"யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்."
(அருளப்பர் நற்செய்தி 5:36)
யாராவது நம்மிடம் எதையாவது சொன்னால் அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பது நமது வழக்கம்.
குளக்கரையில் குணமானவர் தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதமதத் தலைவர்களுக்கு அறிவித்தபோது
ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.
இயேசு அவர்களிடம், "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்" என்றபோது
அவர்கள் அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது; "மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார்" என்று கூறினார்.
மேலும் இயேசு தான் இறைமகன் என்பதற்கு தனது செயல்களே ஆதாரம் என்கிறார்.
உலகியலில் கூட ஒருவரின் தன்மையை மதிப்பிடுவற்கு அவரது சொற்களை விட செயல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
பெருந்தலைவர் காமராஜருக்கு சில அரசியல்வாதிகளைப் போல் கவர்ச்சிகரமாகப் பேசத் தெரியாது.
கவர்ச்சிகரமாகப் பேசுபவர்கள் ஓட்டுக்காப் பேசுவார்கள்.
பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது.
ஆனால் காமராஜர் சொல்வதைச் சாதிப்பார்.
இயேசு இறைமகன் என்பதற்கு அவருடைய போதனையும், சாதனையும்தான் ஆதாரம்.
அவரது புதுமைகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை.
தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய புதுமையே அவருடைய சீடர்கள் அவர்மீது கொண்டிருந்த விசுவாசத்தை உறுதிப் படுத்தியது.
சீடர்கள் அவரை இறைமகன், மெசியா என்று விசுவசித்து தான் அவரைப் பின்பற்றினர்.
"நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்."
என்று திருமுழுக்கு அருளப்பர் சொன்னதைக் கேட்ட அந்திரேயா அதை ஏற்றுக் கொண்டு தனது சகோதரர் சீமோனிடம் வந்து
"மெசியாவைக் கண்டோம்" என்றார்.
(அருளப்பர்1:41)
நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார்.
(அருளப்பர் நற்செய்தி 1:49)
அவர் செய்த புதுமை அவர்களது விசுவாசத்தை உறுதிப் படுத்தியது.
''இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்."
(அருளப்பர் நற்செய்தி 2:11)
இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தது, நோயாளிகளைக் குணமாக்கியது போன்ற புதுமைகளின் நோக்கம் அவர்களுக்கு உதவி செய்வது மட்டுமல்ல,
சம்பந்தப் பட்டவர்களுக்கும், மற்றவர்களுக்கும் விசுவாசத்தை ஊட்டி, விசுவாசத்தின் காரணமாக அவர்கள் மீட்பு பெறுவதும் தான்.
மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்டு அவர்களை விண்ணக வாழ்வுக்கு அழைத்துச் செல்லவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.
இறைமகன் மனுவுரு எடுத்தது புதுமைகள் செய்வதற்காக அல்ல.
தன் மீது மக்களுக்கு விசுவாசம் ஏற்படவே புதுமைகள் செய்தார்.
வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்கு கதைகள் சொல்வது பாடத்தைப் புரிய வைக்க.
மாணவர்கள் கதைகளை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு பாடத்தை மறந்து விடக்கூடாது.
ஒரு முறை நான் மூன்றாவது வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்திய போது,
"கிராம நிர்வாக அதிகாரியின் வேலை மக்களிடமிருந்து நில வரியை வசூலிப்பது.
நிலவரி கொடுக்காதவர்கள் வீட்டிலிருந்து தலையாரி சட்டி பானைகளை அள்ளி தெருவில் போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டபோது
மாணவர்கள், "பார்த்திருக்கிறோம்." என்றார்கள்.
"மக்கள் நிலவரியை ஒழுங்காகக் கட்ட வேண்டும்.
நிலவரியை வசூலிப்பது தான் கிராம நிர்வாக அதிகாரியின் வேலை."
அந்த ஆண்டு இறுதித் தேர்வில் சமூக அறிவியல் பாடத் தேர்வில்
ஒரு கேள்வி:
"கிராம நிர்வாக அதிகாரியின் வேலை என்ன?"
சில மாணவர்கள், "வீட்டிலிருந்து சட்டி பானைகளை அள்ளி தெருவில் போடுவதுதான் கிராம நிர்வாக அதிகாரியின் வேலை." என்று எழுதியிருந்தார்கள்.
எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
இந்த மாணவர்களைப் போன்றவர்கள் தான்
விசுவாச வாழ்வைப் பற்றி கவலைப்படாமல் உதவிகளை கேட்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழும் கிறிஸ்தவர்கள்.
ஞாயிறு திருப்பலிக்குப் போகாமல் கோடி அற்புதர் புனித அந்தோனியாரைத் தேடி செவ்வாய்க் கிழமை மட்டும் திருப்பலிக்குப் போகின்றவர்களும் இப்படிப்பட்டவர்கள் தான்.
பொது வாழ்வின் போது இயேசு செய்த எல்லா புதுமைகளும் மக்கள் தன்னை மீட்பராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
பிலாத்துவின் அரண்மனையில்
"அவரை சிலுவையில் அறையுங்கள்." என்று மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் கத்திய போது
"அவர் எங்கள் அரசர். அவரை விட்டு விடுங்கள்." என்று குரல் கொடுக்க அவரிடம் உதவி பெற்ற யாருமே அங்கே இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
அன்னை மரியாளுக்கும் அவரோடு இருந்த மற்ற பக்தியுள்ள பெண்களுக்கும் மனித குல மீட்புக்காகவே இயேசு பலியாகப் போகிறார் என்ற உண்மை தெரியும். ஆகவே அவர்கள் பலியைத் தந்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கவே அங்கு வந்தார்கள்.
ஆனால் உதவி பெற்ற மற்ற சாதாரண மக்கள்?
மக்களை விடுங்கள், இயேசுவின் சீடர்கள்?
இயேசுவைக் கைது செய்த போதே ஓடிப் போய்விட்டார்கள்.
"அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்."
(மத்தேயு நற்செய்தி 26:56)
"இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள்.
ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையன்றித் தப்பி ஓடினார்.
(மாற்கு நற்செய்தி 14:51,52)
அவர் நற்செய்தியை எழுதிய மாற்கு என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இராயப்பரும் இயேசுவை மூன்று முறை மறுதலித்தார்.
ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இயேசு செய்த புதுமைகள் இறைமகன் என்று சந்தேகமின்றி நிருபிக்கின்றன.
இயேசு புதுமைகள் மட்டும் செய்யவில்லை.
அவர் போதனைகளை எல்லாம் சாதித்துக் காட்டினார்.
ஏழ்மையைப் பற்றி போதித்தவர் அவரே ஏழையாக வாழ்ந்தார்.
பகைவர்களை நேசிக்கச் சொன்னவர் பாவத்தினால் அவரைப் பகைத்த நமக்காகத்தான் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.
தீமைக்கு நன்மை செய்யச் சொன்னவர் தன்னைப் பாடுபடுத்தி சிலுவையில் அறைந்த அனைவரையும் மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.
பசித்தவர்களுக்கு உணவளிக்கச் சொன்னவர் அப்பங்களைப் பலுகச் செய்து தனது போதனைகளைக் கேட்டவர்களுக்கு உணவளித்தார்.
ஆக தனது சிந்தனை, சொல், செய ல் ஆகியவற்றின் மூலம் தன்னை இறைமகன் என்பதை நிருபித்தார்.
இயேசுவிடமிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் மூலம் இயேசுவின் சீடர்களாக வாழ வேண்டும்.
நாம் கிறிஸ்தவன் என்று சொன்னால் மட்டும் போதாது.
அவரது போதனைகளை நாம் செயல் படுத்த வேண்டும்.
கடவுளை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிப்பதோடு
நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நேசிக்க வேண்டும்.
நமது பிறரன்புச் செயல்கள் மூலம் மற்றவர்கள் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அறிய வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment