Wednesday, April 9, 2025

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்." (அரு.8:51)

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்." (அரு.8:51)

"என்றுமே சாகமாட்டார்கள்" ‌‌என்று சொன்னது யூத மதப் பெரியவர்களுக்குப் புரியவில்லை.

காரணம், இயேசு பேசியது ஆன்மீகம். ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொண்டது லௌகீகத்தில்.

வாழ்வு, மரணம் என்ற வார்த்தைகளுக்கு லௌகீகத்தில் பொருள் வேறு, ஆன்மீரத்தில் பொருள் வேறு.

கடவுள் நமது முதல் பெற்றோர்களிடம் விலக்கப்பட்ட மரத்தின் கனிடைத் தின்றால் "சாகவே சாவீர்கள்" என்று கூறியிருந்தார்.

அவர்கள் அக்கனியைத் தின்ற போது லௌகீக ரீதியில் சாகவில்லை. உயிர் வாழ்ந்து பிள்ளைகள் பெற்றார்கள்.

ஆனால் பாவத்தினால் அவர்களுடைய ஆன்மா மரணம் அடைந்தது. அதாவது பாவத்தினால் அவர்கள் தேவ இஸ்டப்பிரசாதத்தை (Sanctifying grace) இழந்து அவர்களுடைய ஆன்மா மரணம் அடைந்தது.

மனுக்குலத்தை ஆன்மீக மரணத்திலிருந்து மீட்கவே இறைமகன் மனுமகன் ஆனார்.

இப்போது கூட நாம் சென்மப் பாவத்தோடு பிறப்பதால் மரண நிலையில் உள்ள ஆன்மாவோடு தான் பிறக்கிறோம். 

திருமுழுக்குப் பெறும்போது சென்மப் பாவம் மன்னிக்கப்பட்டு நாம் ஆன்மீகத்தில் உயிர் பெறுகிறோம். 

அதன் பிறகு தான் ஆன்மீக வாழ்வு வாழ ஆரம்பிக்கிறோம். 

திருமுழுக்கு பெறாமல் ஆன்மீக வாழ்வு வாழ முடியாது. 

சென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவித்த ஒரே பெண்மணி அன்னை மரியாள் மட்டுமே.

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று இயேசு கூறியது ஆன்மீகப் பொருளில்.

அவர் கூறியதன் பொருள்,

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே பாவம் செய்ய மாட்டார்கள். ஆகவே அவர்கள் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வார்கள்."

இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடிக்காதபோது தான் பாவம் நுழைகிறது.

நாம் பாவம் செய்யாமல், பரிசுத்தமாக வாழ வேண்டுமென்றால் இயேசு அளித்த நற்செய்தியின்படி வாழ வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ளாத யூதர்கள்

"ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே!

எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள்." ( 8:52,53)

அவர்கள் இயேசுவை மனிதனாக மட்டும் பார்த்தார்கள், அவரை இறை மகன் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம் தான் கடவுள் என்று கூறும் பொருளில், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார். (8:58)

நாம் ஒவ்வொரு நாளும்,

"பரலோகத்தையும், பூலோகத்தையும், காணப்படுபவை, காணப்படாதவை ஆகிய எல்லாவற்றையும் படைத்த சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.  

சர்வேசுரனுடைய ஏக பேறான சுதனும், ஆண்டவருமான இயேசு கிறீஸ்துவையும் விசுவசிக்கிறேன்.."

என்று விசுவாசப் பிரமாணத்தில் சொல்கிறோம்.

ஆனால் நமது விசுவாசம், உண்மையானதா, சொல்லளவில்  தானா?

நமது விசுவாசம், உண்மையானதாக இருந்தால் ஏன் திவ்ய நற்கருணையை முழங்கால்படியிட்டு ஆராதிக்காமல்,
 அவர் முன் தலையை மட்டும் வளைக்கிறோம்?

திவ்ய நற்கருணையை வாங்கும் போது ஏன் முழங்காலில் இருக்காமல் ஏதோ சாக்லட் வாங்குவது போல நட்டமாய் நின்று, கையில் வாங்குகிறோம்?


திவ்ய நற்கருணையை வாங்கிய பின் ஏன் முழுப் பூசையும் முடியும் முன் கோவிலை விட்டு வெளியேறுகிறோம்?

 ஒரு காலத்தில் பீடத்தின் மையத்தில் இயேசு வசிக்கும் திவ்ய நற்கருணைப் பேழை இருந்த இடத்தில் ஏன் பைபிள் Standஐ வைத்து விட்டு 
திவ்ய நற்கருணைப் பேழை ஓரத்தில் வைக்கிறோம்?

எத்தனை பேர் திருப்பலிக்கு முன் பாவ சங்கீர்த்தனம் செய்து விட்டு, திரு விருந்தில் கலந்து கொள்கிறோம்?

சோறு சாப்பிடுமுன் கையைச் சுத்தம் படுத்தும் நாம் ஏன் ஆண்டவர் நமக்குள் வருமுன் நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை?

"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். 
(மத்தேயு நற்செய்தி 28:20 )

அன்னை மரியாளின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்து,

 திருக்குடும்பத்தில் வளர்ந்து,

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்து,

நமக்காகப் பாடுகள் பட்டு,

சிலுவையில் அறையப்பட்டு மரித்து,

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த அதே இயேசு, 

அதே உடலோடும், ஆன்மாவோடும் நம்மோடு வாழ்கிறார்

என்ற எண்ணம் ஒவ்வொரு வினாடியும் நம்முடன் இருக்க வேண்டும்.

இருந்தால் நமது வாழ்வே வித்தியாசமாக இருக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment