இறைவன் நம்மோடு பேசும் வழிகள்.
உலகினராகிய நாம் இருக்கிற பொருட்களைப்
பயன்படுத்தி புதிய பொருட்களை உருவாக்குகிறோம்.
ஆனால் நித்திய காலமும் சுயமாக வாழும் சர்வ வல்லப கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து நாம் வாழும் பிரபஞ்சத்தைப் படைத்தார்.
மனிதனைப் படைத்த கடவுள் அவன் எப்படி வாழ வேண்டும் என்று வழி காட்ட அவனுள் மனசாட்சியை ஏற்படுத்தினார்.
மனசாட்சி மூலம் மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது என்பதற்கான வழியைக் காட்டினார்.
முதலில் மனிதனுடைய மனசாட்சி மூலம்
அதாவது உள்ளுணர்வு மூலம் பேசினார்.
தனக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியதைச் செய்ததால் மனிதன் பாவம் செய்தான்.
அவனைப் பாவத்திலிருந்து மீட்கவும் அவனோடு நேரடியாகப் பேசவும் அசரீரியான கடவுள் மனிதனாகப் பிறந்தார்.
அன்னை மரியாளின் மூலமாக மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு
தனது முன்மாதிரிகையான வாழ்க்கை மூலமும், நற்செய்தியை வாய் மொழியில் அறிவித்ததன் மூலமும் மனிதன் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பதற்கான வழியைக் காட்டினார்.
அதோடு மனிதனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
தனது சிலுவை மரணத்தின் மூலம் மனிதனைப் பாவத்திலிருந்து மீட்டார்.
மனிதன் மீட்பின் பயனை அடைய, அதாவது, பாவமன்னிப்புப் பெற ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்கக் கத்தோலிக்க திருச்சபையை நிறுவினார்.
உலகமெங்கும் நற்செய்தியை அறிவிப்பதும், மனிதர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை விண்ணகப் பாதையில் வழி நடத்துவதும் திருச்சபையின் பணிகள்.
இப்போது கத்தோலிக்கத் திருச்சபையின் மூலமும்,
கத்தோலிக்கத் திருச்சபையால் தரப்பட்ட பைபிளின் மூலமும்,
ஆரம்பம் முதல் செய்தது போல மனசாட்சியின் மூலமும்
இறைவன் நம்மோடு பேசுகிறார்.
தனது மரணத்துக்குப் பின் அவர் உயிர்த்து விண் எய்தி விட்டாலும் தூய ஆவியின் மூலம் திருச்சபையை வழி நடத்துவதோடு, திவ்ய நற்கருணை மூலம் நம்மோடு தொடர்ந்து வாழ்கிறார்.
கத்தோலிக்கத் திருச்சபை இயேசு இறைவனின் நற்செய்தியை உலகெங்கும் அறிவித்துக் கொண்டிருக்கிறது.
இயேசு தான் நிறுவிய திருச்சபை மூலம் உலகம் முழுவதும் தனது நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
நாம் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் செவி கொடுப்பதின் மூலமும்,
பைபிளை வாசிப்பதன் மூலமும் இறைவன் பேசுவதைக் கேட்கிறோம்.
எப்படி காந்தி என்றவுடன் மகாத்மா காந்தி என்று புரிந்து கொள்கிறோமோ
அதேபோல
திருச்சபை என்றவுடன் கத்தோலிக்கத் திருச்சபை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இராயப்பர் தலைமையில் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே இயேசுவால் நிறுவப் பட்டது.
''நீ இராயாய் இருக்கிறாய், இந்த இராயின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."
விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.
(மத்தேயு நற்செய்தி 16:28,19)
"என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்,
என் ஆடுகளை மேய்,
என் ஆடுகளைப் பேணி வளர்."
(அரு.21:15,16,17)
என்று ஆண்டவர் சீமோனைப் பார்த்துக் கூறிய வார்த்தைகளே இதற்குச் சான்று.
பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் மூலம் இயேசு பேசுகிறார்.
திருப்பலியின் போது நமது குருக்கள் வைக்கும் பிரசங்கங்கள்,
நமக்குத் தியானம் கொடுக்கும்போது அவர் ஆற்றும் மறை உரைகள்,
பாவ சங்கீர்த்தனத்தின் போது அவர்கள் கொடுக்கும் அறிவுரைகள்,
வீடுகளைச் சந்திக்கும் போது அவர்கள் கூறும் ஆலோசனைகள்,
ஆன்மீக வழிகாட்டுதலின் போது (Spiritual Direction) அவர்கள் கூறும் வார்த்தைகள்
அனைத்தும் இயேசுவின் வார்த்தைகளே.
இயேசு திவ்ய நற்கருணைப் பேழையில் இருந்து கொண்டு தனது குருக்கள் மூலமாக நம்மோடு பேசுகிறார்.
நமது ஆன்மீக வாழ்வில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் நாம் ஆலோசனை கேட்க வேண்டியது இயேசுவின் பிரதிநிதிகளான நமது குருக்களிடம்தான்.
அவர்கள் தரும் ஆலோசனை இயேசு தரும் ஆலோசனை.
இயேசுவின் ஆலோசனைப்படி நடந்தால் நமக்கு விண்ணக வாழ்வு உறுதி.
பரிசேயர்கள் இயேசுவின் வார்த்தைகளில் குறை காண்பதற்காகவே அவரிடம் பேச்சுக் கொடுப்பார்கள்.
நாம் அவர்களைப் போல நடக்கக்கூடாது.
நமது குருக்களில் நாம் இயேசுவைப் பார்க்க வேண்டும்.
பைபிள் வழியாக இயேசு நம்மோடு பேசுகிறார்.
கத்தோலிக்கத் திருச்சபை தொகுத்துத் தந்த 73 புத்தகங்கள் கொண்ட இறை வாக்குதான் பைபிள்.
நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் பைபிள் என்ற பெயரில் வைத்திருக்கும் புத்தகம் பைபிள் அல்ல.
46 புத்தகங்கள் கொண்ட பழைய ஏற்பாடும், 27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாடும் சேர்ந்தது கத்தோலிக்க பைபிள்.
ஒரு ஆளை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் ஆளை முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பைபிளுக்கு உரிய 73 புத்தகங்களில் 7 புத்தகங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அது Mr. So and so வேண்டும், அவருடைய கால் கைகள் இல்லாமல்
என்று சொல்வது போலிருக்கிறது.
அவர்களை விட்டு விடுவோம், நாம் நமது பைபிளை எப்படி வாசிக்க வேண்டும்?
பள்ளிக் கூடத்தில் பாடப் புத்தகங்களைத் தேர்வு எழுதுவதற்காகப் படிக்கிறோம்.
அதிலுள்ள விடயங்களைப் பற்றி கேட்கப்படும்
கேள்விகளுக்கு பதில் எழுதுவதற்காகப் படிக்கிறோம்.
கணித அறிவு பெற கணிதம் படிக்கிறோம்.
ஆனால் பைபிள் அறிவு பெற பைபிள் வாசிக்கவில்லை.
சாத்தானுக்கு நம்மை விட பைபிள் அறிவு அதிகம், ஆனால் அறிவினால் அவன் மீட்பு அடைய முடியாது.
நாம் பைபிளைக் Cover to cover நன்கு படித்து
கேட்கப்படும் கேள்விகளுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் அளவுக்குப் பதில் கூற அறிவு இருந்தாலும்
அந்த அறிவு மட்டும் மீட்பு அடைய உதவாது.
பைபிளை வாழ்வதற்காக வாசிக்க வேண்டும்,
பைபிளை வாழ வேண்டும்.
இயேசு மாட்டுத் தொழுவத்தில் ஏழையாகப் பிறந்து தீவனத் தொட்டியில் கிடத்தப் பட்டார் என்ற வாசிப்பு நாம் ஏழ்மையை நேசிக்கவும் ஏழையாக வாழவும் உதவ வேண்டும்.
நமக்குச் சொந்தமாக பைபிள் இருந்து பயனில்லை,
நாம் பைபிளுக்குச் சொந்தமாக வேண்டும்.
பைபிள் நம்மை வாழ வைக்க வேண்டும்.
நாம் வாசிக்க வேண்டியது புத்தகத்தை அல்ல, இறை வாக்கை.
நமக்குச் சொந்தமான வாகனத்தை நாம் விரும்பும் இடத்துக்கு ஓட்டிச் செல்வது போல
பைபிள் அது விருப்பப்படி நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்.
அவரவர் விருப்பப்படி அவரவர் பைபிளை அழைத்துச் செல்லக்கூடாது.
அவரவர் விருப்பப்படி பைபிள் வசனங்களுக்குப் பொருள் கூறக்கூடாது.
பைபிளைத் தந்த கத்தோலிக்கத் திருச்சபைக்குதான் அதற்குப் பொருள் கூறும் அதிகாரம் உண்டு.
கத்தோலிக்கத் திருச்சபை கூறும் பொருள் தான் நமது ஆன்மீக வாழ்வின் உயிர்நாடி.
இயேசு தம் உள்ளத்தில் பேசுகிறார், கூர்ந்து கவனிப்போம்.
தான் நிறுவிய திருச்சபை மூலம் பேசுகிறார், அதன்படி வாழ்வோம்
பைபிள் மூலம் பேசுகிறார், இறைவாக்கை நமது வாழ்வாக்குவோம்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு "
உலகப் பற்றற்ற இயேசுவை இறுகப் பற்றிக் கொண்டு நாமும் உலகப் பற்றை விடுவோம்.
இயேசுவின் வார்த்தைகள் அதற்குத் துணை நிற்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment