"அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.'
(மத்தேயு நற்செய்தி 13:58)
இயேசு 30 ஆண்டுகள் நசரேத்தில் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தது உலகிலிருந்து மறைந்த வாழ்க்கை.
அவர் இறைமகன் என்று அன்னை மரியாளுக்கும் யோசேப்புக்கும் மட்டும் தான் தெரியும்.
நசரேத் மக்கள் அவரை யோசேப்பின் மகன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதனால் தான் இயேசு பொது வாழ்க்கையின் போது நசரேத்துக்கு வந்த சமயத்தில் அங்கிருந்த மக்கள்
"இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?" (மத்.13:55) என்றார்கள்.
யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் அன்னை மரியாளின் தங்கை மரியாளின் மக்கள், அதாவது, அல்பேயுவின் மக்கள்.
அல்பேயுவுக்கு இன்னொரு பெயர் கிளேயோப்பா.
அதனால்தான் மரியாளின் தங்கையை கிளேயோப்பா மரியாள் என்றும் அழைக்கிறோம்.
கிளேயோப்பா இயேசு உயிர்த்த பின் எம்மாவுக்குச் சென்ற இருவரில் ஒருவர்.
இவர்களில் யாக்கோபும், யூதாவும் இயேசுவின் சீடர்கள்.
இவர்கள் நசரேத்தில் வாழ்ந்தபோது இயேசுவோடு பெரியம்மா மகன் என்ற முறையில் தான் பழகியிருந்திருக்க வேண்டும்.
பொது வாழ்வுக்கு வந்த பின்பு இயேசு தான் யாரென்று வெளியிட்ட பின் அவரோடு இறைமகன் என்ற முறையில் பழகினார்கள்.
பொது வாழ்வின் போது இயேசு நசரேத்துக்கு வந்த மக்கள் இயேசுவோடு இவர்களையும் பார்த்திருப்பார்கள்.
இயேசுவின் போதனையைக் கேட்டு வியப்பு அடைந்தாலும் மக்கள் அவரைத் தச்சனின் மகனாகத்தான் பார்த்தார்கள்.
அதாவது இயேசு இறைமகன் என்ற விசுவாசம் அவர்களுக்கு இல்லை.
இயேசு விசுவாசம் உள்ளவர்களுக்கு மட்டும் புதுமைகள் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
தான் சிறுவயது முதல் வளர்ந்த ஊராக இருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்களின் விசுவாசமின்மை காரணமாக இயேசு அதிக புதுமைகள் செய்யவில்லை.
இயேசு தனது இந்த செயல் மூலமாக நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறார்.
இறைவனிடம் எதைக் கேட்டாலும் விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.
விசுவாசத்தோடு என்றால்?
நம்மைப் படைத்த இறைவன் சர்வ வல்லவர் என்பதையும்,
அவர்தான் நம்மை அன்புடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும்,
நமது உடல், உயிர் உட்பட நாம் சொந்தம் கொண்டாடும் அனைத்தும் அவருடையவை என்பதையும்,
நமது நல வாழ்வில் நம்மை விட கடவுளுக்கு அதிக அக்கறை இருக்கிறது என்பதையும்,
அவர் நமது தந்தை என்பதால் நாம் என்ன கேட்டாலும் நமக்கு நலன் பயப்பதாக இருந்தால் கட்டாயம் தருவார், கேடு விளைவிப்பதாக இருந்தால் தரமாட்டார், அதற்குப் பதில் நமக்குப் பயன்படுவதைத் தருவார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கடவுள் மீது உறுதியான விசுவாசம் இருந்தால் நமக்கு வேண்டியதைக் கேட்டு விட்டு,
தரும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு
நமது கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டிருப்போம்.
கடவுள் என்ன செய்தாலும் நமது நன்மைக்குதான் செய்வார் என நாம் உறுதியாக நம்பினால்,
கடவுள் நாம் கேட்டதை தந்தாலும் அவருக்கு நன்றி கூறுவோம்,
தராவிட்டாலும் நன்றி கூறுவோம்,
கேளாததைத் தந்தாலும் நன்றி கூறுவோம்.
நம்மிடம் கடவுள் மீது உறுதியான விசுவாசம் இருந்தால் நமது ஆன்மீக வாழ்வுக்குக் கேடு விளைவிக்கும் எதையும் கேட்க மாட்டோம்.
கடவுளும் கேட்டதை தருவார்.
முதலில் விசுவசிப்போம்.
விசுவாசத்தோடு கேட்போம்.
கேட்டது கிடைக்கும்
லூர்து செல்வம்
No comments:
Post a Comment