Thursday, April 30, 2020

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. " (அரு. 6:51)

 "நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. " 
(அரு. 6:51)
**  **  **   ** ** **   ** ** ** ** **

பைபிளில் உயிர், வாழ்வு, மரணம் ஆகிய வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு பொருள்கள் உண்டு.

ஒன்று உடலைச் சார்ந்தது. அடுத்தது ஆன்மாவைச்  சார்ந்தது.

"பாலைவனத்தில் உங்கள் முன்னோர் மன்னாவை உண்டனர்: ஆயினும் இறந்தனர்.

50 ஆனால், நான் குறிப்பிடும் உணவை உண்பவன் சாகான். இதற்காகவே இவ்வுணவு வானினின்று இறங்கியது."

(அரு. 6:49, 50)

முதல் வசனத்திலுள்ள 'இறந்தனர்' உடலைச் சார்ந்தது. ஏனெனில் மன்னா உடலுக்கு உணவு.

இரண்டுமே உலகைச் சார்ந்தவை. அழியக்கூடியவை.

அழியக்கூடிய உணவை உண்கின்ற உடலும் அழியக் கூடியதுதான்.

உடல் ஒரு போதும் உயிருள்ள உணவை உண்ணாது.

உயிருள்ள மிருகங்களைக் கொன்றுதான் சாப்பிடும்.

இரண்டாவது வசனத்திலுள்ள
'சாகான்' ஆன்மாவைச் சார்ந்தது.

ஏனெனில் ஆண்டவர் குறிப்பிடும் உணவை, அதாவது, அவரை, உணவாகக் கொள்ளும் ஆன்மா என்றும் சாகாது.

என்றென்றும் வாழும்.

உடலைப் போலல்லாமல், ஆன்மா அழியாது.

அழியாத ஆன்மா என்றும் சாகாதிருக்க,

ஒரு போதும் அழியாத,

என்றும் உயிரோடு இருக்கும் உணவே தேவை.

ஆகவேதான் நமது ஆன்மாவைக் காப்பாற்ற


வானினின்று இறங்கி வந்த இயேசு தன்னையே அதற்கு உணவாகத் தருகிறார்.

அழியக்கூடிய உடல் அழியக் கூடிய, உயிரற்ற உணவை உண்கிறது.

நமது அழியாத ஆன்மா என்றும் உயிருள்ள உணவை,
அதாவது இயேசுவையே உண்கிறது.

இங்கு அழியாது, சாகாது என்ற இரண்டு வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்.

ஆன்மாவிற்கு அழிவு இல்லை.
சாவும், சாகாமையும் அதன் நிலையைப் பொறுத்தது.

பாவத்தின் விளைவு ஆன்மாவின் மரணம்.

பாவம் மன்னிக்கப் படும்போது மரணித்த ஆன்மா உயிர் பெறுகிறது.

பாவத்தினால் ஆன்மா மரணம் அடைந்தாலும் அது அழியாது,

பாவத்தினால் மரணித்த ஆன்மா  அழியாது, நித்தியமும்  நரக நிலையில்    இருக்கும்.

உயிருள்ள ஆன்மா நித்தியமும் இறைவனோடு இணைந்து வாழும்.

ஆன்மாவின் உயிர் தேவ இஸ்டப் பிரசாதம். (Sanctifying grace.)

நாம் ஞானஸ்நானம் பெறும் போது தேவ இஸ்டப் பிரசாதத்தைப் பெற்று ஆன்மா உயிர்பெறுகிறது.

சாவான பாவம் ஏதும் செய்யாமல் நமது ஆன்மாவின் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

காப்பாற்றிக் கொண்டால் மட்டும் போதாது. அது இறை அருளில் வளர வேண்டும்.

வளர வேண்டுமானால் உணவு வேண்டும்.

உயிருள்ள ஆன்மாவின் உணவும் உயிர் உள்ளதாய் இருக்க வேண்டும்.

என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இறைமகன் இயேசுவே அந்த உணவு.

இயேசுவை உணவாக உண்டு அவரது அருளோடு என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவன் என்றுமே சாகமாட்டான்,

அதாவது பாவம் செய்ய மாட்டான்.

பாவமற்ற பரிசுத்தமான நிலையில் உடலை விட்டு பிரியும் ஆன்மா நித்திய காலமும் அருளின் ஊற்றாகிய இறைவனோடு இணைந்து என்றென்றும் வாழும்.

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான்"

இது வாக்கு மாறாத நம் தேவன் நமக்கு அளித்துள்ள வாக்குறுதி.

திருப்பலியின்போது திவ்ய 'நற்கருணை மூலமாக இயேசுவை நமது ஆன்மீக உணவாக உண்கிறோம்.

'உயிருள்ள ஆன்மாதான்,

 அதாவது,

சாவான பாவம் இல்லாத ஆன்மாதான்.

திருவிருந்தை உண்ண வேண்டும்.

உயிருள்ள ஆன்மாதான் இறை அருளில் வளர முடியும்.


உயிரற்ற ஆன்மா,

  அதாவது, சாவான பாவ நிலையிலுள்ள ஆன்மா,

பாவசங்கீர்த்தனம் மூலமாக பாவமன்னிப்பு பெற்று,

அதாவது உயிர் பெற்று,

திரு விருந்தை உண்ண வேண்டும்.

சாவான பாவத்தோடு நற்கருணை உண்பது ஒரு சாவான பாவம்.

குளிக்கப் போய் சேற்றை பூசி வந்த கதையாகிவிடும்.

பரிசுத்த நிலையில்

பரிசுத்தரை  உண்டு

பரிசுத்தரோடு என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, April 29, 2020

கவனம், வில்லனும் நம்மோடு தான் வருகிறான். (தொடர்ச்சி.)

கவனம், வில்லனும் நம்மோடு தான் வருகிறான்.

தொடர்ச்சி.
**  **  **   ** ** **   ** ** ** ** **
 சாத்தானுக்கு  நம்மைப் பின்தொடர்வதைத் தவிர  வேறு வேலையே இல்லை.

எதற்காக நம்மைப் பின்தொடர்கிறான்?

நாம் நடந்து கொண்டிருப்பது விண்ணகப் பாதையில்.

நமது பாதை குறுகலானது.

முன்னோக்கிய பார்வையில் கவனமாக நடக்க வேண்டும்.

நம்மை ஒட்டியே அகலமான பாதை ஒன்று இருக்கும்.

அது சாத்தானுக்கு உரியது.

நமது கவனத்தைச் சிதறடித்து நம்மை  அகலமான பாதைக்குள் விழ வைக்க வேண்டும் என்பதே அவன் நோக்கம்.

அதற்காக நம்மிடம் ஏதாவது பேசிக்கொண்டே நம்மைப் பின் தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறான்.

அவனது பேச்சுக்குச் செவி கொடாமல்

செவியில் விழுந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல்

வழிமேல் விழிவைத்துப் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு வியாபாரி.

எட்டு மணிக்கு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலி.

7.45க்கு வீட்டிலிருந்து கோவிலுக்கு புறப்படுகிறான்.

ஒரு போன் வருகிறது.

"சார் இப்ப வந்தா நீங்க நேற்று கேட்ட வியாபாரத்தை பேசி முடித்துவிடலாம்."

"ஒரு மணி நேரம் கழித்து வரலாமா?"

"அரை மணி நேரம் கழித்து வந்தால் கூட வியாபாரம் கைவிட்டுப் போய்விடும்.

போட்டிக்கு ஆட்கள் நிறைய உள்ளனர்."

"எட்டு மணிக்கு திருப்பலி முடிந்து வரலாமா என்று பார்த்தேன்."

அப்பொழுது  சாத்தான் நல்லவன் போல ஒரு ஆலோசனை கொடுக்கிறது.

 "வியாபாரத்தில் எப்படியும் ஒரு லட்சம் லாபம் கிடைக்கும்.

 அதை வைத்து 10 பேருக்கு உதவி செய்யலாம்.

அயலானை நேசி என்று ஆண்டவர் சொல்கிறார்.

 அயலானுக்கு உதவி செய்ய பணம் வேண்டும்.

திருப்பலிக்கு அடுத்த வாரம் போய்க்கொள்ளலாம்."

 காவல் சம்மனசு சொல்கிறது,

".ஞாயிறு திருப்பலிக்குப் போகாவிட்டால் சாவான பாவம்."


"சாமியார் கோவில் வேலைக்கு நன்கொடை கேட்டார். வியாபாரத்தை முடித்துவிட்டால் கேட்ட நன்கொடையைக் கொடுத்து விடலாம். திருப்பலிக்கு அடுத்த வாரம் போய்க்கொள்ளலாம்."

இப்படித்தான் சாத்தான் நல்லவன் போல பேசி நம்மைத் தன்  வலையில்  விழ வைக்க முயல்வான்.

 கவனமாக இல்லாவிட்டால் சிக்கிக் கொள்ள நேரிடும்.

 கவனமாய் இருப்போம்.
                     
              .        **               
கோவில் திருவிழாவைச் சிறப்பாய்க் கொண்டாட சாமியார் அழைப்பு விடுக்கிறார்.    

அதற்கென பங்கின் முக்கியமானவர்கள் அடங்கிய பணிக்குழு ஒன்றை அமைக்கிறார்.

எப்படி இயேசு பாவிகளைத் தேடி வருகிறாரோ,

அதே போல்தான் சாத்தான் இறைப்பணியாளர்கைைளைத் தேடி வருவான்,

 அவர்கள்மத்தியில்தான் சாத்தானுக்கு வேலை அதிகம்.

சாதாரண மக்களிடையே வீட்டுக்கு ஒரு பேய் இருக்குமாம், சோதிக்க,

சந்நியாசிகள் இல்லத்தில்  ஓட்டுக்கு ஒரு பேய் இருக்குமாம்.


அதே போல் தான் திருவிழா பணிக்குழு மத்தியில் ஆளுக்கொரு பேயுடன் சாத்தானும் பணியைத் துவக்குவான்.

சந்நியாசிகள் மத்தியிலும், கோவில் பணியாளர்கள் மத்தியிலும் அவனுடைய  வேலை வித்தியாசமானது.

எப்படி?

அவர்களை உற்சாகமாகத் தம் பணியைச் செய்யத் தூண்டுவது.

பணி முடியுமட்டும் நல்லவன் போல துணையாய் இருப்பது.

நல்ல முறையில் பணி முடிந்தபின், 

எல்லோரையும் அவர்களைப் பாராட்ட வைத்து,

 தற்பெருமையை ஊட்டி, இறைவன் முன் ஒரு பலனும் இல்லாமல் செய்துவிடுவது!

ஊதிய பலூனை Show காட்டிவிட்டு உடைத்து விடுவது போல.

தற்பெருமையால் (Pride) கெட்டவன் தானே சாத்தான்!

லூசிபெரை சாத்தானாக்கியது தற்பெருமைதான்!

ஒவ்வொரு நாளும் மாலையில்  அன்று நாம் செய்த நற்செயல்களை எண்ணி மகிழ்வோமானால் சாத்தான்  நம்மை விட அதிகம் மகிழ்வான்.

  ஒவ்வொரு நாளும் 
மாலையில்  

அன்று நாம் செய்த பாவங்களை  எண்ணி வருந்தி, அழுவோமானால் 

 சாத்தான்  நம்மை விட அதிகம் அழுவான்.

சாத்தான் நம்மோடு வருவதை நம்மால் தடுக்க முடியாது.

 ஆனால் நம்மால் அவனை
அழ வைக்க முடியும்.

 அழ வைப்போம்.

லூர்து செல்வம்.


Tuesday, April 28, 2020

கவனம், வில்லனும் நம்மோடு தான் வருகிறான்.

கவனம், வில்லனும் நம்மோடு தான் வருகிறான்.
**  **  **   ** ** **   ** ** ** ** **
"தம்பி, கையில என்ன வச்சிருக்கீங்க?"

"அண்ணாச்சி, வாங்க. 
கையில மாம்பழம் இருக்கு."

"எங்கே வாங்கினீங்க?"

"கடையிலதான். நல்லா Taste ஆ இருக்கு."

'"அப்படியா?"

"ஆமா. Taste மட்டுமல்ல. சத்துள்ள உணவுங்கூட்"


"கடையில் வாங்கிய மாம்பழம்!
சத்துள்ள உணவு!


இங்க பார் தம்பி,


மாம்பழம் சத்துள்ள உணவுதான். 

ஆனால் கடையில் வாங்குகிற மாம்பழம்?   

அநேக கடைகளில் மாம்பழங்களை காந்தத்கல் வைத்து பழுக்க வைக்கிறார்கள்.  


காந்தத்கல்லால் பழுத்த மாம்பழங்கள் நமது கல்லீரலுக்குக் (liver) கேடு, தெரியுமா?

மாம்பழங்களைப் பழுக்க வைக்கும் காந்தத்கல் நமது உடல் நலத்திற்கு வில்லன்."

"ஆனால் காந்தத் கல் இல்லாமல் சரியான முறையில் பழுக்க வைக்கும் கடைகளும் உள்ளனவே!"

"நீ வாங்கிய கடை எப்படி?"

: "தெரியாது."

"நல்ல பதில். பேருந்தில் பயணிப்பாய். 'இந்த பேருந்து எங்கே போகிறது' என்று கேட்டால், 'தெரியாது' என்பாய்!"

"அப்படிப் பார்க்கப்போனால் நாம் சாப்பிடும் எல்லா உணவுப் பொருட்களிலும், பூச்சிமருந்து கலந்திருக்கிறதே!

அது மட்டும் உடல் நலத்திற்கு நல்லதா?"


நமது உடல் நலத்திற்காக நாம் சாப்பிடும்  உணவில் 

உடல்  நலத்திற்கு கேடு விளைவிக்கும் நச்சுப் பொருள் நமக்கு தெரியாமல் இருக்கிறது.

அது நமது நலவாழ்விற்கு வில்லன்.

கவனியுங்கள், விஷம் நமது வாழ்வுக்கு வில்லன்.

ஆனால் ஒவ்வொரு வினாடியும் அவன் நம்மோடு தான் வருகிறான்.

சிலருக்கு இது தெரியாது, சிலர் தெரிந்திருந்தும் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.



நமது ஆன்மீக வாழ்விலும்  ஆன்மீகத்திற்குக் கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் வில்லன் ஒருவன் நமக்கு தெரியாமல் எப்போதும் நம்மோடு இருக்கிறான்.

நமது முதல் பெற்றோருக்கு நன்மை செய்வது போல் நடித்து 

அவர்களை ஏமாற்றி பாவ வலையில் விழ வைத்த சாத்தான் தான் நமது ஆன்மீக வாழ்வில் வில்லன்.

அவன்  ஏவாளிடம் 'இறைவனுக்கு எதிராக பாவம் செய்யுங்கள்' என்று கூறவில்லை. 

'ஆனால் இந்த பழத்தைச் சாப்பிட்டால், ". நீங்கள் தெய்வங்கள் போல் ஆகி நன்மையும் தீமையும் அறிவீர்கள்:" என்று சொல்லி. ஏமாற்றியது.

 உண்மையில் இறைவன் ஆதாமையும் ஏவாளையும் தன் சாயலாகத்தான் படைத்தார்."

அவர் தன் சாயலாக நம்மைப் படைத்ததே 

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளில் வளர்ந்து 

அவரைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.


"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)

என்று ஆண்டவர் கூறினார்.

வானகத்தந்தையைப்போல் நிறைவுள்ளவர்களாய் ஆக பழத்தைத் தின்றிருக்க வேண்டியதில்லை.

ஆண்டவர் படைத்த பரிசுத்த நிலையிலேயே நீடித்து வளர்ந்திருந்தாலே போதும்.

ஆனால் சாத்தான் ஏதோ பெரிய காரியத்தைச் சாதிக்க உதவியது போல  ஏமாற்றி பழத்தைத் தின்ன வைத்தது.

நமது முதல் பெற்றோரை ஏமாற்ற பாம்பு ரூபத்தில் வந்த சாத்தான் இப்போது எந்த ரூபத்தில் வேண்டுமானலும் வரலாம்.

ஆனாலும் ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும்.

நமது வில்லன் எந்த அளவிற்குத் தன்னையே திறமை உள்ளவன் என்று எண்ணுகிறானோ 

 அந்த அளவிற்கு அவன் ஒரு முட்டாள்.

நமது கதாநாயகனுக்குத் துரோகம் செய்வதாக நினைத்துக்கொண்டே
அவரது திட்டங்கள் நிறைவேற

 அவருக்கு உதவி செய்து கொண்டிருப்பான்.

ஐயோ பாவம், சாத்தான்!

அவன் நமது முதல் பெற்றோரைப் பாவம் செய்ய வைத்தான்.

ஆனால் அதுவே இறைவன் மனிதனாகி நம்மோடு நம்மாக திவ்ய நற்கருணையில் வாழ  வழி வகுத்து விட்டதே!

மனிதனாய்ப் பிறக்க இறைவன் திட்டம் போட்ட அன்றே சாத்தான் குழந்தையைக் கொன்றுவிட தீர்மானித்து விட்டான்.

ஆனால் இறைமகன் மனிதனாய் பிறந்து விட்டார் என்பதை அறிந்த பின்பும்

 அவர் எங்கே பிறந்தார் என்பது தெரியாமல்

 ஏரோதுக்கு தப்புத் தப்பாய் கணக்குப் போட்டு கொடுத்து இயேசுவைத் தப்பிக்க வைத்து விட்டான், அதை அறியாமலேயே!

நமக்கு மீட்புக் கிடைக்காமல் இருக்க இயேசுவை கொன்றுவிடத் தீர்மானித்த சாத்தான் 

அவரது மரணத்தில்தான் மீட்பு இருக்கிறது என்பதை தெரியாத அளவிற்கு

 முட்டாளாக இருந்தான்!

 அவனது ஏவுதலால் யூதர்கள் இயேசுவை கொன்றதே நமக்கு 
மீட்பாக  மாறிவிட்டது. 

திருச்சபையின் ஆரம்பக் கட்டத்தில்  நீரோ போன்ற மன்னர்களை ஏவி  கிறிஸ்தவர்களைக் கொன்றான்.

ஆனால் அவர்கள் சிந்திய இரத்த உரத்தில் திருச்சபை வேகமாக வளர ஆரம்பித்தது..

பந்தை எந்த அளவிற்கு கீழ் நோக்கி உதைக்கிறோமோ அந்த அளவிற்கு அது மேல் நோக்கி எழும்பும்.

அதேபோல் தான் அவன் எந்த அளவிற்கு திருச்சபையை அழிக்க நினைத்தானோ 

அந்த அளவுக்கு அது வேகமாக வளர்ந்தது!

திருச்சபைக்கு  எதிரான எல்லா செயல்களிலும் சாத்தானின் தூண்டுதல் இருந்தது.

சவுல் என்ற இளைஞனையும் சாத்தான் திருச்சபைக்கு எதிராக தூண்டி விட்டுக் கொண்டிருந்தான்.

யூதர்கள் புனித முடியப்பரைக் கல்லால் எறிந்து கொன்றதில் அவருக்கும் ஒரு பங்கு இருந்தது.

முடியப்பர் சாகும் முன்,

"ஆண்டவரே, இப்பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதீர்!"

என்று வேண்டிக் கொண்டார்.

இவர்களை மன்னியும் என்பதுதான் இதன் பொருள்.

இறை அன்பர்களின் செபம்  நிச்சயமாக கேட்கப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் நினைக்கிறேன்.

புனித முடியப்பரின் மன்னிப்பு வேண்டும் செபத்தை கேட்டு,

 நிச்சயமாக அவரது மரணத்திற்கு காரணமானவர்களின் மனதை               இறைவன் தொட்டிருப்பார்,

 அவர்கள் மனந்திரும்பி மன்னிப்பு கேட்டு இறைவன் பதம் திரும்பி இருப்பார்கள்

 என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

 நமக்கு தெரியும் இறைவன் சவுலைப் பவுலாக மாற்றிய வரலாறு.

செபத்தின் வல்லமைக்கு இது ஒரு உதாரணம் என்று எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

வேத சாட்சியின் இரத்தம் திருச்சபையின் வித்து.

 புனித முடியப்பர் சிந்திய ரத்தத்தில் முளைத்த வித்து தான் புனித சின்னப்பர் என்று 
நினைப்பதில் என்ன தவறு?

புனித முடியப்பரைக் கல்லால் எறிந்து கொன்று அவர் வேதசாட்சியாக மாற துணையாய் இருந்த சவுல்

முடியப்பரின் செப வல்லமையால் இயேசுவால் மனம் திருப்பப்பட்டு

பவுலாக மாறியது மட்டுமல்ல வேதசாட்சியாகவும் மாறினாரே,
இது ஒன்றே போதும்

வேத சாட்சியின் இரத்தம் திருச்சபையின் வித்து என்பதை நிரூபிப்பதற்கு!

சாத்தான் எவ்வளவு கில்லாடியாக இருந்தாலும்

 நமது செபத்தின் முன் அவன் ஒரு கொசு.

திருச்சபையின் வரலாறு முழுவதிலும் அதை அழிக்க சாத்தான் செய்யும் முயற்சிகளைக் காணலாம்.

அதோடு அவைகளை எல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையையும் காணலாம்.

12 பேரில் ஒரு யூதாஸ் இருந்ததுபோல 

திருச்சபை வரலாற்றிலும் சாத்தானின் தூண்டுதலால்  பல யூதாஸ்கள் திருச்சபையின் போதனைக்கு விரோதமாக பல பேதகங்களை (heresies) கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

வகுப்பில் பாடத்தில் ஒரு மாணவன் செய்யும் தப்பு மற்ற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்,

 எப்படி?

 தவற்றை தவறு என்று எடுத்துக்காட்ட ஆசிரியர் வகுப்பு முழுமைக்கும் சரியான விளக்கத்தை கொடுப்பார்.

ஒருவன் செய்த தப்பு எல்லோருக்கும் விளக்கம் கிடைக்க உதவியாக இருக்கும்.

 அதேபோல்தான் திருச்சபையில் heresies கிளம்பும்போது 

 அவற்றைத் தவறு என்று எடுத்துக் காட்ட 

திருச்சபை திருச்சங்கங்களை கூட்டி

 அனைவருக்கும் வேத சத்தியங்களின் விளக்கத்தை அழுத்தமாக கூறியது.

உதாரணத்திற்கு,

ஆரிய பேதகத்தின்போது,

 திருச்சபை நிசேயாவில் கூடிய திருச்சங்கத்தில்

 பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய போதனையை நன்கு விளக்கியது.


In 325 the Council of Nicaea was convened to settle the controversy. The council condemned Arius as a heretic and issued a creed to safeguard “orthodox” Christian belief. The creed states that the Son is homoousion tō Patri (“of one substance with the Father”), thus declaring him to be all that the Father is: he is completely divine.

நைசீன் விசுவாசப் பிரமாணம் நமக்குக் கிடைத்ததே சாத்தானின் சேட்டையால் தானே!

அவன் பேதகத்தைக் கிளப்பியிருக்காவிட்டால் 

பொதுச்சங்கம் கூடியிருக்குமா?

'திருச்சங்கத்தைப் பார்த்து சாத்தான் அழுது கொண்டிருந்திருப்பான்!

அதே சாத்தான் இன்றும் நம்மிடையே உலவிக் கொண்டு இருக்கிறான்.

சில சமயங்களில் சம்மனசு போல் நடித்து நம்மை ஏமாற்றுவான்.

ஒரு சிறிய உதாரணம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Monday, April 27, 2020

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்: முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்."(அரு. 6:27)

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்: முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்."
(அரு. 6:27)
**  **  **   .** ** **   ** ** ** ** **

"ஆகவே, அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டுபோய், அரசனாக்க விரும்புகின்றனர் என்பதை அறிந்து, இயேசு அவர்களை விட்டு விலகித் தனியாக மீண்டும் மலைக்குச் சென்றார்." (அரு. 6:15)

இயேசு கலிலேயாக் கடலின் அக்கரைக்குச்  சென்ற போது 

அவரைத் தேடி வந்த மக்களுக்கு கடவுளின் அரசைப்பற்றி  போதித்தார்.

போதித்தபின் அவரைத் தேடி வந்த அனைவருக்கும் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு வயிறார உணவளித்தார்.

உண்டபின் மக்கள் அவரைத் தங்கள்  அரசனாக்க விரும்பினர்.


இதை அறிந்த இயேசு 
 அவர்களை விட்டு விலகித் தனியாக மீண்டும் மலைக்குச் சென்றார்.

இயேசு போதித்தது கடவுளின் அரசைப்பற்றி.

ஆனால் மக்கள் அவரை இவ்வுலக சம்பந்தப்பட்ட அரசர் ஆக்க விரும்பினர்.

அவரைத் தங்கள் அரசராக்கி விட்டால் எப்போதும் தங்களுக்கு வயிறார உணவு கிடைக்கும் என்று எண்ணி இருக்கலாம்.

இயேசு கடவுளாகையால் அவரால் படைக்கப்பட்ட இவ்வுலகிற்கு அவர் தான் அரசர்.

ஆனால் உலக சம்பந்தப்பட்ட அரசர் அல்ல.

"என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று." (அரு. 18:36)
இது பிலாத்துவின் கேள்விக்கு இயேசுவின் பதில்.

அவர் நமது ஆன்மீக அரசர்.
He is our spiritual King.

கடலின் இக்கரைக்கு வந்தபின் மக்கள் அவரைப் பார்த்து, 

"ராபி, எப்பொழுது இங்கு வந்தீர் ?" என்று கேட்டனர்.

ஆனால் இயேசு அக்கேள்விக்குப் பதில் அளிக்காமல்,

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

நீங்கள் என்னைத் தேடுவது அருங்குறிகளைக் கண்டதாலன்று, 

அப்பங்களை வயிறார உண்டதால்தான்."

ஆக மக்கள் இயேசுவை தேடியது இவ்வுலக உணவிற்காகத்தான்.

 ஆனால் இயேசுவோ  அப்பத்தையும் மீன்களையும் கொண்டு அவர்களுக்கு உணவளித்தது அவர்கள் மேல் கொண்ட இரக்கத்தினால்தான். 

அந்த இரக்கம் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது.

 ஆனால் மக்கள் இந்த உலக சம்பந்தப்பட்ட உணவை விரும்பி 

அவரைத் தங்கள் அரசர்  ஆக்க விரும்பினார்கள்.

 ஆகவே தான் இயேசு சொன்னார்,

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:

 முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள். 

அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்:

 ஏனெனில், அவருக்கே தந்தையாகிய கடவுள் தம் அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்"


உணவிற்காக இயேசுவைத் தேடிய யூதர்களின் அதே நிலைதான் இன்று நமது நிலையும்.

நாம் எதற்காக இயேசுவைத் தேடுகிறோம்?

 எதற்காக தினமும் செபிக்கிறோம்?

 எதற்காக இறைவனை நம்புகிறோம்?

முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக என்ற பதில் வந்தால் நலமாக இருக்கும்.

சிலர் கேட்கலாம்,

 "ஏன் இயேசு அன்றன்றுள்ள உணவை எங்களுக்கு இன்று தாரும் என்று செபிக்கச் சொன்னார்?

இயேசு,

" உமது இராச்சியம் வருக"

 என்று செபித்த பிறகே உணவிற்காக செபிக்கச் சொன்னார்.

"கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:33)

இது இயேசு நமக்கு அளித்திருக்கும் வாக்குறுதி,

அவர் வாக்கு மாறாக தேவன்.

நமது வாழ்நாளில் நாம் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நமது ஆன்மீகக் கடமைகளுக்கே.

 செபம், தவம், நற்செயல்கள்,

பாவசங்கீர்த்தனம், திருப்பலி, திருவிருந்து உள்ளடக்கிய தேவ திரவிய அனுமானங்கள் 

ஆகியவற்றில் நாம் காட்டும் ஈடுபாடுதான் நமது ஆன்மீக வளர்ச்சியைக் காட்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், முதலில் அந்த நாளை இயேசுவுக்கு ஒப்புக் கொடுப்போம்.

அதாவது இறைவனின் இராட்சியத்தைத் முதலில் தேடுவோம்.

இறைவனின் இராட்சியத்திற்குள் நுழைந்த பின்  

நாம் என்ன செய்தாலும் இயேசுவுக்காக செய்வோம். 

நாம்  குளிப்பது, உண்பது, உடுத்துவது, பணிக்குச் செல்வது, பணிபுரிவது etc etc. எல்லாம் இயேசுவைக்காகவே.

நமது ஒவ்வொரு வேலையையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே துவக்குவோம்.

திரி ஏக தேவனின் மகிமைக்காகவே நமது வேலையை செய்வோம்.

"இயேசுவே, எனக்கெல்லாம் இயேசுவே."


ஹோட்டலுக்குச்  சென்று இட்டிலி கேட்டால் சட்னியும் சாம்பாரும் freeயாகத் தானே வரும்.

இறைவனின் இராட்சியத்தைத் தேடினால் இவ்வுலக சம்பந்தப்பட்ட சவுகரியங்கள் தானே வரும்.

இட்லி கேளாமல் சட்னியும் சாம்பாரும் மட்டும் இலவசமாக கேட்பது எப்படியோ


 அப்படித்தான்,
 இறை அரசை தேடாமல் இவ்வுலக வசதிகளை மட்டும் கேட்பது.

இன்றைய நிலையை எடுத்துக்கொள்வோம்.

கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத வைரஸ் உலக மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் தலைகீழாக புறட்டிப்போட்டு விட்டது

மக்கள்  எங்கே தங்கள் உயிர் போய்விடுமோ என்று பயந்து பயந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போ ஒரு கேள்வி.

வைரசுக்கு 

பணக்காரன், ஏழை,

 முதலாளி, தொழிலாளி,

 அறிவாளி, முட்டாள்,

 ஆள்கிறவன், ஆளப்படுகிறவன்

என்றெல்லாம் தெரியாது.

யாரை வேண்டுமானாலும் தொற்றும்.

ஆகவே வைரசால் தங்கள் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அனைவரும் பயப்படுகிறார்கள்.

அப்படி ஏதாவது ஆபத்து வந்தால் நமது ஆன்மாவின்  நிலை என்ன என்று எத்தனை பேர் எண்ணிப் பார்க்கிறார்கள்?

"முதலில் நமது ஆன்மாவை நித்திய வாழ்வுக்குத் தயார் செய்வோம்,

அப்புறம் கொரேனாவைக் கவனிப்போம்"

என்று எத்தனை பேர் எண்ணிப் பார்க்கிறார்கள்?

 கணக்கெடுப்பு தேவை இல்லை.

அவரவர் நிலையை அவரவர் எண்ணிப் பார்த்தாலே போதும்.

அவரவர் சுய பரிசோதனை செய்ய அவரவருக்கு ஆண்டவர் சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார் என்று எண்ணுவோம்.

கொரோனாவிற்கு முந்திய காலத்தில் 

நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம் என்று 
 சிறிது எண்ணிப் பார்ப்போம்.

நாம் நமது குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது

 நமது குழந்தை சென்மப் பாவத்திலிருந்து விடுபட்டு

 இறைவனது பிள்ளையாகி விட்டது என்பதற்காக  மகிழ்ந்தோமா? 

அல்லது ஞானஸ்நான விழா சிறப்பாக நடந்தது என்பதற்காக மகிழ்ந்தோமா?

நாம் புதுநன்மை வாங்கியபோது 

இறை  இயேசு உண்மையாகவே  நமது நாவில் இறங்கி, நம்மோடு உறவாட வந்தார் என்பதை எண்ணி மகிழ்ந்தோமா?

அல்லது

நமது புதிய டிரஸ், பரிசுப் பொருட்கள், பிரியாணி விருந்து ஆகியவற்றை எண்ணி மகிழ்ந்தோமா?

நாம் திருமணம் முடித்த அன்று இறைவனின் படைப்புத் தொழிலில் உதவப்  போகிறோம் என்று எண்ணி மகிழ்ந்தோமா?
(நாம் உண்டாக்கும் உடலுக்குத்தானே இறைவன் ஆன்மாவைப் படைப்பார்!)

அல்லது உடல் இச்சையை பூர்த்தி செய்ய போகிறோம் என்பதை எண்ணி மகிழ்ந்தோமா?

நமக்கு பிள்ளைகள் பிறந்தபோது  இறை  பராமரிப்பில் அவருக்கு உதவ வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதற்காக மகிழ்ந்தோமா?

அல்லது நமது குழந்தை  ஆசை நிறைவேறிவிட்டது என்பதற்காக மகிழ்ந்தோமா?

முந்தியதற்காக மகிழ்ந்தால் நாம் பிள்ளைகளை நல்ல கிறிஸ்தவ பண்பாட்டில் வளர்த்தெடுப்போம்.

பிந்தியதற்காக மகிழ்ந்தால் பிள்ளைகளை அவர்களுடைய படிப்பையும் வேலையையும் வருமானத்தையும் மையமாகக்கொண்டே 
வளர்த்தெடுப்போம்.

நமது தொழிலில் நமக்கு நல்ல வருமானம் வந்தபோது ஏழைகளுக்கு உதவுவதற்காக இறைவன் தந்திருக்கிறார் என்று  எண்ணி மகிழ்ந்தோமா?

அல்லது

வாழ்க்கை  வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகக் கிடைத்தது என்று  எண்ணி மகிழ்ந்தோமா?

இப்படி நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் முக்கியமுக்கியத்துவம் கொடுத்தது ஆன்மீகத்துக்கா? லௌகீகத்துக்கா? என்று நினைத்துப் பார்த்தோம் என்றால்,


நாம் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்கிறோமா,

 அல்லது    முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழைக்கிறோமா என்பதை நாமே அறிந்து கொள்ளலாம்.


ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு போகாமல் Tution Class க்குப் போகிற மாணவன் எதற்காக உழைக்கிறான்?

ருசியாக இருக்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி உண்பவன் எதற்காக உழைக்கிறான்?

புனித அகுஸ்தீனார் கூறுகிறார்.

"Love and do as you like."

"அன்பு செய்து கொண்டு இஸ்டப்படி நட."

இறைவனை அன்பு செய், அதற்குப் பங்கமில்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 

அழிந்து போகும் இவ்வுலகில் நாம் செய்யும் பயணம்

 அழியாத உலகை நோக்கி இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

Friday, April 24, 2020

Who is our Hero ?

Who is our  Hero?
**  **  **   ** ** **   ** ** ** ** **

நாம் எழுதும் சிறுகதை, தொடர்கதை, சினிமாக் கதை 

எதுவாக இருந்தாலும் அதன் மையமாக கதாநாயகன் (Hero) ஒருவன் இருப்பான்.

கதாநாயகன் (Hero) இல்லாமல் கதை எழுத முடியாது.

கதையின் நிகழ்ச்சிகள் எல்லாம் ஹீரோவை சுற்றியே சுழன்று கொண்டிருக்கும்.

காதல்  கதைகளில் கதாநாயகி
( heroine)   ஒருவள் இருப்பாள்.

பெரும்பாலான கதைகளில் வில்லன் ஒருவன் இருப்பான்.

கதாநாயகியின் ஒரே குறிக்கோள் கதாநாயகனை அடைவதாக இருக்கும்.

 வில்லனின் ஒரே குறிக்கோள் அதைத் தடுப்பதாக இருக்கும்.

 பாத்திரங்களில் அநேகர் கதாநாயகன் பக்கமும்,

 சிலர் வில்லன் பக்கமும் இருப்பார்கள்.

 ஒவ்வொரு கதையிலும் கதாநாயகனும் கதாநாயகியும் வெல்வார்கள்.

 வில்லன் தோல்வி அடைவான்.

நமது வாழ்க்கையை ஒரு கதையாக உருவகித்து கொள்வோம்.

நமது வாழ்க்கை என்னும்  கதையின் கதாநாயகன் யார்?

கதாநாயகி யார்?

வில்லன் யார்?

நம்மை படைத்த இறைவன் தான் நமது வாழ்க்கையின் கதாநாயகன், ஹீரோ.

நமது ஆன்மாதான் கதாநாயகி.

வில்லன் சாத்தான்.

நமது ஆன்மாவின் ஒரே குறிக்கோள் தன்னைப் படைத்த இறைவனை அடைவதுதான்.

சாத்தானின் ஒரே குறிக்கோள் ஆன்மாவை இறைவனை அடைய விடாமல் தடுத்து தன் பக்கம் ஈர்ப்பது தான்.

நமது ஹீரோ, அதாவது, இறைவன் சாத்தானைத் தோற்கடித்து  நம்மை தன்பால் ஈர்த்துக் கொள்வார்.

நாம் நம்மைப் படைத்த இறைவனோடு ஒன்றித்து

 நித்திய காலமாக பேரின்பத்தில் வாழ்வோம்.

 பேரின்ப வாழ்விற்கு முடிவு இராது.

 அங்கே சாத்தான் புக முடியாது.


இதுவரை நமது வாழ்க்கையை ஒரு கதையாக உருவகித்து எழுதியிருக்கிறோம்.

இப்போது நிஜ வாழ்க்கைக்கு வருவோம்.

நாம் நமது உண்மை வாழ்க்கையில் இறைவனைக் கதா நாயகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?

அல்லது இந்த உலகத்தைக் கதா நாயகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?


இறைவனைக் கதா நாயகனாக ஏற்றுக் கொண்டிருந்தால் நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் இறைவனை மட்டும்தான் மையமாகக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வினாடியும் இறைவனைப் பற்றி மட்டும்தான் சிந்திப்போம்.

காலையில் எழும்போது இறைவன் ஞாபகம்தான் முதலில் வரும்.

"தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்"தான் நாளை ஆரம்பிப்போம்.

இரவில் நம்மைக் காப்பாற்றியமைக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.


அன்றைய நாளின் நமது எல்லா செயல்பாடுகளையும் இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்.

நமது பாவங்களால் அவரது மனத்தை நோகச் செய்தமைக்காக மன்னிப்புக் கேட்போம்.

அன்றைய நாளில் பாவம் எதுவும் செய்யாமல் இருக்கவும், இறைவனுக்குப் பிரியமான காரியங்களை மட்டும் செய்யவும் உறுதி எடுப்பதோடு, 

அதற்காகத் தன் அருள் வரங்களால் நமக்கு உதவிட வேண்டுவோம்.

அன்றைய நாளில் நாம் எதைப் பேசினாலும் நமது பேச்சு இறைவனை மட்டும்தான் மையமாகக் கொண்டிருக்கும்.

சாப்பாட்டைப் பற்றி பேசினாலும் சரி,

வகுப்பில் பாடம் பற்றி பேசினாலும் சரி,

வியாபாரம் பற்றி 
பேசினாலும் சரி,

வைத்தியம் பற்றி பேசினாலும் சரி,

கொரோனா பற்றி பேசினாலும் சரி

இறைவனை மறக்காமல் பேசுவோம்.

முடிந்தபோதெல்லாம் இறைவனைப் பற்றியும் பேசுவோம்.

நாம் எதைச் செய்தாலும் இறைவனுக்காக மட்டும்தான்
செய்வோம்.

நமது அந்தஸ்தின் பணியான எந்த வேலையைச் செய்தாலும் அதை இறைவனுக்காக மட்டுமே செய்வோம்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்தாலும் இறைவனுக்காக மட்டுமே செய்வோம்.

எதைச் செய்தாலும் இறைவனுக்காக மட்டுமே செய்தால் பாவம் செய்ய வாய்ப்பே இல்லை.

பைபிள் இறைவன் நமக்கு எழுதிய Love letter.

Love letter என்றாலே அன்பைச் சுமந்துவரும் லெட்டர் என்பதுதான் பொருள்.

இறைவன் நம் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காக இறைவன் எழுதிய கடிதமே பைபிள்.

அதில் அவர் நம்மைப் படைத்தது பற்றியும், 

நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருவது பற்றியும்,

நம் மீது அவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காக

 மனிதனாகப் பிறந்து, 

நம்மோடு வாழ்ந்து,
 
நமக்காகப் பாடுபட்டு 

நாம் பிழைக்க வேண்டும் என்பதற்காகத்

 தன் உயிரையே சிலுவையில் பலியாக கொடுத்ததை

அன்பு சொட்ட சொட்ட எழுதியிருக்கிறார். 

அன்பரோடு சம்பந்தப்படாத  வர்களுக்கு லவ் லெட்டர் ஒரு பொழுதுபோக்குக் கடிதம்.


மற்றவர்களுக்கு வந்த கடிதத்தை நாம் வாசிக்க நேர்ந்தால் 

அது வெறும் பொழுதுபோக்கு தானே.

ஆனால் நமது அன்பரிடம் இருந்து நமக்கு வருவது,

 அன்பைத் தாங்கிவரும் கடிதம்,

 அன்பை ஊட்ட வரும் கடிதம்,

அவர் பால் நம்மை ஈர்க்க வரும் கடிதம்,

 நம்மை மகிழ வைக்க வரும் கடிதம்.

அது நமக்கு உயிர் மூச்சு.

 வாசிக்க வாசிக்க

 நம் உள்ளத்திலும் அன்பு ஊறும்.

 அன்பரைக் காண இதயம் துடிக்கும்.

 அவரைத் தவிர வேறு எதுவும் பொருட்டாக தெரியாது.

அவரே நமக்கு எல்லாம்.

 பைபிள் வாசிக்கும்போது இறைவனைப்பற்றி நம்மிடம் இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்ற வேண்டும்.

பைபிளைப் பொழுது போக்கிற்காக,

அல்லது.

கட்டாயம் வாசிக்க வேண்டும் என்பதற்என்பதற்காக வாசிப்பவர்கள் இறையன்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

இறைவனை Hero வாக மனதார ஏற்றுக் கொண்டவர்கள் பைபிளைப் பக்திப் பரவசத்தோடு வாசிப்பர்.

ஏனெனில் அவர்களுடன் இறைவன் பேசுகிறார்.

அவர்களும் இறைவனோடு பேசுவர்.

இறைவனை நமது ஹீரோவாக ஏற்றுக்கொண்டால் 

அவரது பண்புகள் அனைத்தும் நம்மிடம் பிரதிபலிக்கும்.

நமது வாழ்க்கையே அவரை அடையும் முயற்சியாகத்தான் இருக்கும்.

அம்முயற்சியில் நமக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை மனமுவந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

அவருக்கு பிடிக்காதவற்றை உதறித் தள்ளுவோம்.

அவரை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக நம்மையே தியாகம் செய்வோம்.

அவர் தரும் சன்மானத்திற்காக அல்ல,

அவரை அவருக்காகவே அன்பு செய்வோம்.

அதுவே சுயநலம் அற்ற அன்பு.
Selfless love.

அதுவே நிபந்தனை அற்ற அன்பு.
unconditional love.

நாம் அவர் தரும் சன்மானம் கருதாமல் அன்பு செய்தாலும்,

அவர் நமக்கு பேரின்ப நிலை வாழ்வைத் தருவது உறுதி. 


இந்த உலகத்தைக் கதா நாயகனாக ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களுக்கு வில்லனாகிய சாத்தான் துணையிருப்பான்.

இறைவனுக்காக வாழ்பவன் 
இறைவனுக்காக கஷ்டப்படும் போது

உலகிற்காக வாழ்பவன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

ஆனால் அம்மகிழ்ச்சி நிலையற்றது.

அவனுக்கு நிலை வாழ்வு கிட்டாது.

இறைவனே நமது Hero.

அவருக்காக வாழ்வோம், இவ்வுலகில்.

அவரோடு வாழ்வோம், மறுவுலகில்.

லூர்து செல்வம்.

Thursday, April 23, 2020

"ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள்." . (லூக்.16:9)

"ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள்."
(லூக்.16:9)
**  **  **   ** ** **   ** ** ** ** **

மனிதன் இரண்டு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.

நமது ஆன்மா இறைவனது சாயலாகப் படைக்கப் பட்டிருப்பதால் அது இறைவனுக்கு ஊழியம் செய்ய விரும்புவது இயல்பு.

நமது உடல் மண்ணிலிருந்து உருவாக்கப் பட்டிருப்பதால் அது இவ்வுலக பொருட்களை நோக்கி ஈர்க்கப்படுவது இயல்பு.

ஆன்மாவும் உடலும் சேர்ந்ததுதான் மனிதன்.

ஊன் இயல்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்  இறை இயல்பை மறந்து விடுவார்கள்.

 இறை இயல்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் 

ஊன் இயல்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள். 

இறைவன் மட்டுமே நமது  தலைவர்.

நாம் அவருக்கு மட்டுமே ஊழியம் செய்ய வேண்டும்.

உலக பொருள்கள் நமக்கு ஊழியம் செய்ய வேண்டும்,

 அதற்காக தான் அவற்றை படைத்திருக்கிறார் இறைவன்.

"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக,

 மனுவைப் படைத்தான் தனை வணங்க."

 இது தமிழ்ப் பழமொழி.


 இறைவன் நமது முதல் பெற்றோரை நோக்கி இவ்வுலகப் பொருட்களை

"கீழ்ப்படுத்துங்கள்:"
  "subdue it,"

 "ஆண்டு கொள்ளுங்கள்"
"have dominion over"
( ஆதி. 1:28 

என்றுதான் சொன்னார்.

உலகப் பொருள்களை நாம் ஆள வேண்டுமே தவிர

 அவை நம்மை ஆண்டு விடக் கூடாது.

பணம், நல்லதா? கெட்டதா?

தன்னிலே பணம் நல்லதுதான்.

ஏனெனில் இறைவன் படைத்த எல்லா பொருட்களும் நல்லவைதான்.

பண்டப் பரிமாற்றத்தில் பண்டத்திற்குப் பதில் பணத்தைப் பரிமாறுகிறோம்.

நெல் இறைவனின் படைப்பு. அதை வாங்க பணம் கொடுக்கிறோம். 

நெல் நல்லதானால் அதற்குப் பதிலாகக் கொடுக்கும் பணமும் நல்லதுதான்.

மனிதன் நல்ல நோக்கத்தோடு தன் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தும் எதுவும் நல்லதுதான்.

ஆனால் மனிதனின் நோக்கம் 
தவறாக இருந்தால் 

அதற்காக பயன்படுத்தப்படும் பணம், அல்லது பொருள்,

 மனிதனின் கெட்ட பெயரை அது தாங்கிக் கொள்கிறது.

செல்போன் நல்லதா? கெட்டதா?

செல்போனை நல்ல நோக்கத்தோடு பயன்படுத்தினால் செல்போன் பயன் உள்ளது என்போம்.

அதையே தவறான நோக்கத்தோடு பயன்படுத்தினால் செல்போன் மோசமானது  என்போம்.

தேவைக்கு  உண்போமானால் உணவு அது வயிற்றுக்கு நல்லது.

தேவைக்கு அதிகமாக உண்போமானால் அது வயிற்றுக்கு வலியைக் கொடுக்கும்.

உன்னைப்போல் உன் அயலானையும் நேசி என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.

நேசம் செயலாக மாற வேண்டும்.

அப்படியானல் நம்மை நேசிக்கும் நாம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்வது போல


 நம்மால் நேசிக்கப்படும் அயலானின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

நமது தேவைகளுக்குப் போக மீதி பணம் இருந்தும் அதை அயலானின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தாவிட்டால் நாம் இறைவனின் கட்டளையை மீறுகிறோம்.

நாம் நீதிக்குப் புறம்பாக கட்டளையை மீறுவதால் நாம் அநீதர்கள்.

அநீதர்கள் கையிலுள்ள செல்வம் அநீத செல்வம்.

நமது தேவைக்கு அதிகமாக உள்ள அநீத செல்வத்தை நல்ல செல்வமாக மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றிவிட்டால் நாம் நீதி உள்ளவர்களாக மாறி விடுவோம்.

"அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள்" என்று இயேசு கூறுகிறார்.

அதாவது நமது தேவைக்கு அதிகமாக உள்ள  செல்வத்தை 

ஆண்டவரின் கட்டளைப்படி தேவைகள் உள்ள அயலானுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்கள் ஆகிறோம்.

தேவைப்படுகின்றவர்கள் அருகில் இல்லாவிட்டால் நம்மிடம் இருக்கும் அச்செல்வத்தை எதிர்காலத்தில் அதே நோக்கத்திற்காகப் பயன் படுத்த வேண்டும்.

இப்போது ஒரு வினா எழலாம்.

நமது இன்றைய தேவைக்குப் போக மீதியை

 நமது, மற்றும்  நமது சந்ததியாரின் எதிர்கால தேவைக்குச் சேமித்து வைப்பது தவறா?

இவ்வுலக விழுமியப்படி (value) இதில் தவறு இல்லை. நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்தவ விழுமியம் (Christian value) வித்தியாசமானது.

கிறிஸ்து விரும்பும் நிறைவை நோக்கிப் பயணிப்போர் கிறிஸ்தவ விழுமியத்தைப் பின்பற்றுவர்.

இயேசு 

"எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்."

"Give us this day our daily bread."

அன்றுதான் செபிக்கக் கற்றுக் கொடுத்தார்.

"எதிர்காலத்துக்கும் சேர்த்துத் தாரும்" என்று கேட்கச் சொல்ல வில்லை.

"நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். நாளைய தினம் தன்னைப்பற்றிக் கவலைகொள்ளும். அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்."
(மத். 6:34)

இதுதான் கிறிஸ்துவின் போதனை.

கிறிஸ்தவ விழுமியப்படி நடப்பவர்கள் அதனால் உலகில் ஏற்படும் கஷ்டங்களை நம் ஆண்டவருக்காக தாங்கிக் கொள்ள வேண்டும்.

 கிறிஸ்தவ விழுமியப்படி நாம் நடக்கிறோமா என்பது நமது ஆன்மப் பரிசோதனைக்கு உரிய விசயம்.

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் நமக்குத் தந்திருப்பது நமக்கும், நம் அயலானுக்கும் சேர்த்துதான்.

லூர்து செல்வம்.

Wednesday, April 22, 2020

"விசுவாசிகள் அத்தனை பேரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்:"(அப்.4:32)

"விசுவாசிகள் அத்தனை பேரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்:"
(அப்.4:32)
**  **  **   ** ** **   ** ** ** ** **
விசுவாசிகள்

அத்தனை பேரும்

ஒரே உள்ளமும்

ஒரே உயிருமாய்

மனித வாழ்வு மூன்றே வார்த்தைகளில்:

ஒன்றிப்பு,

ஒன்றிப்பு,

ஒன்றிப்பு.

ஒன்றிப்பால் உருவானோம்.

ஒன்றித்து வாழ்கிறோம்.

ஒன்றித்து   வாழ்வோம்.

இறைவன்

 களிமண்ணிலிருந்து  உடலை உருவாக்கி,

ஆன்மாவைப் படைத்து,
'
 அதை உடலோடு ஒன்றித்து மனிதனைப் படைத்தார்.

மனிதனைப் படைத்தபின் மனுசியையும் படைத்து அவளை அவனோடு ஒன்றித்து குடும்பத்தை உருவாக்கினார்.

அதேபோல்தான் நாமும் நமது தாய் வயிற்றில் உடலும் ஆன்மாவும் ஒன்றித்து பிறந்தோம். 

பிறந்த  பின்பும் ஒன்றிப்பின் காரணமாகவே வாழ்கிறோம்.

உடலோடு உணவு ஒன்றிப்பதால் உடல் வளர்கிறது.

இறைவனோடு ஒன்றிப்பதால் ஆன்மா வளர்கிறது.

உடல் வளர்ச்சியும் ஆன்மீக வளர்ச்சியும் இணைந்து வளரும்போது மனிதம் வளர்கிறது.

இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் ஆன்மா இறைவனோடு நித்தியத்திற்கும் ஒன்றித்து வாழ்கிறது.

ஒன்றிப்பு இல்லையேல் வாழ்வு இல்லை.

இப்போது நாம் தியானிக்கத் தெரிவு செய்த இறை வசனத்தை எடுத்துக் கொள்வோம்.


"விசுவாசிகள் அத்தனை பேரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்:"

துவக்க கால திருச்சபையில் விசுவாசிகள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை இந்த சிறு வசனம் சுருக்கமாக விபரிக்கிறது.


இறைமகன் இயேசுவை

 வாழ்வாகவும், 

வாழ்வின் வழியாகவும்,

 ஒளியாகவும், உயிராகவும்

 உளமாற ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்பவர்கள் விசுவாசிகள்.

அவர்கள் ஏறக்குறைய இயேசுவின் சம காலத்தில் வாழ்ந்தவர்கள்.

அவர்களை வழிநடத்தியவர்கள் இயேசுவோடு வாழ்ந்தவர்கள்.

கிறிஸ்தவ விசுவாசிகள் எப்படி வாழவேண்டுமென்று இயேசு விரும்பினாரோ

 அப்படியே ஆதித் திருச்சபையினர் வாழ்ந்தார்கள்.

"தந்தாய்,...

என்னில் விசுவாசம் கொள்பவர்க்காகவும் மன்றாடுகிறேன்.

21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக. 

தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்: 

நீர் என்னை அனுப்பினீர் என்று இதனால் உலகம் விசுவசிக்கும்.


நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்.

23 இவ்வாறு நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால், அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக:"
(அரு. 17:20:23)

பரிசுத்த தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒரே கடவுளாய் இருப்பதுபோல,

விசுவாசிகள் அனைவரும் கிறிஸ்துவின் ஒரே ஞான சரீரமாக  வாழ்ந்தார்கள்.


அனைத்து  விசுவாசிகளும் தங்கள் உள்ளங்களில் ஒரே இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.


ஒரே இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்ததால்

 எல்லோருடைய உள்ளங்களிலும் இயேசுவின் பண்புகள் அவர்களை  இயக்கும் சக்தியாக விளங்கின.


அன்பு, இரக்கம், மன்னிப்பு முதலான இயேசுவின் அனைத்துப் பண்புகளாலும் இயக்கப் பட்டதால்,


இயேசுவே அனைவருக்கும் உயிராய் இருந்தார்.

உயிர் தானே எல்லோருக்கும் இயக்க சக்தி!

அனைவரும் இயேசுவோடு ஒன்றித்திருந்தார்கள்.

இயேசுவே அனைவருக்கும் உயிராய் இருந்ததால்

அனைவரும் ஒரே உயிராய் வாழ்ந்தார்கள்.

வாழ்ந்தது அவர்களல்ல, இயேசுவே அவர்களிடம் வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஆனால், இன்றைய நிலை என்ன?

ஒரே இயேசுவே அனைவர் உள்ளத்திலும் இருந்தால்,

 ஒன்றுக்கு ஒன்று ஒத்து வர மறுக்கும் 

ஆயிரக்கணக்கான பிரிவுகள் நமமிடம் எப்படி வந்தன?

இயேசு ஒன்றுக்கு ஒன்று ஒத்து வராத பிரிவுகள் உள்ளவரா?

இயேசு ஒன்றிப்பின் தேவன்.

அவர் தந்தையிடம் என்ன வேண்டினார்?

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"

என்று தானே வேண்டினார்!

நாம் நம்முள் ஒன்றாய் இருக்கிறோமா?

கிறிஸ்தவக் குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா?

கிறிஸ்தவக் குடும்பங்களுக்கிடையே
ஒற்றுமை இருக்கிறதா?

குருக்களுக்குள் 
ஒற்றுமை இருக்கிறதா?

ஆயர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா?

இயேசு மாறாதவர், அவர் பழைமைவாதியுமல்ல, 
புதுமைவாதியுமல்ல.


மாறாத இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொண்டால் 

ப. பு. வாதங்கள் எப்படி வந்தன?

கடவுள் மாறாதவர், மனிதர்கள் மாறினால்தானே வளரலாம் என்று வாதிடலாம்.

மறுக்கவில்லை.

ஆனால் மாற்றம் எதில்?

பண்புகளின் அளவு மாறவேண்டும்,

குறைந்த அன்பு நிறைந்த அன்பாக மாற வேண்டும்.


குறைந்த இரக்கம் நிறைந்த இரக்கமாக மாற வேண்டும்.

குறைந்த மன்னிப்பு நிறைந்த மன்னிப்பாக மாற வேண்டும்.

குறைந்த பொறுமை நிறைந்த பொறுமையாக மாற
 வேண்டும்.

குறைந்த தாழ்ச்சி நிறைந்த தாழ்ச்சியாக மாற வேண்டும்.

வேறு வகையில் சொன்னால்,
குழந்தை வளர்ந்து கிழவராக மாற வேண்டும்.

இயேசு நிறைவானவர், நாம் அவரது நிறைவை நோக்கி மாறவேண்டும்.

ஒரே வரியில் அனைத்துக் கிறிஸ்துவர்களும்

கிறிஸ்துவில் ஒன்றித்து, கிறிஸ்துவாக மாற வேண்டும்.

பாப்பா முதல் பாப்பரசர் வரை அனைவரும் ஒரே கிறிஸ்துவாக மாற வேண்டும். 

ஒன்றிப்புதான் உண்மையான மாற்றம், பிரிந்து போவதல்ல.

ஒன்றிப்போம் இயேசுவோடு.

ஒன்றிப்போம் நமக்குள்ளும்.

சிந்திப்போம், செயல்படுவோம்.

லூர்து செல்வம்.



Monday, April 20, 2020

"உமது வார்த்தையை முழுத்துணிவுடன் எடுத்துச்சொல்ல உம் ஊழியர்களுக்கு அருள்தாரும்." (அப். 4:29)

"உமது வார்த்தையை முழுத்துணிவுடன் எடுத்துச்சொல்ல உம் ஊழியர்களுக்கு அருள்தாரும்." (அப். 4:29)
**  **  **   ** ** **   * |* ** ** ** **

இந்த இறைவாக்கு பின்வரும் எண்ணங்களைத் தியானிக்க நம்மைத் தூண்டுகிறது.

1 நாம் அனைவரும் இறை இயேசுவின் ஊழியர்கள்.

2. இறை ஊழியர்களின் ஒரே பணி இறைவார்த்தையை எல்லோருக்கும் அறிவிப்பதுதான்.

3.இறை வார்த்தையை அறிவிப்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல.

 அதற்கு மன உறுதியும் துணிவும் எதையும் தாங்கும் இருதயமும் நமக்கு வேண்டும்.

4.இயல்பாக நமக்கு அவ்வளவு மனவுறுதியும் துணிவும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு 

அதை நமக்கு தமது அருள் வரத்தால் தந்து உதவும்படி இறைவனை தினமும் வேண்ட வேண்டும்.

5. இறைவன் உதவி இன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


1 நாம் அனைவரும் இறை இயேசுவின் ஊழியர்கள்.

ஒவ்வொரு மனிதனும் ஆள் ஒன்று. அந்தஸ்துக்கள் பல.

அந்தஸ்துக்கு ஏற்ப பணிகள் மாறுபடும்.

இந்த பணிகளை அந்தஸ்தின் கடமைகள் என்போம்.

லூர்து செல்வம் அவனது

தாத்தா, பாட்டிக்குப் பேரன். பெற்றோருக்கு மகன்.
 உடன்பிறந்தோருக்கு சகோதரன்.
மனைவிக்குக் கணவன். பிள்ளைகளுக்கு அப்பா.
பேரன் பேத்திக்குத் தாத்தா. பூட்டிகளுக்குப் பூட்டன்.
மாணவர்களுக்கு ஆசிரியர்

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இறைவனோடு நமக்குள்ள உறவின் அடிப்படையில் நாம் அவரது 

படைப்புகள், 

பிள்ளைகள்,

சீடர்கள்,

நண்பர்கள்,

ஊழியர்கள்.

இறைவனால் படைக்கப்பட்ட நாம் அவரை தந்தையே என்று அழைக்கும்படி இயேசுவே கற்றுக்கொடுத்ததால் நாம் அவரது பிள்ளைகள் ஆகிறோம்.

நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின்பற்றும்போது சீடர்கள் ஆகிறோம்.

இயேசு "உங்களை நண்பர்கள் என்றேன்:" என்று சொன்னதால் நாம் அவரது நண்பர்கள் ஆகிறோம்.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவது நமது பணி, ஆகையால் நாம் அவரின் ஊழியர்கள் ஆகிறோம்.

அவரால் படைக்கப்பட்டதால் நாம் அவரை ஆராதிக்கின்றோம்.

அவரது பிள்ளைகள் என்பதால் அவரை நேசிக்கிறோம்.

அவரது சீடர்கள் என்பதால் அவரைப்போலவே நாமும் நமது சிலுவையைச் சுமக்கிறோம்.

அவரது நண்பர்கள் என்பதால்தான், தந்தையிடமிருந்து அவர் கேட்டதையெல்லாம் நமக்கு அறிவித்தார். (அரு.15:15)

இயேசு நமது தலைவர், ஆகையால் நாம் அவரது ஊழியர் ஆகிறோம்.
 
வேலைக்காரனுக்கும் ஊழியனுக்கும் வித்தியாசம் உண்டு.

வேலைக்காரன் சம்பளத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்.

ஊழியன் தலைவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்.

நாம் இறைவனின் ஊழியர்கள்.

 இறைவனின் கட்டளைகள அவரது மனம் நோகாமல் நிறைவேற்றுவதே நமது பணி.

2.நாம் தியானித்துக் கொண்டிருக்கும்   வசனப்படி
 
திருமுழுக்குப்புப் பெற்ற நாம் அனைவரும் இயேசுவின் ஊழியர்கள் மட்டுமல்ல, அவரது பொதுக் குருத்துவத்தின் உறுப்பினர்கள்.

அந்தவகையில்  இறை ஊழியர்களின் ஒரே பணி இறைவார்த்தையை எல்லோருக்கும் அறிவிப்பதுதான்.

ஒரே பணி என்றால் 

நாம் நற்செய்தி அறிவிப்பதைத் தவிர வேறு ஒரு பணியும் செய்ய கூடாதா? 

ஆம், கூடாது.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது நாம்

செப வாழ்வு சம்பந்தப்பட்ட   ஆன்மீக வாழ்வு,

இவ்வுலக சம்பந்தப்பட்ட லௌகீக வாழ்வு ஆகிய

 இருவகை வாழ்வுகள் வாழ்ந்து கொண்டிருப்பது போல் தோன்றும்.

அப்படி வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் நாம் வாழ வேண்டியது நற்செய்திப் பணியை மட்டும் செய்யும் ஆன்மீக வாழ்வை மட்டும்தான்.
 
என்று  "நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக: அவன் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், மிருகங்களையும், பூமி முழுவதையும், பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும் ஆளக்கடவன்." என்று சொன்னாரோ, 

அன்று முதல்  இந்த உலக சம்பந்தப்பட்ட வேலைகளும் ஆன்மீக வாழ்வுதான்.

ஆனால் அவை கடவுளுடைய கட்டளையாக இருப்பதால் அவருக்காக,

நமது திருப்திக்காக அல்ல,

அவரது  திருப்திக்காக செய்யப்பட வேண்டும்.

கடவுளுடைய மகிமைக்காகச் செய்யப்படும் எந்த வேலையாக இருந்தாலும்,

விபசாயமாக இருந்தாலும்,
வியாபாரமாக இருந்தாலும்,
ஆசிரியப்பணியாக இருந்தாலும்

அவை ஆன்மீக வாழ்வுதான்.

இந்த வாழ்வைத்தான் நற்செய்தி அறிவிக்கும் வாழ்வாக வாழ வேண்டும்.

3.இறை வார்த்தையை அறிவிப்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல.

சிந்தனை, சொல், செயல் மூலமாகத்தான் இறை வார்த்தையை அறிவிக்கும் பணியைச் செய்ய வேண்டும்.

முதலில் நற்செய்தி நமது சிந்தனையில் இருக்க வேண்டும். சட்டியில் இல்லாவிட்டால் அகப்பையில் வராது.

அடுத்து நமது சொல் மூலம் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

அடுத்து செயலில் நற்செய்தியை வாழ்வதன் மூலம் 

மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ வேண்டும்.

நம்முடன் வாழ்பவர்கள் நமது செயல்களிலிருந்து நற்செய்தியை அறிய வேண்டும்.

அன்பு செய்தல்,

 நம்மைப் பகைப்பவர்களையும் நேசித்தல்,

தீமை செய்பவர்களுக்கு
நன்மை செய்தல்,

எல்லோருடனும் சமாதானமாக வாழ்தல்,

 இல்லாதவர்களுக்கு கொடுத்தல் 

போன்ற நற்செய்திப் பணிகள் மற்றவர்களையும் அதன்வழி வாழவைக்கும்.

இது செயல் மூலம் நற்செய்தி அறிவித்தல்.

இது நாம் சொல்வது போல அவ்வளவு எளிதான செயல் அல்ல. 

தனது சொல்லாலும்  வாழ்வாலும் நற்செய்தி அறிவித்த இறைமகன் இயேசுவுக்கு

 மக்கள் கொடுத்த பரிசு என்ன என்று நமக்குத் தெரியும்.

நற்செய்தி அறிவிப்பதையே வாழ்வாகக் கொண்டிருந்த புனிதர்கள் என்ன பாடு பட்டார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

இதையெல்லாம் தெரிந்த பின்பும் நற்செய்தியை வாழ நமக்கு மிகுந்த துணிவு வேண்டும்.

4.அதற்காக துணிவையும்,

 மன உறுதியையும்,

 நிலைத்து நிற்கும் பண்பையும்

 நமக்குத் தர ஒவ்வொரு நாளும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்ட வேண்டும்.

இவ்வுலகில் நல்லவர்களை பின்பற்றுகிறவர்களை விட கேலி செய்பவர்களும்,

எதிர்த்து நிற்பவர்களும் தான் அதிகம்.

 அவர்களையும் மன்னித்து அவர்களுக்காக இறைவனிடம் வேண்ட வேண்டும்.

இயேசு தன்னை கைது செய்ய வந்தவனுடைய அறுந்த காதை ஒட்டவைத்து,

 தீமைக்கு நன்மை செய்தது போல 

நாமும் நம்மைத் 
துன்புறுத்துபவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

இதுவும் அச்செய்தி அறிவிக்கும் பணிதான்.

5.பலகீனமான  நம்மால் இறைவன் உதவி இன்றி எதுவும் செய்ய இயலாது.

 இறைவனைச் சார்ந்தே வாழ்கிறோம் என்பதை ஏற்றுக் கொண்டு,

நமது ஒவ்வொரு செயலுக்கும் இறைவனை உதவிக்கு அழைக்க வேண்டும்.

தன்னைச் சார்ந்திருக்கிறவர்களை இறைவன் கைவிடமாட்டார். 

அவரது கைகளை இறுக பற்றிக்கொண்டு அவருக்காகவே ஊழியம் செய்வோம்.

"உமது நற்செய்தியை உலகெங்கும் பரப்ப நீரும் என்னோடு வாரும்,
இயேசுவே."

லூர்து செல்வம்.


Sunday, April 19, 2020

இழப்பது ஆசீர்வாதமே.

இழப்பது ஆசீர்வாதமே.

**  **  **   ** ** **   ** ** ** ** **

வாழ்க்கை இரண்டே இரண்டு செயல்களை மட்டும் உள்ளடக்கியது: பெறுதல், கொடுத்தல்.

நாம் நமது தாயின் வயிற்றில் உற்பவிக்கும்போது தாயிடமிருந்து நமது உடலையும், கடவுளிடமிருந்து நமது ஆன்மாவையும் பெறுகிறோம்.

இறக்கும்போது உடலை மண்ணுக்கும், ஆன்மாவை கடவுளிடமும் கொடுக்கிறோம்.

இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை எண்ணற்ற பெறுதல்களாலும், கொடுத்தல்களாலும் ஆனது.

இந்த இரண்டாலும் நாம் பெறும் அனுபவம் இரண்டே இரண்டு தான்: 
இன்பம், துன்பம்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் இருக்கும்.

பெற்றும், கொடுத்தும் வாழ்கிறோமே, அதன் நோக்கம் என்ன?

இன்பமா? துன்பமா?

 இந்த இரண்டில் ஒன்று தான் நோக்கமாக இருக்க முடியும்.

இறைவன் நம்மைப் படைத்தது இன்பத்தை, நித்திய பேரின்பத்தை அடைவதற்காக மட்டும்தான்.

துன்பம் நமது நோக்கம் அல்ல.

சென்னையில் இருக்கும் ஒரு நபர் பாவூர்சத்திரத்திற்குப் போகவேண்டும்.

பேருந்து மூலமாகவோ, புகைவண்டி மூலமாகத்தான் போக முடியும்.

பேருந்தோ, அல்லது புகைவண்டியோ அவரது  நோக்கம் அல்ல.

பாவூர்சத்திரத்திற்குப் போவது தான் நோக்கம்.

ஆனால் பேருந்தோ, அல்லது புகைவண்டியோ இல்லாமல்
நோக்கத்தை அடைய முடியாது.

அதேபோல வாழ்வின் நோக்கமாகிய இன்பத்தை துன்பம் மூலமாகத்தான் அடைய முடியும்.

துன்பமாகிய வழியால் அன்றி இன்பமாகிய நோக்கத்தை அடைய முடியாது.

இதை நம் ஆண்டவராகிய இயேசு தன் சொல்லால் மட்டுமல்லாமல்,

செயலாலும் எடுத்துக் காண்பித்திருக்கிறார்.

 சிலுவை மரணத்தின் மூலமாகத்தானே
உயிர்த்தெழுந்தார்!

நமது வாழ்விலும் சிலுவை இன்றி இன்பம் இல்லை.

பெறுவதையும், கொடுப்பதையும் வேறு விதமாகச் சொல்வதானால் அடைதல், இழத்தல்.

ஒரு பொருளை நாம் பெறும்போது நாம் அதை அடைகிறோம்.

கொடுக்கும்போது இழக்கிறோம்.

ஒரு அடிப்படை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

நான் பெற்றிருப்பது எல்லாம் கொடுப்பதற்கே.

இந்த உண்மை இறைவனின் இரண்டாவது கட்டளையை அடிப்படையாகக் கொண்டது.

"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி."

நம் உள்ளத்தில் அன்பு இருந்தால் அது தன்னையே கொடுப்பதில்தான் வெளிப்படுத்தும்.

நாம் யார் மீது அன்பு வைத்திருத்கிறோமோ

 அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பதின் மூலமாக

 நமது அன்பை வெளிப்படுத்துவோம்.

ஒரு தாய் தன் குழந்தையைப் பார்த்து,

"இங்கே பார், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.

எவ்வளவு நேசிக்கிறேன் என்றால், 

உன்னை எடுக்க மாட்டேன்,

பாலூட்ட மாட்டேன்,

நீ அழுதாலும் கவலைப்பட மாட்டேன்,

ஆய் போனால் கழுவி விட மாட்டேன்,

உனக்கு dress போட மாட்டேன்,

உனக்கு என்ன நேர்ந்தாலும் கவலைபட மாட்டேன்."

என்று சொன்னால் அவள் எப்படிப்பட்ட தாய்?

இறைவன் உயிரற்ற பொருட்களைப் படைத்ததுகூட அவை தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்வதற்காக அல்ல.

சூரியன் உலகிற்கு ஒளி கொடுக்கிறது, தனக்குத் தானே அல்ல.

தண்ணீர் நமக்குத்தான் பயன் படுகிறது,  தனக்குத் தானே அல்ல.

கடலால் கடலுக்கு என்ன பயன்? நீராவியாகி நமக்கு மழையாய் பெய்கிறது.

மனிதன் மட்டும்தான் மற்றப் பொருட்களைத் தனக்காகப் பயன்படுத்துகிறான்.

பயன்படுத்தட்டும், பயன்படுத்தாமல் வாழ முடியாது.

ஆனால், தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும்.

இது மற்றவர்கள் மீது அன்பு இருந்தால் மட்டும் முடியும்.

இப்படி உதவும்போது நிறைய துன்பங்கள் ஏற்படும்.

இவை ஆன்மீக மொழியில் சிலுவைகள் எனப்படும்.

இயேசு சிலுவையைச் சுமந்து, அதில் மரித்து நமக்கு மீட்பைத் தந்தார்.

இயேசுவுக்குத் துன்பங்கள் சிலுவை வடிவில் வந்ததால் நமது துன்பங்களும் சிலுவை எனப்படுகின்றன.

நாம் இயேசுவின் சீடர்கள் ஆகவேண்டுமென்றால் சிலுவையைச் சுமந்து ஆக வேண்டும்.

இறைவனிடமிருந்து உயிரைப் பெற்ற நாம் அவருக்காகவும், நமது அயலானுக்காகவும் உயிரையும்  தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

கொடுப்பதில் மற்றொரு அடிப்படை உண்மையும் இருக்கிறது.

இழப்பது திரும்ப பெறுவதற்கே.

கடவுளின் பெயரால் நாம் இழந்தது வேறு வடிவில் திரும்ப நம்மிடமே வரும்.

நாம் இழந்தது எல்லாம் நாம் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோமோ அந்த நோக்கமாகத் திரும்பி வரும்.

அதாவது நித்திய பேரின்பமாகத் திரும்பி வரும்.

"எனக்காகத் தன் உயிரை இழந்தவனோ அதைக் கண்டடைவான்."(மத். 10:39)

இயேசுவுக்காகத் தன் உயிரை இழந்தவன்,

அதை நித்திய பேரின்பத்தில் கண்டடைவான்.

பெற்றதைக் கொடுப்போம் இவ்வுலகில்.

கொடுத்ததைப் பெறுவோம் மறுவுலகில்.

இழப்பது துன்பம்தான்,

ஆனால்

அது தான் பேரின்பத்திற்கான வழி.

இழப்பது ஆசீர்வாதம்தான்.

லூர்து செல்வம்.

Saturday, April 18, 2020

"நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க எங்களால் இயலாது"(அப்.4:20)

"நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க எங்களால் இயலாது"
(அப்.4:20)
**  **  **   ** ** **   ** ** ** ** **
யூத மக்கள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும்

இராயப்பரிடமும், 
அருளம்பரிடமும்

இனி இயேசுவின் பெயரைச் சொல்லி, எதுவும் பேசவோ போதிக்கவோ கூடாது எனக் கட்டளையிட்டனர்.

ஆனால் அவர்கள்,

"நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க எங்களால் இயலாது"

என்றார்கள்.


இயேசு விண்ணகம் எய்து முன் தன் சீடர்களிடம்

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். 

பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்."
(மத். 28:19, 20)

இயேசு நற்செய்தியை போதிக்கும் கட்டளையை  யாருக்குக் கொடுத்தார்?

சீடர்களுக்கு.


இயேசு சீடர்களிடம்

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். 

ஆதாவது சீடர்கள் சீடர்களை உருவாக்க வேண்டும்.

சீடர்கள் உருவாக்கிய   சீடர்கள்
சீடர்களை உருவாக்க வேண்டும்.

சீடர்களால் உருவாக்கப்பட்ட அனைவரும் சீடர்கள் தான்.

உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சீடருக்கும் நற்செய்தி அறிவிக்கும் பணி இருக்கிறது.

ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் இயேசுவின் சீடர்கள் தான்.

"குருக்கள் மட்டும்தான் இயேசுவின் சீடர்கள்,

 அவர்களுக்கு மட்டும்தான் நற்செய்தி அறிவிக்கும்  பணி இருக்கிறது" என்று தவறாக எண்ணக் கூடாது.

கிறிஸ்மா எண்ணையைத் தலையில் பூசும்போது ஆயர் உருவாகிறார்.

அதே கிறிஸ்மா எண்ணையை கையில் பூசும்போது குருவானவர் உருவாகிறார்.

 கிறிஸ்மா எண்ணைதான் ஞானஸ்நானம் கொடுக்கவும்
பயன்படுகிறது. 

ஞானஸ்நானத்தால் நாம்
 கிறிஸ்தவன் ஆகிறோம்.

முதலில் நாம் கிறிஸ்தவர்களாக அபிஷேகம் செய்யப்பட்டோம்.

நம்மில் சிலர் குருக்களாக  அபிஷேகம் செய்யப் படுகிறார்கள்.

அவர்களில் சிலர் ஆயர்களாக 
அபிஷேகம் செய்யப் படுகிறார்கள்.

ஆக கிறிஸ்துவின் சீடர்கள் அனைவரும்,

(பாப்பரசரிலிருந்து  இப்போதுதான் ஞானஸ்நானம் குழந்தை வரை)

அபிஷேகம் செய்யப் பட்டவர்களே.

குருத்துவம் கிறிஸ்துவிலிருந்து வருகிறது.

 கிறிஸ்தவர்கள் அனைவரும் குருக்களே.

ஞானஸ்நானம் பெறும்போது 
நாம் கிறிஸ்துவின் பொதுக் குருத்துவத்தில் பங்கு பெறுகிறோம்.


குருப்பட்டம் பெறுகிறவர்கள்
கிறிஸ்துவின் பணிக் குருத்துவத்தில் பங்கு பெறுகிறார்கள்.

பணிக் குருத்துவத்தில் பங்கு பெறுகிறவர்களை நாம் நமது ஞான மேய்ப்பர்கள் என்று அழைக்கிறோம்.

தேவ திரவிய அனுமானங்களைக் கொடுத்து நம்மை விண்ணக பாதையில் வழி நடத்துபவர்கள் நமது ஞான மேய்ப்பர்கள்.

இது பணி குருத்துவம்.

இறைவார்த்தையை அறிவித்து

 மற்றவர்களை இயேசுவின் சீடர்கள் ஆக்குவது 

 பணிக் குருத்துவத்திற்கும் உண்டு,

 பொதுக்  குருத்துவத்திற்கும் உண்டு.

நம்மிடம் ஆலயங்களும்  உண்டு, பள்ளிக்கூடங்களும் உண்டு.

ஆலயங்களைத் தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும் நற்செய்திையை அறிவிக்கவும் பயன்படுத்துகிறோம்.

நம் நாட்டிற்கு நமது மறையை அறிவிக்க வந்த வேத போதகர்கள்

 வேத போதக பணிக்காகத் தான்

 பள்ளிக்கூடங்களை நிறுவினர்.

 ஆனால், இன்று எந்த அளவிற்கு அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம் என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம்.


திருச்சபையின் செலவில் நடத்தப்படுகின்ற  தமது பள்ளிக்கூடங்களில்

 மொழிப்பாடம் நடக்கிறது, 
கணித பாடம் நடக்கிறது, 
அறிவியல் பாடம் நடக்கிறது, தேர்வுகள் நடத்தப்படுகின்றன, மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுக்கப்படுகின்றன, படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது,

ஆனால் நமது பள்ளிக்கூடங்களில் மறைபணி அதாவது நற்செய்தி அறிவிக்கும் பணி எந்த அளவிற்கு நடக்கிறது?

 ஏதோ  45 நிமிடங்கள் திருமறையில் உள்ளவர்களுக்கு மட்டும்

 திருமறைப் போதனை நடக்கிறது.

திருமறையை அறியாதவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப் படுகிறதா?

மருத்துவ மனைகள் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு,


நமது கல்விக்கூடங்களில் திருமறையை அறிந்தவர்களுக்கு போதிப்பதில் தவறில்லை,

 ஆனால் அறியாதவர்களுக்கு போதிக்காமல் இருப்பது?

நமது ஆண்டவர் விண்ணகம் எய்து முன், தனது சீடர்களுக்கு ஒரு meeting போட்டு,

"இராயப்பா, நான் மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்த இடங்களை எல்லாம் ஒரு மறைமாவட்டமாக்கு.

அதை பல
வட்டங்களாகப் பிரி.

ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு  பங்குச்சாமியை நியமி.

பங்குச்சாமி என்னால் ஞானஸ்நானம் பெற்றவர்களை திரு மறையில் உறுதிப்படுத்த வேண்டும்.

தேவத்திரவிய அனுமானங்களைக் கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்.

உங்கள் காலத்திற்குப் பிறகுப் சிறிஸ்தவர்களைக் கவனிக்க குருக்களை நியமி.

இது காலங்காலமாக நடக்கும்."

என்று சொன்னாரா? 

அல்லது,

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்."

என்று சொன்னாரா?

நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

ஒவ்வொரு பங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

நமது அரசு "மத போதனை  செய்யாதே" என்கிறது.

திருச்சபையின் ஆரம்பக் கட்டத்திலும் அரசாங்கம் அப்படித்தான் சொன்னது.

ஆனால் சீடர்கள் என்ன சொன்னார்கள்?

"நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க எங்களால் இயலாது"
(அப்.4:20)

அப்படிச் சொல்ல நமக்கு ஏன் தைரியம் இல்லை?

லூர்து செல்வம்.





Thursday, April 16, 2020

சீமோன் இராயப்பரிடம் ஒரு வாள் இருந்தது.

சீமோன் இராயப்பரிடம் ஒரு வாள் இருந்தது. 
**  **  **   ** ** **   ** ** ** ** **

 நாம் இப்போது இயேசு உயிர்த்த விழா மகிழ்ச்சியில் இருக்கிறோம்.

ஆனாலும் சிலுவை இன்றி  உயிர்ப்பு இல்லை.

ஆகவே உயிர்த்த இயேசு  பாடுகள் பட்டபோது  நடந்த நிகழ்ச்சிகளையும் தியானிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இப்போது ஜெத்சமனி தோட்டத்தில்  நிற்கிறோம்.

யூதாஸ் படைவீரர்களையும், தலைமைக்குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் அழைத்துக்கொண்டு,

 விளக்குகளோடும், பந்தங்களோடும் படைக்கருவிகளோடும் அங்கே வருகிறான்.

இராயப்பரும், மற்ற சீடர்களும் இயேசுவின் அருகில் நிற்கிறார்கள்.

சீமோன் இராயப்பரிடம் ஒரு வாள் இருக்கிறது. . 

அவர் அதை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, 

அவனது வலக்காதை வெட்டுகிகிறார். 

 அவ்வூழியனின் பெயர் மால்குஸ்.

இயேசு  அவன் காதைத் தொட்டுக் குணப்படுத்துகிறார்.  

 இயேசு இராயப்பரை நோக்கி, "உன் வாளை உறையில் போடு. ஏனெனில், வாள் எடுப்போர் எல்லாரும் வாளால் மடிவர்.

தந்தை எனக்குக் கொடுத்த துன்பகலத்தில் நான் குடிக்காதிருப்பேனோ ?" 
என்கிறார்.

இயேசு  தான் நற்செய்தி அறிவித்து வந்த மூன்று ஆண்டுகளும் சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கினார்.

நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு.

Every action has a reaction.

காலையில் எழுந்து உற்சாகத்துடன் வீட்டைவிட்டு வெழியே வருகிறேன்.

நண்பர் ஒருவர் எதிரே வருகிறார்.

நான் உற்சாகத்துடன் அவரை நோக்கி உரத்த குரலில்,

" Hi, Selva, Good morning! How are you?"

நிச்சயமாக என் உற்சாகம் அவரை தொற்றிக்கொள்ளும்.

"Hi, Lourdu, very Good morning!
I am fine. How are you.?"

 அவரிடம் தொற்றிக்கொண்ட என்னுடைய உற்சாகமும், வாழ்த்தும் 

அவர் யாரையெல்லாம் பார்க்கிறாரோ அவர்களிடமும்  தொற்றிக்கொள்ளும்.

அதோடு நிற்காது.

அவர்கள் யாரையெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்களையும்,

அவர்கள் யாரையெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்களையும்,

அவர்கள் யாரையெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்களையும்,

இப்படியே விரிந்து கொண்டு செல்லும்.

ஒரு ஊரணியின் நடுவில் ஒரு சிறு கல்லைப் போட்டால் அது ஏற்படுத்தும் அலை ஊரணி எங்கும் விரிவது போல

ஒருவரிடமிருந்து வெளிவரும் சொல்லோ, செயலோ எதிர்வினை (Reaction) அலைகளை விரித்துக் கொண்டே செல்லும்.

இயேசு செய்த புதுமைகள் இரண்டு விதமான எதிர், எதிர் வினை அலைகளை ஏற்படுத்தின.

1. சாதாரண மக்களிடையே அவர் மீது விசுவாசத்தை ஏற்படுத்தின. அவர்கள் சென்றவிடமெல்லாம் அதைப் பரப்பினார்கள். 

இயேசு சென்றவிடமெல்லாம்  அவரது நற்செய்தியைக் கேட்கவும்,

 வியாதிகளிடமிருந்து குணம் பெறவும் மக்கள் அலை  அலையாய் அவரைத் தேடி வந்தார்கள்.

பாவிகள் மன்னிக்கப் பட்டார்கள்.

2. படித்த அறிவு ஜீவிகளாகிய பரிசேயர், சதுசேயர் போன்றோரிடம் 

சாதாரண மக்களிடம் ஏற்பட்ட reaction னுக்கு எதிரான எதிர்வினை ஏற்பட்டது.

அவர்களுக்கு விசுவாசம் ஏற்படவில்லை.

மாறாக,இயேசு மீது பொறாமையும், கோபமும் ஏற்பட்டதோடு 

நாளுக்கு நாள் அவை வளர்ந்து வந்தன.

 இயேசு வளர்ந்தால் மக்களிடையே  தங்களுக்கு இருந்த மதிப்பு போய்விடும் என்று எண்ணிய அவர்கள்

 இயேசுவைக் கொலை செய்ய வழி தேடி கொண்டிருந்தார்கள்.

 அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

இங்கு தான் இறைத் திட்டத்தினுடைய பெருமையை உணர முடிகிறது.

 இறைவன் நல்லவர், நல்லதை மட்டும் செய்யக்கூடியவர்.

 அதுமட்டுமல்ல

 தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க கூடியவர்.


தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க கூடியவராய் இருப்பதால்தான் 

நன்மையை மட்டும் விரும்பும்

 அவர் தீமையையும் அனுமதிக்கிறார்.

பாவம் ஒரு  தீமை.

உயிர்த்த திருநாள் அன்று திரு வழிபாட்டில் 

திருச்சபை பாவத்தை 

"பாக்கியமான பாவமே"

என்று அழைக்கிறது.

 ஏன் தீமையைத் திருச்சபை "பாக்கியமான "

என்று அழைக்கிறது?

 ஏனெனில் ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் விளைவாகத்தான்

 இறைமகன் மனிதனாக பிறந்து நம்மிடையே தங்கினார்.

 சர்வ வல்லமையுள்ள கடவுளையே சாதாரண மனித சுபாவத்தை ஏற்றுக் கொள்ள வைத்தது நமது ஆதிப்பெற்றோர் செய்த பாவம்.

 அதனால்தான் இன்றும் இயேசு நற்கருணை வடிவில் நம்மிடையே இருக்கின்றார்,

 நமக்கு உணவாக வருகின்றார்.

ஆக தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கக்கூடிய வல்லமை இருப்பதால்தான் 

இறைவன் உலகில் தீமையை அனுமதிக்கிறார்.

சாதாரண மக்களிடையே இயேசுவின் புதுமைகள் விசுவாசத்தை வளர்த்தது நன்மை.


 பரிசேயர் சதுசேயரிடம் கோபமும் பொறாமையும் வளர்ந்தது தீமை.

இந்த தீமையில் இருந்து தான் இயேசு தான் எதற்காக பூமிக்கு வந்தாரோ அதை வரவழைத்தார்.

அதாவது மீட்பை வரவழைத்தார்.

பரிசேயரும் சதுசேயரும்

இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதால்தான் நமக்கு இரட்சணம் கிடைத்தது.

அதற்காக நாம் பாவம் செய்ய வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

நாம் செய்ய வேண்டியது புண்ணியத்தை மட்டும்தான்.

நம்முடைய  சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தி பாவம் செய்வது  இறைவனுடைய சித்தத்திற்கு எதிரானது.

அவர் நமது சுதந்திரத்தை மதிப்பதால் அதைத் தவறாக பயன்படுத்தும் போதும் நம்மை தடுப்பது இல்லை.

ஆனாலும் நாம் செய்த பாவத்திலிருந்து நன்மையை வரவழைக்க அவரால் முடியும்.

இப்போது கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்.

இராயப்பர் மால்குஸின் காதை வெட்டியது இயேசுவின் விருப்பத்திற்கு விரோதமான செயல்.

வெட்டும்போது இயேசு அதை தடுக்கவில்லை,

 பாவத்தை அனுமதிப்பது போல.

ஏன் தடுக்கவில்லை?

 அந்த தவற்றிலிருந்து மற்றொரு பெரிய நன்மையை வரவழைப்பதற்காக.

 மால்குசின் காதை வெட்டியதால் என்ன நன்மை ஏற்பட்டது?

 இயேசுவை அவருடைய விரோதிகள் கொல்வதற்காக கைது செய்து கொண்டு போகிறார்கள்.

 கைதுக்கு முக்கியமான காரணம் தலைமைக்குரு.

மால்குஸ் அவரது ஊழியன்.

இயேசு புதுமை செய்து குணமாக்கியது,

அவரைக் கொலை செய்ய அழைத்துப் போக வந்தவனை.


(அவனை இயேசுவின் விரோதி என்று சொல்லமாட்டேன், ஏனெனில் இயேசு யாரையும் விரோதியாக நினைப்பதில்லை. யூதாசையே அவர் "நண்பா"
என்று அழைத்தார்.)

அவரைக் கொலை செய்ய அழைத்துப் போக வந்தவனுக்கு அவர் செய்த நற்செயலுக்கு கட்டாயம் ஒரு reaction இருந்திருக்கும்.

அதைப்பற்றி நற்செய்தியாளர்கள் எதுவும் குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.

 நமக்கு அது முக்கியம் அல்ல.

 இயேசு அவனுக்கு செய்த புதுமையை அவன் மறந்திருக்கவே மாட்டான்.

  அவன் காதை தொடும் போதெல்லாம் இயேசுவின் ஞாபகம் வந்திருக்கும் என்று நம்புவோம்,

 அதைத் தலைமை குருவுக்குத் தெரிவித்திருந்திருப்பான்.

அவனது ஊழியன்பால் இயேசுவின் அன்புச் செயல் பற்றிய செய்தி அவனுடைய மூளையில் ஏதாவது ஒரு பகுதியில் பதிவாகி இருந்திருக்கும்.

மேலும் காதை ஒட்டவைத்த புதுமையை அவரைப் பிடிக்க வந்த மற்றவர்களும் பார்த்திருப்பார்கள்.

அவர்களுடைய மனதிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு உண்டு. 

இதற்கு பைபிளில் ஆதாரம் உண்டா?

"இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்." (லூக்.23:34)

இவ்வசனத்தைத் தியானித்தால் எல்லாம் புரியும்.

லூர்து செல்வம்.


Tuesday, April 14, 2020

அவிசுவாசத்தின் வயது 2020!

அவிசுவாசத்தின் வயது 2020!
**  **  **   ** ** **   ** ** ** ** **
கபிரியேல் தூதர் சக்கரியாசிடம் அருளப்பரின் 'பிறப்பு பற்றி முன்னறிவித்த போது,

சக்கரியாஸ்

"இவையாவும் நிகழும் என எனக்கு எப்படித் தெரியும் ?"

எனக்கேட்டு அவிசுவாசத்தை ஆரம்பித்து வைத்தார்.

கபிரியேல் தூதர் அவரை நோக்கி 

"இதோ! இவை நடைபெறும் நாள்வரை நீ பேசாமலும் பேச முடியாமலும் இருப்பாய். ஏனெனில், உரிய காலத்தில் நிறைவேறும் என் சொல்லை நீ நம்பவில்லை " என்றார்."
(லூக். 1:20)

இயேசு மரியாளின் வயிற்றில் உற்பவித்ததற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அவிசுவாசம் நுழைந்துவிட்டது.

இயேசு தனது நற்செய்திப் பணியை கலிலேயாவில் தொடங்கினார்.

 அங்குள்ள மக்கள் அவர்  போதனையை விசுவாசத்தோடு ஏற்று கொண்டார்கள்.

 ஆனால் அவர் தனது சொந்த ஊருக்கு வந்தபோது அந்த மக்கள் அவர் மேல் போதிய விசுவாசம் வைக்கவில்லை.

இதற்கு  இயேசு அங்கேயே சிறுவயது முதலே வளர்ந்தது காரணமாக இருக்கலாம்.

யாவரும் அவரைப் பாராட்டினார்கள், 

அவர் வாயினின்று எழுந்த அருள்மொழிகளை வியந்தார்கள், 

ஆனால், 

 அவரை சூசையின் மகன், தச்சன் என்று பார்த்தார்களே அன்றி, மெசியா என்று பார்க்க வில்லை.

 விசுவாசம் இன்மை காரணமாக அங்கு அவர் அதிகமாக புதுமைகள் ஏதும் செய்யவில்லை.

இயேசு தான் நிறுவ இருக்கும் திருச்சபையை உலகெங்கும் பரப்புவதற்காக 12 சீடர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்தார்.

இயேசு சென்றவிடமெல்லாம் அவளுடனே சீடர்களும் சென்றார்கள்.

தான் சாதாரண மக்களுக்கு போதித்ததை எல்லாம் 

 சீடர்களோடு தனியாய் இருக்கும்போது 

அவர்களுக்கு  விளக்கினார்.

ஆனாலும் சாதாரண மக்களிடம் இருந்த விசுவாசத்தின் அளவிற்கு இவர்களிடம் விசுவாசம் இருந்ததாகத் தெரியவில்லை.

காரணம் சீடர்களில் சிலர் இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொண்டாலும் 

அவர்  யூதர்களை  ரோமையின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டு,

புதிய அரசு நிறுவுவதற்காகவே வந்தவர் என்று தவறாக எண்ணினார்கள்.

புதிய அரசில் தங்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் சிலர் சீடர்களாகவே ஆனார்கள்.

ஒரு முறை அருளப்பருக்கும், யாகப்பருக்கும் புதிய அரசில் உயர் பதவி கேட்டு அவர்களுடைய அம்மா சிபாரிசு கூட செய்தார்கள்.
(மத்.20:21)


சாதாரண
நோயாளிகளைக் குணமாக்கும்போதெல்லாம் இயேசு

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று,''

என்று கூறினார்.

குணமாக்கியவர் இயேசு.

ஆயினும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறுவதற்காக இயேசு விசுவாசம் குணமாக்கிற்று என்றார்.

வெற்றி பெறுபவர் ஆளாக இருந்தாலும்,

"உனது முயற்சி வென்றது" என்று கூறுகிறோம் அல்லவா.
அதுமாதிரி.

"உங்கள் விசுவாசம் எங்கே?"

இது இயேசு புயற்காற்றை அடக்கிவிட்டு, தன் சீடர்களைப் பார்த்து கேட்ட கேள்வி.

சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்துவந்த இயேசுவின் மீது சீடர்களுக்கு விசுவாசம் இருந்திருந்தால்

புயற்காற்று வீசியவுடன்

"போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?" 

என்று அவரை எழுப்பியிருக்க மாட்டார்கள்.

"ஆண்டவர் நம்முடன் இருக்கும் போது நாம் ஏன் அஞ்ச வேண்டும்''

என்று அமைதியாக இருந்திருப்பார்கள்.

இயேசு தான் பாடுபட்டு மரிக்கயிருப்பதையும், மூன்றாம் நாள் உயிர் 
பெறவிருப்பதையும் பற்றி சீடர்களுக்கு ஏற்கனவே கூறியிருக்கிறார்.


"மேலும், "மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று சொன்னார்.
(லூக்.9:22)

இயேசு மெசியா என்ற உண்மையும் சீடர்களுக்குத் தெரியும்.

இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா" என்றார்.
(மாற்கு 8:29)

இராப்போசனத்தின்போது, அதாவது, சிலுவை மரணத்திற்கு முந்திய இரவு இயேசு ,

"நான் பாடுபடுவதற்கு முன் உங்களோடு இந்தப் பாஸ்கா உணவை உண்ண ஆசைமேல் ஆசையாய் இருந்தேன்."

என்று சீடர்களிடம் சொன்னார்.


பொது வாழ்வில் நற்செய்தி அறிவித்த காலத்திலேயே 

தனது பாடுகள் பற்றியும், மரணம் பற்றியும், உயிர்ப்பு பற்றியும் அறிவித்திருந்தும்,

மரணத்திற்கு முந்திய இரவில்

சீடர்களுடைய மனநிலை எப்படி இருந்தது?

கடைசி இரவு உணவின்போது

"தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்ற வாக்குவாதம் அவர்களிடையே உண்டாயிற்று.''

மறுநாள் இயேசு பாடுகள் பட்டு மரிக்கப் போகிறார் என்று தெரிந்திருந்தும் 

தங்களுள் யார் பெரியவன் என்று வாதித்துக் கொண்டிருந்தால் அவர்களுடைய விசுவாசத்தின் அளவு பற்றி என்ன சொல்ல?

இயேசு இரத்த வியர்வை வியர்த்துக் கொண்டிருக்கிறார்,

அவருக்கு நெருக்கமான மூன்று சீடர்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

பள்ளிருவரில் ஒருவன் அவரைக் காட்டிக் கொடுக்கிறான்,

இயேசு கைது செய்யப்பட்டவுடன்

"சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போயினர்."
(மத் 26:56)

என்னே விசுவாசம்!!

இயேசு மரித்த மூன்மூன்றாம் உயிர்த்தெழுவார் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் அவர்களுடைய நடைமுறை அவர்களுக்குத் தெரிந்தது மாதிரியா இருந்தது?

"முன்பு இயேசுவோடு இருந்தவர்களிடம் அவள் போய் இதை அறிவித்தாள்.

 அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்.

11 இயேசு உயிருடனிருக்கிறார், அவள் அவரைக் கண்டாள் என்பதை அவர்கள் கேட்டபோது நம்பவில்லை."
(மாற்கு 16:10, 11)

"துயருற்று அழுதுகொண்டிருந்தனர்."

"நம்பவில்லை."

இந்த வார்த்தைகள் அவர்களுடைய விசுவாசம் எப்படி இருந்தது என்பதை நன்றாகவே விளக்குகின்றன!

இங்கு ஒரு முக்கியமான உண்மையைக் குறிப்பிட வேண்டும்.


இயேசு தனது நற்செய்தியை உலகின் கடைசி எல்கை வரை அறிவிக்க இப்படிப்பட்ட கோழைகளைத் தேர்ந்தெடுத்தார்!

இயேசுதான் தேர்ந்தெடுத்தார்!

"நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்."

பன்னிரண்டு கோழைகளை இயேசு அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்ததை நினைக்கும் போது ஒரு தமிழ்ப் பழமொழி நினைவுக்கு வருகிறது.

"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!"

இயேசுவோ சர்வ வல்லவர்!

சர்வ வல்லவராகிய அவருக்கு ஆயுதமே தேவை இல்லை.

இந்த கோழைகளை பெந்தேகோஸ்தே திருநாளன்று 

பரிசுத்த ஆவியின் அருள் வரத்தால் எதற்கும் அஞ்சாத வீரர்களாக மாற்றினார்.

அளவு கடந்த துணிச்சலோடு
அவர்கள் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்தார்கள்.

இயேசுவுக்காக வீரமரணம் அடைந்து வேத சாட்சிகளாக மாறினார்கள்.

இதிலிருந்து நாம் ஒரு முக்கிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எல்லோருமே குற்றம் குறையுள்ள பாவிகள்.

உண்மையில் பரிசுத்தமான திருச்சபை பாவிகளின் கூடாரம்தான்.

பாவிகளைப் பரிசுத்தர்களாக மாற்றுவதுதான் திருச்சபையின் பணி.

பாவிகளாகிய நமது விசுவாசம் தளர்ந்து விட்டது உண்மைதான்.

இவ்வுலகில் நம்மை வழி நடத்துபவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான்.

அவர்களிடமும் குறைகள் இருக்கின்றன என்பதும் உண்மைதான்.

ஆனாலும் குறையுள்ள மனிதர்களைக் கொண்டு திருச்சபையை வழிநடத்துபவர் 

குறையே இல்லாத, நிறைவான நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே.

நம்மை வழி நடத்துபவர்களில் அவர்களை கருவிகளாகக் கொண்டு வழிநடத்தும் இயேசுவை காண்போம்.

உண்மையில் நம்மை வழிநடத்துபவர் இயேசுவே. 

நம்மிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு நம்மை திருத்தி பராமரித்து வழிநடத்துபவர் அவரே.

பொற்கொல்லன் தங்கத்தை நெருப்பிலிட்டு சுத்தமான தங்கமாக மாற்றுவது போல

இறைவன் நம்மையும் சிலுவை ஆகிய நெருப்பினால் புடமிட்டு பரிசுத்தராக மாற்றுகிறார்.

நாம் அதற்காக நன்றி கூறுவதோடு நமது விசுவாசத்தை ஆழப்படுத்த ஆண்டவரின் அருள் உதவியை நாடுவோம்.

இறையருளின் உதவியோடு நமது விசுவாசத்தை உறுதிப்படுத்துவோம்.

குறைகளை களைவோம்.

கோழைகளை வீரர்களாக மாற்றிய அதே இயேசு இன்றும் நம்மோடு இருக்கிறார்.

கஷ்டங்கள் மத்தியிலும் விண்ணகம் நோக்கி வீர நடை போடுவோம்.

வெற்றி நமதே.

லூர்து செல்வம்

 

Monday, April 13, 2020

பாவியைத் தேடி.

பாவிகளைத் தேடி.
**  **  **   ** ** **   ** ** ** ** **

இறைமகன் இயேசு விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தது பாவிகளைத் தேடி.

ஏன் பரிசுத்தராகிய இயேசு பாவிகளை தேடி வந்தார்?

பாவிகளால் அவருக்கு என்ன பயன்?

தான் பயன் பெறுவதற்காக பாவிகளைத் தேடி வரவில்லை,

பாவிகள் பயன் பெறவே அவர்களைத் தேடி வந்தார்.

அவர் நமது முதல் பெற்றோரை பரிசுத்த நிலையில்தான் படைத்தார்.

அவர்கள் இறைவனின் கட்டளைகளை மீறி பாவம் செய்தார்கள்.

பரிசுத்தர்கள் பாவிகளாக மாறினார்கள்.

மனிதர் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்து, அவற்றை மன்னித்து, பாவிகளை பரிசுத்தராக  மாற்ற இறைவன் விரும்பினார்.

அந்த நோக்கத்திற்காகவே இயேசு பாவிகளைத் தேடி வந்தார்.

இயேசுவைப் பொறுத்தமட்டில் மனிதர்கள் அனைவருமே பாவிகள்தான்.

அனைவருமே இரட்சிக்கபட வேண்டியவர்கள்.

மனிதர்களிடையே இயற்கையாகவே ஒரு சுபாவம் உண்டு. இது அவர்கள் செய்த பாவத்தின் விளைவு.

தங்கள் பாவ நிலையை உணராமல் மற்றவர்களை பாவிகள் என்று அழைப்பது.

இறைவன் ஆதாமின் பாவத்தை சுட்டிக் காட்டியபோது அவன் பழியை  ஏவாள் மீது போட்டான்.

ஏவாளை கேட்டபோது  பாம்பின் மேல் போட்டாள்.

இருவருமே தாங்கள் செய்த பாவத்திற்கு பொறுப்பை தாங்கள் ஏற்கவே இல்லை.

மனம் திரும்பிய பாவியாகிய ஒரு பெண் இயேசுவின் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து

அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசிய போது,

அவரை விருந்துக்கு அழைத்த பரிசேயன்

"இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவளோ பாவி" என்று  நினைத்தான்.

பரிசேயன் அவளைப் பாவி என்று நினைத்தான்!

இயேசு அவனைப் பார்த்து,

"அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. அவள் காட்டிய பேரன்பே அதற்குச் சான்று." என்றார்.

இயேசு கடவுள்.

 பாவிகளை  மீட்கவே மனிதனாகப் பிறந்ததால்

அவரது மன்னிக்கும் அருள்வரம்  பாவிகளை நோக்கியே பாயும்,

அதிலும் பெரிய பாவிகளை நோக்கி அதிகமான அருள் பாயும்.

இதை உணராத பரிசேயன் ஒரு பாவி இயேசுவின் பாதங்களில் பரிமல தைலம் பூசுவதில் குறைகண்டான்.

இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது முதல் முதல் காட்சி கொடுத்தது மனம் திரும்பிய பாவியாகிய மரிய மதலேனாளுக்குதான்.

அவள் மூலமாகத்தான் அவர் உயிர்த்த செய்தி சீடர்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதிலிருந்து பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு மனம் திரும்புகிற  பாவிகளுக்கு இயேசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது.

இன்றும் இயேசு பாவிகள் பக்கம் தன் அருள் வரங்களோடு காத்துக்கொண்டிருக்கிறார், அவர்கள் மனம் திரும்ப வேண்டும் என்று.

இன்றைய காலத்கட்டத்தில் கொரோனா வைரசைக் காரணம் காட்டி

கோவில்கள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன.

நாம் திருப்பலியில் பங்கேற்கவும், திருப்பந்தியில் கலந்து கொள்ளவும் முடியவில்லை.

என்ன நடந்தாலும் இறைவனின் திட்டப்படிதான் நடக்கும்.

இயேசுவின் இத்திட்டத்திற்கு என்ன காரணமாய் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்க்கும்போது

"இதற்காக இருக்கலாமோ?" என்று மனதில் படுகிறது.

எதற்காக இருக்கலாமோ?

வரவர விசுவாசம் குறைந்து வருவது மக்களுடைய வாழ்க்கை முறையிலிருந்தே தெரிகிறது.

கிறிஸ்தவர்களிடையே பாவ உணர்ச்சி (sense of sin.) குறைந்துவிட்டது ஆகவே பாவசங்கீர்த்தனங்கள் குறைந்துவிட்டன.

Pope Pius XII spoke a prophetic word: “Perhaps the greatest sin in the world today is that men have begun to lose the sense of sin.” 

ஞாயிற்றுக்கிழமை முழு பூசை காணாமல் இருப்பது பாவம் என்று மக்கள் உணர்வதில்லை.

பாவத்தோடு நற்கருணை வாங்குவதும் பாவம் என்பதையும் மக்கள் உணர்வதில்லை.

ஆகவே அவர்கள் கோவிலுக்கு வருவதும், திருப்பலி காண்பதும், நற்கருணை வாங்குவதும் அவர்களுடைய வசதிப்படியன்றி திருச்சபையின் ஒழுங்குப்படி அல்ல.

நற்கருணை கொடுக்கும் நேரத்தில் கோவிலுக்கு வந்து

கையில் வாங்கி வாயில் போட்டு விட்டு

வீட்டுக்கு போய்

"நான் பூசைக்குப் போய்விட்டு வந்தேன்"

என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

நாம் இந்தியாவில் பிறந்ததால் இந்தியர்களாக இருக்கிறோம்.

அதேபோல அநேகர் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்,

விசுவாசத்தினால் அல்ல.

இப்படிப்பட்டவர்களுக்கு Shock treatment கொடுப்பதற்காகத்தான் இன்றைய நிலையை இறைவன் அனுமதித்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்.

குருக்கள் எவ்வளவோ சொல்லியும், பிரசங்கங்கள் வைத்தும் திருந்தாத இத்தகையயோர்

ஒருவேளை கொரோனாவிற்குப் பயந்து, சாவு பயத்திலாவது

நல்ல கிறிஸ்தவர்களாக மாற வாய்ப்பு கொடுப்பதற்காகத்தான்

இறைவன் இந்நிலையை அனுமதித்திருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது.

ஒழுங்காகப் பள்ளிக்கு வராத மாணவனிடம்
தலைமையாசிரியர்,

"ஒழுங்காக பள்ளிக்கூடம் வருவதாக இருந்தால் வா,

அல்லது,

T.C வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போ"

என்று தலைமையாசிரியர் பயம் காட்டினால்

திருந்தி ஒழுங்காகப் பள்ளிக்கூடம் வருகிற மாணவர்கள் உண்டு.

இந்த பள்ளிக்கூட அனுபவத்தை  வைத்துத்தான் நான் இப்படி நினைக்கிறேன்.

நிலைமைையைக் குறை சொல்வதற்கு பதில் நாம் திருந்த வேண்டும்.

திருச்சபையின் ஒழுங்குகளை  அறிந்து அதன்படி ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும்.

நம்மை வழி நடத்துபவர்கள் பள்ளிக்கூடங்களும், கோவில்களும் கட்டுவதில் காண்பிக்கும் ஆர்வத்தை,

திருச்சபையை

(அதாவது மக்களை)

கட்டியெழுப்புவதில் காண்பிக்க வேண்டும்.

நிர்வாகத்தை விட பராமரிப்பிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

திருச்சபையின் எல்லா மட்டத்திலும் எல்லோரும் திருந்த வேண்டும் என்றே இறைவன் எதிர்பார்க்கிறார் என்று எண்ணுகிறேன்.

வகுப்பில் மாணவர்களைத் திருத்த ஆசிரியர் பிரம்பைப் பயன்படுத்துவது போல

மக்களை திருத்துவதற்காகத் தான் இறைவன் வைரஸைப் பயன்படுத்துகிறார் என்று எண்ணுகிறேன்.

உயிர்த்த இயேசு மனந்திரும்பிய பாவிக்குதான் முதல் முதல் காட்சி அளித்தார்.

அதிலிருந்து பாவிகளாகிய  நாம் மனம் திரும்புவதை எவ்வளவு விரும்புகிறார் என்பது புரிகிறது.

இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

"மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள்."(கொலோ. 3:1)

"மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள்."(கொலோ. 3:1)
**  **  **   ** ** **   ** ** ** ** **
மாணவர்கள் பள்ளியில் படிக்கிறார்கள்,

ஆனால் அவர்கள் பள்ளியைச் சார்ந்தவர்கள் அல்ல,

ஏனெனில் இறுதி தேர்வு முடிந்தவுடன் பள்ளியை விட்டு வெளியேற வேண்டும்.

படித்து முடிந்தவுடன் ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேருபவர்கள்

அந்த அலுவலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல,

ஏனெனில் ஓய்வு பெற்றவுடன் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

இவ்வுலகில் நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் நாம் அந்த இடத்தை சார்ந்தவர்கள் அல்ல.

ஒரு தந்தைக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள்.

வளர்ந்தபின் மூவரும் வசதியாக  வாழ்வதற்கு ஒரு பெரிய  வீட்டைக் கட்டினார்.

ஆனால் மூன்று பிள்ளைகளும் வளர்ந்து, படித்து, பட்டம் பெற்று, வெவ்வேறு ஊர்களில் வேலையில் அமர்ந்து

அந்தந்த ஊர்களில் அவரவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொண்டார்கள்.

  தந்தை கட்டிய வீட்டில் தந்தையையும் தாயையும் தவிர வேறு யாரும் இல்லை.

மைசூர் மகாராஜா கட்டிய அரண்மனையில் அவரும் இல்லை,

அவரது பிள்ளைகளும் இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் இவ்வுலகில்  நமக்கு எந்த இடமும் நிரந்தரம் இல்லை.

இது மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொருந்தும்.

நாம் பிறந்தது இந்த உலகில் தான்.

ஆனால் நாம் பிறந்தது இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.

கொஞ்சநாள் வாழ்ந்துவிட்டு இந்த உலகை விட்டு வெளியேறவே பிறந்தோம்.

நாம் இந்த உலகில்  பிறந்தாலும்  இந்த உலகை சார்ந்தவர்கள் அல்ல.

ரயிலில் பயணம்  செய்கிறோம்அதிலிருந்து இறங்குவதற்காக.

கடைக்கு செல்கிறோம், அங்கேயே தங்குவதற்காக அல்ல.

விளையாடச் செல்கிறோம், விளையாட்டு மைதானத்திலேயே நிரந்தரமாக தங்குவதற்காக அல்ல.

அதேபோல்தான் இவ்வுலகில் மக்களாக பிறந்திருக்கிறோம்,

ஆனால் இவ்வுலகில் நிரந்தரமாக தங்குவதற்காக அல்ல.

இவ்வுலகிற்கு வந்த நாம் இங்கிருந்து இறுதியில் எங்கு செல்கிறோமோ, அதுதான் நமக்கு நிரந்தரமான இடம்.

இவ்வுலகில் நாம் நினைத்து வாழ வேண்டியது நிரந்தரமான எதிர்காலத்தை மட்டும்தான்.

இவ்வுலகில் நாம் சம்பாதிக்க வேண்டியது எதிர்கால நிரந்தர இல்லத்தில் வாழும்போது அனுபவிப்பதற்கான செல்வத்தை தான்.

நாம் இவ்வுலகை விட்டு நிரந்தரமாக செல்லும்போது

நாம் சம்பாதித்த பணம் நம் கூட வராது,

நாம் கட்டிய கட்டடங்கள் நம் கூட வராது,

நாம் ஈட்டிய புகழ் நம் கூட வராது,

நாம் வாங்கும் நிலபுலன்கள் எதுவும் நம்முடன் வராது,

நாம் உடுத்தும் உடையும் நம்மோடு வராது.

நாம் ஊட்டி வளர்க்கும் நமது உடலும் நம்மோடு வராது.

இவை எல்லாம் இவ்வுலகை  சார்ந்தவை.

இவ்வுலகைச்  சார்ந்த செல்வங்கள்

இவ்வுலக வாழ்வின் இறுதியில் நாம் மறுவுலகிற்குப் பயணமாகும் போது

நம்முடன் வராதாகையால்

அவற்றைச் சம்பாதிப்பதில் நமது முழு சக்தியையும் செலவழிப்பது முட்டாள்தனம்.

மறுவுலகிற்கு நம்முடன் வரும் ஆன்மீகச் செல்வங்களை ஈட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுவதே  புத்திசாலித்தனம்.

அதனால்தான் புனித சின்னப்பர்,

"இவ்வுலகில் உள்ளவற்றின் மீது மனத்தைச் செலுத்தாமல்   மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள்."(கொலோ. 3:1)

என்கிறார்.

என்றென்றும் நீடிக்கவிருக்கும் விண்ணுலக வாழ்விற்குத் தேவையான

ஆன்மீகச் செல்வங்களை ஈட்டுவதற்காகத்தான் இவ்வுலகில் நாம் வாழ்கிறோம்.

இவ்வுலகச் செல்வங்கள் இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு மட்டும் பயன்படும்.

ஆன்மீக செல்வங்கள் மட்டும்தான் விண்ணுலக வாழ்வில் நாம் நிரந்தரமாக அனுபவிக்க பயன்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசிப்பதாலும், 

அவருக்காகநமது  அயலானை நேசிப்பதாலும்

நேசத்திலிருந்து புறப்படும் நற்செயல்களாலும்,

நமது செப, தவ வாழ்வினாலும்,

நமது புண்ணிய வாழ்வினாலும்

நாம் இறைவனிடமிருந்து பெறும் ஆன்மீகச் செல்வங்களே

நாம் விண்ணகம் செல்லும்போது நம்மோடு வந்து,

நமக்கு நித்திய பேரின்ப வாழ்வை தந்துகொண்டிருக்கும்.

இச்செல்வங்களை ஈட்ட இறைவனது அருள்  வரம் வேண்டும்.

இவ்வருள் வரத்தை நாம் இறைவனிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்." என்றார் நம் ஆண்டவர்.

நாம் இவ்வுலக சம்பந்தப்பட்ட செல்வங்களைக் கேட்பதில் நமது பொன்னான நேரத்தை செலவழிக்காமல்

விண்ணக வாழ்விற்கு தேவையான செல்வங்களை  அள்ளிக் குவிக்க வேண்டிய வரம் கேட்டு மன்றாடுவோம்.

கேட்ட வரத்தை இறைவன் நிச்சயம் தருவார்.

அதை பயன்படுத்தி இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்வோம்

இறைவனுக்காக நம் அயலானையும் அன்பு செய்வோம்.

அயலானுக்கு நாம் செய்யும் உதவிகளை இறைவனுக்காக செய்யும்போது

அந்த உதவிகள் நமக்கு விண்ணக செல்வத்தை அபரிமிதமாக ஈட்டித் தருகின்றன.

ஆகவே நமது வாழ்வை அன்பு செயல்களிலே செலவழிப்போம்.

அன்னைத் தெரசாவைப் போல நாமும் ஏழைகளுக்கு, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வதன் மூலம்

இறை இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.

அவர் பெயரால் ஒரு சிறுவனுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தால் கூட அதற்கு இறை உலகில் சன்மானம் ஒன்று என்று  கூறினார் நம் ஆண்டவர்.

ஆண்டவர் விருப்பப்படி

பசியாய் இருப்பவர்களுக்கு,  உண்ணக் கொடுப்போம்.

. தாகமாய் இருப்பவர்களுக்கு,  தண்ணீர் கொடுப்போம்.

அன்னியனாய் இருப்பவர்களை  வரவேற்போம்.


ஆடையின்றி இருப்பவர்களுக்கு உடை  கொடுப்போம்.

நோயுற்றிருப்பவர்களை,  பார்க்கச் செல்வோம்.

.சிறையில் இருப்பவர்களைக் காணச் செல்வோம். 


இயேசுவுக்காக இவற்றை செய்தால் விண்ணகத்தில் நமது  செல்வமும், பாக்கியமும் மிகுந்திருக்கும்.

லூர்து செல்வம்.