Monday, July 28, 2025

நாள் முழுவதும் இடை விடாமல் பராக்கின்றி செபிப்பது எப்படி?



நாள் முழுவதும் இடை விடாமல் பராக்கின்றி செபிப்பது எப்படி?

மனிதனுக்கும், மிருகத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் 

மனிதனுக்கு புத்தி இருக்கிறது, மிருகத்துக்குப் புத்தி இல்லை.

புத்திதான் சிந்திக்கிறது.

சிந்தனையிலிருந்து வார்த்தையும் செயலும் பிறக்கின்றன

இவை இறைவனின் பண்புகள், அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகள்.

நாம் இறைவனோடு பேசும் போது நமது சிந்தனை, வார்த்தை, செயல் மூன்றுமே செயல்படுகின்றன.

உதாரணத்திற்கு திவ்ய நற்கருணை நாதரோடு பேச கோவிலுக்குச் செல்கிறோம்.

நமது புத்தி திவ்ய நற்கருணையை இறைமகன் இயேசு என்று ஏற்றுக் கொள்கிறது.

சிந்தனையில் வார்த்தைகளோடு முழங்கால் படியிடுகிறோம்.

நாட்டின் முதல்வரைப் பார்க்கும் போது முழங்கால் படியிடுவதில்லை.

ஏனெனில் நமது புத்தி சொல்கிறது அவர் நம்மைப் போன்ற மனிதன் என்று.

திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிடுகிறோம்,

ஏனெனில் நமது புத்தி சொல்கிறது அவர் நம்மைப் படைத்த கடவுள் என்று.

திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிடாவிட்டால் நாம் இறைவனுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்று அர்த்தம்.

இது நின்று கொண்டு நன்மை வாங்குவோர் கவனத்துக்கு.

ஒருவரோடு நேருக்கு நேர் பேசும் போது நமது கவனம் நாம் யாரோடு பேசுகிறோமோ அவர் மேல் இருக்கும்.

வீட்டில் இறைவனிடம் செபிக்கும் போது இறைவனை நமது ஊனக் கண்ணால் பார்க்க முடியாது.

நமது ஆன்மீகக் கண்ணால் மட்டும் பார்க்க முடியும்.

செபிக்கும் போது இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு அவரோடு பேச வேண்டும்.

கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

வாயைத் திறந்து, "விண்ணகத்தில் இருக்கும் எங்கள் தந்தையே"  என்று சொல்லும் போது மனதில் விண்ணகத் தந்தை இருக்க வேண்டும்.

அதாவது செபத்தின் போது சிந்தனையும் சொல்லும் இணைய வேண்டும்.

வேறு எதையாவது நினைத்துக் கொண்டு தந்தையை அழைத்தால் அது செபம் அல்ல.

ஆனால் நமது மனம் குரங்கு போன்றது.

நிமிடத்திற்கு நிமிடம் இடம் விட்டு இடம் தாவிக் கொண்டேயிருக்கும்.

காலை உணவை நினைத்துக் கொண்டு, "விண்ணகத்தில் இருக்கும் எங்கள் தந்தையே" என்று சொன்னால் நாம் உணவைத் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தம்.

செபத்தின் போது சிந்தனையும் சொல்லும் இணைந்திருக்க பயிற்சி ஒன்று இருக்கிறது.

நீண்ட செபத்தை ஒரே நேரத்தில் சொன்னால்தான் பராக்கு ஏற்படும்.

செபத்தை வாக்கியம் வாக்கியமாகப் பிரித்து, வாக்கியத்தை வார்த்தை வார்த்தையாக நிறுத்தி மெதுவாக, அமைதியாக மனதில் நினைத்து, தியான முறையில் செபித்தால் வேறு எண்ணங்கள் மனதில் நுழையாது, பராக்கும் ஏற்படாது.

"விண்ணகத்தில்"என்ற வார்த்தையை நினைக்கும் போது மோட்சம் மட்டும் நினைவில் இருக்கும்.


"இருக்கிற" என்று நிறுத்தி சொல்லி, "எங்கள் தந்தையே 'என்று தியானித்தால் மோட்சத்தில் வாழும் தந்தை மட்டும் நினைவில் இருப்பார்.

இப்படி வார்த்தை வார்த்தையாக தியான உணர்வோடு செபித்தால் செபம் தவிர வேறு பராக்கு நுழைய வாய்ப்பே இல்லை.

செபிக்க நீண்ட நேரம் ஆகுமே. ஆனால் என்ன, தேவையில்லாத கற்பனைகளில் நேரத்தை வீணடிப்பதை விட இறைவனோடு இணைந்திருப்பது எவ்வளவோ மேல்.

ஒரு செபமாலை சொல்லும் நேரத்தில் பத்து மணிகள்தான் சொல்வோம்.

தேவையில்லாத பராக்குகளோடு ஒரு செபமாலை சொல்லும் போது கிடைக்கும் பலனை விட பத்து மணிகளில் அதிகப் பலன் கிடைக்கும்.

முறைப்படி செபம் செய்யாமல் சாதாரணமாக இருக்கும் நேரத்தில் கூட சிறு சிறு மனவல்லப செபங்களை மனதில் நினைத்துக் கொண்டிருந்தால் புனிதத்தில் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

இப்படி செபிக்க பெரிய செபப் புத்தகங்கள் தேவையில்லை.

ஏதாவது ஒரு பைபிள் வசனத்தை மனதுக்குள் நினைத்து அசை போட்டுக் கொண்டிருந்தாலே போதும்.

"உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானை நேசி."

சிறு வசனம்தான். மனதுக்குள்ளே அசை போட்டுக் கொண்டேயிருந்தால் நம்மை அறியாமலேயே நமக்குள் பிறரன்பு வளரும்.

நமது மனமும் பராக்குகளுக்கு இடம் கொடாமலிருக்க பயிற்சி.

எவ்வளவு செபிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, எப்படிச் செபிக்கிறோம் என்பது தான் முக்கியம்.

வார்த்தைகளை விட இறைவனை நினைத்துக் கொண்டிருப்பது தான் இறைவனோடு ஒன்றித்திருக்கத் தேவை.

சிந்தனையில் இறைவன் இருந்தால் சொல்லிலும் செயலிலும் கட்டாயம் இருப்பார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment