"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்." ( மாற்கு.2:14)
சுங்கத்துறையில் அமர்ந்திருந்த
லேவியை நோக்கி இயேசு கூறிய வார்த்தைகள்:
"என்னைப் பின்செல்."
.அவரும் உடனே எழுந்து அவரைப் பின்சென்றார்.
தனது சீடர்களைத் தேர்ந்தெடுக்க இயேசு பயன்படுத்திய வார்த்தைகள்,
"என்னைப் பின்செல்."
அவர்களும் மறு வார்த்தை பேசாமல் தங்களது உடமைகளை எல்லாம் விட்டு விட்டு அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (மத்.16:24)
என்ற இயேசுவின் வார்த்தைகள் நம் அனைவருக்கும் பொருந்தும்.
குருக்களும், துறவிகளும் மட்டுமல்ல,
இயேசுவை விசுவசித்து அவர் வழி நடக்கும் அனைவரும் அவருடைய சீடர்கள்தான்.
அனைவருக்கும இயேசுவின் நற்செய்திப் பணியில் பங்கு உண்டு.
தன்னால் படைக்கப்பட்ட அனைவரையும் தன் வழி நடக்க அழைப்பதற்காகத்தான் இயேசு மனிதனாக பிறந்தார்.
குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களுக்கு அளிக்கப்படாத சில பொறுப்புகளையும் இயேசு கொடுத்திருக்கிறார்.
திருப்பலி நிறைவேற்றுதல், பாவங்களை மன்னித்தல், அதிகாரப்பூர்வமாக போதித்தல் போன்றவை குருக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விசேஷமான பொறுப்புகள்.
நற்செய்தியின்படி வாழவும், நாம் வாழும் வழிப்படி வாழ மற்றவர்களை அழைக்கவுமான கடமை அனைவருக்கும் உண்டு.
அந்த வகையில் நாம் அனைவருமே இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் இயேசு நம் உள்ளத்தில் இருந்து கொண்டு,
"என்னைப் பின்செல்" என்று அழைத்துக் கொண்டேயிருக்கிறார்.
இயேசு நமக்கு வழி காட்டுபவர் மட்டும் அல்ல, நம்மை வழி நடத்துபவரும் அவர்தான்.
ஒரு ஊருக்கு வழி எது என்று கேட்டால் வழி காட்டுபவர் செல்ல வேண்டிய திசையை காண்பித்து விட்டு அங்கேயே நின்று கொள்வார்.
ஆனால் வழி நடத்துபவர் நம்முடனேயே வருவார்.
ஒவ்வொரு வினாடியும் நம்முடனே இருந்து ஆலோசனைகள் கூறிக் கொண்டேயிருப்பார்.
செல்ல வேண்டிய இடத்திற்கு அவரே நம்மை அழைத்துச் சென்று விடுவார்.
அதைப் போலவே விண்ணுலகை நோக்கிய நமது ஆன்மீக பயணத்தில் இயேசு நமது உள்ளும் புறமும் இருந்து நம்மை வழி நடத்துகிறார்.
நமது உள்ளும் புறமும் இருக்கிறார் என்றால்
இயேசு நமக்குள் இருக்கிறார், நாம் அவருக்குள் இருக்கிறோம்.
அவர் நமது உள்ளத்தில் என்றும் தங்கியிருக்கிறார்.
உள்ளுணர்வுகள் (Inspirations) மூலம் நம்மோடு பேசுகிறார்.
நாம் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடாதிருந்தால் அவரது குரல் நமக்கு தெளிவாக கேட்கும்.
அனாவசியமான எண்ணங்களுக்கு இடம் கொடுத்தால் நமது கவனம் சிதறும்.
உள்ளத்தில் முழுவதுமாக அவரோடு இணைந்திருந்தால் அவரது எண்ணங்கள் நமது எண்ணங்களாக மாறி நமது சொல்லிலும் செயலிலும் நம்மை வழி நடத்தும்.
சில வழி நடத்துதல்கள்:
காலையில் இறைவாக்கை வாசித்துக் கொண்டிருக்கும் போதே இறைவன் உள் உணர்வுகள் மூலம் நம்மோடு பேசுவார்.
வாசிக்கப்படும் இறைவாக்கை பகலில் எப்படி செயல்படுத்தலாம் என்ற எண்ணங்கள் மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கும்.
எண்ணங்களை தோன்றச் செய்பவர் இறைவன்தான்.
அன்றைய நாளில் அதற்கான சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம் இறைவன் நமது உள் உணர்வு மூலம் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருப்பார்.
***
வேறு வேலையாக வெளியே சென்றாலும் கோவில் அருகில் இருக்குமானால் உள்ளே வந்து என்னை சந்தித்து விட்டு போ என்ற நற்கருணை நாதரின் குரல் உள்ளத்தில் ஒலிக்கும்.
அதை மீறி நம்மால் செல்ல முடியாது.
கோவிலுக்குள் நுழைந்து நற்கருணை ஆண்டவரை சந்தித்து விட்டுதான் செல்வோம்.
. ***
காலையிலேயே நம்மை முழுவதும் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் பகல் முழுவதும் இயேசுவின் எண்ணங்கள் நமது எண்ணங்களாக தோன்றி கொண்டேயிருக்கும்.
. ***
யாரோடும் பேசும்போது கோபம் வந்தால் இயேசுவின் கருணை உள்ள முகம் உள்ளத்தில் தோன்றும். கோபம் காணாமல் போய்விடும்.
***
நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது நமது விசுவாச அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி உள்ளத்தின் உள்ளிருந்தே தூண்டுபவர் பரிசுத்த ஆவியானவர் தான்.
***
நம்மை பற்றி அவதூராக பேசி, நமது பெயரைக் கெடுத்தவர்கள் நமக்கு எதிரே வரும்போது அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டு, அவர்களோடு இயல்பாகப் பேச வைப்பவரும் உள்ளத்தில் இருந்து நம்மோடு உரையாடும் ஆண்டவர் தான்.
***
தேவைப்படுவோரைத் தேடிச்சென்று அவர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வைப்பவரும் நம் ஆண்டவர் தான்.
***
நாம் செபிக்கும் போது நம்மை வெறுப்பவர்களுக்காக வேண்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு கொடுப்பவரும் நம் ஆண்டவர் தான்.
இதைப் போன்ற அனுபவங்கள் இயேசுவுக்காக மட்டும் வாழ்பவர்களுக்கு மட்டும்தான் ஏற்படும்.
தங்களுக்காக வாழ்பவர்களுக்கு ஏற்படாது.
ஆகவே ஒவ்வொரு வினாடியும் இயேசுவுக்காக மட்டும் வாழ்வோம்.
அவரோடு விண்ணகம் சென்று அங்கும் அவரோடு என்றென்றும் வாழ்வோம்.
லூர்து செல்வம்.