"எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."
(மத்தேயு நற்செய்தி 25:13)
இளைஞர் ஒருவர் இருந்தார்.
வயது 20.
திடகாத்திரமான உடல். அது வரை ஒரு முறை கூட மருத்துவ மனைக்குச் சென்றதில்லை.
பள்ளிக் கூட நாட்களில் படிப்பிற்காகப் பெற்ற சான்றிதழ்களைவிட விளையாட்டுகளுக்காகப் பெற்ற சான்றிதழ்களே அதிகம்.
ஆன்மீக வாழ்வில் காட்டிய அக்கறையை விட தனது உடல் நலத்தைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டினார்.
சத்தான உணவு அளவோடு சாப்பிட்டார்.
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்தார்.
ஆனால் உடல் நலத்தில் காட்டிய அக்கறையை ஆன்மீக நலத்தில் காட்டவில்லை.
ஒரு நாள் திருப்பலியின் போது மறையுரையில் குருவானவர் இயேசு நம்மை அழைக்க நினையாத நேரத்தில் வருவார், ஆகவே நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் நண்பர் நினைத்துக் கொண்டார்,
"நாம் உடல் நலத்தோடு வாழ்ந்தால் நூறு ஆண்டுகளைத் தாண்டி வாழ்வோம். இருபது வயதிலே மரணத்தை நினைத்து வாழ வேண்டுமா?"
மறுநாள் காலையில் பைக்கில் அலுவலகம் சென்று கொண்டிருந்த போது சாலையின் சரியான பக்கம் தான் சென்றார்.
(He kept to the left while driving)
ஆனால் எதிரில் வந்து கொண்டிருந்த கார் Wrong side ல் வந்ததால் ஏற்பட்ட மோதலில் நண்பர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.
இறைவன் எதிர் பாராத நேரத்தில் வருவார்.
புகை வண்டி நிலையத்தில் வண்டி வருவதற்கான, புறப்படுவதற்கான கால அட்டவணையை எழுதிப் போட்டிருப்பார்கள்.
ஆனால் புகை வண்டியைப் பொறுத்த மட்டில் அது குறிப்பிட்ட நேரத்தில் வந்ததாகச் சரித்திரமே இல்லை.
எவ்வளவு நேரம் பிந்தி வரும் என்று சொல்வதற்காகத்தான் கால அட்டவணையே.
ஆனால் உலகில் வாழும் நம்மில் யார் யாரை எப்போது அழைக்க வருவார் என்ற கால அட்டவணையை எல்லோருக்கும் தெரியும் படி இறைவன் அறிவிக்கவில்லை.
அது அவருக்கு மட்டுமே தெரிந்த பரம இரகசியம்.
எதிர் பாராத நேரத்தில் வருவார்.
எப்போது வேண்டுமானாலும் வருவார்.
அவர் வரும் போது நாம் தயாராக இருக்க வேண்டும்,
அதாவது எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
இயேசு பிறந்த போது மாசில்லாக் குழந்தைகளை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அழைத்துக் கொண்டார்.
நாம் எப்போதும் நமது ஆன்மாவைப் பாவ மாசின்றிப் பாதுகாத்துக் கொண்டால் போதும்.
இயேசு அழைக்க வரும் போது, "இதோ வருகிறேன், ஆண்டவரே" என்று உற்சாகமாகப் புறப்பட்டு விடலாம்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடனும், இரவில் படுக்கப் போகும் போதும் ஆன்மப் பரிசோதனை செய்ய வேண்டும்.
பாவம் இருந்தால் உடனே உத்தம மனத்தாபப்பட்டு பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி பாவ சங்கீர்த்தனம். செய்ய வேண்டும்.
எப்போதும் ஆன்மா பரிசுத்தமாக இருந்தால் மரணத்தை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.
"ஆண்டவரே, நீர் எப்போது வேண்டுமானாலும் வாரும்.
நான் எப்போதும் தயார்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment