Friday, July 25, 2025

ஒரு தலை ராகம்



ஒரு தலை ராகம்.

வகுப்பில் ஆசிரியர் பேசுகிறார், மாணவர்கள் கேட்கிறார்கள்.

மாணவர்கள் கேட்கும் போது ஆசிரியர் பதில் அளிக்கிறார், 

ஆசிரியர் கேட்கும் போது மாணவர்கள் பதில் அளிக்கிறார்கள்.

மாணவர்கள் கற்கிறார்கள்.

கற்பது மாணவர்கள்,
கற்பிப்பது ஆசிரியர்.

இருவருக்கும் கருத்துப் பரிமாற்றம் நடக்கிறது.

கருத்துப் பரிமாற்றம் நடக்காவிட்டால் கற்றல் இல்லை.


பரிமாற்றம் என்றால் ஒருவருக்கொருவர் கொடுத்து, பெற்றுக் கொள்வது.

ஒருவர் மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பது அல்ல.

அரசியல் கூட்டங்களில் மேடையில் நின்று கொண்டு ஒருவர் பேசுவார், கீழே அமர்ந்திருப்பவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

பேசுபவர் மட்டும் தனது கருத்துக்களைக் கொடுத்துக் கொண்டிருப்பார்.

கேட்பவர்கள் தங்கள் கருத்துக்களைப் பேசுபவரோடு  பரிமாறிக் கொள்வதில்லை.

இது ஒரு தலை ராகம்.

இறைவனோடு நமக்கு இருக்கும் செப உறவில் நாம் மாணவர்களைப் போல் நடந்து கொள்கிறோமா?

அல்லது, அரசியல்வாதி போல் நடந்து கொள்கிறோமா?

அநேக சமயங்களில் நாம் அரசியல்வாதிகளைப் போல்தான் நடந்து கொள்கிறோம்.

"கடவுளே, நான் பேசுவதைக் கேளும்" என்று சொல்லி விட்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டேயிருப்போம்.

நீண்ட நேரம் பேசினால்தான் நன்றாகச் செபிப்பதாக நமக்கு எண்ணம்.

கடவுளைப் பேச விடாமல் நாம் மட்டும் பேசிக் கொண்டிருப்பது, செபம் அல்ல. சொற்பொழிவு.

"நாம் நன்கு பேசி விட்டோம்" என்று சொற்பொழிவு ஆற்றியவருக்கு திருப்தி.

செபத்தின் வல்லமை நாம் பேசுவதில் அல்ல,   இறைவன் பேசுவதில் தான் அடங்கியிருக்கிறது.

"கேளுங்கள் தரப்படும்." - இதில் தான் முழுமையான செபம் அடங்கியிருக்கிறது.

நாம் கேட்கிறோம், மணிக்கணக்கில் அல்ல, வருடக்கணக்கில்.

ஆனால் தரப்படுவதை ஏற்றுக் கொள்வதில்லை.

தரப்படும் என்ற வார்த்தைக்கு நாம் கொடுக்கும் பொருள் வேறு,
உண்மையான பொருள் வேறு.

கடைக்குச் செல்கிறோம்.

"ஒரு Hero pen வேண்டும்." என்று கேட்கிறோம்.

"Hero pen  இல்லை. ஆனால் அதை விடக் குறைந்த விலையில் அதை விட நன்கு எழுதக்கூடிய பேனா இருக்கிறது." என்று கடைக்காரர் கூறுகிறார்.

நாம் வந்து விடுகிறோம்.

கேட்டது கிடைக்கவில்லை என்பது நமது எண்ணம்.

ஆனால் கடைக்காரர் தந்த ஆலோசனையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

நாம் கேட்டோம்.
தரப்பட்டது ஆலோசனை.

நாம் தரப்பட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை.

செபம் இறைவனுக்கும் நமக்கும் நடக்கின்ற உரையாடல்.

அடுத்தவரைப் பேச விடாமல் ஒருவர் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அது செபம் அல்ல.

இறைவனுக்கு பேச நேரம் கொடுத்தால் அவர் ஆலோசனை தருவார்.

அதன்படி நாம் நடக்க வேண்டும்.

நாம் கேட்பதும், கடவுள் ஆலோசனை தருவதும்,

அதன்படி நாம் நடப்பதும் சேர்ந்துதான் செபம்.

ஒரு உதாரணத்துடன் ஆய்வோம்.

திருமணமாகி நான்கு ஆண்டுகளாக குழந்தை இல்லை.

ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று கேட்கிறார்கள்,  கேட்கிறார்கள், கேட்கிறார்கள்.

இறைவன் பேச ஒரு வினாடி கூட ஒதுக்கவில்லை.

உள்ளக் கதவை அடைத்து விட்டதால் இறைவன் செயல் மூலம் பேசுகிறார்.

வேளாங்கண்ணி திருத்தலத்துக்கு தங்கள் வேண்டுதலுக்காகத் திருயாத்திரை சென்றபோது  தற்செயலாக இவர்கள் நிலையில்
உள்ள தம்பதியரைச் சந்திக்க நேர்கிறது.

அவர்கள் இவர்களுடன் உரையாடிய போது 

"எங்களுக்குப் பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. இறைவனைத் தொடர்ந்து வேண்டினோம்.

ஆனால் நாங்கள் இறை ஊழியம் செய்ய இறைவன் விரும்புவதாக மனதில் இறைவன் பேசுவதை உணர்ந்தோம்.

ஆகவே இப்போது இறை‌‌ ஊழியம் செய்து வருகிறோம். செபக்கூட்டங்கள் நடத்துவதிலும், பிறர் அன்புப் பணியிலும் ஆர்வமாக இருக்கிறோம். 

குழந்தை இறைவன் விரும்பும்போது பிறக்கட்டும்.

நாங்கள் மகிழ்ச்சியுடன் இறை ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறோம்."

அதைக் கேட்ட பின் இவர்களுடைய மனமும் மாறியது.

தங்கள் விடயத்திலும் இறைவன் சித்தம் அப்படி இருக்கும் என்பதை உணர்ந்து இவர்களும் தங்கள் பங்கில் சேவையை ஆரம்பித்தார்கள்.

அதன்பின் செப வேளையில் தங்கள் பேச்சைக் குறைத்துக் கொண்டு இறைவனுக்கு ஊழியம் செய்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

நம்மைப் பற்றி கவலைப் படுவதை விட்டு விட்டு இறைப் பணியில் முழு மனதுடன் ஈடுபட்டால் கடவுள் நமக்கு வேண்டியதை நாம் கேட்காமலே தருவார்.

நமது செபத்தில் இறைவனுக்கு தான் அதிக பங்கு கொடுக்க வேண்டும்.

வாயால் அல்ல, மனக் கண்ணால் இறைவனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்.

இறைவன் பேசுவார்.

அவர் சொன்னபடி நாம் நடக்க வேண்டும்.

நாம் பேசுவது மட்டுமல்ல கடவுளும் நம்மோடு பேசுவதும் சேர்ந்துதான் முழுமையான செபம்.

அதாவது இறைவனோடு நாம் ஒன்றிப்பதுதான் செபம்.

ஒன்றிப்பின் இரு உள்ளங்ஙளும் ஒன்றோடொன்று பேசும்.

செபம் இருதலை ராகம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment