"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
(மத்தேயு நற்செய்தி 13:44)
புகை வண்டியின் வருகையை எதிர்பார்த்து ப்ளாட்பாரத்தில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
வண்டி வந்தவுடன் ப்ளாட்பாரத்தை விட்டு விட்டு வண்டியில் ஏற வேண்டும்.
ப்ளாட்பாரத்தை விட
மனமில்லாத வர்கள் புகை வண்டியில் ஏற முடியாது.
ஹோட்டலில் சாப்பிட விரும்புகிறவர்கள் அதற்கு ஈடான தொகையை இழக்க வேண்டும்.
பணம் கொடுக்காமல் சாப்பிட முடியாது.
நித்திய பேரின்ப வாழ்வை விரும்புகிறவர்கள் அநித்திய சிற்றின்ப வாழ்வை இழக்கக் தயாராக இருக்க வேண்டும்.
சிற்றின்ப விரும்பிகள் பேரின்பத்துக்கு ஆசைப்பட முடியாது.
நமது ஆண்டவர் கூறிய புதையல் உவமையில்
நமக்குச் சொந்தமில்லாத ஒரு நிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப் புதையல் இருப்பது நமக்குத் தெரிய வருகிறது.
நமக்குப் புதையல் மேல் ஆசை.
புதையலை எடுக்க வேண்டுமென்றால் நிலத்தைத் தோண்ட வேண்டும்.
அடுத்தவர் நிலத்தை நம்மால் தோண்ட முடியாது.
புதையலை எடுக்க வேண்டுமென்றால் முதலில் நிலத்தை என்ன விலை கொடுத்தாவது வாங்க வேண்டும்.
கையில் போதிய பணம் இல்லையென்றால் நம்மிடம் உள்ள மற்ற பொருட்களை விற்றாவது பணம் திரட்டி புதையல் உள்ள நிலத்தை வாங்க வேண்டும்.
நிலத்தை வாங்கிவிட்டால் புதையல் நமதாகிவிடும்.
இயேசு விண்ணரசை இந்த புதையலுக்கு ஒப்பிடுகிறார்.
நிலத்தை எதற்கு ஒப்பிடலாம்?
நாம் வாழும் உலகம் விண்ணகம் பயணத்துக்கான தளம்.
ஆனால் லௌகீக வாழ்க்கை மூலம் விண்ணரசை அடைய முடியாது.
உலகில் நாம் வாழ வேண்டிய ஆன்மீக வாழ்வு தான் விண்ணரசுக்கான வழி.
லௌகீக வாழ்வு முடிவுள்ளது.
ஆன்மீக வாழ்வு முடிவில்லாதது, உலகில் ஆரம்பித்து மோட்சத்திலும் தொடரும்.
ஆன்மீக வாழ்வையும் விண்ணரசையும் பிரிக்க முடியாது.
ஆனால் இயேசுவின் வழி நடக்கும் ஆன்மீக வாழ்வுதான் விண்ணரசு இருக்கும் நிலம்.
(லௌகீக நிலமல்ல, ஆன்மீக நிலம்.)
இந்த ஆன்மீக நிலத்தை, அதாவது, ஆன்மீக வாழ்வைப் பெற வேண்டுமென்றால் லௌகீக இன்பங்களைத் தியாகம் செய்ய வேண்டும்.
உலகப் பற்று,
சிற்றின்ப ஆசைகள்,
பண ஆசை,
ஆடம்பரம்,
உணவு,
உடை போன்ற உடல் சார்ந்த இன்பங்களில் மீது அளவுகடந்த ஆசை,
பெண்ணாசை,
மண்ணாசை,
பொன்னாசை
போன்ற லௌகீக ஆசைகளைத் தியாகம் செய்து,
ஆன்மீக வாழ்வாகிய நிலத்தை தியாகம் என்ற செல்வத்தைக் கொடுத்து வாங்கி,
சிலுவை என்ற ஆயுதத்தால் தோண்டினால் விண்ணரசு என்ற புதையலை எடுத்து அனுபவிக்கலாம்.
மண்ணரசை விட என்ன வகைகளில் விண்ணரசு சிறந்தது?
மண்ணரசு இடம், காலம் ஆகியவற்றுக்கு உட்பட்டது, ஆகவே தற்காலிகமானது.
விண்ணரசு இடம், காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது, ஆகவே நிரந்தரமானது.
மண்ணரசில் வாழ்வோர் அனுபவிப்பது சிற்றின்பம்
விண்ணரசில் வாழ்வோர் அனுபவிப்பது பேன்பம்.
மண்ணரசினர் படைக்கப்பட்ட பொருட்களோடு இணைந்திருப்பர்.
விண்ணரசினர் அனைத்தையும் படைத்த கடவுளோடு ஒன்றித்து வாழ்வர்.
நாம் கடவுளின் அரசை பெறுவதற்கு நம் வாழ்வில் உலகைச் சார்ந்த எல்லாவற்றையும் தியாகம் செய்வோம்
நமது வாழ்வை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.
நாம் எதையாவது விற்கிறோம் என்றால், அதைவிட மதிப்புமிக்க ஒன்றை வாங்கப் போகிறோம் என்று அர்த்தம்.
உலகச் செல்வங்கள் அனைத்தையும் விட விண்ணரசு மிக மிக மதிப்புமிக்கது.
இந்த உலகச் செல்வங்கள், ஆசைகள், கவலைகள் போன்றவை கடவுளுடனான நமது உறவுக்குத் தடையாக இருப்பதால் அவற்றைத் தியாகம் செய்து விட்டு
கடவுளை முழுமையாகச் சார்ந்து வாழ்வதற்காக அவருடைய சித்தத்திற்கு நம்மையே ஒப்புக் கொடுப்போம்.
விணாணரசின் மகிழ்ச்சி நிலையானது. ஆகவே அதை அடைவதற்காக நிலையில்லாதவற்றைத் தியாகம் செய்வோம்.
அழியக்கூடிய பொருட்களைத் தியாக விலையாகக் கொடுத்து அழியாத பேரின்ப அரசை உரிமையாக்கிக் கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment