Saturday, April 5, 2025

"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" (அருளப்பர் நற்செய்தி 8:7)

 "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" 
(அருளப்பர் நற்செய்தி 8:7)

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, 

"போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். 

இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?"  என்று கேட்டனர். 

அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக  இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.

"கல்லால் எறிந்து கொல்ல வேண்டாம்."   என்று அவர் சொன்னால் அவர் "மோசேயின் சட்டத்தை மீறுகிறார்" என்று குற்றம் சாட்டலாம்.

"கொல்லுங்கள்" என்று சொன்னால் "இரக்கத்தைப் போதிக்கிறார், ஆனால் அவரிடம் இரக்கம் இல்லை." என்று குற்றம் சாட்டலாம்.

இந்த நோக்கத்தோடு தான் கேட்டார்கள்.

இயேசுவோ குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். 


முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

மறைநூல் அறிஞரும் பரிசேயரும்

"இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள்."

என்று குற்றம் சாட்டினார்கள்.

ஆனால் பெண் தனியாக விபச்சாரம் செய்ய முடியாது. குற்றவாளியைப் பிடிப்பதானால் ஆணையும் பிடித்து கொண்டு வந்திருக்க வேண்டும்.

அவர்களுடைய நோக்கம் இயேசுவிடம் குறை காண்பதே.

அவரோ அவர்கள் எதிர்பார்த்த எந்த பதிலையும் கூறாமல் எதிர் பாராத ஒன்றைக் கூறினார்.

"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார். 

அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். 


இயேசு நிமிர்ந்து பார்த்து, "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" என்று கேட்டார். 

அவர், "இல்லை, ஐயா" என்றார். இயேசு அவரிடம் "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.

அவர்கள் அவளைப் பிடித்து வந்ததால் ஒரு நன்மை விளைந்தது.

அவள் பாவ மன்னிப்புப் பெற்றாள், திருந்தினாள்.

இந்த நிகழ்விலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்.

ஒவ்வொருவரும் அவரவர் ஆன்மாவின் நிலையைப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அது அவர்களது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும்.

சிலர் தன் இலையில் என்ன இருக்கிறது, என்ன தேவை என்பதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

மற்றவர்கள் இலையையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவன் என்ன சாப்பிகிறான், எப்படிச் சாப்பிடுகிறான் என்பதையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் முதலில் நாம் ஒழுங்காகச் சாப்பிட வேண்டும்.

மற்றவர்களை‌ நேசிக்க வேண்டும், ஆனாலும் உன்னை நீ நேசிப்பது போல உன் அயலானை நேசி என்று ஆண்டவர் கூறியிருப்பதை மறந்து விடக்கூடாது.

மற்றவர்கள் நல்லவர்களாக‌வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது தப்பில்லை, ஆனால் முதலில் நாம் நல்லவர்களாக வாழ வேண்டும்.

மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க ஆசைப்படுவது நல்லதுதான். ஆனால் முதலில் நாம் நற்செய்தியை அறிந்திருக்க வேண்டும். 

மற்றவர்கள் பாவம் செய்யாமல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது நல்லதுதான். ஆனால் மற்றவர்களுடைய பாவங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நமக்கு உரிமை இல்லை.

அவரவர் ஆன்மாவை அவரவர்  பரிசோதனை செய்ய வேண்டும், மற்றவர்களது ஆன்மாக்களை அல்ல. 

நம்மிடம் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களது குறைகளைச் சுட்டிக் காண்பிக்க கூடாது.

அதைத்தான் மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் செய்தார்கள். 

எல்லோருடைய ஆன்மாக்களின் நிலையும் ஆண்டவருக்குத் தெரியும்.


பாவம் இல்லாதவர் முதலில் 
அந்தப் பெண்மேல் கல் எறிய வேண்டும் என்பது இயேசுவின் விருப்பமா?

 இல்லவே இல்லை.

பின் ஏன் அப்படிச் சொன்னார்?

அவர் கடவுள். அவர் மனிதனாகப் பிறந்தது பாவங்களை மன்னிக்க, பாவியைத் தீர்ப்பிட அல்ல.

"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்." 
(அருளப்பர் நற்செய்தி 3:17)

"இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" 
(லூக்கா நற்செய்தி 19:10)

ஆகவே அவள்மீது குற்றம் சாட்டியவர்களே குற்றவாளிகள் என்று அவருக்குத் தெரியும்.

அவர்கள் கல் எறிய மாட்டார்கள் என்றும் அவருக்குத் தெரியும்.

ஆகவே தான் துணிந்து

"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று சொன்னார்.

நாம் அனைவருமே பாவிகள்,  யாரையும் தீர்ப்பிட நமக்கு உரிமை இல்லை.

நமக்குள் பார்ப்போம்.
 நமக்குள் இருக்கும் அழுக்கை அப்புறப்படுத்துவோம்.

இது நமது கடமை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment