"ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப் பட்டிருக்கிறீர்கள்."
(அரு.13:14)
புனித வியாழன்.
இயேசுவின் இவ்வுலக வாழ்வின் மிக முக்கியமான நாள்.
அவர் எதற்காக உலகுக்கு வந்தாரோ அது ஆரம்பமான நாள்.
மனுக் குலம் செய்த, செய்கின்ற, செய்யவிருக்கிற அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாக தன்னையே சிலுவையில் பலியாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுக்கவே உலகுக்கு வந்தார்.
யூதர்களிடையே ஒரு வழக்கம் இருந்தது.
இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட ஆட்டின்
இறைச்சியை அவர்கள் சாப்பிடுவது அவர்கள் வழக்கம்.
"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!"
என்று திருமுழுக்கு அருளப்பர் இயேசுவைக் குறிப்பிட்டார்.
அதாவது உலகின் பாவத்தைப் போக்குபவதற்காகப் பலியாகப் போகும் ஆட்டுக்குட்டி.
பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியின் இறைச்சியை யாருடைய பாவங்களுக்காக அது பலியிடப் படுகிறதோ அவர்கள் உண்ண வேண்டும்.
இயேசுவாகிய ஆட்டுக் குட்டி நமது பாவங்களுக்காக வெள்ளிக் கிழமை பலியிடப்படப் போகிறது.
அவருடைய இறைச்சியை நாம் உண்பதற்காக வியாழக்கிழமை திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
அதற்காக மாற்கின் இல்லத்தின் மேல் மாடியில் தனது பன்னிரு சீடர்களுக்கும் திவ்ய நற்கருணையாகிய தனது உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுத்தார்.
அதாவது மறுநாள் பலியிடப்படப் போகும் தன் உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுத்தார்.
அதே உடலையும் இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருவதற்காக வியாழனன்றே குருத்துவம் என்னும் திரு அருட் சாதனத்தை நிறுவினார்.
அவரது சீடர்கள் தான் முதலில் குருப் பட்டம் பெற்றவர்கள்.
இயேசு வியாழனன்று நிறைவேற்றிய திருப்பலியை சீடர்கள் தினமும் நிறைவேற்றினார்கள்.
ஆதிக் கிறிஸ்தவர்கள் சீடர்களின் கரங்களிலிருந்து இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் பெற்று உண்டார்கள்.
இன்று நாம் அதே இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் சீடர்களின் வாரிசுகளாகிய நமது குருக்களின் கரங்களிலிருந்து பெற்று உண்கிறோம்.
அன்று சீடர்கள் உண்டதும், இன்று நாம் உண்பதும் அன்று வெள்ளிக்கிழமை கல்வாரி மலையில் பலியான அதே இயேசுவின் உடலையும், இரத்தத்தையும்தான்.
நாம் திவ்ய நற்கருணை உண்ணும் போது இந்த உண்மை நமது உள்ளத்தில் இருக்க வேண்டும்.
இன்று இரவு நாம் கொண்டாடயிருக்கும் இறுதி இரவு விருந்து (Last Supper) விழாவின்போது இது நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.
இயேசு அன்று தன்னைத் தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கு முன் அவர்களின் பாதங்களைக் கழுவினார்.
அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு அவர்களை நோக்கி
"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்."
என்றார்.
ஆண்டவராகிய அவர் தனது சீடர்களின் பாதங்களை கழுவியதன் மூலம் தாழ்ச்சியின் அவசியத்தை செயல் மூலம் போதிக்கிறார்.
சீடர்கள் சேவை மனப்பான்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும்.
ஆளும் அதிகாரம் உள்ளவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளக் கூடாது.
அவர்களைப் படைத்த கடவுளே அவர்களது பாதங்களைக் கழுவும் போது அவர்களும் அதேபோல் செயல்பட வேண்டும்.
ஆண்டவர் திவ்ய நற்கருணை கொடுக்குமுன் சீடர்களின் பாதங்களைக் கழுவியதிலிருந்து நாம் இன்னொரு பாடமும் கற்றுக் கொள்ள வேண்டும்.
திவ்ய நற்கருணை வாங்க வேண்டுமென்றால் நாம் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
சாவான பாவ நிலையில் உள்ளவர்கள் பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெறாமல் திவ்ய நற்கருணை வாங்கக் கூடாது.
சாவான பாவத்தோடு நற்கருணை உண்டால் அதுவும் சாவான பாவமாகிவிடும்.
பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்றபின்பு தான் திவ்ய நற்கருணை வாங்க வேண்டும்.
ஆண்டவர் பரிசுத்தர். அவர் வரும் இடமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
பரிசுத்த உள்ளத்தோடு இயேசுவை உண்டு பரிசுத்தத் தனத்தில் வளர்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment