Monday, July 14, 2025

இறைவன் வழிகள் அதிசயமானவை.



இறைவன் வழிகள் அதிசயமானவை.

பைபிளைக் கூர்ந்து வாசித்தால் சில நிகழ்வுகளுக்கு நம்முடைய பார்வையிலிருந்து விளக்கம் கொடுக்க முடியாது.

இறைவனுடைய பார்வையிலிருந்து (From the point of view of God) பார்த்தால்தான் புரியும்.

இறைவனின் வழிகள் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டவை,
அதிசயமானவை.

நமது வீட்டில் brake பிடிக்காத ஒரு சைக்கிள் இருக்கிறது.

brake பிடிக்காது என்று வீட்டில் அனைவருக்கும் தெரியும்.

நமது மகன் அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் ப்ரேக் பிடிக்காத காரணத்தினால் சைக்கிளோடு கீழே விழுந்து காயத்தோடு வீட்டுக்கு வருகிறான்.

நமது முதல் கேள்வி எதுவாக இருக்கும்?

"ஏண்டா ப்ரேக் பிடிக்காது என்று தெரிந்தும் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனாய்?"

இதுதான் நமது பார்வை.

பாவம் செய்வான் என்று தெரிந்தும் ஏன் கடவுள் மனிதனைப் படைத்தார்?

கடவுள் அளவில்லாத அன்புள்ளவர்.

அன்பு காரணமாக தன்னைப் போல், தன் சாயலில் மனிதனைப் படைக்க விரும்பினார்.

கடவுள் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

துவக்கம் இல்லாத மனிதனைப் படைக்க முடியாது.

படைக்கும் போதே துவக்கம் வந்து விடுகிறது.

ஆகவே முடிவில்லாத மனித ஆன்மாவைப் படைத்தார்.

பரிபூரண சுதந்திரமாகிய‌ தன் பண்பை அவனோடு பகிர்ந்து கொண்டார்.

பரிபூரண சுதந்திரத்தில் அவர் குறுக்கிட மாட்டார், குறுக்கிட்டால் பரிபூரணம் போய்விடும்.

சுதந்திரத்தை மனிதன் பாவம் செய்யப் பயன்படுத்துவான் என்று கடவுளுக்குத் தெரியும்.

ஆகவே அன்பின் மிகுதியால் அவனைப் படைக்கும் திட்டத்தோடு அவனை மீட்கும் திட்டத்தையும் போட்டார்.

இரண்டு திட்டங்களும் நித்தியமானவை.

அன்பின் மிகுதியால் மனிதனைப் படைத்த கடவுள் அதே அன்பின் மிகுதியால் மனிதனைப் பாவத்திலிருந்து மீட்க மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

மனிதன் மீது உள்ள அன்பின் மிகுதியால்தான் பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுள் பிறப்பும் இறப்பும் உள்ள மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

அவரது அன்பின் மிகுதியை நமக்குக் காட்ட அவர்‌ தேர்ந்தெடுத்த வழி நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது.

தனது பாடுகள் மூலமும், சிலுவை மரணத்தின் மூலமும் தனது அன்பின் மிகுதியை நமக்குப் புரிய வைத்தார்.
                   ****
கடவுள் மனிதனாகப் பிறக்க தேர்ந்து கொண்டது  யாக்கோபின் வம்சம்.

ஈசாக்குக்கு இரண்டு பிள்ளைகள் ,
ஏசா, யாக்கோபு.

யாக்கோபை இஸ்ரேல் இனத்தின் தந்தையாக இறைவன் தேர்வு செய்தார்.

தேர்வு செய்யப்பட்ட யாக்கோபு பாவம் செய்தார்,  மனித இனத்தின் முதல் தந்தையாகப் படைக்கப்பட்ட ஆதாம் படைக்கப்பட்ட பின் பாவம் செய்ததைப் போல.


யாக்கோபு தன் தந்தையை ஏமாற்றி அவர் ஏசாவுக்காக வைத்திருந்த ஆசீர்வாதங்களைக் கைப்பற்றினார். 

அவர் செய்த பாவத்துக்காக அவரை இறைவன் தள்ளி விடவில்லை, மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

பாவிகளாகிய நம்மையும் இறைவன் மன்னிப்பார் என்பதற்கு இது ஒரு முன் அடையாளம்.

பாவிகளைத் தேடித்தானே இயேசு உலகுக்கு வந்தார்!

நாம் இயேசுவிடம் மன்னிப்புக் கேட்போம்.

யாக்கோபின் பன்னிரு புதல்வர்களுள் ஒருவர் யூதா.

யூதாவின் கோத்திரத்தில் தான் இயேசு பிறந்தார்.

யூதாவில் ஆரம்பித்து தாவீது வரை வம்ச பரம்பரை நான்கு பெண்கள் வருகிறார்கள்.

தாமார், ராகாப், ரூத், பத்சேபா.

இவர்களில் ரூத்தைத் தவிர மற்ற மூவரும் பாவிகள்.

தாமார் தனது மாமனார் யூதா மூலமாக அவருக்குத் தெரியாமல் அவரது மகனைப் பெற்றவள்.

ராகாப் ஒரு கானானிய விபச்சாரி.

யூதர்கள் எரிக்கோ நகரைக் கைப்பற்ற உதவினாள்.


இவர் சல்மோன் என்ற யூதரை மணந்து போவாஸைப் பெற்றார்

. போவாஸ் ரூத்தின் கணவனும், தாவீது மன்னரின் தாத்தாவுமாவார். 

ஒரு கானானிய விபச்சாரியாக இருந்த ராகாப், மெசியாவின் வம்சாவளியில் சேர்க்கப்பட்டது, கடவுளின் திட்டம்.

பத்சேபாவைப் பற்றிக் குறிப்பிடும் போது மத்தேயு,

" ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்." ‌என்று எழுதுகிறார்.
(மத்தேயு நற்செய்தி 1:6)

தாவீது அரசர் மனம் திரும்பிய பாவி.

இப்போது ஒரு கேள்வி எழும்.

தன்னைப் பெற்ற தாயைப் பாவ மாசில்லாமல் காப்பாற்றிய பரிசுத்தராகிய இயேசு 

ஏன் பாவிகள் நிறைந்த ஒரு வம்சாவளியில் பிறந்தார்?

இயேசு பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்தவர்.

சாக்கடைக்குள் விழுந்து விட்ட ஒருவரைக் காப்பாற்ற சாக்கடைக்குள் குதித்து தானே ஆக வேண்டும்.

இயேசு பாவிகளை நேசித்தார் என்பதற்கு பாவிகள் நிறைந்த வம்சாவளியில் பிறந்ததே ஒரு ஆதாரம்.

மீட்பு யூதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும், மக்களுக்கும் உரியது என்பதையும், 

கடவுள் குறைபாடுள்ள மனிதர்களைக்கூட தமது நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்பதையும்

வம்சாவளியில் இடம்பெற்ற பாவிகளிலிருந்து அறிகிறோம்.

 இயேசுவின் வாழ்வின் போது அவரைச் சந்தித்த எந்த பாவியையும் அவர் சபிக்கவில்லை.  மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

கல்லால் எறிந்து கொல்லப் படுவதற்காகப் பரிசேயர் அழைத்து வந்த பெண் அதற்குச் சான்று.

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட நல்ல கள்ளனும் ஒரு சான்று.

உலகில் உள்ள அத்தனை பெரிய பாவங்களையும் விட இயேசுவின் இரக்கம் பெரியது.

சுகமில்லாத பிள்ளையை மற்ற பிள்ளைகளைவிட நேசிக்கும் தாயைப்போல இயேசு பாவிகளை அதிகம் நேசிக்கிறார்.

நல்ல ஆடுகளை மேய விட்டு விட்டு நொண்டி ஆட்டைக் கையில் வைத்திருக்கும் ஆயனைப் போல இயேசு பாவிகளாகிய நாம் மனம் திரும்புவதற்காக‌ நம்மை அவரது பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.

நோயாளிகளைத் தேடும் மருத்துவரைப் போல இயேசு பாவிகளாகிய நம்மைத் தேடுகிறார்.

இதற்காக அவர் கையாளும் முறைகள் நமக்குப் புரியாமல் இருக்கலாம்.

நமக்குக் துன்பங்கள் வருவதே நம்மை மனம் திருப்புவதற்காகத் தான்.

அவரது வழிகள் அதிசயமானவை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment