செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
6.முப்பத்து மூன்று வயதில் இயேசு. (கெத்சமனித் தோட்டத்தில்)
இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது செருசலேமுக்குப் போனது போல
முப்பத்து மூன்று வயதிலும், அதாவது, உலகில் அவரது வாழ்வின் இறுதி ஆண்டிலும் போகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிற நிகழ்வு தான், ஆனால் இந்த ஆண்டு பன்னிரண்டு வயதில் போனது போல மறைநூல் அறிஞர்களிடம் அவர் கேள்விகள் கேட்கப் போகவில்லை,
கேள்விகள் கேட்கப் பட அவர்களிடம் அழைத்துச் செல்லப் படப் போகிறார்.
இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரிப்பதற்காகப் போகிறார் என்று மரியாளுக்குத் தெரியும்.
மற்ற ஆண்டுகளில் பாஸ்கா விழாவுக்காக மட்டும் செல்வாள், ஆனால் இந்த ஆண்டு தன் மகனைப் பரம தந்தைக்கு நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக் கொடுக்கப் போகிறாள்.
இயேசு தனது சீடர்களோடு போகிறார். மரியாளும் பாடுகளின் போது அவருடன் இருக்கப் போகிறாள்.
இயேசு தன்னைப் பலியாக ஒப்புக் கொடுக்கப் போகிறார்.
மரியாள் தன் மகனைப் பலியாக ஒப்புக் கொடுக்கப் போகிறாள்.
பலியாகப் போகிற செம்மறியை 30 ஆண்டுகள் வளர்த்தவள் அவள்.
புனித வியாழன் இரவு தன் சீடர்களுடன் உண்ட பாஸ்கா உணவுக்குப் பின் பாடுகள் ஆரம்பம் ஆகின்றன.
அப்போது அன்னை மரியாள் எங்கே தங்கியிருந்தாள்?
இயேசு நற்செய்தி அறிவித்த போது அவருக்குப் பணிவிடை செய்த யோவான்னா, சூசான்னா ஆகிய பெண்களில் யார் வீட்டிலாவது தங்கியிருந்திருக்கலாம்.
ஜான் மாற்கின் வீட்டில் கூட சீடர்களோடு இரவு உணவில் கலந்து கொள்ளாமல் தனி அறையில் தங்கியிருந்திருக்கலாம்.
எங்கே இருந்தாலும் மகதலா மரியாளும், அன்னை மரியாளின் தங்கை மரியாளும், சலோமி மரியாளும் கூட இருந்திருக்க வேண்டும்.
இவர்களெல்லாம் இயேசுவின் பாடுகளின் போது கூடவே சென்றவர்கள்.
இயேசு மனுக் குலத்தின் மீட்புக்காகப் பாடுகள்படப் போகிறார் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இரவு உணவிற்குப் பின் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார்.
நாமும் அவருடன் போவோம்.
அவர் செபிக்க அடிக்கடி போகும் இடம்தான் என்றாலும் இன்று நமது பாவங்களுக்குப் பரிகாரமாக செபிக்கப் போகிறார்.
மற்ற சீடர்களைத் தனியே விட்டு விட்டு, இராயப்பர், அருளப்பர், வியாகப்பர் ஆகிய மூவரை மட்டும் அழைத்துக் கொண்டு,
அவர்களை ஒரு இடத்தில் செபிக்கச் சொல்லி விட்டு,
தனியாக செபிக்கப் போகிறார்.
அவர் பாடுகள் பட்டு,
சிலுவையில் அறையப்பட்டு, நமக்காக மரிக்க வேண்டும் என்பது விண்ணகத் தந்தையின் நித்திய காலத் திட்டம்.
அதற்காகத் தான் மனிதனாகப் பிறந்தார்.
மனிதனாகப் பிறக்கும் போது பாவம் தவிர மற்ற எல்லா மனித பலகீனங்களையும் ஏற்றுக் கொண்டார்.
அவரே ஏற்றுக் கொண்ட பயம் என்ற மனித பலகீனம் அவரை ஆட்கொண்டது.
அவரும் பாடுகளை நினைத்து பயப்பட ஆரம்பித்தார்.
அளவுக்கு மீறிய பயத்தின் காரணமாக உடலில் உள்ள இரத்தம் வேர்வையாகக் கொட்டியது.
பயத்தின் விளைவாக,
"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்."
என்று செபித்தார்.
எவ்வளவு மன வேதனை இருந்திருந்தால் இப்படி செபித்திருப்பார்.
அந்த மனவேதனையை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.
தொடர்ந்து
"ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்."
என்றும் செபித்தார்.
இவ்வளவு மனவேதனை கலந்த செபத்தை மூன்று முறை செபித்தார்.
இப்போது மரியாள் அவர் அருகில் இருந்திருந்தால் தன் மகன் பட்ட வேதனையைப் பார்த்து எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாள்.
நாம் உண்மையான பக்தியுடன் தியானித்து செபித்தால் நமக்கும் அவ்வளவு மனவேதனை ஏற்பட வேண்டும்.
நமது மன வேதனையை இயேசுவின் மன வேதனையோடு சேர்த்து நமது பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்புக் கொடுப்போம்.
இயேசு செபத்தை முடித்து விட்டு மற்ற சீடர்களிடம் வந்த போது அவரைக் கைது செய்வதற்காக பெரிய குருவின் ஆட்கள் யூதாசுடன் வந்து கொண்டிருந்தார்கள்.
இயேசுவும் தன்னைக் கைது செய்யத் தன்னையே கையளித்தார்.
சீடர்கள் அவரை விட்டு ஓடி விட்டார்கள்.
ஜான் மாற்கு அவிழ்ந்து விழுந்த தன் துணியைக் கூட எடுக்காமல் ஓடினார்.
அவரைக் கைது செய்தவர்கள் அவரை இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள்.
இராயப்பர் தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.
(விசாரணை மன்றத்தில் சந்திப்போம்.)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment