Friday, July 18, 2025

"பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்."(மத்தேயு நற்செய்தி 12:14)



"பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்."
(மத்தேயு நற்செய்தி 12:14)

பரிசேயர்கள் யூதர்கள்.
இயேசுவும் யூதர்தான்.

ஏன் பரிசேயர்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்த இயேசுவை ஒழிக்க சூழ்ச்சி செய்தார்கள்?

ஏனெனில் இயேசு உண்மையைப் பேசினார்.

இயேசுவின் பேச்சைக் கேட்பதற்காக மக்கள் கூட்டம் அவர் சென்ற‌ இடமெல்லாம் சென்றது.

இயேசு தன்னைப். பின்பற்றி வந்தவர்களை உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் குணப்படுத்தினார்.

மக்கள் கூட்டம் அவர் பின்னால் சென்றது பரிசேயர்களுக்குப் பிடிக்கவில்லை.

அவர்கள் சட்டம் பயின்றவர்கள்.
தங்கள் சொற்படி தான் மக்கள் வாழ வேண்டும் என்று ஆசைப் பட்டவர்கள்.

சட்டத்தின் நோக்கத்தை விட்டு விட்டு அதன் எழுத்தை மட்டும் பின் பற்றியவர்கள்.

ஓய்வு நாளின் நோக்கம் அதை இறைவனுக்காக வாழ்வதுதான்.

இறை அன்பும் பிறர் அன்பும் தான் ஓய்வுநாள் வாழ்வின் அடிப்படை.

இயேசு ஓய்வு நாளில் நோயாளிகளைக் குணமாக்கினார்.

ஆனால் பரிசேயர்கள் அதை ஓய்வு நாளில் செய்யக்கூடாத வேலை என்றார்கள்.

ஆனால் அது வேலையே இல்லை, பிறர் உதவி.

 இயேசு  "ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 12:12)

மனிதாபிமானத்தின் அடிப்படையில் செய்யப்படும்  உதவி ஓய்வு நாளுக்கு எதிரானது அல்ல.


 இயேசு ஓய்வு நாளில் கை சூம்பியவரைக் குணமாக்கியபோது

பரிசேயர்கள்  இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். 

சாதாரண மக்கள் எங்கே இயேசுவைப் பின்பற்றி தங்கள் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுவார்களோ என்று பயந்தார்கள்.

அதனால் தான் இயேசுவைக் கொல்வதிலேயே குறியாக இருந்தார்கள்.

பரிசேயர்களைப் பற்றி சிந்திக்கும் நாம் வாழும் இக்காலத்தை உற்று நோக்கினால் இக்காலத்திலும் பரிசேயர்கள் (நோக்கத்தின்படி வாழாதவர்கள்) இருப்பது புரியும்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்ல வேண்டும் என்பது தாய்த்திருச்சபையின் போதனை.

இப்போதனையின் நோக்கம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை ஆண்டவருடைய நாள். 

அந்நாளில் ஆண்டவருக்காக மட்டுமே தான் வாழ வேண்டும்.

வாழ் நாள் முழுவதுமே ஆண்டவருக்காக மட்டும்தான் வாழ வேண்டும், ஆனால் அன்று நமது லௌகீகம் சார்ந்த பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஆன்மீகம் சார்ந்த பணிகள் மட்டும் செய்ய வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெறுதல்,
குருவானவரோடு சேர்ந்து இயேசுவைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்தல், 
திரு விருந்து அருந்துதல்,
சுகமில்லாதவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுதல்,
உணவில்லாதவர்களுக்கு உணவு கொடுத்தல்,
வருந்துவோருக்கு ஆறுதல் கூறுதல் 

போன்ற ஆன்மீகம் சார்ந்த பணிகளைச் செய்ய வேண்டும்.

நாம் ஞாயிறு திருப்பலிக்குச் செல்கிறோம்.

எத்தனை பேர் பாவ மன்னிப்புப் பெற பாவ சங்கீர்த்தனம் செய்கிறோம்?

எத்தனை பேர் பராக்குக்கு இடம் கொடுக்காமல் திருப்பலியில் மட்டும் கவனம் செலுத்துகிறோம்?

எத்தனை பேர் திவ்ய நற்கருணை நாதரை இறைவனுக்குரிய ஆராதனை உணர்வோடு முழங்கால் படியிட்டு வாங்குகிறோம்?

எத்தனை பேர் திருப்பலி முடிந்த பிறகு பத்து நிமிடங்களாவது நற்கருணை நாதருக்கு நன்றி கூறுகிறோம்?

எத்தனை பேர் நாள் முழுவதும் நற்கருணை நாதரின் பிரசன்னத்தில் வாழ்கிறோம்?

எத்தனை பேர் திருப்பலி முடிந்த பின் பிறருதவிப் பணிகள் செய்கிறோம்?

கோவிலுக்கு வந்து திருப்பலி நேரத்தில் அமைதியாக இருந்து விட்டு வீட்டுக்குப் போனால் எழுத்து அளவில் கடமை முடிந்து விட்டது. அவ்வளவுதான்.

திருமுழுக்கு, திருமணம் ஆகியவை தேவத்திரவிய அனுமானங்கள்.

நம் மக்களுக்கு குழந்தைக்குத் திருமுழுக்குக் கொடுக்கும்போது குழந்தையின் சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டு விட்டது என்பதால் ஏற்படும்  மகிழ்ச்சியை விட 

விருந்தினர்களோடு உணவு உண்ணும்போது ஏற்படும் ஏற்படும் மகிழ்ச்சிதான் அதிகமாக இருக்கும்.

கோவிலில் இறைவன் முன்னிலையில் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக மந்திரிக்கப் படும் போது பக்தி உணர்வு ஏற்பட வேண்டும்.

ஆனால் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பவர்களைப் பார்க்கும் போது ஏதோ சினிமா Shooting எடுக்கிற உணர்வு தான் ஏற்படுகிறது.

திருமணத் தேவத்திரவிய அனுமானத்துக்கு அத்தியாவசியமானவை பெண், மாப்பிள்ளை, சம்மதம்,  ஆகிய மூன்றும்தான்.

திருமணம் எனும் தேவத்திரவிய அனுமானத்தை நிறைவேற்றுபவர்கள் மணமக்களே.

குருவானவர் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான சாட்சி.
அவர் முன்னிலையில் இறைவனுடைய ஆசீரோடு திருமணம் நடைபெறூகிறது.

ஆனால் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது தேவத்திரவிய அனுமானத்தோடு சம்பந்தம் இல்லாத நகைகள், வரதட்சணைப் பணம், ஆடம்பரமான வரவேற்பு, பரிசுகள், விருந்து ஆகியவற்றுக்குதான் 

பெண் பார்க்கப் போகும் போது பெண் பக்தி உள்ளவளா என்பதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள்.

ஆனால் எவ்வளவு நகை போடுவார்கள், எவ்வளவு வரதட்சணை கொடுப்பார்கள் என்றுதான் கேட்பார்கள்.

மக்களைப் பொறுத்தவரை விருந்து நன்றாக இருந்தால் திருமணம் நன்றாக இருந்தது.

புது நன்மை வாங்கும் விழாவில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது இயேசுவின் வருகையிலா, 

வீட்டில் விருந்தினரோடு கொண்டாடப்படும் விழாவிலா?

ஆன்மீக நிகழ்ச்சிகளில் லௌகீக அம்சங்களே முக்கியம் பெறுகின்றன.

கோவில் திருவிழாக் கொண்டாட்டங்களில் கூட மக்கள் பக்தியை விட ஆடம்பரத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மக்கள் சட்டம் படிக்காத பரிசேயர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மாற வேண்டும். இயேசுவுக்காக, இயேசுவுக்காக மட்டும் வாழ வேண்டும்.

இயேசுவின் சிலுவை மரணத்துக்கு நமது பாவங்களே காரணம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

மனம் திரும்புவோம்.

மன்னிப்பு பெறுவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment