"இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?"
(மத்தேயு நற்செய்தி 26:15)
யூதர்களின் தலைமை குருவும், அவரைச் சேர்ந்தவர்களும் இயேசுவைக் கைது செய்ய சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் தலைமைக் குருவிடம் வந்து,
"இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான்.
அவன் என்ன எதிர் பார்த்தான்?
பணம்.
அவன் எதிர் பார்த்தபடி
அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணிக் கொடுத்தார்கள்.
இப்போது ஒரு உண்மையை நமது மனதில் வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த வசனத்தை நாம் தியானிக்க வேண்டும்.
இயேசுதான் யூதாசைத் தன் சீடர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்தார்.
இயேசுக்கு முக்காலமும் தெரியும்.
நமது முதல் பெற்றோரைப் படைப்பதற்கு முன்னாலேயே அவர்கள் பாவம் செய்வார்கள் என்று கடவுளுக்குத் தெரியும்.
ஆனாலும் அவரது அளவுகடந்த அன்பைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு அவர் அவர்களைப் படைத்தார்.
ஆனாலும் சாத்தானின் ஏவுதலால் அவர்கள் பாவம் செய்தார்கள்.
சாத்தான் விலக்கப்பட்ட கனியைத் தன் சோதனைக்குப் பயன்படுத்திக் கொண்டான்.
இயேசு தன் அன்பின்
காரணமாகத்தான் யூதாசைத் தன்
சீடராகத் தேர்ந்தெடுத்தார்.
யூதாஸ் சீடராகச் சேரும் போது இயேசுவைக் எதிரிகளுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் நிச்சயம் இருந்திருக்காது.
மீட்பரைக் கொன்று விட்டால்
தான் பாவத்தில் விழத்தாட்டிய மனுக் குலத்தை மீட்புப் பெற விடாமல் தடுத்து விடலாம் என்ற எண்ணத்தால் தான் சாத்தான் யூதாசைத் சோதித்திருக்க வேண்டும்.
அதற்கு அவன் பயன்படுத்திக் கொண்டது யூதாசின் பண ஆசை.
யூதாஸ் இயேசுவை ஏற்றுக் கொண்டாலும் அவனிடம் பண ஆசை இருந்தது.
"எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது."
(மத்தேயு நற்செய்தி 6:24)
என்ற இறைவாக்கு யூதாஸ் விடயத்தில் உண்மையாகி விட்டது.
இயேசுவின் சீடராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் யூதாஸ் அவன் பண ஆசையை விட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவன் இயேசுவையும் ஏற்றுக்கொண்டு,
பண ஆசையையும் தன்னுடன் வைத்துக் கொண்டான்.
விளைவு?
பணம், இயேசு ஆகிய இருதலைவர்களுள் பணத்தின் மீது உள்ள பற்று காரணமாக இயேசுவை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டான்.
சாத்தான் யூதாசின் பணப் பற்றைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டான்.
ஆனாலும் இயேசு யூதாசுக்காகவும் சேர்த்து தான் சிலுவையில் மரித்தார்.
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
(லூக்கா நற்செய்தி 23:34)
என்ற இயேசுவின் செபத்தில்
"இவர்களில்" யூதாசும் இருக்கிறான்.
இயேசுவைக் கொல்ல உதவுவது அவன் காட்டிக் கொடுத்ததின் நோக்கமாக இருந்திருந்தால் அவருக்கு மரணத் தீர்ப்பு இடப்பட்ட போது அவன் மகிழ்ந்திருப்பான்.
ஆனால் அவன் மகிழவில்லை.
"மாசில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனே!"
என வருந்தி, வாங்கிய பணத்தை வீசி எறிந்து விட்டு, நாண்டு கொண்டு இறந்தான்.
செய்தது இன்னதென்று அறியாமல் செய்த செயல் அது.
அவன் ஒன்றை நினைத்துச் செய்தான், வேறொன்று நடந்து விட்டது.
"இதற்கு முன் நடந்தது போல எதிரிகள் அவரைப் பிடிக்க முயலும் போது அவர் அகப்படாமல் நடந்து போய் விடுவார், நமக்கும் பணம் கிடைக்கும்"
என்று எண்ணி காட்டிக் கொடுத்தான்.
நிச்சயமாக இயேசுவின் செபம் யூதாசின் பாவத்தை விடப் பெரியது.
நிச்சயமாக யூதாஸ் மரணத்தின் கடைசி வினாடியில் மனம் திரும்பியிருப்பான்.
மன்னிப்புக் கேட்டிருப்பான்.
மன்னிப்புக் கிடைத்திருக்கும்.
விண்ணக வீட்டுக்கும் போயிருப்பான்.
இப்போது யூதாசின் செயலிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடத்தைக் பற்றி மட்டும் தியானிப்போம்.
நாம் இரு தலைவர்களுக்கும் சேவை முயற்சிக்கிறோமா?
அல்லது,
இயேசுவுக்கு மட்டும் சேவை செய்கிறோமா?
எல்லோருடைய உள்ளத்திலும் இயேசு இருக்கிறார்.
எல்லோருடைய கையிலும் பணம் இருக்கும். பணம் சொந்தமாக இல்லா விட்டாலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமாவது உள்ளத்தில் இருக்கும்.
பணம் இல்லாவிட்டால் இவ்வுலக இன்பங்களை அனுபவித்து வாழ முடியாது.
இயேசுவின் அருள் இல்லாவிட்டால் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைய முடியாது.
பொருள் உள்ளோர் இவ்வுலகில் வாழலாம்.
அருள் உள்ளோர் விண்ணுலகில் வாழலாம்.
நமக்கு எந்த வாழ்வு முக்கியம்,
முடிவுள்ள இவ்வுலக வாழ்வா,
முடிவில்லாத விண்ணக வாழ்வா?
இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கடவுளுக்கு சேவை செய்வோர் தங்களிடம் உள்ள பணத்தை கடவுள் சேவைக்குப் பயன்படுத்த வேண்டும்.
கடவுளைப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தக் கூடாது.
உலகத்தை அனுபவித்து விட்டு மரண வேளையில் மனம் திரும்பலாம் என்று எண்ணக் கூடாது.
ஏனெனில் எதிர் பாராத நேரத்தில் மரணம் வரும்.
"என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
ஆனால் கடவுள் அவனிடம், "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார்.
(லூக்கா நற்செய்தி 12:19,20)
உலக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கூட மரணம் வரலாம்.
ஆகவே, உலக வாழ்வை இறைவனுக்காகப் பயன்படுத்துவோம்.
நம்முடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் ஆண்டவருக்காக, ஆண்டவருக்காக மட்டும்.
"அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்."
(மத்தேயு நற்செய்தி 6:33)
இறைவனை மட்டும் தேடுவோம். அதற்காகப் பணக்தைப் பயன்படுத்துவோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment