"நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே."
(மத்தேயு நற்செய்தி 26:53)
மேற்படி வசனத்தை வாசித்துக் காட்டி நண்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்,
"தனது துன்ப நேரத்தில் தனக்கு உதவும் படி ஏன் இயேசு தந்தையிடம் வேண்டவில்லை?"
நண்பர் வசனங்களை
அரைகுறையாய் வாசித்தது தான் அவரது சந்தேகத்துக்குக் காரணம்.
அடுத்த வசனத்தையும் வாசித்து விட்டு வசனங்களைத் தியானித்திருந்தால் சந்தேகமே வந்திருக்காது.
"அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?" என்றார்."
(மத்தேயு நற்செய்தி 26:54)
மறைநூல் வாக்குகள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே தந்தையிடம் வேண்டவில்லை.
இயேசு, தந்தை சம்பந்தப்பட்ட வசனங்களை வாசிக்கும் போது
"நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்"
"I and the Father are one."
என்ற இயேசுவின் வார்த்தைகள் ஞாபகத்தில் இருக்க வேண்டும்..
(அரு. 10:30)
தந்தையும், மகனும், தூய ஆவியும் ஒரே கடவுள்.
மூவருக்கும் ஒரே சிந்தனை.
ஒரே கடவுளின் வாக்கு தான் பைபிள்.
இயேசுவைப் பற்றிய பைபிள் வாக்கு (இறைவாக்கு) நிறைவேற வேண்டும் என்பதே இறைமகன் மனுமகனாய்ப் பிறந்ததன் நோக்கம்.
அதாவது தன்னைப் பற்றி தானே சொன்ன வாக்கு நிறைவேற வேண்டும் என்பதற்காகவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.
மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுள் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிக்க வேண்டும் என்பது இறைவாக்கு.
இறை இயேசு தனது வாக்குக்கு எதிராக தானே நினைப்பாரா?
தந்தையின் சித்தத்தை, அதாவது தூய ஆவியின் சித்தத்தை, அதாவது தனது சித்தத்தை நிறைவேற்றவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.
(மூவருக்கும் ஒரே சித்தம்)
இயேசு கைது செய்யப்பட்டபோது அவர் கூறிய வார்த்தைகளிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இறைவன் திட்டத்துக்கு எதிராக நாம் செபிக்கக் கூடாது.
நாம் இறைவனிடம் எதை வேண்டினாலும்,
நமது வேண்டல்,
"கடவுளே, உமக்கு விருப்பமானல் நான் எனக்காகக் கேட்பதைத் தாரும்" என்று ஆரம்பிக்க வேண்டும்.
"உமக்கு விருப்பமானால் நான் எழுதியுள்ள தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள் புரியும்."
"உமக்கு விருப்பமானால் நான் விரும்புகிற பெண்ணை நான் மணம் புரிய உதவும்."
"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்ற இயேசுவின் செபம் நமக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
(லூக்கா நற்செய்தி 22:42)
நமது ஒவ்வொரு செபத்தையும் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.
"தந்தை மகன் தூய ஆவிக்கு விருப்பம் இருந்தால் எனது வேண்டுதல் கேட்கப் படட்டும் என்று தான் இதற்கு அர்த்தம்.
நாம் தலைகீழ் நின்று எதை வேண்டினாலும் இறைவன் விரும்புவதுதான் நடக்கும்.
நமது விருப்பம் கடவுளின் விருப்பத்துக்கு எதிராக இருந்தால் அது நிறைவேறாது.
இறைவன் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக் கொண்டால் நமது விருப்பம் நிறைவேறும்.
நமது சிலுவையைச் சுமந்து சென்றால்தான் இயேசுவின் சீடராக முடியும் என்று பைபிள் சொல்கிறது.
இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புவோர் சிலுவை வரும் போது வேண்டாம் என்று வேண்டலாமா?
Domine quo vadis?
(ஆண்டவரே, எங்கே போகிறீர்?)
இது ஒரு சினிமா.
இராயப்பரைப் பற்றியது.
ரோமைப் பேரரசர் நீரோ கிறித்தவர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த போது கிறித்தவர்கள் இராயப்பரிடம்,
"உம்மையும் மன்னன் கொன்று விட்டால் கிறித்தவத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
எங்கள் மரணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆகவே திருச்சபையின் நலனுக்காக நீங்கள் வாழ வேண்டும்.
ஆகவே நீங்கள் ரோமையை விட்டு சென்று விடுங்கள்." என்று ஆலோசனை கூறினார்கள்.
அதில் நியாயம் இருப்பதாக எண்ணி திருச்சபையின் நலனுக்காக இராயப்பர் ரோமையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்.
வெளியேறிக் கொண்டிருந்தபோது இயேசு எதிரில் வந்து கொண்டிருந்தார்.
இராயப்பர் இயேசுவைப் பார்த்து,
"ஆண்டவரே, எங்கே போகிறீர்?"
என்று கேட்டார்.
இயேசு மறு மொழியாக,
"இராயப்பா, நீ எதிரிகள் கொன்று விடுவார்கள் என்று பயந்து நாட்டை வெளியேறிக் கொண்டிருக்கிறாய்.
உனக்குப் பதில் எதிரிகள் கையால் இரண்டாம் முறையாக சிலுவையில் அறையப்பட்டு சாகப் போகிறேன்." என்றார்.
"ஆண்டவரே, மன்னியும். நீர் திரும்பவும் சாக வேண்டாம்.
நானே திரும்பிச் செல்கிறேன்.
உமது மகிமைக்காக நானே சிலுவையில் மரிக்கிறேன்." என்று கூறி விட்டுத் திரும்பிச் சென்றார்.
சிலுவையில் அறையப்பட்டு வேதசாட்சியாக மரித்தார்.
அதுதான் இறைவன் சித்தம்.
வருகிற சிலுவையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதுதான் சீடனுக்கு அடையாளம்.
நமக்கு விரோதமாக குற்றம் செய்பவர்களை நாம் மன்னிக்க வேண்டும் என்பது இறைவாக்கு.
மன்னிக்க விரும்பாதவர்களால் கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்ல முடியுமா?
இயேசுவின் போதனைப் படி பகைவர்களை நேசிக்காதவர்வர்கள்
ஆண்டவரை நோக்கி, "இயேசுவே உம்மை நேசிக்கிறேன்" என்று கூற முடியாது.
இயேசுவை நேசிப்பவர்கள் அவருடைய போதனைப்படி வாழ்வார்கள்.
நமது செபம் எப்போதும் இறை வாக்குக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment