்துக் கட்டுவதாக நினைத்துக் கொண்டு அவரைச் சிலுவையில் அறைகிறார்கள்.

ஆனால் தங்களை அறியாமலேயே இயேசு எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு திருடர்களில் ஒருவர் தனது பாவங்களுக்காக மனம் வருந்தி,

இயேசுவை நோக்கி,

 "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்கிறான். 

அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்கிறார். 
(லூக்கா நற்செய்தி 23:42,43)

இயேசுவின் பாடுகளின் முதற்கனி அவர் சிலுவையில் தொங்கும் போதே கனிந்து விட்டது.

சிலுவையின் அடியில் நின்று கொண்டிருக்கும் தனது தாயைக் கவனிக்கும் பொறுப்பை அருளப்பரிடம் ஒப்படைக்கிறார்.

நமது பிரிவினைச் சகோதரர்கள் கூறுவது போல மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்பதற்கு இதுவே சான்று.

தனது தாயை நமக்கும் தாயாகத் தந்திருக்கிறார்.

தாயைப் போல் பிள்ளையாக ஆண்டவரின் அடிமையாக வாழ்வோம்.

அன்னை மரியாளோடு மகதலா மரியாள், 
அருளப்பரின் தாய் சலோமி மரியாள், 
சின்ன யாக்கோபின் தாய் குலோப்பா மரியாள் ஆகியோரும் சிலுவை அடியில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருக்கிறார்கள்.

நாமும் அவர்கள் அருகில் நின்று கொண்டிருக்கிறோம்.

சிலுவையில் இயேசுவின் உருவம் நமது இதயத்தில் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.

அளவு கடந்த வேதனையின் காரணமாக 

 "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற
 திருப்பாடல் வரிகளை (22:1)க் கூறி செபிக்கிறார்.

இறுதியில் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தனது ஆவியைத் தந்தையிடம் ஒப்புக் கொடுக்கிறார்.

அந்த வினாடியில் மனுக் குலம் மீட்புப் பெறுகிறது.

பாதாள நிலையில் இருந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மோட்ச நிலையை அடைகிறார்கள்.

நமது வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இயேசு நமக்காகவும் பலியானார்.  நமக்காக மோட்ச வாசல் திறந்திருக்கிறது.

இயேசு மரித்து விட்டார் என்பதை உறுதி செய்ய நூற்றுவர் தலைவர் அவருடைய விலாவை ஒரு ஈட்டியால் குத்துகிறார்.

இயேசுவின் இதயத்தில் மீதமிருந்த ஓரிரு சொட்டு இரத்தமும் வெளியேறி, நூற்றுவர் தலைவருடைய ஒரு கண்ணில் விழுகிறது.

அதுவரை பார்வை இல்லாமலிருந்த அந்தக் கண் பார்வை பெறுகிறது.

இறந்த பின்பும் ஒரு புதுமை, அதுவும் சிலுவை மரணத்தை வழி நடத்திய ரோமை வீரனுக்கு!

"உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" என்ற இயேசுவின் போதனையை செயல்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment