Tuesday, July 15, 2025

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். (மத்.7:7)



கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். (மத்.7:7)


"தம்பி, உட்கார். என்ன பிரச்சினை?"

"தெரியல, டாக்டர்.  உடம்புக்கு சரியில்லை. என்ன பிரச்சினைன்னு தெரியல.'

"உன்னுடைய உடம்புக்கு என்ன பிரச்சினைன்னு உனக்கே தெரியலையா?"

"உடம்பு என்னுடையதாக இருக்கலாம். ஆனால் அதை நான் உண்டாக்கவில்லையே. என்னால் 
கை, கால், தலை ஆகியவற்றைத் தான் பார்க்கவே முடியும்.

என் முகத்தைத் கூட என்னால் பார்க்க முடியாது. 

உடலுக்கு உள்ளே உள்ள உறுப்புகள் எது எது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

பிரச்சினை அவற்றில்தான் இருக்க வேண்டும்."

"என்னாலும் அவற்றைப் பார்க்க முடியாது. Scan எடுத்துப் பார்ப்போம்."

"மன்னிக்க வேண்டும். நீங்கள் இது விடயமாக நான் பார்க்கும் நான்காவது டாக்டர். மற்ற மூவரும் நீங்கள் சொன்னபடி தான் சொன்னார்கள். மூவரும் scan எடுத்தார்கள்."

"என்ன சொன்னார்கள்?"

"டாக்டர், ஐந்தும் மூன்றும் எத்தனை என்று யாரிடம் கேட்டாலும் எட்டு என்று தான் சொல்வார்கள்.
யாராவது ஒன்பது என்று சொன்னால் அவருக்குக் கணக்குத் தெரியாது என்று அர்த்தம் ""

"அதாவது மூன்று பேரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள். யாரும் உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை.

அப்போ என்னாலும் கண்டுபிடிக்க முடியாது என்கிறாய். அப்படித்தானே."

"அப்படியேதான்."

"பிறகு ஏன் என்னிடம் வந்தாய்?"

'அது என்னுடைய அறியாமை."

"அப்போ ஒன்று செய். எல்லாம் அறிந்தவர் கடவுள் மட்டும் தான்.

முழுப் பாரத்தையும் அவர்மேல் போட்டு விடு.  டாக்டர் என்ற முறையில் நானும் பார்க்கிறேன். ஆனால் கடவுள் நினைத்தது தான் நடக்கும்."

"சரி, டாக்டர் அப்படியே செய்கிறேன்."
                  ************

சுகம், சுகமின்மை என்றால் நாம் நினைப்பது நமது உடலை மட்டும் தான்.

உடல் உறுப்புகள் பிரச்சினை இல்லாமல் இயங்கினால் நாம் சுகமாக இருக்கிறோம், பிரச்சினை ஏற்பட்டால் நமக்குச் சுகமில்லை என்பது நமது எண்ணம்.

ஆனால் நம்மைப் படைத்த கடவுள் நமது உடலை மட்டும் படைக்கவில்லை.

உடலையும் ஆன்மாவையும் படைத்தார்.

நமது உடலை உயிரோடு வாழ வைப்பது ஆன்மா தான்.

ஆன்மா பிரிந்து விட்டால் உடலால் அசையக்கூட முடியாது. அது பிணமாகிவிடும்.

உண்மையில் நாம் என்றால் நமது ஆன்மா தான்.

ஆனால் உடலைப் பற்றி அக்கறை எடுக்கும் நாம் ஆன்மாவைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

உடலுக்கு ஒரு சிறிய நோய் வந்தாலும் டாக்டரிடம் ஓடுகிறோம்.

ஆன்மாவுக்கு நோய் வந்தால்?

பாவம் தான் ஆன்மாவுக்கான நோய்.

ஆன்மா பாவத்தில் விழ நேரிட்டால் அதிலிருந்து சுகம் பெற கடவுளிடம் ஓடுகிறோமா?

கடவுளை நோக்கி 'ஓட' வேண்டிய அவசியம் இல்லை, அவர் எப்போதும் நம்முடன் தான் இருக்கிறார்.

நமது பாவங்களுக்காக மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்கிறோமா?

அவர் கேட்டுக் கொண்டபடி அவருடைய பிரதிநிதியாகிய குருவானவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோமா?

நாம் செய்யும் ஆன்மீக செயல்களில் கூட உடல் மட்டும் தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.

செபமாலை செபிக்கும்போது கை செபமாலை மணிகளை உருட்டுகிறது.

வாய் செபத்தைச் சொல்கிறது.

மனம் தியானிக்கிறதா?

திருப்பலிக்குப் போகும் போது உடல் கோவிலில் தான் இருக்கிறது.

கண் பீடத்தின் மீது தான் இருக்கிறது.

காதில் பிரசங்கம் விழுகிறது, செபம் விழுகிறது, பாட்டு விழுகிறது.

மனம்?

பிரசங்கம் எப்போது முடியும்?
பூசை எப்போது முடியும்?
எவ்வளவு கறி வாங்கலாம்?
TV யில் என்ன‌படம் போடுவான்?

என்று சுற்றிக் கொண்டிருந்தால்,

தண்ணீர் மேல் படாமல் குளித்தால் உடலுக்கு எப்படி இருக்குமோ அப்படி ஆன்மாவுக்கு இருக்கும்.

உடல் நலமாக இருக்க வேண்டுமென்றால்
 சத்துள்ள ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும்.

ஆன்மா  நலமாக இருக்க வேண்டுமென்றால் அதற்குக் கொடுக்க வேண்டிய சத்துள்ள உணவு செபமும், நற் செயல்களும்.

செபத்தின் மூலம் ஆன்மா இறைவனோடு ஒன்றித்திருக்கும்
நற் செயல்கள் மூலம் நாம் நமது அயலானோடு ஒன்றித்திருக்கும்.

இறையன்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிறரன்பும்.

இயேசு தனது பொது வாழ்வின் போது சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார். 

ஒவ்வொரு முறை குணமாக்கும் போதும் அவர் கூறிய வார்த்தைகள், "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

அடுத்து "உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன."

அவ்வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.

நம்மிடமும் விசுவாசம் இருந்து நாம் பாவமில்லாமல் இருந்தால் நமது உடல் நோயும் குணமாகும்.

டாக்டரைப் பார்க்க வேண்டாமா?

டாக்டரைப் பார்த்தாலும் மருந்து சாப்பிட்டாலும் குணமளிப்பது விசுவாசமே.

"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.

என்ன பொருள்?

நம்பிக்கையோடு செபிக்கும் போது என்ன நடந்தாலும் நல்லதுதான்.

நலம் என்ற வார்த்தைக்கு லௌகீகத்தில் பொருள் வேறு,  ஆன்மீகத்தில் பொருள் வேறு.

லௌகீகத்தில் நமது உடல் 
உடல் சார்ந்த நோய் நொடிகள் இன்றி வாழ முடிவது நலம்.

ஆன்மீகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று படைக்கப்பட்டோமோ அப்படி வாழ முடிவது நலம்.

எங்கு வாழ்ந்தாலும் நாம் இறை உறவுடன் வாழ்வதுதான் நலமான வாழ்வு.

இவ்வுலகில் மட்டுமல்ல மறுவுலகில் இறை உறவுடன் வாழ்வதும் நலமான வாழ்வு தான்.

"நம்புங்கள், செபியுங்கள், நலமுடன் வாழ்வீர்கள்.

புனித யோசேப்பை எடுத்துக் கொள்வோம்.

இயேசு திருக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே யோசேப்பு இயேசுவின் மடியில் தலை வைத்து மரித்தார்.

இயேசு ஏன் அவரை வாழ வைக்காமல் இறக்க விட்டார்?

கேள்வி தவறு.

இயேசு அவரை  வாழ வைத்தார், நித்திய பேரின்ப வாழ்வு.

இப்போது மோட்சத்தில் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவ்வுலகில் வாழ்வதும் வாழ்வு தான், மறுவுலகில் வாழ்வதும வாழ்வுதான்,

ஒரு வித்தியாசம்,

இவ்வுலக வாழ்வு தற்காலிகமானது,

மறுவுலக வாழ்வு நிலையானது.

ஒரு அப்பாவுக்கு இரண்டு பிள்ளைகள்.

ஒரு நாள் அவர் இரண்டு பிள்ளைகளையும் அழைத்து,

"இந்த பீரோ உள்ளே ஏராளமாக தங்க நகைகளும், பணமும் உள்ளன.

எதை வேண்டுமானாலும் கேளுங்கள். 

யார் அதிகம் கேட்கிறார்களோ அவர்களுக்கு கேட்டதைக் கொடுப்பேன்."

மூத்தவன் கேட்டான். 

"எனக்கு ஆயிரம் பவுன் நகையும், பத்து இலட்சம் பணமும் கொடுங்கள்."

இளையவன் கேட்டான்,

"எனக்கு பீரோ சாவியைக் கொடுங்கள்."

அப்பா சாவியைக் கொடுத்து விட்டார்.

மோட்சம் நமக்கு வேண்டுமா?

கடவுளிடம் விசுவாசத்தைக் கேட்போம்.

அதுதான் மோட்ச வாழ்வுக்கான சாவி.

விசுவாசம் இருந்தால் இவ்வுலகிலும் நலமாக வாழலாம், மறுவுலகிலும் நலமாக வாழலாம்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்."

"விசுவாசத்தைத் தாரும். அதுவே போதும்."

விசுவாசத்தினால் எதையும் சாதிக்கலாம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment