"இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்."
(லூக்கா நற்செய்தி 10:37)
திருச்சட்ட அறிஞர் ஒருவர் "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று கேட்டபோது இயேசு நல்ல சமாரியன் உவமையைக் கூறி
"நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்."
பயணத்தின்போது கள்வர்களால் அடிபட்டு குற்றுயிராக விடப்பட்ட யூதர் ஒருவருக்கு அவரது இனத்தைச் சேர்ந்த குருவும், லேவியரும் உதவி செய்யாமல் போய்விடுகிறார்கள்.
ஆனால் கலப்பின மக்களாக யூதர்களால் ஒதுக்கப்பட்ட சமாரியர் ஒருவர் உதவி செய்கிறார்.
உவமையைக் கூறி விட்டு இயேசு திருச்சட்ட அறிஞரிடம்
"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார்.
அதற்கு திருச்சட்ட அறிஞர், "
"அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார்.
இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.
இயேசு கேட்ட கேள்வியை அவரது கோணத்திலிருந்து தியானிப்போம்.
"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி."
இது இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.
இயேசு போதகர் மட்டுமல்ல சாதகரும் கூட.
தனது போதனையைத் தானே சாதித்து மற்றவர்களுக்குப் போதித்தவர்.
"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி."
இது அவருடைய போதனை.
இதை எவ்வாறு சாதித்தார்?
இயேசுவுக்கு அயலான் யார்?
அவரால் படைக்கப்பட்ட மனிதன் தான் அவருக்கு அயலான்.
இயேசு கடவுள். கடவுள் என்றாலே அன்பு.
கடவுள் தன்னைத் தானே நித்திய காலமும் அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.
அவர் அவரையே அன்பு செய்வது போல
அவரது அயலானாகிய நம்மை அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.
தன் அயலானுக்காக தன் உயிரைத் தியாகம் செய்வதை விட மேலான அன்பு இருக்க முடியாது.
தன்னையே தனது சிலுவை மரணத்தின் மூலம் நம் மட்டில் அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பை வெளிக்காட்டினார்.
திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட கேள்வி என்ன?
"எனக்கு அடுத்திருப்பவர் யார்?"
(லூக்கா நற்செய்தி 10:29)
அதாவது என் அயலான் யார்?
திருச்சட்ட அறிஞர் ஒரு யூதர்.
அவரது கேள்விக்குப் பதிலாகத்தான் இயேசு நல்ல சமாரியன் உவமையைக் கூறுகிறார்.
உவமையில் அடிபட்டுக் கிடப்பவர் யூதர்.
உதவி செய்தவர் சமாரியர்.
இயேசு என்ன கேள்வி கேட்டார்?
"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார்.
(லூக்கா நற்செய்தி 10:36)
அடிபட்டுக் கிடந்தவருக்கு அயலான் யார்?
கேள்வியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இயேசுவின் கட்டளை,
உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக"
(லூக்கா.10:27)
உவமையில் தன் அயலானை அன்பு செய்தவர் சமாரியர்.
அப்படியானால் சமாரியரின் அயலான் யூதர்.
உதவி செய்தவருக்கு அயலான் யார் என்று இயேசு கேட்கவில்லை.
உதவி செய்யப் பட்டவருக்கு அயலான் யார், உதவி செய்தவரா, செய்யாமல் போனவரா என்று கேட்கிறார்.
கேள்வியிலிருந்து என்ன புரிகிறது?
மற்றவர்களை அன்பு செய்பவர் அயலானா, அன்பு செய்ய மறுப்பவர் அயலானா என்று இயேசு கேட்கிறார்.
அன்பு செய்து, அதன் விளைவாக உதவி செய்தவர் தான் அயலான்.
அதாவது உதவி தேவைப் படுபவர் தன் இனத்தவரா, உறவினரா என்று கவலைப் படாமல் உதவுபவர் தான் அயலான்.
இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று சொல்கிறார்.
அதாவது குலம் கோத்திரம் பார்க்காமல் அன்புக்காகவே அன்பு செய்யும்.
Love for the sake of love, not for the sake of relationship.
அப்படி அன்பு செய்பவன் தான் உண்மையான அயலான்.
இருவர் இருந்தால் இருவரும் ஒருவருக்கொருவர் அயலான் தான்.
இருவரிடமும் அயலானுக்கு உரிய பண்பு இருக்க வேண்டும்.
"நீரும் போய் அப்படியே செய்யும்"
நீரும் குலம் கோத்திரம் பார்க்காமல் அன்புக்காகவே அன்பு செய்யும்.
இயேசுவின் வார்த்தைகளில் ஒரு ஆழமான மறையியல் உண்மை பொதிந்திருக்கிறது.
அடிபட்டுக் கிடந்தவர் யூதர்.
உதவி செய்தவர் அவருக்கு இரக்கம் காட்டிய சமாரியர்.
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இரக்கம் காட்டிய சமாரியர் தான் அயலான் என்று அறிஞர் கூறுகிறார்.
நீரும் போய் அப்படியே செய்யும்" என்றால் எப்படிச் செய்ய வேண்டும்?
சமாரியர் (யூதர் அல்லாதவர்) செய்தது போல திருச்சட்ட அறிஞர்
(யூதர்) செய்ய வேண்டும்.
யூதர்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்தவன் தான் தங்களுக்கு அயலான் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதனால் தான் சமாரியர்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
ஒதுக்கி வைக்கப்பட்ட சமாரியர் செய்தது போல யூதராகிய திருச்சட்ட அறிஞர் செய்ய வேண்டும்.
வார்த்தைகளில் அடங்கியுள்ள மறையியல் உண்மை எது?
யூதருக்கு அயலான் சமாரியன்.
சமாரியர் யோசேப்பின் வழித் தோன்றல்கள், அதாவது இஸ்ரேல் மக்கள். ஆனால் கலப்பினமாக மாறிய இஸ்ரேலர்கள்.
யாக்கோபின் பன்னிரு புதல்வர்களில் பதினொருவருக்கும் பஞ்ச காலத்தில் உதவி செய்தவர் யோசேப்பு.
அவரது வழித்தோன்றல்களில் அசிரியர் படையெடுப்பின் போது அசிரியக் கலப்பு ஏற்பட்டு விட்டது.
ஆனாலும் அவர்களும் அபிரகாமின் பிள்ளைகள் தான்.
நாம் கடைக்குச் சென்று விலை கொடுத்து பன்னிரண்டு மாம்பழங்கள் வாங்கி வருகிறோம்.
அவற்றில் ஒன்று நாம் வரும் வழியில் கீழே விழுந்து அடிபட்டு விட்டது.
அதற்காக அதைக் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவோமா?
நாம் காசு கொடுத்து வாங்கியது.
இயேசு உலகிலுள்ள அத்தனை மக்களுக்காகவும் தான் பாடுகள் பட்டு இரத்தம் சிந்தி மரித்தார்.
அனைத்துப் பாவிகளுக்காகவும் தனது விலைமதிப்பில்லாத இரத்தத்தை விலையாகக் கொடுத்திருக்கிறார்.
அனைவரும், இன் வேறுபாடின்றி,
இயேசுவில் நமது சகோதரர்கள்.
அவர்களிலும் உதவும் குணமுள்ள நல்ல சமாரியர்கள் இருக்கிறார்கள்.
நல்ல சமாரியன் உதவினான்.
அவனும் அயலான் தான்.
"நீரும் போய் அப்படியே செய்யும்" என்று இயேசு கூறியதற்கு "உதவி செய்தவனைப் போல நீரும் உதவி செய்யும்"
அதாவது "இன வேறுபாடின்றி தேவையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் உதவி செய்யும்." என்றார்.
இதில் தான் இன வேறுபாடின்றி உலகோர் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற மறை உண்மை அடங்கியிருக்கிறது.
உவமையில் வரும் குரு, லேவியரைப் போல் நாம் செயல்படக் கூடாது.
அவர்கள் அவர்களுடைய இனத்தவருக்கே உதவி செய்யவில்லை.
பிறரன்பு இல்லாதவர்கள் என்று அர்த்தம்.
அனைவரும் இறைவனின் பிள்ளைகளே என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், பிறரன்பும் உள்ளவர்கள் தான் இயேசுவின் சகோதரர்கள் என்ற பெயருக்கு அருகதை உள்ளவர்கள்.
இஸ்ரேலுக்கும் , ஈராக்குக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது.
இஸ்ரேலர்களும், இஸ்லாமியர்களும் ஆபிரகாமின் பிள்ளைகள்தான்.
போருக்குக் காரணம் சகோதர பாசமின்மை.
ஆபிரகாமின் கடவுளும், ஈசாக்கின் கடவுளும், யாக்கோபின் கடவுளும் ஒருவர் தான்.
அப்படியானால் இஸ்ரேலர்களும், இஸ்லாமியரும் ஒரே கடவுளைத்தான் வழிபடுகிறார்கள்.
இல்லை, வழிபடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
உண்மையில் அவர்களிடம் இறையன்பும் இல்லை, பிறரன்பும் இல்லை.
அவர்கள் ஒருவரையொருவர் அயலானாக ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏற்றுக் கொள்ளும் வரை, போருக்குத் தீர்வு கிடையாது.
நாம் இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் நமது அயலானாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment