Wednesday, July 16, 2025

துன்ப வேளையிலும் இன்ப வேளையிலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.



துன்ப வேளையிலும் இன்ப வேளையிலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

நாம் வளமாக வாழ வேண்டும் என்று இறைவன் விரும்பினால் 
"உமது விருப்பப்படியே நடக்கட்டும் ஆண்டவரே!"  என்கிறோம்.

"உமது சித்தம் எனது பாக்கியம் 
என்று மகிழ்ச்சி பொங்க என்கிறோம்.

நாம் துன்பப்பட வேண்டும் என்பது இறைவனது சித்தமானாலும்

வளமான காலத்தில் இருந்த மகிழ்ச்சி அப்படியே தொடர வேண்டும்.

நமது மகன் பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று பெற்றால்,

நாம் கூறும் 
"இறைவா உமக்கு, நன்றி." .

மிகக் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தாலும் 

 கூறப்பட வேண்டும்.

நாம் நன்றி சொல்வது மகனுடைய செயல்பாட்டுக்காக அல்ல, ‌இறைவனின் சித்தம் நிறைவேறியதற்காக.

நாம் பிறந்த பிறகுதான் நமது பெற்றோர் யாரென்று நமக்குத் தெரியும்.

ஆனால் நாம் எந்த நாட்டில், எந்த ஊரில், யார் யாருக்கு, எப்படிப் பிறக்க வேண்டும் என்பது‌ இறைவனுடைய நித்திய காலத் திட்டம்.

அவரன்றி அணுவும் அசையாது.

நாம் இயங்குவது இறைவன் அருளால்.

நம்மை இயக்குவதற்கு இறைவனுக்கு ஏன்  நன்றி கூற வேண்டும்?

இதற்கு இரண்டு படிநிலைகள் உள்ளன

முதலில் ஒரு ஒப்புமையைக் கூறுவோம்.

சிறு பிள்ளைகளாக இருக்கும் போது எதற்காக சாப்பிட்டோம்?

பசித்தது, பசியை நீக்க சாப்பிட்டோம்.

பசித்தால் அழுவோம், அம்மா பால் தருவார்கள்.

இப்போதும் பசி இருக்கிறது, அதோடு வேறொரு காரணமும் இருக்கிறது.

எதற்காக பிரியாணியை விரும்பிச் சாப்பிடுகிறோம்?

அதன் ருசிக்காக.

பசியில்லா விட்டாலும் ருசியான உணவைச் சுவைத்துச் சாப்பிடுகிறோம்.

கடவுள் நம்மைப் படைத்தது அவருடைய நலனுக்காக அல்ல.

அவர் சுயமாக எல்லா நன்மைகளாலும் நிறைந்தவர்.

நம்மால் அவருடைய அளவில்லாத நலனை அதிகரிக்க முடியாது.

குறைந்த நீருள்ள பாத்திரத்தை நிறப்பலாம்.

நீர் நிறைந்த பாத்திரத்தில் நம்மால் நீரை ஊற்ற முடியாது.

ஆரம்பத்தில் நமது நலனுக்காகத்தான் அவருக்கு நன்றி கூறுகிறோம்.

அவர் நம்மைப் படைத்ததும் நமது நன்மைக்காக.

நாம் அவருக்கு நன்றி கூறுவதும் நமது நன்மைக்காகத்தான்.

நாம் இறைவனுக்கு நன்றி உள்ளவர்களாக வாழ்ந்தால் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

இறைவனை நன்றியோடு எண்ணி எண்ணி சுவைக்க ஆரம்பித்து விட்டால் பிறகு அவரை அவருக்காகவே நன்றியோடு நேசிக்க ஆரம்பிப்போம்.

அவருடைய நன்மைத்தனத்தை எண்ணிப் பார்த்து, அவரது பண்புகளால் ஈர்க்கப்பட்டு அதற்காகவே அவரை நேசிப்போம்.

புனிதர்கள் இறைவனை இறைவனுக்காகவே நேசித்தார்கள்.

ஆகவேதான் நாம் நமக்கு என்ன நேர்ந்தாலும் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

பழைய ஏற்பாட்டு யோபு அவருடைய வளங்களை எல்லாம் இழந்த போதும்


"என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; 

அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்;

 ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். 

ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" என்றார். 
(யோபு 1:21)

தன் உடமைகளை எல்லாம் இழந்த போதும் அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறார்.

நமது வாழ்வில் துன்பங்கள் தற்செயலாக வருவதில்லை.

இறைவனுடைய அனுமதி இன்றி எந்த துன்பமும் நமக்கு நேராது.

உலகில் நம்மைப் பிடிக்காத சிலர் நமக்குத் துன்பத்தைத் தந்திருக்கலாம்.

கடவுளுக்குத் தெரியாமல் நமக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது.

கடவுள் அதைத் தடுக்காவிட்டால் நமது நன்மைக்காக அதை அவர் அதை அனுமதிக்கிறார் என்று அர்த்தம்.

துன்பம் ஒரு தீமை அல்ல.
பாவம் மட்டும் தான் தீமை.

இறைவனின் கட்டளையை மீறி நாம் செய்வது பாவம்.


நம்முடைய விருப்பம் கடவுளுடைய விருப்பத்தோடு ஒன்றாக இருக்கும் போது, நாம் பாவம் செய்ய மாட்டோம். 

அவர் நமக்கு எதைக் கொடுத்தாலும்,

 வளத்தைக் கொடுத்தாலும்  வறுமையைக் கொடுத்தாலும்,

 சுகத்தைக் கொடுத்தாலும்  நோயைக் கொடுத்தாலும்

வெற்றியைக் கொடுத்தாலும்  தோல்வியைக் கொடுத்தாலும்,

 வாழ்வைக் கொடுத்தாலும்  மரணத்தைக் கொடுத்தாலும் 

 நன்றியுடன் ஏற்றுக்கொள்வோம்.

ஏனெனில் அவர் நல்லவர்.

நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் நோய் நொடியால் துன்பப் படுகிறோமா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் வளமாக இருக்கிறோமா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் வறுமையில் வாடுகிறோமா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் விபத்தில் மாட்டிக்கொண்டோமா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் சுகமாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் மரணம் அடைவது உறுதியா?
இறைவன் போற்றப் படுவாராக.

நமது விருப்பம் இறைவனுடைய விருப்பத்தோடு ஒன்றித்து இருந்தால்,

மரணத்தால் கூட நம்மை அவரிடமிருந்து பிரிக்க முடியாது.

என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

நமக்கு ஏதாவது கிடைக்கும் என்பதற்காக அல்ல, அவரது நன்மைத்தனத்தால் (Goodness) ஈர்க்கப்பட்டு அவருக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment