Saturday, April 12, 2025

"அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்."(லூக்கா நற்செய்தி 23:12)


"அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்."
(லூக்கா நற்செய்தி 23:12)

இயேசு பிறந்தது யூதேயாவிலுள்ள பெத்லகேமில்.

வளர்ந்தது கலிலேயாவிலுள்ள நசரேத்தில்.

கலிலேயா, யூதேயா, சமாரியா ஆகிய நாடுகளில் நற்செய்தியை அறிவித்தார்.

பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்தது யூதேயாவிலுள்ள செருசலேத்தில்.

அங்கு தான் யூதர்களுக்கான தேவாலயம் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் யூதர்கள் தாங்கள் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீண்ட நாளின் ஞாபகமாக பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்காக செருசலேம் ஆலயத்தில் கூடுவது வழக்கம்.

அதே காலக்கட்டத்தில் தான் பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து நம்மை மீட்க தான் பலியாக வேண்டும் என்பது
இயேசுவின் திட்டம்.

பலியாக மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து 

அந்நாளைப் புதிய பாஸ்காவாக ,

அதாவது, பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து மீண்டதன் ஞாபகமாக 

நாம் கொண்டாட வேண்டும் என்பது அவருடைய திட்டம்.

யூதர்கள் தாங்கள் விடுதலை பெற்ற அன்று ஒரு ஆட்டைக் கொன்று ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து விட்டு அதன் இறைச்சியை உண்டார்கள்.

வெள்ளிக்கிழமை பலியிடப்படப் போகின்ற இறைவனின் ஆட்டுக்குட்டியாகிய தன்‌னைத்
தன் சீடர்களுக்கு பாஸ்கா உணவாகக் கொடுக்க

வியாழக்கிழமை மாலை ஜான் மாற்கின் இல்லத்தின் மாடியறைக்கு‌ இயேசு அவர்களை அழைத்துச் செல்கிறார்.
 

திவ்ய நற்கருணையை ஏற்படுத்தி அதன் மூலம் தனது உடலையும், இரத்தத்தையும் அவர்களுக்கு பாஸ்கா உணவாகக் கொடுக்கிறார்.

தனது சீடர்களுக்குக் குருப்பட்டம் கொடுக்கிறார்.

பாஸ்கா விருந்துடன் இயேசுவின் பாடுகள் ஆரம்பித்து விட்டன.

ஒலிவ மலைப்பகுதியில்தான் அவர் கைது செய்யப்பட வேண்டும், 

தொடர்ந்து தலைமை குருவாலும், பிலாத்துவாலும், ஏரோதுவாலும், திரும்பவும் பிலாத்துவாலும் விசாரிக்கப் பட்டு மரணத்தீர்ப்பிடப்பட வேண்டும்,

வெள்ளிக்கிழமை சிலுவையில் பலியாக வேண்டும்,

கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும்,

மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமை உயிர்த்தெழ வேண்டும் 

இதுதான் இறைவனின் நித்திய காலத் திட்டம்.

இயேசு ஜான் மாற்கின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச்  சீடர்களுடன்  சென்றார்.

இயேசுவைக் கைது செய்தது, விசாரித்தது, சிலுவையை அவர் மேல் ஏற்றியது, அவரைச் சிலுவையில் அறைந்தது எல்லாம் மற்றவர்களாக இருக்கலாம்.

ஆனால் இயேசுதான் தன்னைத் தானே நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்  தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

அன்னை மரியாளும் தன் மகனை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தந்தை இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுத்தாள்.

முப்பத்து மூன்று ஆண்டுகள் உலகில் வாழ்ந்த இயேசு 
தான் போதித்த அத்தனை போதனைகளையும் பாடுகள் பட்ட ஒரே நாளில் வாழ்ந்து காண்பித்தார்.

போதனைகள்:

1. ஏழைகள் பாக்கியவான்கள்.
2. சமாதானம் செய்வோர் பாக்கியவான்கள்.
3.பகைவர்களை நேசியுங்கள், தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
4.தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. 
5.மன்னியுங்கள்.

1.பிரபஞ்சத்தையே படைத்த இறைமகன் ஒன்றுமில்லாத ஏழையான மனுமகனாகப் பிறந்தார்.

பாடுகளின் போது அணிந்திருந்த அங்கியைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஏழையாகத்தான் எதிரிகளைச் சந்தித்தார்.

அவர்கள் அதையும் அவரிடமிருந்து களைந்து விட்டு நிர்வாணமாகத்தான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

உலகைப் படைத்து காத்து வரும் அரசருக்கு சிம்மாசனம் ஒரு மரச் சிலுவை.

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."

என்று கூறியிருந்த இயேசு நம்மை  இறையாட்சிக்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காக அவர் ஏழையாக பிறந்து, ஏழையாக வாழ்ந்து,  ஏழையாக மரித்தார்.

மாட்டுத் தொழுவத்தில் பிறக்கும் போது அவர் படுக்கத் தீவனத் தொட்டியாவது கிடைத்தது.

கல்வாரி மலையில் இறக்கும் போது அதுவும் கிடைக்கவில்லை.

  
குற்றவாளிகளுக்காகச் செய்யப்பட்ட மரச் சிலுவையில் அவர் படுக்கவில்லை, படுக்க வைக்கப் பட்டார்.

அங்காவது அன்னை மரியாள் அவரைத் துணியால் போர்த்தியிருந்தாள்.

இங்கே அதுவும் இல்லை.

பிறந்த கோலத்திலேயே இறந்தார்.

ஏழ்மையை இதை விட செயல் திறனோடு போதிக்க முடியுமா?

2.சமாதானம்  செய்வோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். 

இது அவர் போதனை.

நமது முதல் பெற்றோர் படைக்கப்பட்ட போது கடவுளுக்கும் அவர்களுக்கும் இடையில் சமாதான உறவு நிலவியது.

பாவத்தினால் மனிதன் சமாதான உறவை இழந்தான்.

இயேசு சிலுவையில் தன் உயிரைப் பலியாக்கி மனிதன் இழந்த சமாதானத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறார்.

மூன்று ஆண்டுகள் போதித்ததை சிலுவையில் மரித்துச் சாதித்தார்.

3.பகைவர்களை நேசியுங்கள், தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள். 

 இது அவர் போதனை.

யூத மதப் பெரியவர்கள் இயேசுவைக் கொல்வதற்காக அவரைக் கைது செய்ய வந்தபோது 

இராயப்பர் வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். 

காது துண்டிக்கப்பட்டவர் அவரைக் கைது செய்ய வந்தவர்.

இயேசு இராயப்பரைக் கண்டித்து விட்டு வெட்டப்பட்ட காதை ஒட்ட வைத்தார்.

பகைவருக்கு நன்மை செய்து விட்டுதான் பகைவர்கள் கையால் சாகப் போகிறார்!

இயேசு கலிலேயாவைச் சேர்ந்தவர் என்று அறிந்தவுடன் பிலாத்து அப்போது செருசலேமுக்கு வந்திருந்த ஏரோதுவிடம் அவரை அனுப்புகிறார், விசாரிக்கப் பட.

ஏரோது கேட்ட கேள்விகளுக்கு இயேசு பதில் எதுவும் கூறவில்லை.

ஏரோது அவரைத் திரும்ப பிலாத்துவிடம் அனுப்பி விட்டான்.

இயேசு அனுப்பப்பட்டது விசாரணைக்கு.

ஆனால் அவர் சென்றுவந்தது சமாதானத் தூதுவராக!

"அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்."
(லூக்கா நற்செய்தி 23:12)

தன்னைப் பகைத்த இருவரை இயேசு நண்பர்களாக்கி விட்டார்!

பகைவர்களுக்கு நன்மை செய்தார், சாகப் போகும் போதும்! 

4.தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. 

இது அவர் போதனை.

நாம் பாவத்தால் கடவுளைப் பகைத்தாலும் இயேசு நம்மை நண்பர்களாகத்தான் கருதுகிறார்.

நம்மிடம் இருக்கும் பாவப் பகைமையிலிருந்து நம்மை விடுவிக்க அவர் தன்னையே சிலுவையில் பலியாக்குகிறார்.

இதை விட பெரிய அன்பு யாரிடம் இருக்கிறது!

5.மன்னியுங்கள்.

இது அவருடைய போதனை.

நமக்கு எதிராக யாராவது தவறு செய்தால் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இயேசுவின் மிக முக்கியமான போதனை.

இறை மகனாகிய அவர் மனிதனாகப் பிறந்ததே நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.

 "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
(லூக்கா நற்செய்தி 23:34)

தனது சிலுவை மரணத்துக்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி இயேசு தந்தையிடம் வேண்டுகிறார்.

மன்னிக்கப் பிறந்தவர் மன்னித்து விட்டுதான் இறந்தார்.

நமக்குத் துன்பங்கள் வரும்போது இயேசுவின் போதனைகளையும் சாதனைகளையும் நினைவில் கொள்வோம்.

நாமும் அவற்றைச் செயல்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment