Tuesday, July 22, 2025

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். (மத்தேயு நற்செய்தி 9:12,13)

  

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 

 நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 9:12,13)

இயேசு பாவிகளை அழைக்கவே உலகுக்கு வந்தார்.

இயேசு நம்மை அழைக்க உலகுக்கு வந்தார் என்பதை ஏற்றுக் கொண்டால் நாம் பாவிகள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டோம்.

நம்மை அழைக்கவே இயேசு உலகுக்கு வந்தார் என்பதையும் ஏற்றுக் கொண்டு விட்டோம்.

"நேர்மையாளரை அல்ல," என்று குறிப்பிடப்படும் நேர்மையாளர்கள் யார்?

இந்த வசனத்தை இயேசு சொன்னது அவர் வரிதண்டுபவராகிய மத்தேயுவின் வீட்டில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது.

பரிசேயர்கள் வரிதண்டுபவர்களைப் பாவிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தங்களைத் தவிர மற்ற அனைவருமே, இயேசு உட்பட, திருச் சட்டப்படி வாழாதவர்கள்  என்பது அவர்கள் எண்ணம்.

அதனால் தான் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

 இயேசுவின் சீடரிடம் அவர்கள், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேட்டனர். 

அதற்கு மறுமொழியாக இயேசு,

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 9:13)

வரி தண்டுபவர்ளைப் பற்றி பரிசேயர்கள் நினைத்தது போல  இயேசு நினைக்கவில்லை.

இயேசுவுக்குத் தெரியும் பரிசேயர்கள் உட்பட அனைத்து மனிதர்களும் பாவிகள் என்று.

அனைவரையும் மீட்கவே அவர் உலகுக்கு வந்தார்.

மீட்பு தேவையில்லாத நேர்மையாளர் யாரும் உலகில் இல்லை.

அன்னை மரியாள் கடவுளின் விசேட சலுகையினால் மீட்பின் பயனை தாய் வயிற்றில் உற்பவிக்கும் போதே பெற்றாள்.

அவளும் இயேசுவின் பாடுகளால் மீட்கப் பட்டவள் தான்.

மீட்புத் தேவையில்லாத நேர்மையாளர் உலகில் யாருமே இல்லை.

இயேசு பாவிகளை மீட்க வந்த கடவுள்.

 பாவிகள் மீது தனக்கு இருந்த முழுமையான அக்கறையை அழுத்திச் சொல்லவே (to stress) "நேர்மையளர்களை அல்ல"  என்கிறார்,

பள்ளிக்கு வருவது படிப்பதற்கு, விளையாடுவதற்கு அல்ல என்று ஆசிரியர் மாணவர்களிடம் சொல்வது போல.

இயல்பிலேயே மீட்புப் பெறத் தேவையில்லாத,  நேர்மையாளர் யாரும் இல்லை.

ஆனால் மீட்பின் பலனைப் பெற்று, அதாவது பாவ மன்னிப்புப் பெற்று பரிசுத்தவானாக மாற்றம் அடைந்து,

இறைவன் சித்தப்ப்படி நற்செயல்கள் புரிந்து வாழ்பவர் நேர்மையாளர்.

புனிதர்கள் அனைவரும் நேர்மையாளர்கள்.

30 ஆண்டுகள் பாவியாக வாழ்ந்த அகுஸ்தீனார் அவரது அன்னையின் செப வல்லமையால் மனம் திரும்பி நேர்மையாளராக மாறினார்.

நாம் வழிபடும் புனிதர்கள் அனைவரும் நேர்மையாளர்கள்.

ஆனாலும் நேர்மையாளர்கள் தொடர்ந்து நேர்மையாளர்களாக வாழ தொடர்ந்து கடவுளின் அருள் உதவி  அவசியம் தேவை.

மனம் திரும்ப மட்டுமல்ல புண்ணிய வாழ்வு வாழவும் ஆண்டவரின் அருள் உதவி கேட்டு தொடர்ந்து செபிக்க வேண்டும்.

ஏனெனில் உலகம் பாவச் சோதனைகள் நிறைந்தது.

கவனமாக வாழா விட்டால் எவ்வளவு பெரிய புண்ணியவானும் பாவத்தில் விழ வாய்ப்பு உண்டு.

நேர்மையாளர்களாக மாறியவர்களும் இறுதி வரை நேர்மையாளர்களாக வாழவும் இயேசுவின் பாடுகளின் பலன் தேவை.

பாவிகளாகிய நாம் மன்னிப்பு பெறவும் , பெற்ற பின்பு நாம் பாவத்தில் விழாமல் காப்பாற்றவும் நம்மைத் தேடி உலகிற்கு வந்தார் இயேசு.

மனம் திரும்பிய பாவிகளாய்ப் பயணித்து,

நேர்மையாளர்களாக நிலை வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment