Thursday, April 24, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி). 12வயதில் இயேசு.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
12வயதில் இயேசு.

கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவை ஆராதித்து விட்டுப் போனபின்,

குழந்தை இயேசுவை ஏரோது மன்னனின் கையிலிருந்து காப்பாற்றுவதற்காக

கபிரியேல் தூதரின் சொல்லுக்கு இணங்க எகிப்துக்குச் சென்ற திருக்குடும்பம் 

ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் அங்கு வாழ்ந்து விட்டு ஏரோது மன்னன் இறந்தபின் நாசரேத்துக்குத் திரும்பினார்கள்.

அது முதல் பொது வாழ்வுக்குச் செல்லும் வரை இயேசு நாசரேத்தில்தான் வாழ்ந்தார்.

பன்னிரண்டு வயதில் இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அன்னை மரியாளுடன் பயணிப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் செல்வது போல அந்த ஆண்டும் பாஸ்கா விழாவில் கலந்து கொள்ள இயேசு தன் பேற்றோருடன் செருசலேம் சென்றார்.

விழா முடிந்து திரும்பும் போது பெற்றோருக்குத் தெரியாமல் இயேசு ஆலயத்தில் தங்கி விட்டார்.

இயேசு மூவுலகையும் படைத்த இறை மகன் என்று மரியாளுக்கும் தெரியும், யோசேப்புக்கும் தெரியும்.

அவரால் தொலைந்து போக முடியாது என்றும் அவர்களுக்குத் தெரியும்.

ஆனாலும் அவரைப் பிரிந்து அவர்களால் இருக்க முடியவில்லை.

அவர் ஆலயத்தில் தங்கியது தெரியாமல் மூன்று நாட்கள் எங்கும் தேடிவிட்டு

மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். 

விழா நாட்களில் சாதாரண மக்கள் கோவில் போதகர்களைச் சந்தித்து திருச்சட்டம், தீர்க்கத்தரிசிகளின் கூற்றுக்கள் போன்றவற்றுக்கு விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்வது வழக்கம்.

அப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது 12 வயது சிறுவன் உட்புகுந்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

அவர்கள் கூறிய பதிலைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

மூன்று நாட்களும் இதைத்தான் செய்து கொண்டிருந்தார்.

அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். 

அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு அவர் செய்து கொண்டிருந்ததை கவனித்து ஆச்சரியப்பட்டார்கள்.

 அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, 

"மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். 

மாதாவின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் மாதாவின் தாழ்ச்சியின் மேன்மையை அறியலாம்.

இயேசுவைப் பெற்றவள் மரியாள் மட்டுமே, யோசேப்புக்கு அதில் பங்கு இல்லை.

ஆனால் மரியாள் தன்னை முன்னிருத்தாமல்,

"உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே"

என்று யோசேப்புக்கு முக்கியத்துவம் கோடுக்கிறாள்.

இது அவளுடைய தாழ்ச்சியைக் காட்டுகிறது.

இயேசுவின் பதிலைக் கவனியுங்கள்.

அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். 

தான் இறைமகன் என்ற மறை உண்மையை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படுத்துகிறார்.

இது மரியாளுக்கும் யோசேப்புக்கும் தெரியும்.

அவர் வெளிப்படுத்தியது யூத மத போதகர்கள் முன்னிலையில்.

அவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள்.

"அவர் சொன்னதை அவர்கள் (பெற்றோர்) புரிந்து கொள்ளவில்லை."

ஆனால் அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். 

 21 ஆண்டுகளுகள் கழித்து புரிந்து விடும்.

மறைநூல் அறிஞர்கள் அவரிடம் வேண்டாத கேள்விகள் கேட்கும் போது புரிந்து விடும்.

12 வயதில் இயேசு  மனித குல மீட்பைப் பற்றி திருச்சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கேட்ட அவசியமான கேள்விகளுக்கும்,

33 வயதில் அவரை மீட்பர் ஆக்குவதற்காக,

அதாவது, அவரைப் பலியிட அவர்கள்  கேட்கும் அவசியமற்ற கேள்விகளுக்கும் உள்ள வித்தியாசம் மாதாவுக்குப் புரியும்.

இயேசு தனது வாழ்நாளெல்லாம் தன் தந்தையின் அலுவலில்தான் ஈடுபட்டிருந்தார்.

தந்தையின் ஆலயத்தில் தந்தையின் அலுவலில் ஈடுபட்டிருந்த இயேசுவை அழைத்துக் கொண்டு மாதாவும், யோசேப்பும் வீடுதிரும்பினார்கள்.

அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்த இயேசு தன் பெற்றோருக்குப் பணிந்து நடந்தார். 

அவர்களுக்கு அவர் பணிந்து வாழ்ந்ததும் தந்தை அவருக்கு அளித்த அலுவல்தான்.

கடவுள் அவரால் படைக்கப்பட்ட மனிதர்களுக்குப் பணிந்து நடந்தார்.

அவரே கொடுத்த நான்காவது கட்டளையை நமக்கு முன் மாதிரிகையாக அவரே அனுசரித்தார்.

நாமும் நமது பிள்ளைகளுக்கு முன் மாதிரிகையாக வாழ வேண்டும்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment