தன்னை அறிவது எப்படி?
பள்ளிக்கூடத்தில் முதல் முதல் நம்மைச் சேர்க்கும் போது ஒரு விண்ணப்ப படிவம் கொடுப்பார்கள், பூர்த்தி செய்வதற்காக.
முதலில் நமது பெயரை எழுத வேண்டியிருக்கும்.
அதாவது நாம் பிறந்தவுடன் மற்றவர்கள் நமக்கு வைத்த பெயரை.
ஆனால் நாம் பிறந்தவுடன் என்று சொல்வது உண்மை அல்ல.
நாம் பிறக்கவில்லை, பெறப்பட்டோம். (We were born. Passive voice.)
நம்மைப் பெற்றவர்கள் வைத்த பெயரைத்தான் நமது பெயர் என்று சொல்லிக் கொள்கிறோம்.
நாமே நமக்கு உரியவர்கள் அல்ல.
நம்மை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தவர் கடவுள்.
நம்மைப் பெற்றவர்கள் ஏற்கனவே கடவுளால் படைக்கப்பட்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும்.
விண்ணப்ப படிவத்தில் எழுதப்பட வேண்டிய மற்ற விபரங்களும் மற்றவர்கள் நமக்குத் தந்தவை தான்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களாவது நம்மைப் பற்றி ஏதாவது சொல்லித் தருவார்களா?
நாம் உலகுக்கு வருமுன்பே மற்றவர்கள் பேசியதைத்தான் பேச எழுத வேண்டிய மொழியாக நமக்குத் சொல்லித் தருவார்கள்.
மற்ற பாடங்களும் அப்படித்தான்.
மொழியறிவு, கணக்கு, அறிவியல், வரலாறு புவியியல் போன்ற பாடங்களில் அறிவு பெறுவது லௌகீக வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கலாம்,
ஆன்மீக வாழ்க்கைக்கு அது கொஞ்சம் கூட பயன்படாது.
இறைவனைப் பற்றிய ஞானமும், நமது ஆன்மாவைப் பற்றிய ஞானமும்தான் ஆன்மீக வாழ்க்கைக்கு அத்தியாவசியம்.
அறிவு பெறுதல் என்றால் தெரிந்து கொள்வது.
அறிவு மட்டும் ஆன்மீக வாழ்வுக்குப் பயன்படாது.
கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொள்வது மட்டும் ஆன்மீக வாழ்வுக்குப் பயன்படாது.
கடவுள் இருக்கிறார் என்று சாத்தானுக்கு நம்மை விட நன்கு தெரியும். தெரிந்து என்ன பயன்?
அறிவை ஆன்மீக வாழ்வு வாழ பயன்படுத்தத் தெரிவது ஞானம்.
கடவுளை அறிந்து, அறிவை அவரை அன்பு செய்து, அவருக்குச் சேவை செய்யப் பயன்படுத்துவதுதான் ஞானம்.
தூய ஆவியின் வரங்களுள் முதன்மையானது ஞானம்.
சாத்தானிடம் கடவுளைப் பற்றிய அறிவு இருந்தது, ஞானம் இல்லை.
சாத்தான் கடவுளைப் பற்றிய அறிவை அவருக்கு எதிராக மனிதர்களைத் தூண்டி விடப் பயன்படுத்துகிறான்.
ஏவாளை விலக்கப்பட்ட கனியைச் சாப்பிடத் தூண்டியவன் அவன்தான்.
இயேசுவுக்கு எதிராக பரிசேயர்களையும், யூத மதத் தலைவர்களையும், யூதாசையும் தூண்டியவன் அவன்தான்.
இன்று நம்மைப் பாவம் செய்யத் தூண்டுபவனும் அவன்தான்.
ஆன்மீக வாழ்வு வாழ்வதற்கு கடவுளைப் பற்றிய ஞானமும் வேண்டும், நம்மைப் பற்றிய ஞானமும் வேண்டும்.
இயேசு கடவுளைப் பற்றிய ஞானத்தை கத்தோலிக்கத் திருச்சபையின் போதனை மூலமும், வழி நடத்துதலின் மூலமும் நமக்குத் தருகிறார்.
இயேசுவின் சீடர்களாகிய குருக்கள் மூலம் தேவத் திரவிய அனுமானங்களையும், அவற்றின் மூலம் ஞானம் முதலான வரங்களின் ஊற்றாகிய தூய ஆவியையும் நாம் பெறுகிறோம்.
கத்தோலிக்கத் திருச்சபையின் போதனையை ஏற்று, அதை நமது
வாழ்வாக்க தூய ஆவியின் மூலமாக நாம் பெறும் ஞானம் உதவுகிறது.
நமது அன்னை மரியாளை "ஞானம் நிறை கன்னிகையே" என்று அழைக்கிறோம்.
ஏனெனில் அவள் வாழ்நாள் முழுவதும் தூய ஆவியால் தான் வழி நடத்தப் பட்டாள்.
கடவுளைப் பற்றிய ஞானத்தைப் பெற திருச்சபை உதவுகிறது.
நம்மைப் பற்றிய ஞானத்தைப் பெற?
கடவுள் உதவுகிறார்.
நாம் திரு முழுக்குப் பெற்ற போது திரி ஏக இறைவன் நமது ஆன்மாவில் குடியேறி விட்டார்.
நமது ஆன்மாவில் குடியிருக்கும் இறைவனை ஆழ் நிலைத் தியானத்தின் மூலம் (contemplative meditation.) உற்று நோக்க வேண்டும்.
தாய்த் திருச்சபை அவரைப் பற்றி கூறிய பண்புகளைத் தியானிக்க வேண்டும்.
அவர் நம்மைத் தனது சாயலில் படைத்தார்.
அப்படியானால் கடவுள் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகள் நம்மிடம் இருக்க வேண்டும்.
கடவுளின் பண்புகளை ஒவ்வொன்றாகத் தியானித்து அவற்றை எந்த அளவுக்கு நாம் பிரதிபலிக்கிறோம் என்பதை ஆராய்ந்தால் நமது உண்மையான நிலை நமக்குப் புரியும்.
உதாரணத்துக்குச் சில பண்புகளைப் பார்ப்போம்.
முதல் பண்பு கடவுள் இருக்கிறார், நாமும் இருக்கிறோம்.
ஆனால் கடவுள் நித்தியர், துவக்கமும் முடிவும் இல்லாதவர்.
நாம் துவக்கமும் உள்ளவர்கள்.
நமது தாயின் வயிற்றில் உற்பவிக்கும் முன் நாம் ஒன்றுமில்லாதவர்கள்.
(We were nothing)
கடவுளின் உதவியின்றி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மை நமக்குப் புரிய வரும்.
கடவுள் சர்வ வல்லவர், அவருடைய அருள் இன்றி நாம் சுயமாக ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையும் நமக்குப் புரிய வரும்.
ஒவ்வொரு அசைவுக்கும் நாம் இறைவனைச் சார்ந்திருக்கிறோம்.
இந்த உண்மை நமக்குப் புரிந்து விட்டால் நம்மிடம் ஞானம் பிறந்து விட்டது, நமது ஆன்மீக வாழ்வு ஆரம்பித்து விட்டது.
இந்த ஞானம் பிறந்து விட்டால் நாம் வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் இறைவனின் உதவியை நாட ஆரம்பித்து விடுவோம்.
அதாவது இறைவனோடு வாழ ஆரம்பித்து விடுவோம்.
நல்ல
சுய நினைவோடு இறைவனைச் சார்ந்து வாழ்பவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள்.
அன்பு என்ற பண்பை எடுத்துக் கொள்வோம்.
கடவுள் நம்மை அன்பு செய்கிற அளவுக்கு நாம் அவரையும் நமது பிறனையும் அன்பு செய்கிறோமா?
கடவுள் தனது அன்பின் மிகுதியால் பாவிகளாகிய நம்மீது இரங்கி, நமக்காக மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
நாம் நமது அன்பின் காரணமாக கடவுளுக்காக வாழ்வதற்காக என்ன தியாகம் செய்திருக்கிறோம்?
நமது அயலானுக்கு உதவ என்ன தியாகம் செய்திருக்கிறோம்?
கடவுள் தனது அன்பின் காரணமாக நமது பாவங்களை மன்னித்தார்.
நாம் யார் யாருடைய குற்றங்களை மன்னித்திருக்கிறோம்?
இப்படி ஒவ்வொரு கேள்யாக நம்மையே கேட்டு அவற்றுக்கு விடை காண முயன்றால் தூய ஆவி நமது உண்மை நிலையை நாமே உணர நமக்கு உதவி செய்வார்.
நமது அயலானோடு பழகும் போதெல்லாம் என் இடத்தில் இயேசு இருந்தால் என்ன செய்வார் என்று நம்மையே கேட்டுப் பார்த்து கிடைக்கும் பதில்படி நாம் செயல் பட்டால் நாம் இயேசுவை முழுமையாகப் பிரதிபலிப்போம்.
விண்ணகப் பாதையில் இயேசுவோடே நடந்து விண்ணக வாழ்வுக்குள் நுழைவோம்.
இயேசுவோடு கைகோர்த்து நடப்போம்.
அவரோடு ஒன்றித்து நித்திய காலமும் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment