Friday, April 4, 2025

செபமாலை - வல்லமை வாய்ந்த செபம்.


செபமாலை - வல்லமை வாய்ந்த செபம்.

செபமாலைக்கும், மற்ற செபங்களுக்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது.

மற்ற செபங்களில் யாரை நோக்கி செபிக்கிறோமோ அவர்களும் நாமும் மட்டும் பங்கு பெறுகிறோம்.

ஆனால் செபமாலையில் விண்ணுலகில் வாழ்பவர்களும் நம்மோடு சேர்ந்து செபிக்கிறார்கள்.

நமது செபம் அன்னை மரியாள் வழியாக பரிசுத்த தம திரித்துவத்துக்குதான்.

முதலில் நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு விட்டு, பரலோத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையை அழைக்கிறோம்.

தந்தை நமது மனக் கண் முன்பு வருகிறார். தந்தை இருக்கும் இடத்தில் மகனும் இருப்பார், தூய ஆவியும் இருப்பார். நமது செபம் போய்ச் சேர வேண்டிய இடம் பரிசுத்த தம திரித்துவம்தான்.

அதற்காக ஒரு ஐம்பத்து மூன்று மணி செபமாலையில் ஆறு முறை தந்தையை அழைக்கிறோம்.

தந்தை வந்தவுடன் அவரை ஆராதித்துக் கொண்டே கோடிக்கணக்கான சம்மனசுக்களும் வந்து விடுவார்கள்.

கோடிக்கணக்கான விண்ணவர்கள் முன்னிலையில் தான் நாம் செபிக்கிறோம்.

முதலில் அன்னை மரியாளை நோக்கி நமக்காக செபத்தை ஆரம்பிப்பவர் கபிரியேல் சம்மனசு.

"அருள் நிறைந்த மரியே வாழ்க.
கர்த்தர் (இயேசு) உம்மோடு இருக்கிறார்."

அடுத்து புனித எலிசபெத்தம்மாள் செபத்தைத் தொடர்கிறாள்.

'' பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவள் நீர். உமது திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவர்."

அடுத்து நாம் தொடர்கிறோம்.

"புனித மரியாயே, இறைவனின் தாயே, பாவிகளாகிய எங்களுக்காக இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.    ஆமென்."

இந்த செபத்தை 53 முறை சொல்கிறோம்.

ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

கோடிக்கணக்கான சம்பனசுக்கள் முன்னிலையில், பரிசுத்த தம திரித்துவக் கடவுளை நோக்கி,

கடவுளின் தாய் வழியாக,

கபிரியேல் தூதரோடும், எலிசபெத்தம்மாளோடும் சேர்ந்து செபிக்கிறோம்.

உலக மக்கள் அனைவருக்காகவும் செபிக்கிறோம்.

"'எங்கள்' மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்."

ஒரு மங்கள வார்த்தை செபத்தில் மூன்று முறை அன்னை மரியாளை நினைவு கூறுகிறோம், மூன்று முறை இயேசுவை நினைவு கூறுகிறோம்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டு, மரண நேரத்தில் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுகிறோம்.

இப்படி 53 முறை வேண்டுகிறோம்.

நமது செபத்தை அனைத்து சம்மனசுக்கள், குறிப்பாக கபிரியேல் தூதர், எலிசபெத்தம்மாள் ஆகிய அனைவரும் அன்னை மரியாள் வழியாக கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள்.

செபமாலை சொல்வது ஒருவராக இருந்தாலும் அதை இறைவனிடம் எடுத்துச் செல்வோர் கோடிக்கணக்கானோர்.

கூர்ந்து கவனிக்க வேண்டும்.

நாம் வாழ்வது எதற்காக?

விண்ணக வாழ்வுக்காக.

விண்ணக வீட்டுக்கு வாசல் எது?

நமது மரணம்.

விண்ணக வீட்டுக்கு வாசல் வழியாக விண்ணகத்துக்குள் அழைத்துச் செல்ல வேண்டுமென்று கோடிக்கணக்கான பேர் அன்னை மரியாள் வழியாக நமக்காக சிபாரிசு செய்கிறார்கள்.

நாம் தினமும் 203 மணி செபமாலை செபித்தால் தினமும் கோடிக்கணக்கான சிபாரிசுகள் விண்ணகம் தந்தையை நோக்கி பறந்து கொண்டிருக்கும்.

இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும்.

நாம் 203 மணி செபமாலை செபிக்கும் போது 

அன்னைக்கு கபிரியேல் தூதர் மக்கள் வார்த்தை சொன்ன வினாடியிலிருந்து

அவள் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்படும் வினாடி வரை அவளுடனே பயணித்துக் கொண்டே செபிக்கிறோம்.

விண்ணக வாழ்வுக்குள் நமது பயணம் தொடரும்.

பக்தியுடன் செபமாலை செபிக்கும் நாம் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவது நூற்றுக்கு நூறு உறுதி.

தினமும் செபமாலை சொல்வோம்.

நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.

நம்மோடு சேர்ந்து செபமாலை செபித்த விண்ணவர்கள் நம்மை வரவேற்க விண்ணக வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

லூர்து செல்வம்.

Thursday, April 3, 2025

"உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன். (அருளப்பர் நற்செய்தி 7:7)


"உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன். 
(அருளப்பர் நற்செய்தி 7:7)

உலகெங்கும் வாழும் யூதர்கள் மூன்று முக்கியமான திருவிழாக்களைக் கொண்டாட செருசலேமில் கூடுவது வழக்கம்.

1.பாஸ்கா: யூதர்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்றதன் நினைவாக.

2. கூடாரப் பண்டிகை: விடுதலை பெற்று வரும்போது பாலைவனத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கியதன் நினைவாக.

3. பெந்தகோஸ்தே பண்டிகை:

சினாய் மலையில் இஸ்ரவேலர்களுக்கு தோரா (சட்டம்) வழங்கப்பட்டதின் நினைவாக.

செருசலேம் யூதேயாவில் உள்ளது.

அன்னை மரியாளின் தங்கை மக்களில் இருவர் (யாக்கோபும், யூதாவும்) இயேசுவின் சீடர்களாக இருந்தனர்.


கூடாரத் திருவிழா வந்த போது கலிலேயாவில் போதித்துக் கொண்டிருந்த இயேசுவை
அவர்கள் திருவிழாவுக்குப் போகச் சொன்னார்கள்.

ஆனால் அவர் 

உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன். 


நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள்; நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை" என்றார். 
(அருளப்பர் நற்செய்தி 7:7,8)

அவர் நேரம் என்று கூறியது அவரது சிலுவை மரணத்துக்கான நேரத்தை.    அவர் மனிதனாகப் பிறந்தது அதற்காகத்தானே.

அவரைப் பிடிக்காதவர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக் கொண்டிருந்தார்கள்.

தனக்குரிய நேரம் வரும் வரை தன்னை அவர்களிடம் கையளிக்க அவர் விரும்பவில்லை.

அவர் அனுமதி இன்றி அவர்மேல் யாரும் கைவைக்க முடியாது.

"என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்."

என்று அவர் கூறியதன் பொருள்?

தங்கள் குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களை வெறுப்பது உலக மக்களின் இயல்பு.

குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகத்தான்.

இயேசு திருச் சட்டத்தின்படி வாழாத மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் ஆகியோர் அதன்படி வாழ்வதற்காக அவரது குறைகளைச் சுட்டிக் காண்பித்தார்.

ஆகவே அவர்கள் அவரை வெறுத்ததுமல்லாமல் அவரைக் கொல்ல வழி தேடிக் கொண்டிருந்தார்கள்.

அவரது பாடுகளுக்கும் சிலுவை மரணத்துக்கும் அவர்கள் தான் காரணமாக இருந்தார்கள்.

அவரது பாடுகளுக்காக அவர் குறித்து வைத்திருந்த நேரம் வரும் வரை அவர் அவர்கள் கையில் அகப்பட்ட வில்லை.

இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நம்மைப் பற்றி கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்.

நாம் இயேசுவின் வழியில் நடக்க முயற்சி செய்யும் கிறிஸ்தவர்கள்.

நமது நாட்டில் ஒரு பிரிவினர் ஏன் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள்?

நாம் கிறிஸ்தவ நெறிகளைப் பின்பற்றும் படி மற்றவர்களுக்கு அறிவுறுத்துவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

உலகின் செயல்கள் தீயவை என்பதை நாம் சுட்டிக் காண்பிப்பது உலகுக்குப் பிடிக்கவில்லை.

"நற்செய்தியை அறிவியுங்கள்" என்பது இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

நற்செய்தியை அறிவிக்க வேண்டியது நமது கடமை.

இக்கட்டளையை நிறைவேற்றியதற்காக ஆயிரக்கணக்கான நம்மவர்கள் வேத சாட்சிகளாக   மரித்திருப்பது நமக்குத் தெரியும்.

மரணம் விண்ணகம் செல்வதற்கான வாசல்.  அதன் வழியாகத்தான் இவ்வுலகில் இருந்து விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

அதைத் திறந்து விடுவோர் நம்மை வெறுப்பவர்களாக இருந்தாலும் நமக்கு மகிழ்ச்சி தான்.

இயேசு தனது மரணத்தின் மூலமாக நம்மை மீட்டார்.

அதற்குத் தாங்கள் அறியாமலே உதவியவர்கள் யார்?

மனுக் குலத்தின் பாவத்துக்குக் காரணமாக இருந்த சாத்தானும், அவனால் ஏவப்பட்டவர்களும் தான்.


அன்று  உலகின் செயல்கள் தீயவை என்பதை இயேசு எடுத்துக்காட்டியதால் அவரை உலகம் வெறுத்தது.

இன்று அதே காரணத்துக்காகத் தான் உலகம் நம்மை வெறுக்கிறது.

ஒரு வகையில் நாம் இயேசுவாக மாறுகிகிறோம்.

அதற்காக நாம் மகிழ வேண்டுமா?
வருந்த வேண்டுமா?

"மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். 

அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்."
(லூக்கா நற்செய்தி 6:22,23)

"உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது. 
(அருளப்பர் நற்செய்தி 15:18,19)

கிறிஸ்தவர்கள் என்பதற்காக யாரும் வெறுத்தால் மகிழ்ச்சியாக இருப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, April 2, 2025

"யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்."(அருளப்பர் நற்செய்தி 5:36)


"யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்."
(அருளப்பர் நற்செய்தி 5:36)

யாராவது நம்மிடம் எதையாவது சொன்னால் அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பது நமது வழக்கம்.

 குளக்கரையில் குணமானவர்  தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதமதத் தலைவர்களுக்கு அறிவித்தபோது

ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள். 


இயேசு அவர்களிடம், "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்" என்றபோது

அவர்கள் அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள். 



இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது; "மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார்" என்று கூறினார்.

 மேலும் இயேசு தான் இறைமகன் என்பதற்கு தனது செயல்களே ஆதாரம் என்கிறார்.

உலகியலில் கூட ஒருவரின் தன்மையை மதிப்பிடுவற்கு அவரது சொற்களை விட செயல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

பெருந்தலைவர் காமராஜருக்கு சில அரசியல்வாதிகளைப் போல் கவர்ச்சிகரமாகப் பேசத் தெரியாது.

கவர்ச்சிகரமாகப் பேசுபவர்கள் ஓட்டுக்காப் பேசுவார்கள்.

பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது.

ஆனால் காமராஜர் சொல்வதைச் சாதிப்பார்.

இயேசு இறைமகன்  என்பதற்கு அவருடைய போதனையும், சாதனையும்தான் ஆதாரம்.

அவரது புதுமைகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை.

தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய புதுமையே அவருடைய சீடர்கள் அவர்மீது கொண்டிருந்த விசுவாசத்தை உறுதிப் படுத்தியது.

சீடர்கள் அவரை இறைமகன், மெசியா என்று விசுவசித்து தான் அவரைப் பின்பற்றினர்.

"நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்."

என்று திருமுழுக்கு அருளப்பர் சொன்னதைக் கேட்ட அந்திரேயா அதை ஏற்றுக் கொண்டு தனது சகோதரர் சீமோனிடம் வந்து 

 "மெசியாவைக் கண்டோம்" என்றார். 
(அருளப்பர்1:41)


நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். 
(அருளப்பர் நற்செய்தி 1:49)

அவர் செய்த புதுமை அவர்களது விசுவாசத்தை உறுதிப் படுத்தியது.

''இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்."
(அருளப்பர் நற்செய்தி 2:11)

இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தது, நோயாளிகளைக் குணமாக்கியது போன்ற புதுமைகளின் நோக்கம் அவர்களுக்கு உதவி செய்வது மட்டுமல்ல,

சம்பந்தப் பட்டவர்களுக்கும், மற்றவர்களுக்கும் விசுவாசத்தை ஊட்டி, விசுவாசத்தின் காரணமாக அவர்கள் மீட்பு பெறுவதும் தான்.

மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்டு அவர்களை விண்ணக வாழ்வுக்கு அழைத்துச் செல்லவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

இறைமகன் மனுவுரு எடுத்தது புதுமைகள் செய்வதற்காக அல்ல.

தன் மீது மக்களுக்கு விசுவாசம் ஏற்படவே புதுமைகள் செய்தார்.

வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்கு கதைகள் சொல்வது பாடத்தைப் புரிய வைக்க.

மாணவர்கள் கதைகளை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு பாடத்தை மறந்து விடக்கூடாது. 

ஒரு முறை நான் மூன்றாவது வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்திய போது,

"கிராம நிர்வாக அதிகாரியின் வேலை மக்களிடமிருந்து நில வரியை வசூலிப்பது.

நிலவரி கொடுக்காதவர்கள் வீட்டிலிருந்து தலையாரி சட்டி பானைகளை அள்ளி தெருவில் போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டபோது 

மாணவர்கள், "பார்த்திருக்கிறோம்." என்றார்கள். 

"மக்கள் நிலவரியை ஒழுங்காகக் கட்ட வேண்டும்.

நிலவரியை வசூலிப்பது தான் கிராம நிர்வாக அதிகாரியின் வேலை."

அந்த ஆண்டு இறுதித் தேர்வில் சமூக அறிவியல் பாடத் தேர்வில் 
ஒரு கேள்வி: 

"கிராம நிர்வாக அதிகாரியின் வேலை என்ன?"

சில மாணவர்கள்,  "வீட்டிலிருந்து  சட்டி பானைகளை அள்ளி தெருவில் போடுவதுதான் கிராம நிர்வாக அதிகாரியின் வேலை." என்று எழுதியிருந்தார்கள்.

எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இந்த மாணவர்களைப் போன்றவர்கள் தான் 

விசுவாச வாழ்வைப் பற்றி கவலைப்படாமல் உதவிகளை கேட்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழும் கிறிஸ்தவர்கள்.

ஞாயிறு திருப்பலிக்குப் போகாமல் கோடி அற்புதர் புனித அந்தோனியாரைத் தேடி செவ்வாய்க் கிழமை மட்டும் திருப்பலிக்குப் போகின்றவர்களும் இப்படிப்பட்டவர்கள் தான்.

பொது வாழ்வின் போது இயேசு செய்த எல்லா புதுமைகளும் மக்கள் தன்னை மீட்பராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். 

பிலாத்துவின் அரண்மனையில் 
"அவரை சிலுவையில் அறையுங்கள்." என்று மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் கத்திய போது 

"அவர் எங்கள் அரசர்.  அவரை விட்டு விடுங்கள்." என்று குரல் கொடுக்க அவரிடம் உதவி பெற்ற யாருமே அங்கே இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

அன்னை மரியாளுக்கும் அவரோடு இருந்த மற்ற பக்தியுள்ள பெண்களுக்கும் மனித குல மீட்புக்காகவே இயேசு பலியாகப் போகிறார் என்ற உண்மை தெரியும். ஆகவே அவர்கள் பலியைத் தந்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கவே அங்கு வந்தார்கள்.

ஆனால் உதவி பெற்ற மற்ற சாதாரண மக்கள்? 

மக்களை விடுங்கள், இயேசுவின் சீடர்கள்? 

இயேசுவைக் கைது செய்த போதே ஓடிப் போய்விட்டார்கள்.

"அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்."
(மத்தேயு நற்செய்தி 26:56)

"இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். 

ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையன்றித் தப்பி ஓடினார். 
(மாற்கு நற்செய்தி 14:51,52)

அவர் நற்செய்தியை எழுதிய மாற்கு என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

 இராயப்பரும் இயேசுவை மூன்று முறை மறுதலித்தார்.

ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இயேசு செய்த புதுமைகள் இறைமகன் என்று சந்தேகமின்றி நிருபிக்கின்றன.

இயேசு புதுமைகள் மட்டும் செய்யவில்லை.

அவர் போதனைகளை எல்லாம் சாதித்துக் காட்டினார்.

ஏழ்மையைப் பற்றி போதித்தவர் அவரே ஏழையாக வாழ்ந்தார்.

பகைவர்களை நேசிக்கச் சொன்னவர் பாவத்தினால் அவரைப் பகைத்த நமக்காகத்தான் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.

தீமைக்கு நன்மை செய்யச் சொன்னவர் தன்னைப் பாடுபடுத்தி சிலுவையில் அறைந்த அனைவரையும் மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

பசித்தவர்களுக்கு உணவளிக்கச் சொன்னவர் அப்பங்களைப் பலுகச் செய்து தனது போதனைகளைக் கேட்டவர்களுக்கு உணவளித்தார்.

ஆக தனது சிந்தனை, சொல், செய ல் ஆகியவற்றின் மூலம் தன்னை இறைமகன் என்பதை நிருபித்தார்.

இயேசுவிடமிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

 நாம் நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் மூலம் இயேசுவின் சீடர்களாக வாழ வேண்டும்.

நாம் கிறிஸ்தவன் என்று சொன்னால் மட்டும் போதாது.

அவரது போதனைகளை நாம் செயல் படுத்த வேண்டும்.

கடவுளை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிப்பதோடு

நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நேசிக்க வேண்டும்.

நமது பிறரன்புச் செயல்கள் மூலம் மற்றவர்கள் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அறிய வேண்டும்.

லூர்து செல்வம்.

Tuesday, April 1, 2025

அன்புக்கு வயது இல்லை.


அன்புக்கு வயது இல்லை.


கடவுளை  அன்பு செய்யவும், அவருக்கு சேவை செய்யவும், அதன் மூலம் அவரோடு நித்திய வாழ்வைப் பெறவும் அவர் நம்மைப் படைத்தார்.


இந்த உலகில் நமது செயல்கள் அனைத்தும்  கடவுளின் மேலான மகிமையையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

 நமது திருமண வாழ்க்கையும் நமது வாழ்க்கை நிகழ்வுகளுள் ஒன்றுதான்.


திருமண அருட்சாதனத்தை நிறுவியவர் கடவுளே.


எனவே திருமணமான தம்பதியினர் கடவுளுக்காக, கடவுளுக்காக மட்டுமே வாழ  வேண்டும்.

ஒருவரையொருவர் திருமணம் செய்வதன் மூலம், கடவுளின் மீட்புத் திட்டத்தில்   பங்கு வகிக்க அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

அவர்களுடைய திருமண வாழ்வுதான் அவர்களது மீட்புக்குக்கான வழி.

திருமணத்திற்கான முதல் நிபந்தனை அன்பு.

கணவன் மனைவிக்கு இடையேயான அன்பு தெய்வீக அன்பைப் பிரதிபலிக்க வேண்டும்.

கடவுளின் அன்பு அளவில்லாதது,  நிபந்தனையற்றது.

திருமண அன்புக்கு எல்லை கிடையாது.

திருமண அன்பிற்குள் நிபந்தனைகள் நுழையக்கூடாது.
No if clause in marital relationship.

'நீ எனக்குக் கீழ்ப்படிந்தால் நான் உன்னை காதலிப்பேன்', 

'நீங்கள் சுறுசுறுப்பாக இருந்தால்தான் நான் உங்களை விரும்புவேன்'

போன்ற நிமந்தனைகளுக்கு அன்பில் இடமில்லை.

கடவுள் நம்மை நிபந்தனையின்றி நேசிக்கிறார்.

அவரை நேசிக்காத பாவிகளையும் அவர் நேசிக்கிறார்.

திருமணமான தம்பதியினர் எப்படி அன்பு செய்ய ஆரம்பிக்கிறார்களோ அப்படியே இறுதிவரை அன்பு செய்ய வேண்டும். 

(The married couple should always be beginners in love.)


''உங்கள் வயது?"

"எண்பது."

"உங்கள் மனைவியை எப்படி அன்பு செய்கிறீர்கள்?"

"திருமணத்தன்று நேசித்தது போலவே இன்றும் நேசிக்கிறேன்.

நாங்கள் அன்பில் எப்போதும் இளைஞர்கள் தான்."

"எத்தனை வயது இளைஞர்கள்?"

"20 வயது. அன்புக்கு வயது கிடையாது."


நாம் சிலுவை அடையாளம் போடும் போதெல்லாம்,

 "ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும், அநாதி சதாகாலமும் இருக்கும்படியே.

ஆமென்.

என்று சொல்கிறோம்.

இதை நாம் கடவுளைப் பற்றி கூறுகிறோம்.

இயேசு, "உங்கள் பரலோகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாக இருங்கள்" என்று கூறியுள்ளார். (மத்தேயு 5:48)

நம்முடைய அன்பு பரிசுத்த திரித்துவத்திற்குள் இருக்கும் அன்பைப் போல இருக்க வேண்டும்.

கத்தோலிக்க அன்பு தனித்தன்மை வாய்ந்தது.


கடவுள் மீதான அன்பும்,
 அயலார் மீதான அன்பும் கிறிஸ்தவ தம்பதியரின் அன்பில் சந்திக்கின்றன.


முந்தையது அவர்களை கடவுளுடன் ஒன்றிணைக்கிறது,

 பிந்தையது அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்கள் உறுப்பினராக இருக்கும் சமூகத்துடன் ஒன்றிணைக்கிறது.


கிறிஸ்தவ அன்பு கடவுளையும் அவருடைய குழந்தைகளையும் அரவணைக்கிறது, 

அவர்கள் நம் அயலார்கள்.


ஒரு கணவர் கூறினார், "கடவுளின் இதயத்தில் இருக்கும் அன்புடன் என் மனைவியை நேசிக்க விரும்புகிறேன். 

அதை  நானாக எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, 

எனவே அதை கடவுளிடமிருந்தே  கற்றுக்கொள்ள  என் வாழ்நாள் முழுவதும் முயன்று  கொண்டிருக்கிறேன்."


தம்பதியினர் தங்கள் அன்பை கடவுளுடைய அன்பாக மாற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்த பிரார்த்தனை அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

அவர்கள் ஒன்றாக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒன்றாக பிரார்த்தனை செய்யும் குடும்பம் ஒன்றாக இருக்கும்.

திருமணமான தம்பதியினர் எது செய்தாலும் கடவுளின் முன்னிலையில் செய்யப்படுகிறது.

அவர்கள் தங்கள் அனைத்து செயல்களிலும் இதை நினைவில் வைத்திருந்தால், அவர்கள் தங்கள் திருமண கடமைகளைச் செய்யும்போது பாவங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள்.

குழந்தை கருத்தரிப்பதை செயற்கையாகத் தடுப்பது பாவம் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

                   **

"மூன்றாவது குழந்தை உண்டாகாமல் இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?"

"ஒன்றுமே செய்ய வேண்டாம்!"
  
                **

கருக்கலைப்பு ஒரு கொலை என்பதால் அதுவும் ஒரு பாவம்.


அவர்கள் என்ன செய்தாலும் திருச்சபையின் கட்டளைகளுக்கு எதிராகச் செய்யக்கூடாது.

அவர்கள் கடவுளுக்காக, கடவுளுக்காக மட்டுமே வாழ வேண்டும்.

லூர்து செல்வம்.