"ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை."
(அரு. 20:14)
இயேசு மரித்த மூன்றாம் நாள் காலையில் உயிர்த்து விட்டார்.
அவரை அடக்கம் செய்திருந்த கல்லறை அருகில் அவர் மகதலா மரியாளுக்குக் காட்சி கொடுத்தார்.
ஆனால் அவள் அவர் இயேசு என்று அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
அவரைத் தோட்டக்காரர் என்று எண்ணிப் பேசிக் கொண்டிருந்தாள்.
நாமும் அநேக சமயங்களில் அப்படித்தான்.
இயேசுவைத் தேடுவோம்.
ஆனால் அவர் நம்மிடம் வரும்போது அவரை அடையாளம் கண்டு கொள்ள மாட்டோம்.
நண்பர் ஒருவர் காலையில் எழுந்து செபமாலை சொல்லும் போது ஆண்டவரின் பாடுகளைத் தியானித்துக் கொண்டிருந்தார்.
இயேசு சிலுவையைச் சுமந்து சென்றதைத் தியானிக்கும் போது
நான் மட்டும் அங்கு இருந்திருந்தால் சிலுவையை அவரிடமிருந்து வாங்கி நானே சுமந்திருப்பேன் என்று நினைத்துக் கொண்டார்.
உண்மையிலேயே விசுவாச உணர்வோடு தான் அப்படி நினைத்தார்.
அவர் அலுவலகம் சென்று கொண்டிருந்த போது ஒருவர் அவர் ஏற்றிவந்த சைக்கிளை ஒரு மரத்தில் சாய்த்து வைத்து விட்டு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார்.
அவர் நண்பரைப் பார்த்தவுடன் கையசைத்தார்.
நண்பர் நின்று என்னவென்று கேட்டார்.
"தம்பி, என்ன காரணமோ தெரியவில்லை, சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது கிறுகிறுவென்று சைக்கிளோடு கீழே விழுந்து விட்டேன்.
உடம்பில் அடிபட்டிருக்கிறது.
சைக்கிளில் ஏறவும் முடியவில்லை, நடக்கவும் முடியவில்லை.
தயவுசெய்து உன் சைக்கிளில் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு விட்டு விடேன்."
"ஆனால் நான் அலுவலகம் சென்று கொண்டிருக்கிறேன்.
உங்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றால் நான் சரியான நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாது.
ஏதாவது Auto வரும். அதில் ஏறிச் செல்லுங்கள்." என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டார்.
அன்று மாலையில் படுக்கைக்குச் செல்லும் முன் வழக்கம் போல பைபிள் வாசித்துக் கொண்டிருந்தார்.
"அப்பொழுது அவர், "மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" எனப் பதிலளிப்பார்."
(மத்தேயு நற்செய்தி 25:45)
என்ற வசனத்தை வாசிக்க நேர்ந்தது.
அப்போது அன்று காலையில் அலுவலகம் செல்லும் நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.
காலையில் செய்த செபமாலை தியானமும் நினைவுக்கு வந்தது.
மனதில் ஏதோ வலி ஏற்பட்டது.
"காலையில் அலுவலகம் செல்லும் போது இயேசுவைச் சந்தித்திருக்கிறேன்.
அவருக்கு உதவ மறுத்திருக்கிறேன்." என்ற எண்ணம் அவருக்கு வலியைக் கொடுத்தது.
ஆன்மீக ரீதியாக உலக மக்கள் அனைவரிலும் நாம் கடவுளைக் காண வேண்டும்.
ஏனெனில் அனைவரும் கடவுளின் சாயலில் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.
நாம் அனைத்து மக்களிலும் இயேசுவைப் பார்த்தால் நாம் யாருக்கு என்ன செய்தாலும் அதை இயேசுவுக்கே செய்வோம்.
யாரோடு எதைப் பகிர்ந்து கொண்டாலும் அதை இயேசுவோடே பகிர்ந்து கொள்கிறோம்.
நமது மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது இயேசுவோடே நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.
மற்றவர்களின் துக்கத்தில் பங்கெடுக்கும் போது இயேசுவின் பாடுகளில் பங்கெடுக்கிறோம்.
மற்றவர்களை நமது வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கும் இயேசுவையே விருந்துக்கு அழைக்கிறோம்.
யாரையாவது பகைமை பாராட்டினால் இயேசுவையே பகைமை பாராட்டுகிறோம்.
நாடு, இன, மொழி வேறுபாடின்றி அனைவரையும் நேசிப்போம், அனைவருக்கும் உதவி செய்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment