செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
2. மரியாளும், எலிசபெத்தும்.
அன்னை மரியாளின் வயிற்றில் இயேசு உற்பவித்த வினாடியே தனது நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆரம்பித்து விட்டார்.
"இதோ, ஆண்டவருடைய அடிமை" என்று தன் வயிற்றில் உற்பவித்திருக்கும் மகனுக்கே தன் வாழ்வை அர்ப்பணித்த அவருடைய தாய் தான் அவருடைய முதல் சீடத்தி.
இயேசு தனது முதல் நற்செய்திப் பயணத்தைக் கலிலேயாவிலுள்ள நசரேத்திலிருந்து
யூதேயா மலைநாட்டில் செக்கரியா வாழ்ந்த ஊருக்குப் பயணிக்கிறார், தன் அன்னையுடன்.
மரியாள் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்துகிறார்.
மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளுகிறது.
எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுகிறார்.
மரியாளுக்கு கபிரியேல் தூதர் காட்சி கொடுத்தது எலிசபெத்துக்குத் தெரியாது.
தூய ஆவியானவரின் வல்லமையால் அதை அவள் அறிந்திருக்க வேண்டும்.
எலிசபெத் மரியாளைப் பார்த்து, "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று வாழ்த்துகிறார்.
மரியாளும், எலிசபெத்தும் சந்தித்ததை விட,
குழந்தை இயேசுவும், குழந்தை அருளப்பரும் சந்தித்தது தான் முக்கியத்துவம் வாய்ந்தது.
இயேசு தான் உலகுக்கு வந்த பணியை அங்கேயே ஆரம்பித்து விடுகிறார்.
அவர் உலகுக்கு வந்தது மக்களின் பாவங்களை மன்னிக்க.
அருளப்பர் இயேசுவைச் சந்தித்தவுடன் தூய ஆவியால் அவரது சென்மப் பாவம் மன்னிக்கப் படுகிறது.
அவரும் மகிழ்ச்சியால் துள்ளுகிறார்.
மரியாளும் மகிழ்ச்சி பொங்க,
"ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ".
என்று பாடுகிறார்.
எலிசபெத்தின் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கி அவளுக்கு உதவி செய்கிறாள்.
அதன்பின் இல்லம் திரும்புகிறாள்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment