Sunday, April 6, 2025

"ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்."(அருளப்பர் நற்செய்தி 8:16)



"ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்."
(அருளப்பர் நற்செய்தி 8:16)

"நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை."
(அருளப்பர் நற்செய்தி 8:15)

என்று சொன்ன இயேசு ஏன் தொடர்ந்து 

"நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும்."  என்கிறார்?

இது ஒரு நண்பர் எழுப்பிய கேள்வி.

இருவர் எதைப்பற்றியாவது உரையாடிக் கொண்டிருந்தால் இடையிடையே கேள்விகள் எழுவது இயல்பு.

கேள்விகளே இல்லாமல் உரையாட முடியாது.

நாம் தீர்ப்பு என்ற வார்த்தையை நீதிமன்றங்களில் பயன்படுத்துகிறோம்.

நீதிமன்றங்களில் தீர்ப்பு கூறும் அதிகாரம் நீதிபதிக்கு மட்டுமே உண்டு.

வழக்கு தொடரப்பட்ட ஆள் குற்றவாளியா இல்லையா என்பது பற்றி தீர்ப்பு வழங்குபவர் நீதிபதி தான்.

குற்றம் நிரூபிக்கப் பட்டால் தண்டனை வழங்குவார், 

நிரூபிக்கப் படாவிட்டால் விடுதலை அளிப்பார்.

சட்டத்தை உருவாக்குபவர்களுக்கு மட்டுமே தீர்ப்புக் கூறும் அதிகாரம் உண்டு.

சட்டம் இயற்றுவது அரசாங்கம்.

அரசாங்கம் செய்ய வேண்டிய நீதி வழங்கும் வேலையை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி செய்கிறார்.

ஆன்மீகத்தில் நம்மைப் படைத்து நாம் அனுசரிக்க கட்டளைகளைத் தந்தவர் கடவுள்.

அவருக்கு மட்டுமே நமக்குத் தீர்ப்பு கூற அதிகாரம் உண்டு.

அதனால்தான் 

"நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும்."  என்கிறார்.

ஆனால் அவர் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை.

"நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை."
(அருளப்பர் நற்செய்தி 8:15)

அப்படியானால் இறுதி நாள் தீர்ப்பு அவரது வார்த்தைகள்?

"ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்."
(உரோமையர் 14:12)

இது இறைவாக்கு.

இறுதி நாளில் மனிதர்கள் தான் தங்கள் கணக்கைக் கொடுப்பர்.

மனிதன் கொடுக்கும் கணக்குப்படி  அவன் தவறு செய்திருந்தால் அதன் 
விளைவுகளுக்கு அவன்தான் பொறுப்பு.

கணிதத் தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர் எழுதும் தவறான விடைகளுக்கு மதிப்பீடு செய்யும் ஆசிரியரால் மதிப்பெண் கொடுக்க‌ முடியாது.

பரிசுத்தத் தனத்தோடு மரிக்கும் மனிதன் வாழும் போதே மோட்ச வாழ்வைத் தேர்வு செய்து கொண்டான்.


சாவான‌ பாவத்தோடு மரிக்கும் மனிதன் வாழும் போதே பேரிடர் வாழ்வைத் தேர்வு செய்து கொண்டான்.

இறுதி நாளில் அவரவர் தேர்வு செய்த இடத்துக்குப் போவார்கள்.

இதுதான் அவனே அவனுக்குக் கொடுக்கும் தீர்ப்பு.

இயேசு மீட்கவே வந்தார். ஆனால் மனிதன் மறுத்து விட்டால் அவர் என்ன செய்வார்?

அவன் ஆசைப்படி விட்டு விடுவார்.

அவனது சுதந்திரத்தில் குறுக்கிட மாட்டார்.

அவர் சிலுவையில் தன் உயிரைத் தியாகம் செய்து பெற்றுத் தரும் மோட்ச வாழ்வை மனிதன் வேண்டாம் என்று சொன்னால் அவர் என்ன செய்வார்?

''தாகமாய் இருந்த எனக்குத் தண்ணீர் தந்தவர்கள் என்னுடன் வாருங்கள்.

தராதோர் நீங்கள் தேர்வு செய்துள்ள இடத்துக்குக் போங்கள்."

இயேசுவின் வார்த்தைகளின் பொருள் இதுதான்.

கடவுள் நமக்குத் தீர்ப்பு அளிப்பதில்லை, நாம்தான் நமக்குத் தீர்ப்பு அளித்துக்‌ கொள்கிறோம்.

நமது முதல் பெற்றோருக்கு கடவுள் அளித்த கட்டளையையும், அவர்கள் செய்வதையும் சிந்தித்துப் பார்த்தால் இது புரியும்.

கடவுள் கொடுத்த முதல் கட்டளை என்ன?

"ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்"; என்று கட்டளையிட்டுச் சொன்னார்."
(தொடக்கநூல் 2:17)

கட்டளையையும் அதை மீறினால் என்ன விளையும் என்பதைக் கடவுள் கூறிவிட்டார்.

தாய்‌ மகனிடம், ''கடையில் சாப்பிடாதே, சாப்பிட்டால் வயிற்று‌ வலி வரும்." என்று கூறுகிறாள்.

மகன் கடையில் சாப்பிட்டால் வயிற்று‌ வலி வரும் என்று தெரிந்தும் அவன் கடையில் சாப்பிட்டு வயிற்று வலியை வரவழைத்துக் கொண்டால்,

அது தாய் கொடுக்கும் தண்டனை அல்ல.

அவனே அவனுக்குக் கொடுக்கும் தண்டனை.

நமது முதல் பெற்றோருக்கு கடவுள் கொடுத்த கட்டளை என்ன?

''நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்."

விலக்கப் பட்ட கனியைத் தின்றால் மரணம் வரும் எனத் தெரிந்தும் அவர்கள் அதைத் தின்றால் அதற்கு என்ன அர்த்தம்?

அவர்களே மரணத்தை வரவழைத்துக் கொண்டார்கள் என்று தான் அர்த்தம்.

அவர்களே தங்கள் மேல் தீர்ப்பிட்டுக் கொண்டார்கள்.

தீர்ப்பின்படி அவர்கள் அடைந்தது ஆன்மீக மரணம்.

கடவுளின் அருள் என்ற அருளுடன் உயிரோடு இருந்த அவர்கள் பரிபூரண சுதந்திரத்துடன் அவர்கள் செய்த செயலால் இறை அருளை இழந்து ஆன்மீக மரணம் அடைந்தார்கள்.

அவர்கள் தங்கள் மீது வரவழைத்துக் கொண்ட ஆன்மீக மரணத்திலிருந்து, அதாவது பாவத்திலிருந்து, அவர்களை மீட்க 

அவர்களுக்குக் கட்டளை கொடுத்த இறைவனே மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டுத் தன் சிலுவை மரணத்தால் அவர்கள் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்தார்.

அவரே தீர்ப்பு வழங்கியிருந்தால் இதைச் செய்திருப்பாரா?

மனிதன் தன் மீது தானே அளித்துக் கொண்ட தீர்ப்பிலிருந்து அவனை விடுவிக்கவே இறைவன் மனிதன் ஆனார். 

அவர் மனிதன் மீது தீர்ப்பளிக்க அல்ல, அவனை பாவத்திலிருந்து மீட்கவே தன் ஒரே மகனை தந்தை இறைவன் உலகுக்கு அனுப்பினார்.

நாம் பாவம் செய்யும் போதெல்லாம் நம் மீது நாமே தீர்ப்பு எழுதிக் கொள்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம். 

பாவத்தைத் தவிர்ப்போம்.

இறைவன் காட்டிய வழியில் நடக்கவும், பரலோக வாழ்வுக்காக நம்மை நாமே தயாரிப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்போம். 

பசித்தோர்க்கு உணவளித்தல், தாகம் உள்ளவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தல், 
உடை இல்லாதவர்களுக்கு உடை அளித்தல்
ஏழைகளுக்கு உதவுதல், 
சுகம் இல்லாதவர்களுக்கு ஆறுதல் கூறுதல்,
சிறையில் உள்ளவர்களைச் சென்று பார்த்தல்,
தேடி வந்தவர்களை உச்சரித்தால்,
நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் 

போன்ற பிறரன்பு செயல்களைச் செய்து, இறைவனை அன்பு செய்து வாழ்வோம்.

நித்திய பேரின்ப வாழ்வை இறைவன் நம்மோடு பகிர்ந்து கொள்வார். 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment