Thursday, July 17, 2025

"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." (மத்தேயு நற்செய்தி 22:37)



 "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." 
(மத்தேயு நற்செய்தி 22:37)


நம்மிடம் இருப்பது ஒரு இருதயம், ஒரு உள்ளம், ஒரு மனம்.

நமது முழு இருதயத்தையும், முழு உள்ளத்தையும், முழு மனதையும் இறைவனை அன்பு செய்யப் படுத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறார்.

இந்த வசனத்தைச் சிந்திக்காமல் கேட்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழும்.

நம்மிடம் உள்ள அத்தனை ஆற்றல்களையும் கடவுளுக்குக் கொடுத்து விட்டால் நம்மை    எதை வைத்து அன்பு செய்ய?

நம்மை அன்பு செய்யா விட்டால் 

"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்ற கட்டளையை எப்படி நிறைவேற்ற?

ஆனால் சிறிது சிந்தித்தால் இந்த கேள்விகள் எழாது.

அனைத்தையும் படைத்த கடவுள் அனைத்திலும் இருக்கிறார்.
அனைத்தும் அவருக்குள் இருக்கின்றன.

ஒருவர் தனது மாதச் சம்பளம் முழுவதையும் தனது மனைவியிடம் கொடுத்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன் பெறுவர்.

நாம் நம் அன்பு முழுவதையும் கடவுளுக்குக் கொடுத்து விட்டால் அது அவருள் இருக்கிற நமக்கும் நமது பிறருக்கும் போய்ச் சேரும்.

இயேசு கொடுத்த .இரண்டு கட்டளைகளும் இணையானவை.

இயேசு முதல் கட்டளையைக் கூறிவிட்டு இரண்டாவது கட்டளையை 
 
"இதற்கு இணையான இரண்டாவது கட்டளை." என்கிறார்.

அப்படியானால் இயேசு முதல் கட்டளையோடு நிறுத்தியிருக்கலாமே!

நாமும் நமது பிறரும் இறைவனுள் இருக்கிறோம் என்பதை நமக்கு புரிய வைப்பதற்காகவே இரண்டாவது கட்டளை.

நமது முழு இருதயத்தோடு இறைவனை நேசிக்கும் போது நாம் அவருள் இருக்கிற மனுக்குலம் முழுவதையும் நேசிக்கிறோம்.

நம்மோடு பிற மதத்தவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் உட்பட அனைவரும் சேர்ந்து தான் மனுக் குலம்.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகவாதியை நாம் வெறுத்தால் கூட நாம் முதல் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.

நம்மைப் பகைப்பவர்களையும் நாம் நேசிக்க வேண்டும் என்பதுவும் இயேசுவின் கட்டளை தான்.

இறைவன் நல்லவர்களை நேசிப்பது போல தீயவர்களையும் நேசிக்கிறார்.

உண்மையில் தீயவர்களைத் தேடிதான் உலகத்துக்கே வந்தார்.

இயேசு,  "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 
(மாற்கு நற்செய்தி 2:17)

கடவுள் கெட்டவர்களைத் தேடி வந்திருக்கும்போது நாம் அவர்களை வெறுக்கலாமா?

பாவிகளை மீட்கவே தந்தை இறைவன் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

மகன் அதே நோக்கோடு தான் தன் சீடர்களை உலகெங்கும் அனுப்பினார்.

நமது ஆன்மீகப் பணியின் நோக்கமும் அதுவே.

இப்பணியை நாம் சிறப்புறச் செய்வது தந்தை இறைவனின் மாட்சிக்காகவே.

இறைவனை முழு இருதயத்தோடு நேசிப்பவர்கள் உறுதியாக அயலானையும் நேசிப்பார்கள்.

ஒருவன் தன் அயலானை நேசிக்காவிட்டால் அவன் கடவுளை நேசிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

இறைவனை நேசிப்பவன்தான் தன்னையும் நேசிக்கிறான்.

இறைவனை நேசிக்காமல் பாவம் செய்பவன் தன்னை நேசிக்கவில்லை.

இறைவனை முழுமையாக அன்பு செய்வோம்.

இறைவனை அன்பு செய்யும் போது அவருள் இருக்கிற நம்மையும், நமது பிறனேயும் அன்பு செய்கிறோம். ன

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment