Tuesday, April 8, 2025

"அதற்கு இயேசு, "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."(அருளப்பர் நற்செய்தி 8:34)

"அதற்கு இயேசு, "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(அருளப்பர் நற்செய்தி 8:34)

"இதோ, ஆண்டவருடைய அடிமை."
என்று அன்னை மரியாள் கூறினாள்.

மேய்ப்பவன் கட்டுப்பாட்டுக்குள் வாழும் ஆடு தொலைந்து போகாது.

சுதந்தரமாக வாழ்பவர்களை விட அடிமைகளாக வாழ்பவர்கள் வழி தவறிப் போக மாட்டார்கள்.

ஆனால் எப்படிப்பட்ட வழி என்பது அவர்கள் யாருடைய அடிமைகள் என்பதைப் பொறுத்தது.

நல்லவர்களுக்கு அடிமைகளாக வாழ்பவர்கள் நல்ல வழியை விட்டு தவறிப் போக மாட்டார்கள்.

கெட்டவர்களுக்கு அடிமைகளாக வாழ்பவர்கள் தீமையை விட்டு வெளியேற மாட்டார்கள்.

அன்னை மரியாள் ஆண்டவருக்கு அடிமையாக வாழ்ந்தாள், ஆகவே விண்ணகப் பாதையை விட்டு விலகாமல் வாழ்ந்தாள்.

நாமும் நமது தாயைப் பின்பற்றி நம்மைப் படைத்தவருக்கு அடிமைகளாக வாழ வேண்டும்.

பாவம் இறைவனுக்கு எதிரான செயல்.

பாவத்துக்கு அடிமையாக இருப்பவர்கள் பாவத்தின் தந்தையாகிய சாத்தானின் அடிமைகள்.

சாத்தானின் அடிமைகளாக வாழ்பவர்கள் சாத்தானின் இருப்பிடமாகிய நரகத்துக்கு இட்டுச் செல்லும் பாதையில் நடப்பார்கள்.

பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என்று ஆண்டவர் சொல்லும்போது 

பாவத்திற்கு அடிமையாக வாழ்பவர்கள் வாழ்வின் இறுதி வரை அப்படியே வாழ்ந்து மரித்தால் நித்தியமும் நரக நிலையில் வாழ நேரிடும்.

பாவத்திலிருந்து நம்மை மீட்கவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

நம்மைப் பாவத்திலிருந்து மீட்க  இயேசு என்ன செய்தார்?

முதலில் தனது பாடுகள் மூலமும் சிலுவை மரணத்தின் மூலமும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

அடுத்து திருமுழுக்கு மூலம் நமது சென்மப் பாவத்திலிருந்து நமக்குத் விடுதலை கொடுத்தார்.

அடுத்து நாம் செய்கின்ற பாவங்களுக்காக மனத்தாபப்பட அருள் வரத்தைக் கொடுத்து, பாவ சங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தின் மூலம் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

திரும்பவும் பாவம் செய்யாதிருக்க வேண்டிய ஆன்மீக சக்தியைப் பெறவும், நற்செயல்கள் செய்து புண்ணிய வாழ்வில் வளர வேண்டிய சக்தியைப் பெறவும் திவ்ய நற்கருணை மூலம் தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார்.

உறுதிப் பூசுதல் என்னும் திரு அருட்சாதனமும் அருள் வாழ்வில் நாம் வளரப் போதுமான திடனைத் தருகிறது.

இத்தனை உதவிகளையும் இயேசு செய்கிறார். 

நாம் அவரோடு ஒத்துழைக்க வேண்டும்.

பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

சோதனைகளை வெல்ல போதுமான அருள் வரம் கேட்டு இறைவனை மன்றாட வேண்டும்.

இயேசு கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னது இறைவனது அருள் வரங்களைக் கேட்கத்தான்.

நாம் அவற்றை விட்டு விட்டு வேறு என்னவெல்லாமோ கேட்கிறோம்.

பாவங்களிலிருந்து விடுதலை பெற்றால் மட்டும் போதாது.

புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.

நமது பிறரன்புச் செயல்கள் தான் புண்ணிய வாழ்வில் நம்மை வளர்க்கும்.

பிறரன்புச் செயல்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் புண்ணிய வாழ்வில் முன்னேறிக் கொண்டேயிருக்க வேண்டும்.

வாழ்வின் இறுதிவரை ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

வளர்ச்சி இவ்வுலகில் வாழும் வரைதான். விண்ணக வாழ்வில் வளர்ச்சி கிடையாது.

ஆன்மீக வாழ்வில் எவ்வளவு வளர முடியுமோ அவ்வளவு வளர்ந்து விட வேண்டும்.

வளர்ச்சிக்கு ஏற்ப விண்ணக பேரின்பமும் அதிகமாகும்.

பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம்.

ஆன்மீகத்தில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment