Sunday, July 27, 2025

ஒவ்வொரு இரவும் முதல் இரவாகட்டும்.



ஒவ்வொரு இரவும் முதல் இரவாகட்டும்.

திருமணமான தம்பதியரின் முதல் இரவின் பரவச அனுபவம் (Thrilling experience) வாழ் நாளெல்லாம் தொடர வேண்டுமானால் ஒவ்வொரு இரவையும் முதல் இரவாகக் கருத வேண்டும்.

தங்கள் அறுபதாம் கல்யாண
(60th. Marriage anniversary) இரவைக் கூட முதல் இரவாக அணுகும் தம்பதியர், வயது ரீதியாக அல்ல, உற்சாகம், மகிழ்ச்சி, இன்பம் ஆகியவற்றின் ரீதியாக இளமைக்குத் திரும்புவார்கள்.

எனது பள்ளிக்கூட நாட்களில் ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் தியானம் இருக்கும்.

மூன்று நாட்களும் தியானப் பிரசங்கங்களில் கூறப்படுபவற்றைத் தியானிக்க வேண்டும்.

மாணவர்கள் ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது.
 
மூன்றாம் நாள் பாவ சங்கீர்த்தனம் முடிந்தவுடன் எங்களுக்கு பரலோக வாழ்வே ஆரம்பித்து விட்டதாக உணர்வு ஏற்படும்.

தியானத்தின் மூன்றாவது நாள் எங்களுக்கு ஆன்மீக வாழ்வின் முதல் நாளாகத் தோன்றும்.

இந்த உணர்வு ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டுமானால் ஆண்டின் ஒவ்வொரு நாளையும் முதல் நாளாக எண்ணி வாழ வேண்டும்.

அப்படி வாழ்ந்தால் மூன்று நாள் தியானம் ஆண்டு முழுவதும் நம்மை வழி நடத்தும்.

ஆனால் அனுபவத்தில் தியானம் முடிந்து ஓரிரு வாரங்களில் ஆரம்ப உற்சாகம் குறைய ஆரம்பிக்கும்.

அப்படி குறையவிடாமல் தியான நாட்களில் ஏற்பட்ட ஆன்மீக உணர்வை ஆண்டு முழுவதும் அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

வாழ்வின் ஒவ்வொரு நாளையும் முதல் நாளாக எண்ணி வாழ்பவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு இவ்வுலக வாழ்வின் இறுதி நாள் விண்ணுலக வாழ்வின் ஆரம்ப நாளாக இருக்கும்.

வாழ்வின் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு வினாடியையும் இப்போதுதான் நமது வாழ்வு ஆரம்பித்திருக்கிறது என்று எண்ணி வாழ வேண்டும்.

ஒவ்வொரு வினாடியிலும் நமது  முழு ஆன்மீகமும் அடங்கியிருக்கிறது.

இந்த வினாடி தான் நமது வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்தால் ,

ஒவ்வொரு வினாடியையும்  அப்படியே நினைத்து வாழ்ந்தால் 

ஆரம்ப உற்சாக வாழ்வு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

நாம் திரு முழுக்குப் பெறுவதுதான் நமது ஆன்மீக வாழ்வின் ஆரம்பம்.

திரு முழுக்குப் பெற்ற பின் நமது ஆன்மா பாவ மாசின்றி பரிசுத்தமாக இருக்கும்.

அந்நிலையை வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற வேண்டும்.

நாம் திரு முழுக்குப் பெறும் போது சிறு குழந்தைகளாக இருந்திருப்போம்.

அப்போது விபரம் புரியாது.

வளர்ந்து பையனாகும்போது புது நன்மைக்கு நம்மைத் தயாரிப்போம்.

அப்போது பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது ஆன்மா பரிசுத்தமாகும்.

இந்த ஆரம்ப நிலையை வாழ்வின் ஒவ்வொரு நாளும் காப்பாற்ற வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்த பின்
"இப்போது இறந்தால் நமக்கு மோட்சம்" என்ற நம்பிக்கை வரும்.

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாதவே நினைத்து வாழ்வோம்.

ஒவ்வொரு ஆரம்ப வினாடியையும் இறுதி வினாடியாக நினைத்து வாழ்ந்தால் நம்மால் பாவம் செய்யவே முடியாது.

இறுதி என்று கூறுவது இவ்வுலக வாழ்வின் இறுதி.

ஆன்மீக வாழ்வுக்கு இறுதி கிடையாது.

"கடவுள் இருக்கின்றவராக இருக்கிறவர்."

அவருக்கு இறந்த காலமும் இல்லை, எதிர் காலமும் இல்லை.

எப்போதும் நிகழ் காலத்தில் வாழ்பவர்.

நாமும் கடவுளைப் போல வாழ வேண்டுமென்றால் முடிவு இல்லாத ஆன்மீக வாழ்வில் நமது கவனத்தை முழுவதும் செலுத்த வேண்டும்.

நமது ஆன்மா முடிவு இல்லாதது.

லௌகீக மரணத்துக்குப் பின்னும் ஆன்மா உயிர் வாழும், அதாவது நாம் உயிர் வாழ்வோம்.

ஒரு வகையில் நமக்கு மரணம் கிடையாது.

நித்திய காலமும் எப்படி இறைவனோடு ஒன்றித்து வாழ்வோமோ,

 அப்படியே இப்போதும் செபம் மூலம் இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்தால் நாம் விண்ணக வாழ்வை பூமியிலேயே ஆரம்பித்து விட்டோம் என்று தான் அர்த்தம்.

நாமும் நிகழ் காலத்திலேயே  இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்தால் லௌகீக மரணம் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காத ஒரு சாதாரண நிகழ்ச்சி ஆகிவிடும்.

இறைவன் எப்போதும் நம்மோடு இருக்கிறவர்.

(இருக்கிறவர் நாமே.)

"இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். 

அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன" 
(திருவெளிப்பாடு 21:3,4)

கடவுள் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.

ஆனாலும் நமது ஆன்மீக வாழ்வுக்கு ஆரம்பமும் நோக்கமும் அவரே.

ஒவ்வொரு வினாடியும் அவர்  நிகழ் காலத்திலேயே வாழ்பவர்.

நாமும் அவரோடு நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் நிகழ் காலத்திலேயே வாழ்வோம். 

மண்ணுலகில் ஆரம்பித்த ஆன்மீக வாழ்வு   விண்ணுலகிலும் தொடரும். 

கடவுள் மணவாளன், நமது ஆன்மா அவரது மனவாட்டி. 

ஒவ்வொரு நாளும் நமக்கு முதல் நாளே.

ஒவ்வொரு இரவும் நமக்கு முதலிரவே.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment