நமது பாவங்களும்
இயேசுவின் பாடுகளும்.
(தொடர்ச்சி)
கல்வாரி மலையை அடைந்தவுடன் அவரைச் சிலுவையில் அறையுமுன் வீரர்கள் அவரது ஆடைகளைக் களைந்தார்கள்.
கவர்ச்சிகரமான (Indecent) உடையணிந்து இறை வழிபாட்டுத் தலங்களுக்கு வந்து,
தாங்கள் பாவம் செய்வது போதாதென்று,
மற்றவர்களையும் பாவத்துக்குத் தூண்டுவதன் மூலம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக இதை ஆண்டவர் ஏற்றுக் கொண்டார்.
இதில் மற்றொரு மறை பொருளும் இருப்பது போல் என் மனதில் படுகிறது.
கடவுள் மனிதனை ஆடை இல்லாதவனாகத்தான் படைத்தார்.
ஆடை எப்போது நுழைந்தது?
நமது முதல் பெற்றோர் தாங்கள் பாவம் செய்ததைக் கடவுளிடமிருந்து மறைப்பதற்காக முதல் ஆடையைக் கண்டு பிடித்தார்கள்.
அப்படியானால் ஆடை பாவத்துக்கு அடையாளம்.
மனுக் குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காகவே சிலுவையில் அறையப்படப் போகிறார் என்பதற்கு அடையாளமாக
பாவத்தின் அடையாளமான ஆடையைக் களைய அனுமதிக்கிறார்.
பரிசுத்தரான அவரது சிலுவை மரணம்தான் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டது.
அவரது ஆடை களையப்பட்டது போல நமது பாவமும் களையப்பட வேண்டும்.
இயேசுவின் சிலுவை மரணத்தின் நாளாகிய புனித வெள்ளிக்கு முன்பே நாம் பாவ சங்கீர்த்தனம் செய்து எல்லா பாவங்களுக்கும் மன்னிப்புப் பெற்று விட வேண்டும்.
அதற்குப் பிறகு நாம் பாவமே செய்யக் கூடாது.
இயேசுவின் மரணத்தோடு நமது பாவ வாழ்க்கையும் மரணித்து விட வேண்டும்.
அதாவது பரிசுத்த ஆன்மாவுடன் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.
இயேசு உயிர்த்தெழுந்தது போல நாம் பரிசுத்த வாழ்வுக்குள் உயிர்த்தெழ வேண்டும்.
பெற்ற உயிரைக் திரும்ப இழக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,
அதாவது, பாவத்தில் விழாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நாம் கைகளால் செய்த பாவங்களுக்காக கைகளில் ஆணிகளை ஏற்றுக் கொண்டார்.
நாம் கால்களால் செய்த பாவங்களுக்காக கால்களில் ஆணிகளை ஏற்றுக் கொண்டார்.
இதயம் இயங்கினால் மனிதன் இயங்குவான்.
இரத்தம் இருந்தால் இதயம் இயங்கும்.
ஆகவே தான் கடைசித் துளி இரத்தத்தையும் சிந்தி நமது அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரம் செய்தார்.
நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நமது பாவங்களுக்கான மன்னிப்பைக் தயார் நிலையில் வைத்திருக்கிறார்.
மன்னிப்பைக் கேட்டுப் பெற வேண்டியது நமது கடமை.
"கேளுங்கள், கொடுக்கப்படும்."
இது இயேசுவின் வாக்கு.
கேட்போம்,
பெறுவோம்,
பாவ மன்னிப்பையும்,
அதன் பயனாய் நித்திய வாழ்வையும்.
லூர்து செல்வம்.
.
.
No comments:
Post a Comment