Saturday, July 19, 2025

"எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்."(லூக்கா நற்செய்தி 11:3)

"எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்."
(லூக்கா நற்செய்தி 11:3)

மனிதன் பயன்படுத்த அனைத்து பொருட்களையும் படைத்து விட்டுதான் கடவுள் மனிதனைப் படைத்தார்.

ஆதிகாலம் முதல் இந்நாள் வரை மனிதன் ஏற்கனவே தனக்கென இறைவனால் படைக்கப்பட்ட பொருட்களைத்தான்  பயன்படுத்தி வருகிறான்.

ஆக கடவுள் மனிதருக்கு வேண்டியதை ஏற்கனவே படைத்து சேமித்து வைத்து விட்டார்.


நாம் செய்ய வேண்டியதெல்லாம் அன்றன்றைக்கு வேண்டியதை அன்றன்று எடுத்துப் பயன்படுத்த வேண்டியதுதான்.

அன்றன்றைக்கு வேண்டியதை அன்றன்று  எடுப்பதற்காகத் தான் நாம் தினமும் உழைக்கிறோம்.

அனைத்துப் பொருட்களும் அனைவருக்கும் பொது.

ஒருவர் தன் உழைப்பின் மூலம் ஈட்டிய பொருள் பல நாள் பயன்பாட்டுக்குப் போதுமென்றால் 

அன்றைக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு மீதமிருப்பதைத் தேவைகள் உள்ள நமது பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இது இயேசுவின் விருப்பம்.

அனைவரும் இயேசுவின் விருப்பப்படி நடந்தால் உலகில் தேவைகள் நிறைவேறாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.

யாரும் பட்டினி கிடக்க மாட்டார்கள்.

ஆனால் நாம் அனைவருமே எதிர் காலத்துக்காக சேமித்து வைப்பதை ஊக்குவிக்கிறோம்.

"அன்றாட உணவை இன்று தாரும்" நம்  தந்தையிடம் வேண்டிக் கொண்டே எதிர் காலத்துக்காக சேமித்து வைக்கிறோம்.

இது உண்மையில் தந்தையின் மீது நமக்கு விசுவாசம் இல்லை என்பதைக் காட்டுகிறது.


 "விசுவசிப்பவர்கள் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 

பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார். 
(மாற்கு நற்செய்தி 16:17,18)

இயேசு கூறியுள்ள எதையாவது நம்மால் செய்ய முடிகிறதா?

முடியவில்லை.

காரணம்?

" உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து" இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் " 
(மத்தேயு நற்செய்தி 17:20)

இயேசு கூறிய எதையும் நம்மால் செய்ய முடியாமைக்குக் காரணம் நம்மிடம் கடுகளவு கூட விசுவாசம் இல்லாமைதான்.

புனித அந்தோனியாரால் கோடிக்கணக்கில் புதுமைகள் செய்ய முடிந்தது, காரணம் அவருடைய முழுமையான விசுவாசம்.

நாம் அந்தோனியார் பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.

அவரிடம் நமக்கு வேண்டியதைக் கேட்குமுன் நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்வோம்.

வேலைக்கு விண்ணப்பிக்குமுன் நாம் தகுதித் தேர்வு வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ் கையில் இருக்க வேண்டும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

விசுவாசம் இல்லாமல் கொடுக்கப்பட மாட்டாது.

கர்த்தர் கற்பித்த செபம் வேண்டுதல் மட்டுமல்ல,

அதைத் தியானத்துடன் செபித்தால் அது நமது வாழ்க்கை.

இன்றைய வசனத்தை நம்மை மையமாக வைத்துத் தந்தையிடம் செபித்தால் நமது வாழ்க்கை எப்படி இருக்கும்?

"தந்தையே, நாங்கள் யாவரும் உமது பிள்ளைகள்.

பிள்ளைகள் என்ற முறையில் உமக்கு உரியவை  அனைவருக்கும் உரியவை.

உணவை மட்டுமல்ல, நீர் படைத்த அனைத்துப் பொருட்களையும் நாங்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு நாளும் எங்களிடம் அதிகமாய் இருப்பதை அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம்.

இல்லாததை மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கோள்ககிறோம்.


அனைவரும் அனைத்தையும் பகிர்ந்து வாழ்ந்தால் உமது மகிமைக்காக அனைவரும் அனைவருக்காகவும் வாழ்வோம்.

இன்றைய உணவை இன்று தந்ததுபோல நாளைய உணவை நாளைக்குத் தருவீர் என்று உறுதியாக நம்புகிறோம்."

விண்ணகத் தந்தையை "எனது தந்தை " என்று அல்ல, "எங்கள் தந்தையே" என்று அழைக்கும் படி தான் இயேசு கற்றுத் தந்தார்.

ஆகவே ஒவ்வொரு முறை கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போதும் மனுக் குலத்தைச் சேர்ந்த அனைவருக்காகவும்  வேண்டுகிறோம். 

தினமும் அனைத்து மனிதர்களுக்கும் உணவு அளிக்கும் படி வேண்டுகிறோம்.

மனிதர்கள் அனைவரும் நமது சகோதர சகோதரிகள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் வேண்டுகிறோம். 

நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து, ஒருவரிடம் இருந்து ஒருவர் பெற்று வாழ வேண்டும் என்ற குடும்ப உணர்வோடு வேண்டுகிறோம். 

இந்த செபம் அனைவரின் வாழ்க்கையாக மாற வேண்டும் என்பதுதான் நமது விண்ணகத் தந்தையின் விருப்பம்.

தந்தையின் விருப்பம் நிறைவேற விசுவாச உணர்வோடு அனைவரும் செபித்து, அதன்படி வாழ்ந்தால் அனைவரும் நிலைவாழ்வு பெறுவது உறுதி.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment