"அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்."
(அரு.19:30)
இயேசு மனிதனாக உலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள்.
அதில் திருக் குடும்பத்தில் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தது 30 ஆண்டுகள்.
நற்செய்தியை அறிவித்தது மூன்று ஆண்டுகள்.
மூன்றாவது ஆண்டின் இறுதி நாள் புனித வெள்ளி.
பிற்பகல் மூன்று மணிக்கு
இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியைத் தந்தையிடம் ஒப்படைத்தார்."
"எல்லாம் நிறைவேறிற்று" என்றால்?
எந்த நோக்கத்திற்காக உலகுக்கு வந்தாரோ அந்நோக்கம் முழுமையாக நிறைவேறிற்று.
மனுக் குலத்தின் பாவத்தின் காரணமாக மோட்ச வாசல் அடைக்கப் பட்டிருந்தது.
மனுக் குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து
அதை மீட்டு
மனிதர்களை மோட்ச வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காக இறை மகன் மனுமகனாகப் பிறந்தார்.
அதற்காக பாடுகள் பட்டு,
சிலுவையில் தன்னைப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.
தன்னைப் பலியாக ஒப்புக் கொடுத்தோடு அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம் நிறைவேறிற்று.
இயேசுவின் சிலுவை மரணத்துக்கு முன் இறந்த பரிசுத்தவான்கள்
மோட்ச வாசல் அடைக்கப் பட்டிருந்ததால்
வாசல் திறக்கும் நேரத்தை எதிர் பார்த்து பாதாளத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.
இயேசு தன் ஆவியைத் தந்தையிடம் ஒப்புக் கொடுத்த வினாடி மோட்ச வாசல் திறந்தது, அதாவது மனுக் குலம் மீட்கப்பட்டது.
இயேசுவின் ஆத்மா பாதாளங்களில் இறங்கி அங்கு காத்துக் கொண்டிருந்த அனைத்து ஆன்மாக்கள் மீட்கப்பட்டு விட்ட நற்செய்தியை அறிவித்தார்.
அவர்கள் பாதாள வாழ்வு நிலையிலிருந்து மோட்ச நிலைக்கு மாறினார்கள்.
ஆக, இயேசுவின் சிலுவை மரணத்துடன் அவர் எதற்காக உலகுக்கு வந்தாரோ அந்நோக்கம் நிறைவேறிற்று.
நம்மிலும் அது நிறைவேற நாம் பாவப் பரிகார வாழ்வு வாழ்ந்து, புண்ணியத்தில் வளர வேண்டும்.
இயேசு நமது பாவங்களுக்கும் பரிகாரம் செய்து, நமது பாவங்களுக்கான மன்னிப்பைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்.
பாவம் செய்தவர்கள் நாம்.
ஆகவே நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
இயேசு செய்த பரிகாரம் நமது பரிகாரத்துக்கு ஆன்மீக சக்தியைக் கொடுக்கிறது.
திருமுழுக்கின்போது நமது சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற்று விட்டோம்.
அதற்குப் பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தை இயேசு தந்திருக்கிறார்.
நமது பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெறுவோம்.
அதன்பின் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வோம்.
நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு கட்டத்தையும் ஏற்று, அதை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கோடுப்போம்.
துன்பங்கள் வரும்போது அவற்றை பாவப் பரிகாரச் சிலுவையாக ஏற்றுக் கொள்வோம்.
எவ்வளவுக்கு எவ்வளவு சிலுவைகளைச் சுமக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பாவப் பரிகாரம் அதிகரிக்கும்.
நமது வாழ்வில் போதிய பாவப் பரிகாரம் செய்யாமல் இறக்க நேரிட்டால்
உத்தரிக்கிற தலத்தில் முழுப் பரிகாரத்தையும் செய்த பின்பே மோட்சத்திற்குள் நுழைவோம்.
உத்தரிக்கிற தலக் கால அளவு குறைய வேண்டுமானால் வாழும் போதே நிறைய பரிகாரம் செய்ய வேண்டும்.
நாம் செய்யும் பரிகாரத்தை உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும் ஒப்புக் கொடுக்கலாம்.
உறுதியாக நாமும் ஒருநாள் இயேசுவுடன் நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment