Friday, April 18, 2025

பாதாளத்தில் இறங்கி.

பாதாளத்தில் இறங்கி.

நாம் பேசுவது ஆன்மீகம். ஆனால் அதைப் பற்றிப் பேச நாம் பயன்படுத்துவது லௌகீக மொழி.

ஆன்மீகம் விண்ணுலகைச் சார்ந்தது.

லௌகீகம் மண்ணுலகைச் சார்ந்தது.

உலகம் நேரத்துக்கும், இடத்துக்கும் உட்பட்டது.

ஆனால் விண்ணுலகில் நேரமும் இல்லை, இடமும் இல்லை.

லௌகீக மொழியால் ஆன்மீகத்தை உள்ளபடியே விபரிக்க முடியாது. புரிந்து கொள்ள வேண்டிய விதமாய்ப் புரிந்து கொள்ள வேண்டும்.

மண்ணுலகில் மனித வாழ்வுக்குத் துவக்கமும் உண்டு, முடிவும் உண்டு. வாழ இடமும் தேவை.

நேரத்துக்கும் இடத்துக்கும் உட்பட்டது மண்ணுலகம்.

இரண்டுக்கும் அப்பாற்பட்டது விண்ணுலகம்.

 மனித ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தபின் நித்தியமும் வாழும்.

உடல் சடப்பொருள், அது மண்ணிலிருந்து எடுக்கப் பட்டது, விண்ணில் அது வாழ இடம் இல்லை.

இயேசு முழுமையாகக் கடவுள், முழுமையாக மனிதன்.

மனிதனாகிய மட்டும் அவர் பிறந்தார், வாழ்ந்தபின் இறந்தார்.

தேவ சுபாவத்தில் துவக்கமும் முடிவும் இல்லாத இயேசுவுக்கு 

மனித சுபாவத்தில் துவக்கமும் முடிவும் இருந்தது.

பெத்லகேம் என்ற இடத்தில் பிறந்து, கல்வாரி மலை என்ற இடத்தில் இறந்தார்.

"போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

 பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்."

என்று விசுவாச அறிக்கையில் கூறுகிறோம்.

பாதாளம் என்பது இயேசு மனுக் குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக ஒப்புக் கொடுக்கும் வரை

அதை எதிர்பார்த்து பழைய ஏற்பாட்டில் வாழ்ந்து மரித்த பரிசுத்தவான்கள் காத்துக் கொண்டிருந்த வாழ்க்கை நிலை.

நமது உலகைப் போன்ற ஒரு இடம் அல்ல.

இறங்கி, ஏறி ஆகியவை மனித மொழி வார்த்தைகள். ஆன்மீகத்தில் அவற்றுக்கு லௌகீக அர்த்தம் கொடுக்கக்கூடாது.

லௌகீகத்தில் ஒரு இடத்தில் தான் ஏறுவோம், இறங்குவோம்.

பாதாளம் ஒரு இடம் அல்ல, வாழ்க்கை நிலை.

இயேசு பாதாளத்தில் இறங்கினார் என்றால் அந்நிலையில் உள்ள ஆன்மாக்களைச் சந்தித்தார் என்பது பொருள்.

அவரது ஆன்மா உலகை விட்டுப் பிரிந்தவுடன் பாதாள நிலையில் இருந்த ஆன்மாக்களைச் சந்தித்து, மோட்ச வாசல் திறந்து விட்டது என்ற நற்செய்தியை அறிவித்தார்.

அவர்களும் இயேசுவோடு மோட்ச நிலையை அடைந்தார்கள்.

இதற்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?

நேரமே ஆகியிருக்காது, உலகில் மட்டும் தான் நேரம். அதற்கு அப்பால் நேரம் என்ற கருத்துக்கே இடமில்லை.

இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.

உலகில் உள்ளவர்களுக்கு மூன்றாம் நாள்.

இயேசு மரித்தது உலகில்.

உலகில் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.

வெள்ளிக்கிழமை மரித்தார்.

வெள்ளி, சனி, ஞாயிறு - 
 மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலைமில் உயிர்த்தார்.

உலகில் வாழும் போது சடப் பொருளாக இருந்த அவருடைய உடல் 

வெள்ளிக்கிழமை அதை விட்டு‌ பிரிந்த ஆன்மா அதோடு சேரும் போது ஆன்மீக உடலாக (Spiritual body)மாறியது.

"அவருடைய உடல் ஆவிக்குரியதாகவும் மகிமைப்படுத்தப் பட்டதாகவும் மாறியது"

His body became spiritualized and glorified.  

இயேசு மரிப்பதற்கு முன் ஒரு இடத்தில் வசித்தார், இடம் விட்டு இடம் நடந்து சென்றார்.

உயிர்த்த பின் அன்னை மரியாளுக்கும், அவரைப் பார்க்க கல்லறைக்கு வந்த பெண்களுக்கும், சீடர்களுக்கும் காட்சி கொடுத்தார். அவர்களோடு வசிக்கவில்லை. விண்ணக நிலையில் வாழ்ந்து கொண்டு மண்ணில் காட்சி கொடுத்தார்.

(அன்னை மரியாள் பாத்திமாவிலும், வேளாங்கண்ணியிலும் காட்சி கொடுத்தது போல)

எங்கும் நடக்க வேண்டிய அவசியம் இல்லை, எங்கே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாரோ அங்கு இருந்தார், பூட்டிய அறைக்குள் கூட.

தனது காட்சிகள் மூலம் தான் உயிர்த்தெழுந்ததை உறுதிப்படுத்தினார்.

உலக கணக்குப்படி நாற்பது நாட்கள் பல முறைகள் கொடுத்து விட்டு,

அதன்பின் காட்சிகள் கொடுப்பதை நிறுத்தினார்.

ஆனால் திவ்ய நற்கருணை மூலம் தொடர்ந்து திருச்சபையில் வாழ்ந்து வருகிறார்.

திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது உடலையும், இரத்தத்தையும் உணவாகக் கொடுத்து வருகிறார்.

அன்னை மரியாள் மரித்த பின்னும் அவளுடைய உடல் இயேசுவின் உடலைப் போல ஆன்மீக உடலாக மாறி, விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, அதாவது விண்ணக நிலையை அடைந்தது.

அன்னை மரியாளும் தன் மகனைப் போல ஆன்ம, சரீரத்தோடு விண்ணகத்தில் வாழ்கிறாள்.

உலக முடிவில் நாமும் அப்படியே உயிர் பெற்று, இயேசுவோடும், அன்னையோடும் ஆன்ம சரீரத்தோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.




.

No comments:

Post a Comment