Sunday, July 20, 2025

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்லவர் நம் இறைவன்.



தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்லவர் நம் இறைவன்.

கடவுள் நன்மைத்தனத்தின் உருவம்.

God is all goodness.

நல்லதை மட்டும் நினைத்து, நல்லதை மட்டும் செய்பவர்.

மனிதனை நல்லவனாகத்தான் படைத்தார்.

ஆனால் அவன் செய்த பாவத்தின் காரணமாக கெட்டவனாக மாறி விட்டான்.

கெட்டவனாக மாறியவனை நல்லவனாக மாற்ற மீட்பின் திட்டத்தை வகுத்தார்.

மனிதர்கள் மத்தியில் தான் மீட்பின் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

அதற்காக கடவுளே மனிதனாகப் பிறக்கத் திட்டமிட்டார்.

அதற்காக ஒரு இனத்தைத் தேர்வு செய்யத் திட்டமிட்டார்.

கடவுளின் திட்டத்தில் குறை இருக்க முடியாது.

ஆனால் மனிதர்கள் குறை உள்ளவர்கள்.

தான் மனிதனாகப் பிறக்க தேர்வு செய்த இனம் இஸ்ரேல் இனம்.

இஸ்ரேல் இனத்தின் முதல் மனிதன் யாக்கோபு.

யாக்கோபை இஸ்ரேல் இனத்தின் தந்தையாக கடவுள் நித்திய காலமாகத் திட்டமிட்டு விட்டார்.

ஆனால் யாக்கோபும் ஆதாமைப் போல பரிபூரண சுதந்திரம் உள்ள மனிதன் தானே.

பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஆதாம் பாவம் செய்தது போல யாக்கோபும் பாவம் செய்தார்.

என்ன பாவம்?

அண்ணனாகிய ஏசாவைப் போல வேடமிட்டு 

தந்தையை ஏமாற்றி 

அவர் ஏசாவுக்குக் கொடுக்கத் திட்டமிட்டிருந்த ஆசீர்வாதங்களை எல்லாம் அபகரித்துக் கொண்ட பாவம்.

இந்த வரலாற்றைப் பைபிளில் வாசிக்கும் போது ஒரு கேள்வி எழும்.

ஏன் இறைவன் ஒரு ஏமாற்றுக் காரனை
 தான் மனிதனாகப் பிறக்கயிருந்த இனத்தின் தந்தையாக தேர்ந்தெடுத்தார்?

ஆனால் கேள்வி தவறு.

கடவுள் ஒரு ஏமாற்றுக் காரனை அவர் மனிதனாகப் பிறக்கயிருந்த இனத்தின் தந்தையாகத் தேர்ந்தெடுக்கவில்லை.

எப்படி ஆதாமைப் பாவம் செய்தவனாகப் படைக்கவில்லையோ

அப்படியே பாவம் செய்தவனை, தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தின் தந்தையாக தேர்வு செய்யவில்லை.

எப்படி  பரிசுத்தமானவனாகப் படைக்கப்பட்ட ஆதாம் பாவம் சேய்தாரோ

இறைவனால் தேர்வு செய்யப்பட்ட யாக்கோபு பாவம் செய்தார்.

இருவருடைய பாவத்துக்கும் கடவுள் பொறுப்பல்ல.

ஆனால்  இவர்கள் செய்த தீமையிலிருந்து கடவுளுடைய ஆற்றலை நாம் அறிகிறோம்.

என்ன ஆற்றல்?

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க முடியும் என்ற ஆற்றல்.

யாக்கோபு செய்தது தீமை.

ஆனாலும் அத்தீமையின் மூலமாக ஈசாக்கின் ஆசீர்வாதங்கள் யாக்கோபுக்கு வந்தன.

அந்த ஆசீர்வாதங்கள் அவனுடைய வாழ்வில் உதவிகரமாக இருந்தன.

"வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக! 

நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப் பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிவிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!" 
(தொடக்கநூல் 27:28,29)

இவை யாக்கோபு பெற்ற ஆசீர்வாதங்கள்.


"ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன; உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர். ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும் மூத்தவன் இளயவனுக்குப் பணிந்திருப்பான் என்றார்."
(தொடக்கநூல் 25:23)

இவை ஏற்கனவே ரெ‌பேக்காளிடம் கடவுள் கூறியிந்த வார்த்தைகள்.

எப்படி ஆதாமைப் படைக்கும் போதே அவன் பாவம் செய்வான் என்று கடவுளுக்குத்  தெரியுமோ அப்படியே யாக்கோபைப் படைக்கத் திட்டமிட்டபோதே அவன் பாவம் செய்வான் என்று அவருக்குத் தெரியும்.

ஆனால் அவருக்குத் தெரிந்ததால் அவன் பாவம் செய்யவில்லை.

அவர் தன் ஞானத்தினால் பின்னால் நடக்கப் போகின்றவற்றை அறிந்திருந்தார்.

ஆனாலும் தீமை தீமைதான். அதை நியாயப்படுத்த முடியாது.

அத்தீமையிலிருந்து கடவுள் நன்மையை வரவழைத்தார்.

யாக்கோபுக்குப் பிறந்த 12 புதல்வர்களின் வழி வந்தவர்கள் இஸ்ரேல் மக்கள்.  

இயேசு நம்மை எப்படி மீட்டார்?

தனது பாடுகளாலும், சிலுவை மரணத்தினாலும்.

அவரது பாடுகளுக்கும் மரணத்துக்கும் காரணம் யார்?

யூத மதத் தலைவர்கள்.

அவர்கள் செய்தது மிகப்பெரிய பாவம்.

மெசியாவைக் கொன்றது மிகப்பெரிய தீமை.

ஆனாலும் இந்தத் தீமையிலிருந்து தானே மனித குல மீட்பு என்ற மகத்தான நன்மையை இயேசு வரவழைத்தார்!

 "கடவுள் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்லவர்."

ஆனால் இதற்கு  கடவுள் பாவத்தை அங்கீகரிக்கிறார் என்று பொருள் அல்ல.

மாறாக, கடவுளின் ஞானமும், வல்லமையும் அளப்பரியது என்றுதான் பொருள்.

 மனிதர்களின் குறைகள், தவறான தேர்வுகள், ஏன் அவர்களின் தீய நோக்கங்கள் கூட, அவரது  திட்டங்களை நிறைவேற்றுவதைத் தடுக்க முடியாது. 


மாறாக, அவற்றைக்கூட அவர் தன் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


யாக்கோபின் ஏமாற்று வேலை மூலமாக தந்தையின் ஆசீர்வாதம் அவனுக்குக் கிடைத்தது. அவனது ஏமாற்று வேலையை ஒரு பெரிய நன்மைக்குக் கடவுள் பயன்படுத்திக் கொண்டார்.

யூத மதத் தலைவர்களின் கொலைவெறி மூலம் இயேசுவின் சிலுவை மரணம் நிகழ்ந்தது.

அவர்கள் செய்த தீமையை நம்மை மீட்பதற்கு‌க் கடவுள்  பயன்படுத்திக் கொண்டார்.

மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்டது தெய்வீக ஞானம்.

இந்த உண்மை நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. 

மனிதச் சமுதாயத்தில் எப்பேர்ப்பட்ட இருண்ட சூழ்நிலைகள் வந்தாலும்,

 கடவுளால் அவற்றிலிருந்து நன்மையை வரவழைக்க முடியும்.

தனது திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

நமது பாவங்களைவிட கடவுளின் ஞானமும் வல்லமையும் பெரியன.

இன்றும் கூட கிறித்தவத்துக்கு எதிராக நமது மத்திய அரசே செயல்படுகிறது.

இதிலிருந்து எப்படி நன்மையை கொண்டு வருவது என்று கடவுளுக்குத் தெரியும்.


. லூர்து செல்வம்

No comments:

Post a Comment